Archive | February, 2012

ஆபத்தான குட்டிக்கரணம்… கரணம் தப்பினால் மரணம்

29 Feb

”நான் ஒரு இந்தியன்; நான் ஒரு முஸ்லிம். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை”- அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த மக்களவை விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த உமர் அப்துல்லா பேசிய வைர வரிகள் இவை.

அது 2008-ம் ஆண்டு; இப்போது நடப்பது 2010-ம் ஆண்டு; இரு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை குட்டிக்கரணப் பேச்சால் நிரூபித்திருக்கிறார், அதே உமர்.
.
கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, “காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணையவில்லை; நிபந்தனைக்கு உள்பட்ட இணைப்பு ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர்ப் பிரச்னை இந்தியா, பாகிஸ்தான் தொடர்புடைய சர்வதேச விவகாரம்” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.
.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரான உமர் அப்துல்லா இவ்வாறு பேசியிருப்பதை, கூட்டணிக் கட்சி என்பதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
.
எதிர்பார்த்ததுபோலவே, இதுவரை அப்துல்லா குடும்ப ஆட்சியை எதிர்த்துக் கொடி பிடித்த காஷ்மீரப் பிரிவினைவாத இயக்கங்கள் பலவும், உமர் பேச்சால் ஆனந்தக் கூத்தாடுகின்றன.
.
பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டின் தலைவர் சயீத் அலி ஷா கிலானி, நீண்ட நாள்களாகத் தாங்கள் கூறிவருவதையே முதல்வர் ஒப்புக்கொண்டிருக்கிறார்; காஷ்மீரை இனியும் இந்தியா ஆக்கிரமித்திருக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க்கட்சியான மெஹபூபா சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி, உமர் அப்துல்லாவின் இந்த அதிரடிப் பிரிவினை முழக்கத்தால் குழம்பிப்போயுள்ளது.
.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் முதல்வர் உமர் அப்துல்லா பேசிய அனைத்துமே அபாயகரமானவை. “”வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி மூலமாக காஷ்மீரப் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. காஷ்மீரில் நிலவுவது அரசியல் விவகாரம். இதை பேச்சுவார்த்தை வாயிலாகவே தீர்க்க வேண்டும்” என்று கூறிய அவர், தான் இந்திய அரசின் கைப்பாவை அல்ல என்றும் முழங்கினார்.
.
57 ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திரம் மீண்டும் திரும்புவதுபோலத் தெரிகிறது. 1953-ல், இதேபோலத்தான் உமரின் தாத்தாவான அப்போதைய முதல்வர் ஷேக் அப்துல்லா (அந்தக் காலத்தில் ஜம்மு காஷ்மீரின் பிரதமர் என்றே அவர் அழைக்கப்பட்டார்) திடீரென காஷ்மீர் தனிநாடு என்று போர்க்கொடி உயர்த்தினார். உமர் போலல்லாமல் அவருக்கு மக்கள் செல்வாக்கும் இருந்தது. ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறிதும் தயங்கவில்லை. தனது நெருங்கிய நண்பர் என்றும் பாராமல் ஷேக் அப்துல்லாவின் அரசைக் கலைத்து, அவரைக் கைது செய்து வீட்டுச்சிறையில் வைத்தார்.
.
அதே ஷேக் அப்துல்லா, நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ல் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஆனார். பதவியில் இருக்கும்போதே உயிர்நீத்தார். அவரையடுத்து, அவரது மகன் பரூக் அப்துல்லா மூன்றுமுறை (1982-84, 86-90, 96-2002) முதல்வராக இருந்து, இப்போது மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். 2009-ல் வாரிசு அடிப்படையில் முதல்வரான உமர் அப்துல்லா, தாத்தாவின் பழைய பாதைக்கே திடீரென்று திரும்பி இருக்கிறார்.
.
கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீரில் நிலவிவரும் கலவரச்சூழல், முதல்வர் உமர் அப்துல்லாவின் செல்வாக்கைக் குறைத்துவிட்டது. அவரது பதவிக்கே ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து தப்பவே, நெருப்புடன் விளையாடுகிறார் உமர் அப்துல்லா என்று, பாஜக.வும்,காஷ்மீர சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்து காஷ்மீர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டன.
.
உமர் அப்துல்லா இதற்கு முன் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் (2001-02), மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் மத்திய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார்; இந்தியக் குடிமகன் என்று உளமாற உறுதிகூறி பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார். இப்போதும்கூட, நாட்டின் இறையாண்மையைக் காப்பதாக உறுதி கூறியே முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
.
அவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, பிரிவினைவாதக் கருத்துகளை சட்டப்பேரவையிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார் உமர். நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ, யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்ற கணக்காக, பொறுப்பின்றி வேடிக்கை பார்க்கிறது. அன்று நேரு அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க விடாமல் இப்போதைய மத்திய அரசைத் தடுப்பது எது?
.
பொறுப்பற்ற ஆட்சியால் மாநிலத்தில் அமைதியின்மைக்கு காரணமாக இருந்துவிட்டு, மாநிலத்தை எரிமலையின் கொள்ளிவாய்க்குள் தள்ளிவிட்டு, பதவியைக் காப்பதற்காக புரட்சிநாயகராக புதுஅவதாரம் எடுத்திருக்கும் உமர் அப்துல்லாவை அம்மாநில மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறார்கள். மத்திய அரசு மட்டுமே அவரை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது.
.
யோகாசன குரு ராம்தேவ், உமரின் பிரிவினைப் பேச்சைக் கண்டித்ததுடன், யோகாசனம் மூலமாக இப்போதைய நெருக்கடியான மனஅமைதியற்ற குழப்ப நிலைக்குத் தீர்வு காணுமாறு உமர் அப்துல்லாவுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த விஷச்செடியை வளரவிட்டால், எதிர்காலத்தில் மன்மோகன் சிங்கும் அமைதிக்காக யோகாசனம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
.
தினமணி (18.10.2010)
.
Advertisements

கீதை பிறந்தது!

27 Feb

கண்ணிரு கனலெனச் சுடர,
கரத்திடை காண்டீபம் அதிர,
கண்ணனின் பின்புறம் பார்த்தன்
கயவரை அழித்திட நின்றான்!

த்வஜத்தினில் பிறந்தனன் அனுமன்;
துணையென நின்றனர் நால்வர்;
யுவக்களை மிகுந்திட நின்றான்-
‘ஓம்’ என ஒலித்தது சங்கம்!

‘தன்’னெனும் ஆணவம் பிறக்க-
வில்லினில் ஓசையை எழுப்பி,
”என்வலி இருந்திடு வரையில்
எள்எனச் சிதறிடும் பகைமை…

கண்ணனே ரதத்தினை ஒட்டு,
கயவருக் கருகினில் நாட்டு,
மண்ணிலே தர்மமே வாழும்!”
என்றனன் போர்க்களம் அறிய!

உலகினை வாயினில் காட்டி,
உறியினில் வெண்ணெயைத் திருடி,
குலத்தினைக் காத்திட மலையைக்
குடைஎனப் பிடித்தவன் சிரித்தான்!

அர்ச்சுனன் அகந்தையை நீக்கி,
அதர்மத்தைச் சாய்த்திடும் காலம்-
அருகினில் நெருங்குதல் கண்டு
அவனுளம் நகைத்தது – உடனே

ரதத்தினைப் போர்க்களம் நடுவில்
செலுத்திய சாரதி ”பார்த்தா!
எதிரினில் இருப்பவர் பகைவர்;
எடுத்திடு அம்பினை!”
என்றான்.

எதிரினில் பார்த்தனன் பார்த்தன்-
எதிரிகள் யாவரும் உற்றார்!
எதிரினில் குருவுடன் பீஷ்மர்!
எதிரியாய் பந்தமும் நட்பும்!

கலங்கிய மனத்துடன் சோர்ந்து
களத்தினில் புலம்பினன் வீரன்:
”குலத்தினை குருவினை என்வில்
களத்தினில் சாய்ப்பதும் முறையோ?

ஆட்சியே கிடைப்பினும் என்ன?
அன்னவர் போனபின் மன்னர்
மாட்சியே கிடைப்பினும் என்ன?
மடியவும் வேண்டுமோ உறவோர்?”

புலம்பிடும் பார்த்தனைப் பார்த்து
புன்னகை புரிந்தனன் கண்ணன்:
”குலப்புகழ் மறந்தனை வீரா,
களத்தினில் கலங்குதல் மறமா?

உறவென்று கூறியே நழுவி
உண்மையை மறந்திடல் தீது!
உறவென்றும் குருவென்றும் இங்கு
உணராமல் வந்ததும் தவறே!

வந்தபின் முதுகினைக் காட்டி
விடைபெறும் வீரமும் நன்றோ?
சொந்தமும் பந்தமும் நட்பும்
திரௌபதியின் துகிலிற்கு நிகரோ?

பனிரெண்டு ஆண்டுகள் வனத்தில்
பட்டபல் துயரங்கள் யாரால்?
சனிகண்டு கைகொட்டிச் சிரிக்க,
சபையினில் துகிலுரிந்தது யார்?

கடமையை ஆற்றிடும்போது
கலங்குதல் என்றுமே தவறு!
கடமைக்கு பந்தமும் குருவும்
இடராக இருப்பினும் செய்க!

‘கடமையே உன்விதி செய்க;
பலனினைக் கருதிடல் வேண்டா!
கடமையைச் செய்; பலன் எனதே!
களத்தினில் வீரமே கடமை!’

எடுத்திடு வில்லினை- அம்பைத்
தொடுத்திடு பகைவரை நோக்கி!
விடுத்திடு உன்குலக் கறையை!
வில்லினை ஒழித்திடு வீரா!”

என்றது கண்ணனின் திருவாய்;
எழுப்பினன் பார்த்தனின் மறத்தை!
‘என்’என்ற ஆணவம் அழிய,
எளியவன் ஆகினான் பார்த்தன்!

”மண்ணிலே தர்மத்தை நாட்டி,
மனத்திருள் மயக்கத்தைப் போக்கி,
அண்ணலே காக்க நீ போற்றி!
அனைத்தையும் துறந்தவன் ஆனேன்!”

என்றபின் அர்ச்சுணன் வில்லை
எடுத்ததுடன் அம்பினைப் பூட்டி,
‘நன்றதை நல்கட்டும் ஈசன்’
என்றனன்; தொடுத்தனன் போரை!

தர்மத்தை நாட்டிட கண்ணன்
களத்தினில் புகன்றது கீதை!
கர்மத்தைச் செய்வதே வாழ்க்கை;
பலனென்றும் பரந்தாமனுக்கே!

– விஜயபாரதம் – தீபாவளி மலர் 2000

.

அடிப்பது போல அடிப்பதும், அழுவது போல அழுவதும்…

26 Feb

தீர்க்க முடியாத பிரச்னையா? ஒரு விசாரணைக் குழு அமைத்தால் போயிற்று’ என்ற தத்துவம் அரசியல் உலகில் பிரசித்தம். தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவோ, பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மேலும் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தவிர, இந்தக் குழு எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கமே சிதறிவிடும் நிலை காணப்படுவதால், பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் தவிப்பில் உள்ளனர்.

ஆங்கிலக்கல்வி மோகத்தால் அல்லாடும் பெற்றோரை நன்றாகப் புரிந்துகொண்ட தனியார் பள்ளிகள், தன்னிச்சையான போக்குடன் அதிகப்படியான கட்டணங்களை வசூலித்து வந்தன. இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்ற அரசு, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது. பள்ளிகள் நியாயமான கட்டணத்தை வசூலிக்க இக்குழு தேவையான பரிந்துரைகளைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

இக்குழுவும், தனியார் பள்ளிகளிடம் நாற்பதுக்கு மேற்பட்ட கேள்விகள் அடங்கிய ஆய்வுநிரலை வழங்கி அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில், பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புக்கு ஏற்ப புதிய கட்டணங்களை நிர்ணயித்து, கடந்த மே 7-ம் தேதி அறிவித்தது. ஆனால், இந்தக் கட்டண நிர்ணயத்தில் சரியான அளவுகோல்கள் பின்பற்றப்படவில்லை; இதைக் கொண்டு பள்ளிகளை நடத்த இயலாது என்று கூறி தனியார் பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பள்ளி தொடங்கும் காலகட்டத்தில் வந்த கோவிந்தராஜன் குழுவின் ஆணையால் நிச்சயமற்ற நிலை ஒருவார காலத்துக்கு காணப்பட்டது. சில பள்ளிகள் மட்டுமே குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை அடுத்து, கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பளித்தது. அதையேற்று, மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.

அதற்குள் பள்ளிகள் துவங்கிவிட்டதால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வெளிப்படையாகவும், கூடுதல் கட்டணத்தை மறைமுகமாகவும் பள்ளி நிர்வாகங்கள் வசூலித்தன. இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்க பெற்றோரும் தயங்கினர். அவரவர் குழந்தைகளின் கல்விப் பிரச்னை அவரவர்களுக்கு.

சில இடங்களில் மட்டும் பெற்றோர் போராட்டங்களை நடத்தினர். அதனால் பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது அரசோ, கல்வித்துறையோ கடும் நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை.

இதனிடையே உயர் நீதிமன்றத்தை அணுகிய தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம், நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கட்டண நிர்ணயப் பரிந்துரைக்கு இடைக்காலத் தடையை செப். 14-ல் பெற்றது. அதன் பிறகு, முன்பு கூடுதல் கட்டணத்தை வசூலிக்காத பள்ளிகளும் அவசரமாக கட்டணங்களை வசூலித்தன. இதற்கு எழுந்த எதிர்ப்பையும் பள்ளிகளோ, அரசோ பொருள்படுத்தவே இல்லை.

தர்மபுரி அருகே தனியார் பள்ளி எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து செப். 17-ல் தனியார் பள்ளிகள் அறிவித்த ஒருநாள் விடுமுறைக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்தும்கூட, பல பள்ளிகள் இயங்கவில்லை. அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, “நான் அடிப்பதுபோல அடிக்கிறேன்; நீ அழுவது போல அழு’ என்று, அரசும் தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டதன் பயனாக, தனியார் பள்ளிகள் பெற்ற இடைக்காலத் தடையை அக். 4-ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தவிர, தனியார் பள்ளிகளுடன் ஆலோசித்து புதிய கட்டணத்தை நிர்ணயிக்குமாறு உயர் நீதிமன்றம், நீதிபதி கோவிந்தராஜன் குழுவுக்கு 4 மாத கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், கல்வியாண்டு முடியும் நேரத்தில் இக்குழு அறிவிக்கும் புதிய கட்டணத்தால் என்ன மாற்றம் ஏற்படும் என்பது புலப்படவில்லை.

தனியார் பள்ளிகளுடன் முன்கூட்டியே தீர ஆலோசனை நடத்தி, அவர்களும் குறைகூற இயலாத வகையில் பள்ளிக் கட்டணங்களை நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்திருந்தால் இந்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது, குழுவின் பரிந்துரையை தயவுதாட்சண்யமின்றி கல்வித்துறை அமலாக்கம் செய்திருந்தால் நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்; தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்துடைப்பு நாடகமாகவே காட்சி அளிக்கும் தற்போதைய நிலையும் நேரிட்டிருக்காது.

தனியார் பேருந்துகள் தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்தியுள்ளதும், அதை தமிழக அரசு “வழக்கம் போல’க் கண்டித்து எச்சரிக்கை விடுத்திருப்பதும், இதேபோன்ற நாடகமே. இப்போதும் கூடுதல் கட்டணத்துடன் பயணச்சீட்டு கொடுத்துக்கொண்டு பல தனியார் பேருந்துகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வழியாகவே இயங்கிக்கொண்டு தான் உள்ளன.

சட்டத்தையும் அரசு உத்தரவுகளையும் நிறைவேற்றும் அமைப்புகளின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு, அதிரடி உத்தரவுகளை வாயளவில் வெளியிடுவதால் யாருக்கும் எப்பயனும் விளையாது; அரசின் மரியாதை குறையவும் நிர்வாகம் குலையவுமே அவை வழிவகுக்கும். அதுவே தமிழகத்தில் நடந்திருக்கிறது.

 

தினமணி (08.10.2010)

 

 

இறைமை

25 Feb

கண்ணில்லாப் பிச்சைக்காரன்
காது கேளாத ஊமை
கால் வளைந்த முடவன்
கூன் விழுந்த கிழவி
எல்லோரும் கோயில் வாசலில்.

கைவிடப்பட்ட முதியோரும்
தீரா நோயாளிகளும்
சவரம் செய்யாத முகங்களும்
காத்திருக்கின்றன
மலைக் கோயில் படிகளில்.

சிக்குப் பிடித்த தலையுடன்
உளறியபடிச் செல்லும்
கந்தலாடை பித்தனும்
உச்சிக்கால பூஜை மணிக்காக
பரபரக்கிறான்.

படிகளில் தாவி இறங்குகிறது
குழந்தை-
அம்மா சொன்னபடி
சில்லறைகளைப்
போட்டபடி.

ஓம் சக்தி (ஆகஸ்ட்- 2010)

.