காதலும் காதல் நிமித்தமும்

5 Mar


உலக இலக்கியங்களில் இல்லாத தனித்தன்மை தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமே உண்டு. அது, அகம்- புறம் என்று வாழ்க்கையை வகுத்து அவற்றுக்கு அணிசெய்வதாக அமைந்த சங்க இலக்கியங்கள் தான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர் வாழ்வை விளக்கி நிற்கும் சங்க இலக்கியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என பதினெண் இலக்கியங்களுடன் திகழ்வது.

இவற்றுள் அகத்திணை இலக்கியங்களை மட்டும் ஆய்வுப்பொருளாகக் கொண்டு, பழந்தமிழர் வாழ்வில் அகத்திணை என்று குறிப்பிடப்படும் காதல் வாழ்வு குறித்து நுணுகி ஆய்ந்துள்ளார், முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான வ.சுப.மாணிக்கம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இனிய தமிழ்நடையுடன் அவர் எழுதிய இந்நூல், இன்றும் சுவையுடன் இலங்குவது, தமிழின் குன்றா இளமைக்கு சான்று.

“அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர், எடுத்த உடம்பை மதிப்பர், கொண்ட மணத்தை மதிப்பர்,…காமக்குறைவு கடமைக்குறைவாம் என்று உணர்வர், மெய்யின்பத்தை உயிரின்பமாகப் போற்றி ஒழுகுவர், அகத்திணை வாழ்க்கையை அன்புத்திணை வாழ்க்கையாகக் காண்பர்’ என்று தனது முன்னுரையில் ஆசிரியரே கூறுவதுபோல, அகத்திணைக் கல்வி பயில்வோரைப் பண்படுத்தும் தகைமையது. பொருந்தா மணமும் அவசரக்காதலும் கூடிய தற்போதைய காலத்தில் கண்டிப்பாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டியது.

பழந்தமிழகத்தில் ஆடவரின் சிறப்பாக வீரமும் பெண்டிரின் சிறப்பாக கற்பும் முன்வைக்கப்பட்டன. வினையே ஆடவர்க்கு உயிராதலின், மனையறம் பெண்டிர்க்கு இயல்பாக இருந்தது. அக்காலத்தே இருபாலரிடையிலான ஈர்ப்பு களவு – கற்பு மணங்களுக்கு வழிவகுத்தது. இதை புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என அன்பின் ஐந்நிணையாகவும், இதனினும் வேறுபட்ட கைக்கிளை எனப்படும் ஒருதலைக்காமம், பெருந்திணை எனப்படும் பொருந்தாக்காமம் எனும் இரு திணையாகவும் வகுத்து பொருளிலக்கம் கண்டவர்கள் நம் முன்னோர்.

இவ்வாறு பாடற்பொருளுக்கு இலக்கணம் வகுத்து, சமூக வாழ்க்கைக்கு அரணான இலக்கியங்களைப் படைத்த நமது முன்னோரின் அறிவு வியக்கச் செய்கிறது. சங்க இலக்கியங்களுள் இந்த அகத்திணைகள் பயின்றுவரும் பாக்களை விளக்கி, அவற்றை இயற்றிய ஆன்றோர் பெருமக்களையும் சுட்டி, அகத்திணையின் நோக்கத்தை நிறுவுகிறார், ஆசிரியர். பருவம் அரும்பிய காளைகளும் கன்னியரும் தம்மைப் பண்படுத்திக்கொள்ள படிக்க வேண்டிய அரிய நூல் இது.

***

தமிழ்க்காதல்

தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம்

 

424 பக்கங்கள், விலை: ரூ. 200

.

 மல்லிகா பதிப்பகம்

பழைய எண்: 60/ புதிய எண்: 6,

பொன்னியம்மன் கோயில் தெரு,

ஆலத்தூர், சென்னை- 600 016.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: