கிரிக்கெட் அகராதி

6 Apr

கிரிக்கெட் போட்டி
ஒவ்வொரு அணியிலும்
11 அதிர்ஷ்டசாலிகள் ஆடும் ஆட்டம்
11 ஆயிரம் கிறுக்கர்கள் பார்த்து ரசிப்பது.

கிரிக்கெட் ரசிகர்
வீரர்களின் வருமானம் தவிர
எல்லா விபரங்களும் அறிந்தவர்.
விசில் அடித்தே வீணானவர்.

கிரிக்கெட் வீரர்
அதிர்ஷ்டக்காற்று அடித்தால் ‘ஆறு’;
எதிரணிக்கு காற்றானால் ‘வாத்து’
சொக்கவைக்கும் சொக்கட்டான்.

கிரிக்கெட் தேர்வுக்குழு
ஆதிக்கவாதிகளின் கோட்டை;
அரசியல் விளையாடும்
அற்புதமான மைதானம்.

கிரிக்கெட் சங்கம்
கிறுக்கர்கள் ரசிக்கும் வகையில்
சூதாட்டத்தை நேர்த்தியாக
நடத்தும் நிறுவனம்.

கிரிக்கெட் ஒளிபரப்பு
கோடிகளைக் கொட்டி
வாங்கிய அரங்கம்.
கோடிகளாகக் கொட்டும் சுரங்கம்.

கிரிக்கெட் செய்தி
வாசகரையும்
முட்டாளாக்கும்
புள்ளிவிபரப் பந்தல்.

கிரிக்கெட் நடுவர்
விளையாட்டின் விதிகளை
நினைவுபடுத்தும்
சுவாரஸ்யமான ஆத்மா.

கிரிக்கெட் தகவல்
வீரர்களின் வாழ்க்கை;
ரசிகர்களை மூலதனமாக்கிய
கவர்ச்சியான வர்த்தகம்.

கிரிக்கெட் பந்து
சுரண்டவென்றே உருவாக்கிய
கோளவடிவ பொருள்;
சுரண்டலின் மூலப்பொருள்.

கிரிக்கெட் வர்ணனை
எப்படி பந்தை அடித்தாலும்
குதூகலமாய் விவரிப்பது;
வாயாடிகளின் தொழில்.

கிரிக்கெட் மைதானம்
புல்லுக்கு அலங்காரம்;
சுற்றிலும் விளம்பரம்;
சந்தையின் மையப்புள்ளி.

கிரிக்கெட் சீருடை
வர்த்தகம் வளர்க்கும்
இலட்சினைகளை சுமக்கும்
வண்ணங்களின் சங்கமம்.

கிரிக்கெட் மட்டை
வீரர் கையெழுத்துடன்
ஏலம் போவது;
மரங்களுக்காக மரத்தில் செய்வது.

கிரிக்கெட் கவசம்
விளையாட்டுக்கு அழகூட்டுவது;
வியாபாரத்துக்கு மெருகூட்டுவது;
ஏங்க வைத்து வாங்க வைப்பது.

கிரிக்கெட் சாதனை
தொடர்ந்து சொதப்பினாலும்
ஏதாவதொரு போட்டியில்
சோபித்துவிடுவது.

கிரிக்கெட் கோப்பை
போட்டிகளுக்கு இலக்கு;
அடிக்கடி கைமாறும்
உலோகப் பொருள்.

கிரிக்கெட் விதிகள்
தேவைக்கேற்ப அவ்வப்போது
மாற்றப்படும் மென்பொருள்;
ஆட்டத்தை வசீகரமாக்கும் இடுபொருள்.

கிரிக்கெட் அணி
இணைந்து ஆடுவதாக
தோற்றம் தருவது;
மேலாளர், மருத்துவர் கொண்டது.

கிரிக்கெட் தொடர்
ஒரு மாதத்துக்கேனும்
சோற்றுக் கவலை மறக்கவைப்பது;
ஆண்டுக்கு 12 முறை நடப்பது.

கிரிக்கெட் விளம்பரதாரர்
வாழவைப்பதாகக் கூறி
வாழ்வதில் வல்லவர்;
விதிகளை இயக்குபவர்.

கிரிக்கெட் 3-வது நடுவர்
தீர்மானிக்க முடியாத
சிக்கல்களை அவிழ்க்க
விஞ்ஞானம் அளித்த பரபரப்பு உத்தி.

கிரிக்கெட் ‘பிட்ச்’
ஆடத் தெரியாதவர்கள்
கோணல் என்று சொல்வது;
களிமண்ணால் ஆனது.

கிரிக்கெட் ‘பிக்சிங்’
ஆட்டத்தின் போக்கை
முன்கூட்டியே தீர்மானிப்பது;
களிமண்கள் அறியாதது.

கிரிக்கெட் ‘விக்கெட்’
பந்து வீசுபவர் குறி பார்ப்பது;
மட்டையாளர் பாதுகாப்பது;
வெற்றி பெற்றவர் பிடுங்கிச் செல்வது.

கிரிக்கெட் ‘கேட்ச்’
பறந்துவரும் பந்தை
குட்டிக்கரணம் அடித்துப் பிடித்து
கரவொலி வாங்குவது.

கிரிக்கெட் ‘சீசன்’
பயிர் விளையாத கழனிகளில்
உள்ளூர் சிறுவர்கள், இளைஞர்கள்
உற்சாகமாய் விளையாடும் காலம்.

கிரிக்கெட்:
சாகச விளையாட்டுக்களையும்
தடகளத்தையும் ஒழித்துக்கட்டிய-
மேன்மையான விளையாட்டு..

மீள்பதிவு: குழலும் யாழும்
.

குறிப்பு: தற்போது நடந்துவரும் 20 -20 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இக்கவிதைகள் சமர்ப்பணம்.
.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: