Archive | April, 2012

சூரியப் பரம்பரை

30 Apr

குணத்தில் ஆரியன்! குருத்தில் வீரியன்!
நானே உலகின் ஞானச் சூரியன்!

(குணத்தில்)

சங்கப் பலகையில் தமிழ் தர அமர்ந்த
இறையனார் எந்தன் எள்ளுப் பாட்டனார்!
குறிஞ்சித் திணையின் குலத்தைக் காக்கும்
குன்றக் குமரன் கொள்ளுப் பாட்டனார்!
நெற்றிக் கண்ணால் எரிப்பினும் அஞ்சா
நக்கீரரும் என் நற்குடிப் பாட்டனார்!
‘யாதும் ஊரே யாவரும் உறவினர்’
என்ற கணியனும் எந்தன் பாட்டனார்!

(குணத்தில்)

வாலறிவன் தாள் வணங்கிடச் சொன்ன
வள்ளுவர் எந்தன் வழிவழிப் பாட்டனார்!
அரசியல் பிழைத்தோர்க் கறமே கூற்றென
வரைந்த இளங்கோ வம்சப் பாட்டனார்
சூளையில் சுடினும் ஈசனை மேவிய
நாவுக்கரசர்என் நற்குடிப் பாட்டனார்!
‘வன்மை இல்லையோர் வறுமை இன்மையால்’
என்ற கம்பரும் எந்தன் பாட்டனார்!

(குணத்தில்)

கற்பின் கனலால் மதுரையை எரித்த
கண்ணகி தேவியார் எம்குலப் பாட்டியார்!
அரும்புகளுக்கோர் நல்வழி கூறிய
ஆத்தி சூடி ஔவைஎன் பாட்டியார்!
பாவை பாடியே கண்ணனை ஆண்டவள்
சேவை செய்தவள் எம்குலப் பாட்டியார்!
அமுதசுரபியால் அன்னம் இட்டவள்
அன்பின் மேகலை எந்தன் பாட்டியார்!

(குணத்தில்)

பாரதப் போரில் படைகளுக் குணவை
படைத்த பாண்டியன் பரம்பரைப் பாட்டனார்!
பெரிய கோயிலைத் தஞ்சையில் நிறுவிய
ராசராசன் என் பெரிய பாட்டனார்!
யானையில் ஏறி இமயம் ஏகிய
சேரன் பெருமாள் செழுங்கிளைப் பாட்டனார்!
கல்லில் சிற்பக் காவியம் படைத்த
பல்லவ மன்னன் எந்தன் பாட்டனார்!

(குணத்தில்)

பாலுக்கழுத சேய்க்கமுதூட்டிய
பார்வதி தேவியும் எம்குலப் பாட்டியார்!
உலகெலாம் உணர்ந்தோதக் கவிகளை
தந்த சேக்கிழார் தந்தையின் பாட்டனார்!
காரையில் தலையால் காலென நடந்து
கயிலை சேர்ந்தவள் எம்குலப் பாட்டியார்!
உள்ளம் உருக்கும் வாசக மணிகளை
அள்ளித் தந்தவர் எந்தன் பாட்டனார்!

(குணத்தில்)

வாடிய பயிரைக் கண்டதும் வாடிய
வள்ளலார் எந்தன் வம்சத் தந்தையார்!
தேடித்தேடி நூல்களைப் பதித்த
சாமிநாதன்என் பெரிய தந்தையார்!
நானிலம் பயனுற வல்லமை வேண்டிய
நாயகர் பாரதி நாமத் தந்தையார்!
இந்து மதத்தின் அர்த்தம் கூறிய
கண்ண தாசன்என் சிறிய தந்தையார்!

(குணத்தில்)

சங்கப் பாடல்கள் பாடிய அனைவரும்
எம்குலத் தந்தையர்! எம்குலத் தந்தையர்!
பொங்கும் தமிழால் திருமுறை பாடிய
பெரியோர் அனைவரும் எம்குலத் தந்தையர்!
அரங்கன் அடிப்பொடி ஆழ்வார் அனைவரும்
எம்குலத் தந்தையர்! எம்குலத் தந்தையர்!
உறங்கும் தமிழின் உள்ளே கனலாய்
உயிராய் ஒளிர்பவர் எம்குலத் தந்தையர்!

(குணத்தில்)

அகத்திய மாமுனி ஆசி பெற்றவன்!
தொல்காப்பியரின் சூத்திரம் ஆனவன்!
நானே நற்றமிழ்! நாவின் சொற்றமிழ்!
நானிலம் விரும்பும் நாதத் தீந்தமிழ்!

(குணத்தில்)

அறத்தில் மாரியன்! மறத்தில் வீரியன்!
புறத்திலும் அகத்திலும் நானே சூரியன்!
குணத்தில் ஆரியன்! குருத்தில் வீரியன்!
நானே உலகின் ஞானச் சூரியன்!

விஜயபாரதம் – தீபாவளி மலர் – 2004
.
Advertisements

உணர்ச்சிகளைத் தூண்டும் நேரமல்ல இது…

27 Apr

1999-ஆம் ஆண்டு, டிசம்பர் 30-ஆம் தேதி, நேபாளத்திலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தலிபான்களால் நடுவானில் கடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்தில் இறக்கப்பட்ட அந்த விமானத்தில் பிணைக் கைதிகளாக 178 பயணிகள் இருந்தனர்.

அவர்களை விடுவிக்க, இந்தியச் சிறைகளில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க நிறுவனர் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று தலிபான்கள் மிரட்டினர்.

இதையடுத்து, தலிபான்களுடன் பேச்சு நடத்த அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காந்தஹார் சென்றார். அவரே பயங்கரவாதிகள் மூவரையும் தலிபான்களிடம் ஒப்படைத்து, விமானத்தையும் பயணிகளையும் சிப்பந்திகளையும் மீட்டு வந்தார்.

இந்தச் சம்பவத்தில் தலிபான்களால் மீட்கப்பட்ட மசூத் அசார், பின்னாளில் 2001 டிசம்பரில் தில்லி நாடாளுமன்றம் மீது நடந்த தாக்குதலிலும், மும்பையில் 2008 நவம்பரில் நடந்த பயங்கரத் தாக்குதலிலும் மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது. இன்று உலகில் தேடப்படும் அதிபயங்கரக் குற்றவாளி என்று இவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

1989, டிசம்பர் 8-ஆம் தேதி காஷ்மீரில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா சயீத் பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த, சிறையிலுள்ள ஐந்து பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. தனது மகளை விடுவிக்க உள்துறை அமைச்சரே நேரில் சென்று பேச்சு நடத்தினார். இறுதியில் 5 பயங்கரவாதிகளை விடுவித்து, மகளை மீட்டு வந்தார் அன்புத் தந்தை. விடுவிக்கப்பட்ட அந்தப் பயங்கரவாதிகளால் ஜம்மு காஷ்மீரில் இன்றும் தொடர்கிறது பிரிவினைப் போராட்டம்.

இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் அரசின் மீது நமது ஊடகங்கள் செலுத்திய நிர்பந்த வலிமை அளப்பரியது. இதுபோன்ற ஆள்கடத்தல்களின்போது, ஊடகங்கள் பல சமயங்களில் தாங்களே தீர்ப்பு வழங்கும் நிலைக்குச் சென்று விடுகின்றன.

கடத்தப்பட்டவர் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அதேசமயம், கடத்தல்காரர்களுடன் அரசு பேச்சு நடத்திக் கொண்டிருக்கும்போது, அரசை நிலைகுலையச் செய்வதாக ஊடகங்கள் செயல்படக் கூடாது. ஆனால், பரபரப்புக்காக ஊடகங்கள் எல்லை மீறுகின்றன.

காந்தஹார் விமானக் கடத்தலின்போது, நமது 24 மணிநேர செய்தி சேனல்களின் நேரடி ஒளிபரப்பு ஒருவகையில் தலிபான்களுக்கு உதவுவதாகவே அமைந்தது. பிணைக் கைதிகளின் உறவினர்கள் நடத்திய போராட்டங்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கடத்தல்காரர்களின் பிடியில் விமானம் இருந்தபோது, பத்திரிகைகளும் ஊடகங்களும் தினசரி அரசைக் கடுமையாகக் கண்டித்துச் செய்திகள் வெளியிட்டு, அரசின் தன்னம்பிக்கையைக் குலைத்தன. அதனை பின்னாளில் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அரசு மீது செலுத்தப்பட்ட நிர்பந்தமே பயங்கரவாதிகளிடம் அரசு அடிபணியக் காரணமானது என்று அவர் கூறியிருக்கிறார்.

அதேபோன்ற நிலைதான் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் விவகாரத்திலும் காணப்படுகிறது. கடந்த 21-ஆம் தேதி வனப்பகுதியில் அரசு விழாவில் பங்கேற்ற சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டிருக்கிறார். அதற்கு முன் இரு காவலர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஏற்கெனவே ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் ஒரு மாதத்துக்கு முன் கடத்தப்பட்ட ஆளும் பிஜு ஜனதாதள எம்எல்ஏ ஜினா ஹிகாகா விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அதற்கு முன் கடத்தப்பட்ட இரு இத்தாலியர்களை மீட்பதற்காக 13 மாவோயிஸ்டுகளை ஒடிசா அரசு சிறைகளிலிருந்து விடுவிப்பதாக அறிவித்திருக்கிறது.

இனி இத்தகைய ஆள்கடத்தல் நாடகங்கள் தொடர்கதையாகக் கூடும். மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ளும் திறனற்று நமது அரசுகள் திண்டாடும் நிலையில், அரசுக்கு மேலும் சுமையாகின்றன, ஊடகங்களின் செய்திகள். சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழக ஊடகங்கள் இதில் விசேஷ கவனம் செலுத்துகின்றன.

கடத்தப்பட்ட அதிகாரியின் குடும்பத்தினர், உறவினர்கள், சொந்த ஊர்க்காரர்கள், அவர் படித்த பள்ளி, கல்லூரி, வசித்த பகுதிகளின் மக்களைப் பேட்டி கண்டு பரபரப்பாகச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் செய்யத் தவறிய ஒரு விஷயம், மாவோயிஸ்டுகளின் அசுரத்தனத்தை வெளிப்படுத்தாதது.

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதிலும் முறையிடுவதிலும் தவறில்லை. ஆனால், ரத்தத்தில் மனு எழுதி திருநெல்வேலி ஆட்சியரிடம் ஒருவர் அளித்திருப்பதை என்னென்பது?

தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், முக்கிய அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கடத்தப்பட்ட அதிகாரிக்காக அறிக்கை வெளியிடுகின்றனர். கடத்தப்பட்டபோது அவரைக் காக்கப் போராடி உயிர் நீத்த சத்தீஸ்கர் காவலர்கள் இருவரைப் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா?

சிக்கலான நேரங்களில் தான் உணர்ச்சிகளைத் தள்ளிவைத்து அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். பதறிய காரியம் சிதறிவிடும். கடத்தப்பட்டவர்களை மீட்கப் போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே?

தினமணி (27.04.2012)

.

துணுக்கு

21 Apr

0

பல்லிடுக்கில் சிக்கிய துணுக்கு
படாத பாடு படுத்துகிறது.
பல முயற்சிகளுக் கப்புறமும்
நாவினுக்குத் தோல்வி.
குண்டூசி எடுத்துக் குத்தப் போய்
ஈறுகளில் ரத்தம்.
வாய் கழுவியும் ஒரு வாளி
தண்ணீர் செலவு தான் மிச்சம்.
.
பல்லிடுக்கில் நுழைந்த எதிரி
பாடாய்ப் படுத்துகிறது.
ஆனால் –
சிந்தனையைத் தூண்டும்
சின்னஞ்சிறு எதிரியை
எப்போது மறந்தேன்
தெரியவில்லை…
எப்போது போனது என்றும்
புரியவில்லை.

.

தமிழன் எக்ஸ்பிரஸ்  (1999, ஜூன் 16-23)

.

காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள்

19 Apr

1932– சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆங்கிலேய அரசின் தடையை மீறி திருப்பூரில் அணிவகுத்து முன்னேறிய விடுதலைவீரர்களின் ஊர்வலம் காவலர்களால் தாக்கப்பட்டது. மூவண்ணக் கொடியைத் தாங்கி முன்னேறிய குமாரசாமி என்ற இளைஞர் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவர் கரத்திலிருந்த மூவண்ணக் கொடியை அகற்ற முடியவில்லை. அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்து, கொடிகாத்து, திருப்பூர் குமரனாக சரித்திரத்தில் இடம் பெற்றார் அந்த இளைஞர்.

திருப்பூர் குமரன் தாங்கிய கொடி, அந்நாளில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியின் கொடி. அதுவே பின்னாளில் நமது மூவண்ண தேசியக்கொடிக்கு ஆதாரமானது. அதே காங்கிரஸ் கட்சி, இன்று ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றுவதை அரசியல் விளையாட்டு என்று வர்ணிப்பது, காலத்தின் கோலமோ?
.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வின் சின்னமாக விளங்கிய காங்கிரஸ் இன்று, அந்த அடையாளத்தை பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.விடம் தத்துக் கொடுத்துவிட்டு தடுமாறுகிறது. பா.ஜ.க.வோ கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் காங்கிரஸின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக, புலிவாலைப் பிடிக்கவும் தயாராக இருக்கிறது.
.
அண்மைக்காலமாக பிரிவினைவாதிகளின் பிடியில் தவிக்கும் காஷ்மீரில், சுதந்திரதினம், குடியரசு தினங்களில் நமது தேசியக்கொடி அவமதிக்கப்படுவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதைவிடக் கொடுமை, அங்கு தேசிய தினங்களில் பாகிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றி பிரிவினைவாதிகள் எக்காளமிடுவதுதான்.
.
கடந்த ஓராண்டாக, ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு அங்கு பிரிவினைப் பிரசாரம் ஓங்கி இருக்கிறது. முதிர்ச்சியற்ற முதல்வர் ஓமர் அப்துல்லாவின் ஆட்சி பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துவிட்டது. இதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் தவிர்த்து, மத்திய அரசும் தன் பங்கிற்கு நிலைமையை சிக்கலாக்கியது.
.
இந்நிலையில் தான், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால்சவுக்கில் தேசியக்கொடி ஏற்றப்போவதாக பா.ஜ. யுவமோர்ச்சா அறிவித்தது. இதற்கென ராஷ்ட்ரீய ஏக்தா யாத்திரையை (தேசிய ஒருமைப்பாட்டு யாத்திரை) அதன் தலைவர் அனுராக் தாகூர் கொல்கத்தாவிலிருந்து துவக்கினார்.
.
பிரிவினைவாதிகளுக்கு அஞ்சி அங்கு தேசியக்கொடி ஏற்றுவதை அரசு தவிர்ப்பதை அடுத்தே, இந்த அரசியல் போராட்டத்தை பா.ஜ.க. அறிவித்தது. சென்ற குடியரசு தினத்தன்று லால்சவுக்கில் நமது தேசியக்கொடி எரிக்கப்பட்டதை பா.ஜ.க. சுட்டிக்காட்டியது.
.
மாநில முதல்வரே அங்கு தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவித்து, இந்த அரசியல் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியிருக்க முடியும். இதில் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் அடைவதைத் தடுத்திருக்கலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி, இதை கௌரவப் பிரச்னையாக்கி, தேசியக்கொடி ஏற்றுவதையே சவாலான விஷயமாக்கிவிட்டன.
.
ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள சூழலில் குடியரசு தினத்தை சிக்கலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஓமர், பா.ஜ.க.வினர் லால்சவுக் வர அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி முழுவதும் சீலிடப்பட்டது.
.

தேசியக்கொடி ஏற்றுவதன் மூலமாக பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கக் கூடாது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், இதை பா.ஜ.க. அரசியலாக்குவதாகக் குறைப்பட்டார். அவரும் கூட, தேசியக்கொடி ஏற்றுவது எப்படி பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் என்று விளக்கவில்லை. பிரதமரின் பேச்சு, பிரிவினைவாதிகளை அடக்குவதாக இல்லாமல், அவர்களது செயல்முறையை ஆதரிப்பதாகவே தோற்றமளிக்கிறது.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதைவிட வியப்பளிப்பது, கர்நாடகாவிலிருந்து ஜம்மு சென்ற பா.ஜ.க. தொண்டர்கள் பயணித்த ரயில் மகாராஷ்டிராவில் மறிக்கப்பட்டு, ரயில்பெட்டி இணைப்பைத் துண்டித்து பெங்களூருக்கு திருப்பி அனுப்பியதுதான். இறுதியில், கடும் அடக்குமுறைகளைக் கையாண்டு, பா.ஜ.க.வின் தேசியக் கொடியேற்றும் முயற்சியை தடுத்திருக்கிறது மாநில அரசு.

ஜம்மு காஷ்மீரை மையமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தை பா.ஜ.க. நடத்துவதில் அதிசயமில்லை. ஏனெனில், பா.ஜ.க.வின் முந்தைய வடிவான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் அங்கம் என்று நிலைநாட்டுவதற்காக 1953-ல் காஷ்மீர் நுழைவுப் போராட்டம் நடத்தி, கைதாகி, சிறையிலேயே உயிரிழந்தவர்.

சுதந்திரம் பெற்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ உரிமைகள் அன்றைய பிரதமர் நேருவால் வழங்கப்பட்டன. அதன் பயனாக, ஜம்மு காஷ்மீர் முதல்வர் அம்மாநில பிரதமர் என்றே அழைக்கப்பட்டார். காஷ்மீர் மாநில அரசுக்கு தனிக்கொடியும் இருந்தது. அம்மாநிலத்திற்குள் ஜனாதிபதியே நுழைய வேண்டுமாயினும் காஷ்மீர் பிரதமர் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த இரட்டை நிலைகளை மாற்றியது சியாம பிரசாத் முகர்ஜியின் உயிர்த் தியாகம்தான்.
.
இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதில் முகர்ஜியின் பங்களிப்பு மறுக்க இயலாதது. எனவேதான், பிரிவினைவாத அமைப்பு ஒன்று லால்சவுக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றுமாறு சவால் விடுத்தபோது, அன்றைய பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி அதையேற்று, குமரி முதல் ஸ்ரீநகர் வரை ஏக்தா யாத்திரை சென்று 1992 குடியரசு தினத்தில் லால்சவுக்கில் தேசியக்கொடி ஏற்றினார்.
.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் சுமுகமாக இருக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதேநேரம், பிரிவினைவாதிகள் திட்டமிட்ட ரீதியில் முறியடிக்கப்பட்டனர். அம்மாநிலத்தை வெறும் நிலமாக பாவிக்காமல் உணர்ச்சிபூர்வமாக அணுகுவது பா.ஜ.க.வின் வழிமுறை.
.
இதற்கு மாறாக தற்போதைய மத்திய, மாநில அரசுகள் இயங்குவதே பிரச்னைகளுக்கு காரணம். இதன்மூலமாக, பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதில் துணிவின்மையை மட்டும் காங்கிரஸ் கட்சி காட்டவில்லை. தேசிய உணர்வு என்னும் அடையாளத்தையும் பா.ஜ.க. பறித்துச் செல்ல அனுமதித்துவிட்டது.
.
பிரிவினைவாதிகள் உச்சபலத்துடன் இயங்குகையில் அவர்களுக்கு மேலும் வாய்ப்பு ஏற்படுத்துவதாக பா.ஜ.க.வின் இந்த யாத்திரை இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தேசிய விழிப்புணர்வில் காங்கிரஸ் பின்தங்கி இருப்பதை வெளிப்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பாகவே தேசியக்கொடி ஏற்றுவதை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.
.
மொத்தத்தில் சொந்த நாட்டிற்குள்ளேயே தேசியக் கொடி ஏற்றுவதை கௌரவப் போராட்டமாகவும், அதைத் தடுக்க முனையும் அரசுகளின் அத்துமீறல்களாகவும் காணும் பாக்கியத்தை, வைரவிழா காணும் குடியரசு நமக்கு வழங்கி இருக்கிறது.
.
நல்லவேளை, திருப்பூர் குமரன் இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால், இதற்காகவா நாம் தடியடி பட்டோம் என்று நொந்து, நம்மை சபித்திருப்பார். இதற்காகத் தான் அன்றே ஆங்கில அரசால் அடிபட்டுச் செத்தாயா திருப்பூர் குமரா?
.
.