நேர்காணலுக்கு செல்லும் வழியில்…

13 Mar

காலையில் கண்ணாடி  பார்த்து தலை  வாரும்போது எட்டிப் பார்த்த வெள்ளிமுடியைப் பிடுங்க முடியாமல் ஒதுக்கியது, நடக்கும்போது நினைவில் வந்தது.

நாற்பது வயதை எட்டிவிட்டபின் வாழ்க்கை தேய்பிறை தான்  என்று  சென்ற மாதம் சங்கமேஸ்வரர் கோவிலில் கேட்ட ஆன்மிகச் சொற்பொழிவு உண்மைதான். காதிலும் முடிக்கற்றைகள் அதிகரித்துவிட்டன. இந்தமுறை முடி வெட்டும்போது அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும்.

முடி திருத்துபவர்கள் கட்டணத்தை ஏகத்துக்கு உயர்த்தி விட்டார்கள். பட்டயப் படிப்பு படிக்காமல்  நாவிதராகச் சென்றிருந்தால் கூட, இந்த வயதில் நேர்முகத் தேர்வுக்கு அலைய வேண்டி வந்திருக்காது.

இந்த நேர்முகத் தேர்வு எத்தனையாவது என்று நினைவில்லை. முதல் நேர்காணலுக்குச் சென்று வந்தது மட்டுமே பசுமையாக நினைவிருக்கிறது.

திருவனந்தபுரம் ரயில் சென்று, அங்கிருந்து வலியமாலாவுக்கு பேருந்தில் சென்று இறங்கியபோது, விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இன்முகத்துடன் வரவேற்பதாகத் தோன்றியது. நேர்காணலில் கேட்கப்பட்ட உலோகவியல் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியபோது, படிப்பு ஏட்டுச் சுரைக்காய் என்பது தெரிந்து போயிற்று.

படிக்காமல் இருந்திருக்கலாம்; மூட்டை தூக்கியாவது பிழைத்திருக்கலாம்.  படித்து முடித்துவிட்டு உடலை வளைத்து வேலை செய்ய மனம் சம்மதிக்கவில்லை. படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைப் பிடிக்க நடந்த பந்தயங்கள் எத்தனை?

ரயில்வேத் தேர்வுகள், மத்தியத் தேர்வாணையத் தேர்வுகள், மாநிலத் தேர்வாணையத் தேர்வுகள் பல எழுதியபின், தனியார் வேலை கிடைத்தது. கிடைத்த சொற்ப சம்பளத்துக்கு 12 மணிநேரம் தினசரி வேலை செய்யப் பிடிக்காமல் போனது. பலமுறை நேர்காணல்கள்; புதிய நிறுவனங்களில் வேலை. மீண்டும் புதிய வேலை தேடல்.

மனித வாழ்க்கையே தேடல்மயமானது தான். திருமணமான தருணத்தில் இன்பத்தேடல். அடுத்த வருடங்களில் வாழ்க்கையைப் புரிந்துகொண்ட பொருள் தேடல். குழந்தை பிறந்த சமயத்தில் மருத்துவமனைக்கு பணம் கட்ட முடியாமல் கடன் தரத் தகுதியானவர்களைத் தேடியது கசப்பான நினைவு.

பணம் கொடுப்பவர்கள், திரும்புமா என்ற கேள்விக்கு பதில் தேடுபவர்களாகவே உலகம் முழுக்க இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லாமல், ‘பணம் எங்களுக்கே கையைக் கடிக்குது’ என்று சொன்ன ஒன்றுவிட்ட அண்ணன்,  மறுவாரம் புதிய இருசக்கர வாகனத்தில் சென்றதைக் காண முடிந்தது. உறவுகள், பணம் என்று வரும்போது பிட்டுக்கொள்ளும் சுயநல வியாபாரிகள் தானா?

‘வீடு வரை  உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ?’ திரைப்பாடல் இந்த நேரத்தில் எந்த வானொலியில் கேட்கிறது? கேட்காமலே இந்தப் பாடலை ஒளிபரப்புவது யார்?

நல்ல காலை நேரத்தில் இந்த தத்துவப்பாடலை ஒளிபரப்பும் வானொலி ஊழியரும், ஒருவேளை தற்காலிகமாகக் குப்பை கொட்டுபவரோ?

குப்பை பெருக்குபவள் கூட சுதந்திரமாகத் திரிகிறாள். அடுத்த வேளையைப் பற்றி அச்சமின்றி சாலையை சுத்தப்படுத்துகிறாள். வீட்டிற்கு இரண்டுமாதம் வாடகை பாக்கி என்பதற்காக மனைவியின் எகத்தாளப் பார்வையை சகிக்க முடியவில்லை.

பானு நல்லவள் தான். அவளுக்கு இந்த பத்தாண்டுகளில் என்ன சுகத்தைத் தந்துவிட்டேன்? அவள் கொண்டுவந்த சீதன நகைகள் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து முழுகிவிட்டன. அவள் முழுகாமல் ஆனது மட்டுமே சாதனை என்று சொல்ல முடியுமா?

‘நீங்கள் சாதனை செய்யப் பிறந்தவர்கள்… வாருங்கள், பணத்தைத் தாருங்கள்’ என்று சொன்ன சங்கிலித்தொடர் வர்த்தகத்தை நம்பி மனைவியின் நகைகள் பாயமானது  மிச்சம். அதற்குப் பிறகும் அவள் பரிகசிக்கவில்லை.

பெற்ற குழந்தைக்கு காய்ச்சல் வந்து துடித்தபோது, மருத்துவரிடம் செல்ல முடியாமல் தவித்தபோது, அவள் சீறினாள். காவிரிப்பூம் பட்டினத்தில்  கண்ணகி கோவலனிடம் இப்படி சீறியிருந்தால் அவன் தறுதலையாகி இருக்க மாட்டான்.

கோவலனுக்கு மாதவி மோகம் போல, பரிசுச்சீட்டு மோகம் என்னை குப்புறத் தள்ளிவிட்டது. ஒருமுறை பத்து ரூபாய்க்கு வாங்கிய சீட்டுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது. அன்று துவங்கிய பரிசுசீட்டு பைத்தியத்தால், கையிலிருந்த பணமும் கரைந்துபோனது. முதல்நாளே பரிசு விழாமல் இருந்திருக்கலாம்.

நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் உலகம் ஒரே நாளில் சொர்க்கமாகிவிடாதா? ‘நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி ஏதுமில்லை’ என்று கண்ணதாசன் சரியாகத் தான் எழுதியிருக்கிறார்.

கண்ணதாசனின்  வனவாசம் படிக்கும்போது பரவசம், திகைப்பு, சோகம், பரிதாபம், சந்தோசம் உள்ளிட்ட பலதரப்பட்ட உணர்சிகளை அடைய முடிகிறது. இதே போன்ற வாழ்க்கை தானே அனைவரது வாழ்க்கையிலும்  வாய்க்கிறது?

சிலரது வாழ்க்கை சந்தோஷமாகவும், சிலரது வாழ்க்கை சோகமாகவும் காட்சி தருகிறது. இதில் தனிமனிதரின் பங்களிப்பு என்ன? சிந்தித்தால் மனம் துணுக்குறுகிறது.

சிந்தித்தபடியே நடந்தாலும் கால்கள் நாம் நினைத்த இடத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன. இதுபற்றி மானுடவியல் ஆய்வாளர்கள் ஆராயலாம்.

***

மானுடவியல் படித்து முடித்த நண்பன், போன மாதம் மிருகக்காட்சி சாலையில் குத்தகைப் பணியை ஏலம் எடுத்தான். அவனது ஞாபகம் ஏன் இப்போது வர வேண்டும்?

‘ஸ்ரீதர், உனக்கு சிரமமாக இருந்தால் சொல்; நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடத்தில் எனக்கு நம்பகமான ஆள் தேவை’ என்று அவன் சொல்லியிருக்கிறான். இந்த நேர்காணலும் வேலைக்காகாவிட்டால், அவனைப் பார்த்துவிட வேண்டியது தான்.

இருவரும் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அரசு கல்லூரியில் மானுடவியல் படிப்பில் அவன் சேர, நான் பாலிடெக்னிக்கில்  சங்கமமானேன். மானுடவியல் படிப்பு வீண்படிப்பு என்று அவனிடம் வாதிட்டிருக்கிறேன்.

‘எந்தப் படிப்புமே வெறும் பந்தாவுக்குப் படிப்பது தான்; எதிலும் பயனில்லை’ என்பது அவனது தேர்ந்த அபிப்பிராயம். அது உண்மைதான் என்று இருபது ஆண்டுகளுக்குப் பின் தெரிகிறது.

இருபது ஆண்டு என்பது மனித வாழ்வில் கால் பகுதி போன்றது. சமீபகாலமாக வாகன விபத்துகளில் அகால மரணம் அடையும் இளம் வயதினரைப் பார்க்கும்போது, மனித வாழ்வின் காலம் மிக மிகக் குறுகிவிட்டது தெரிகிறது. இயற்கையும் செயற்கையும் ஆதிக்கம் செலுத்தும் வாழ்வில் மனிதன் வெறும் பொம்மையாகிப் போகிறான்.

பொம்மை என்றவுடன் நினைவுக்கு வருகிறது; இந்த மாதம் குழந்தை ஹேமலதா கேட்ட குரங்கு பொம்மை வாங்க முடியுமா? 120 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். அதற்காகவேனும் இந்த புதிய வேலை கிடைக்குமா?

புதிய வேலை கிடைத்தால் இம்முறை அதிக சம்பளம் கேட்க வேண்டும். மனித உழைப்புக்கு தகுந்த மரியாதை சம்பளம் தான். அதை விட்டுக் கொடுக்கக் கூடாது. தவிர, இம்முறையும் கடைத்தேறாவிட்டால், பானுவின் கண்களைச் சந்திக்கும் திராணி இல்லாது போய்விடும்.

‘தட்டச்சு தெரியும்  எனக்கு. ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா பாருங்கள்’ என்று போன மாதம் கடைசியாக அவள் சொல்லிவிட்டாள். அவளை பலவகையிலும்  கஷ்டப்படுத்தி விட்டேன். இனியும் அவளை துயரப்படுத்தக் கூடாது.

அதிக சம்பளம் கேட்டு, அதனால் இந்த வேலையும் கிடைக்காமல்  போய்விட்டால்? மிருகக்காட்சி சாலை இருக்கவே இருக்கிறது. ஆனால் பானு அதை ஏற்பாளா?

குழந்தை ஹேமலதாவை அடிக்கடி செலவில்லாமல் மிருகக்காட்சி சாலைக்கு கூட்டிச் செல்லலாம் என்று சமாதானம் செய்ய  முடியுமா? நண்பன் நாராயணன் நம்பகமானவன் தானா? எதிர்பார்க்கும் சம்பளத்தை அவன் தருவானா?

எல்லா மனிதரும் வர்க்க பேதங்களில் முடங்கி விடுகிறார்கள். நேற்று வரை ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாகப் பழகியவர்கள் கூட, வேலை என்று வந்துவிட்டால், முதலாளி- தொழிலாளி பேதம் பார்க்கிறார்கள். நாராயணனை நம்பலாமா?

பானு கர்ப்பிணியாக இருந்தபோது, தெரிந்த பெண்ணை  வீட்டுவேலைக்குச்  சேர்த்தேன். தினசரி வீடு பெருக்கி, துணி துவைத்து விட வேண்டும். மாதம் முன்னூறு சம்பளம் என்று பேச்சு. அதைக் கொடுக்க முடியவில்லை. ஒருமாதம் கொடுக்காததால், திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டாள். அது மாதிரி ஆகிவிடக் கூடாது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். இந்த வேலை கிடைத்துவிட்டால், அந்தப் பெண்ணின் கணக்கைத் தீர்த்துவிட வேண்டும். வாழ்க்கை என்பது மேடு பள்ளங்களால் ஆனது; திருப்பங்கள் நிறைந்தது என்பதை சொல்லாமல் சொல்லிவிட வேண்டும்.

அடுத்த திருப்பத்தில் நேர்காணலுக்கு அழைத்த நிறுவனம் வந்துவிடும். இங்கு என்ன கேள்வி கேட்பார்கள்? திருமணமானவரா என்று நிச்சயமாகக் கேட்பார்கள். நரைமுடி காட்டிக் கொடுக்காமல் இருந்தால் அதிக பேரம் பேசலாம்.

சொட்டைத் தலைக்காரரோ, நரைத்த முடிக்காரரோ நேர்காணலை நடத்தினால் நல்லது. நமது துன்பம் அவர்களுக்கும் புரிந்திருக்க வாய்ப்பிருக்கும். இளம் வயத்துக்காரர் என்றால் நாய் மாதிரி சீறக் கூடும்.

ஏன் அந்த நாய் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி குறைக்கிறது? சட்டை கசங்கி இருக்கிறதா? செருப்பு அறுந்துவிட்டதா? ஏன் நாய் நம்மைக் கண்டு அஞ்சுகிறது? என் நடை தளர்ந்திருக்கிறதா? என்னைப் பார்த்து எதிரில் வருபவர் ஏன் விலகிப் போகிறார்?

அவருக்கு பைத்தியமாக இருக்கலாம். சில நாட்களாகவே, எதிரில் வருபவர்கள் ஒருமாதிரியாகப் பார்ப்பது ஏன் எனத் தெரியவில்லை. அவர்களுக்கு பைத்தியமாக இருக்கலாம். நல்ல நிலையில் ஒருவன் நடந்து போகும்போது வித்தியாசமாகப் பார்ப்பவர்களை வேறு எப்படிச் சொல்வது?

காலையில் சாப்பிடாமல் நேர்காணலுக்கு வரும் நாற்பது வயதுக்காரனை இவர்கள் எப்படி ஏளனமாகப் பார்க்கலாம்? கால்கள் தள்ளாடுகின்றன. முகம் காய்ந்து வியர்வை வழிகிறது.

கால்கள் சரியான இடத்துக்கு அழைத்து வந்துவிட்டன. கால்களுக்கு நன்றி. இல்லையில்லை, கால்களை வழிநடத்திய மூளைக்கு நன்றி. இந்த இடம் ஏற்கனவே பார்த்தது போலத் தெரிகிறதே?

இந்த இடத்திற்கு ஒருமணி நேரம் முன்னமே வந்தது போலத் தெரிகிறதே? அடடா, ஏதோ யோசனையில் இதைக் கடந்துவிட்டேன் போல.

இந்த வாயிற்காவலன் ஏன் வித்தியாசமாகப் பார்க்கிறான்? நாளை இந்த நிறுவனத்தில் நான் வேலைக்குச் சேர்ந்த பிறகும் இப்படியே பார்ப்பானா? முட்டாள். வாய் முணுமுணுக்கிறது.

பானுவுக்காக, ஹேமலதாவுக்காக, இவனை மன்னித்துவிடலாம். மன்னித்து விட்டேன்.

”நேர்காணலுக்கு அழைப்பிருக்கிறது. இதோ கடிதம்” காட்டுகிறேன். மறுபடியும், எனது அசையும் உதடுகளைப் பார்த்தபடி அவன் அந்தக் கடிதத்தை பார்க்கிறான்.

”நேர்காணல் காலையிலேயே முடிந்துவிட்டது. இது பணி முடியும் மாலை நேரம்…” என்று வாயிற்காவலன் சொல்வது காதில் கேட்கிறது. அவனது மீசையும் கிருதாவும் அடர்த்தியாக, மிரட்டுவது போல இருக்கிறது.

‘இனி என்ன செய்வது?’ வாய் முணுமுணுக்கிறது. அவனது கண்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன.

இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

-விஜயபாரதம்  (30.10.2009)

.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: