Archive | May, 2012

இளமையின் கர்வம்

30 May

ஒரு நாள்:

தோட்டத்திலே, காலையிலே ரோஜா மலர்ந்தது
வாட்டமான இளமைக்காக கர்வம் அடைந்தது.

சுக்குப் போல வறண்டிருந்த தோட்டக்காரரோ
பக்கத்திலே நின்றிருக்க, ரோஜா பார்த்தது.

”அதிக வயது ஆகிப் போன தோட்டக்காரரே
விதி உனக்கு முடிந்த தின்று” என்று சிரித்தது.

நண்பகலில் வெப்பத்தினால் மேலும் விரிந்தது
மென்மையான சுகந்தத்தினை வீசி வந்தது.

மீண்டும் அவன் காலடியைக் கேட்ட போதிலே
வேண்டு மட்டும் கிண்டலாகச் சிரித்துக் கொண்டது.

மறுநாள்:

பாவமென்று பரிகசித்த ரோஜா மண்ணிலே
ஆவியற்று, அற்பமாக வாடிக் கிடந்தது.

முதியவராம் தோட்டக்காரர் பகலில் வந்தனர்;
விதி முடிந்த மலர்களினை வீசி எறிந்தனர்.

இளமை, அழகு நிலைத்திருந்து கண்டதுமில்லை.
இளமையினால் முதுமையினை எள்ளல் மடமையே!

.

குறிப்பு:  இக்கவிதை  Austin Dobson  எழுதிய ‘THE ROSE AND THE GARDENER’ என்ற ஆங்கிலக் கவிதையை தழுவி எழுதப் பட்டது

மூலப் பாடலைக் கேட்க: சொடுக்கவும்.

பாடலைக் காண: சொடுக்கவும்.

.

எங்கும் நிறையட்டும் ஆனந்தம்!

29 May

பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள், நாட்டை  ஒருங்கிணைக்கும் ஆற்றலும், மக்களுக்கு புத்துணர்வளிக்கும் திறனும் கொண்டவையாக விளங்குகின்றன.
பாரத நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு அடிப்படைக் காரணத்துக்காக திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகவே உள்ளது. எனினும் நாடு நெடுகிலும் பரவலாகவும், ஒத்த சிந்தனையுடனும் கொண்டாடப்படும் விழாக்கள் சில மட்டுமே. அவற்றுள் தலையாயது தீபாவளி.
 .
தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம், என்று தோன்றியது என்று அறிய இயலாத பழமை வாய்ந்தது. நாட்டு மக்களை அச்சுறுத்திய நரகாசூரன் என்ற அரக்கனை இறைவன் சம்ஹரித்த நாளே தீபாவளியாக வழிபடப்படுகிறது என்பது வரை பெரும்பாலோர் அறிந்துள்ளோம். அதிலும்  இறைவனிடம் அரக்கன் கேட்டுப் பெற்ற வரமாகவே தீபாவளி பண்டிகை நமக்குக் கிடைத்திருக்கிறது.
 .
இதில் குறிப்பிடத் தக்க விஷயம், நரகாசூரன் பூமித்தாயின் மைந்தன் என்பதும், அவனது அக்கிரமங்கள் தறிகெட்டபோது, இறைவனின் சாரதியாக பூமாதேவியே தேரைச் செலுத்தி, தனது மகன் என்றும் பாராமல் அவனது அழிவுக்கு வித்திட்டாள் என்பதும் தான்.
.
அகழ்வாரைத் தாங்கும் பொறுமை மிக்கவளான நிலமகள், புவிக்கு தனது மகனால் கெடுதி வந்தவுடன், தனது பொறுமையைக் கைவிட்டு அவனையே அழிக்க முற்பட்டாள் என்ற புராணக் கதையில், நாம் கற்க வேண்டிய நியாய தர்மங்கள் நிறைய உண்டு.
.
எனினும், அந்த அன்னையின் மனம் மகிழவும், சாகும் முன் திருந்திய அரக்கனின் மனம் குளிரவும், அவன் கேட்ட வரத்தின்படி, அதிகாலையில் நரகாசூரனை நினைந்து  எண்ணெய்க் குளியல் நடத்தி, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, புத்தாடை அணிந்து, நன்மை எங்கும் ஓங்க பிரார்த்தனை செய்கின்றோம்.
.
இன்று தீபங்களை இல்லங்களில் வரிசையாக ஏற்றி தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். “தீபங்களின் வரிசை’  என்ற பொருள் தரும் “தீப ஆவளி’யே தீபாவளியானது என்று கூறப்படுவதுண்டு. தமிழகத்தில் தீபாவளியன்று இந்தப் பழக்கம் இல்லை. இதனை ஐப்பசிக்கு அடுத்துவரும் கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தன்று தீப வழிபாடாக தமிழகத்தில் காண முடிகிறது. எனினும் வடமாநிலங்களில் தீபாவளியன்று தீபங்களின் வரிசைகளால் மக்கள் இறைவனை வழிபடுவது தொடர்கிறது.
 .
மற்றபடி, எண்ணெய்க்குளியல் உள்ளிட்ட பிற அம்சங்கள் நாடு முழுவதும் சீராகக் காணப்படுகின்றன. “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்ற கேள்வி, தீபாவளியன்று காலை பிரசித்தமானது. அதாவது, அன்று ஒவ்வொருவர் இல்லத்திலும் உள்ள தண்ணீரில் கங்கை வந்து கலப்பதாக ஐதீகம். கங்கை நதிக்கும் நமது பண்பாட்டு ஒருமைப்பாட்டில் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
 .
சமண, பெüத்த, சீக்கிய மதங்களிலும் தீபாவளிக்கான வரலாற்றுப் பின்புலமும் பண்பாட்டுக் கதைகளும் உண்டு. நாட்டின் பல பகுதிகளில் ஐந்துநாட்கள் கொண்டாடும் திருவிழாவாக தீபாவளி உள்ளது.
.
தீபாவளிக்கு பழங்குடி சார்ந்த பண்பாட்டுப் பின்புலமும் உண்டு. நமது முன்னோர், வனங்களில் திரிந்த பழங்குடி மக்கள்தான். அவர்களுக்கு இருள் என்றும் அச்சமூட்டுவதாகவே இருந்தது. அதனை தீயின் மூலம் அவர்கள் வென்றார்கள். கற்களால் மூட்டிய தீக்கங்குகள் தந்த ஒளியால், மனிதன் தனது முதலாவது மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினான். எனவேதான் தீயை, ஒளியை, வெப்பத்தை, இவை அனைத்தையும் தரும் சூரியனை வழிபடுவது நமது மரபாகியிருக்க வேண்டும்.
.
நமது மிகத் தொன்மையான வேத இலக்கியங்களில், ஒளியை வழிபடும் பாடல்கள் நிறைய உண்டு. இன்றும் வேத மந்திரங்களில் தலைமை மந்திரமாகக் கருதப்படுவது, ஒளியை வழிபடும் ‘காயத்ரி’ மந்திரமே. “கவிதைகளில் நான் காயத்ரியாக இருக்கிறேன்” என்று பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். இந்த மந்திரத்தை தமிழகத்தின் மகாகவி பாரதி அழகிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
.
”செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியை நாம் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!” என்பதே அந்த மந்திரத்தின் உட்பொருள். தீபாவளியன்று இல்லங்களில் நாம் ஏற்றும் தீபங்களிலும் அந்த தூய ஒளி பிரவகிக்கிறது. அந்த ஒளி நமது அறிவைப் பெருக்கி, அறியாமை இருளகற்றி, வற்றாத இறையருளை இல்லமெங்கும் பாய்ச்சட்டும்!
.
இன்று தீபாவளி, முக்கியமான வர்த்தக காரணியாகவும் மாறியிருக்கிறது. புத்தாடைகள், இனிப்பு வகைகள், அணிகலன்கள், பட்டாசு வகைகள், இல்லத்துக்குத் தேவையான பொருட்களை வாங்க, தீபாவளிக் காலம் அற்புத வாய்ப்பாக உள்ளது. பண்டிகைகளின் நோக்கமே மக்களை மகிழ்விப்பதும், அவர்களின் வாழ்வுக்கு புதிய திசைகளைக் காட்டுவதும் தானே?
.
அந்த அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துவிசையாகவே தீபாவளிப் பண்டிகைக் காலம் திகழ்கிறது எனில் மிகையில்லை. ஆண்டு முழுவதும் நடக்கும் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிப்பது, தீபாவளியை ஒட்டித் துவங்கும் பண்டிகைக்காலமே என்பது வர்த்தகர்களின் கருத்து.
.
தீபாவளிக்கு தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடையும் பட்டாசும் வாங்கத் துடிக்காத பெற்றோர் அரிது. இதுவே வாழ்க்கையின் மீதான அபிமானத்தையும் பிடிமானத்தையும் நல்குகிறது. ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கும் மனிதரின் வாழ்வில் தீபாவளி அளிக்கும் புதிய நம்பிக்கை ஆழமானது.
.
இருப்பினும் அனைவராலும் தீபாவளியை இனிமையாகக் கொண்டாட முடிவதில்லை. ஏழ்மைநிலையில் துயருறுவோரும், ஆதரவற்றவர்களாகக் கைவிடப்பட்டோரும் தீபாவளியின் மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி? இந்தக் கண்ணோட்டத்துடன் ஆதரவற்றோரையும் பரம ஏழைகளையும் தீபாவளியில் பங்கேற்கச் செய்யும் நல்லுள்ளங்கள் அண்மைக்காலமாகப் பெருகி வருகின்றன.
.
இதுவே உண்மையான பண்பாட்டின் வெற்றி. ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடையும் பலகாரமும் பட்டாசும் வாங்கிக் கொடுத்து நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால் நமது ஆனந்தம் இரட்டிப்பாகும். நாமும் இந்தக் கண்ணோட்டத்துடன் இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடினால் இறையருள் பூரணமாகக் கிட்டும்.
.
இருளை விரட்டும் தீபஒளியுடன், மனமகிழ்வூட்டும் பட்டாசுகளின் பேரோசையுடன், ஒளிமயமான வண்ணச்சிதறல்களுடன், தீபாவளியைக் கொண்டாடும்போது, நாமும் குழந்தையாகிறோம். தீபாவளிப் பண்டிகை நாட்டை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைக்கிறது; நம்மையோ ஆனந்தத்தின் எல்லையால் அன்புடன் பிணைக்கிறது.
.
இந்த மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாகட்டும்! இந்த மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்கட்டும்! இந்த மகிழ்ச்சி அடுத்த தீபாவளி வரை நமக்கு வழிகாட்டட்டும்!

தினமணி (09.10.2011)

(ஒளிப்பிரவாகம் விளம்பரச் சிறப்பிதழ்) – கோவை

.

 

.

எழுதப்படாத கவிதை…

28 May

நான் எழுதாத எதையும்
நான் எழுதியதாக
நானே சொல்லிக் கொள்வதில்லை.

நான் எழுதாத எதையும்
நான் சொந்தம் கொண்டாடுவதில்
என்ன பயன் இருக்க முடியும்
எனக்கு நானே சொறியும் இன்பம் தவிர?

கலைஞரின் இளைஞனும்
உளியின் ஓசையும்
நான் எழுதியது என்று சொன்னால்
சிரிக்கத்தான் போகிறீர்கள்.

நான் எழுதவில்லை என்றாலும்
சிரிக்காமல் சிரிப்பீர்கள்.
பிறகு எதை எழுதி
என்ன ஆகப் போகிறது?

எங்கு போனாலும்,
எதையாவது கிறுக்கி
எப்படியாவது வெளிப்படுத்தி
எங்கேயாவது பிரசுரமானாலும்
நகலெடுக்கும் நண்பர்கள்
இருக்கவே செய்கிறார்கள் என்னை மாதிரி.

ஒன்று தெரியுமா?
உளியின் ஓசைக்குத் தான்
கல்லின் வலி தெரியும்.
நகல் எடுப்பதும் எடுப்பிப்பதும்
ஒன்றல்ல தெரியுமா?

ஒன்று மட்டும் உறுதி-
இந்தக் கழுதையும்கூட
நான் எழுதியதில்லை.
நான் எழுதவே இல்லை.

.

ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி

27 May

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

(பிறப்பு: 1902, அக். 11 –  மறைவு: 1979, அக். 8)

‘லோக்நாயக்‘ என்றால் மக்கள் தலைவர் என்று பொருள் .  இவ்வாறு அழைக்கப்படும்  பெருமைக்குரியவர்,  பீகாரில் பிறந்த விடுதலை வீரரும்,   நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின்  ஜனநாயகத்தைக்  காத்தவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

இந்தியாவில் ‘சோஷலிசம்’  எனப்படும் சமதர்மக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் மூலவர் இவரே. ‘முழுப் புரட்சி’ என்ற சொல்லின்  பிதாவும் இவரே. வினோபா பாவே நடத்திய சர்வோதய இயக்கம் நாடெங்கும் பரவலாக இவரது பணிகள் பெரும்பங்கு வகித்தன.

பிறப்பும் கல்வியும்:

பிகாரில் உள்ள சிதாப்தியரா என்ற கிராமத்தில் காயஸ்த ஜாதியைச் சார்ந்த  அரசு ஊழியர் ஒருவரது குடும்பத்தில், 1902, அக். 11-ல் பிறந்தார். இவரது தாயின் பெயர் புல்ராணி தேவி. இவரது தந்தை ஹர்ஸ்தயாள் மாநில அரசு ஊழியராக இருந்ததால் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவராக இருந்தார். எனவே ஜெயப்பிரகாஷ் தனது பாட்டியுடன் சென்று ஆரம்பக்கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்விக்கு பாட்னா சென்றார்.

படிப்பில் சுட்டியாக விளங்கிய ஜெயப்பிரகாஷ், அந்நாளிலேயே ‘பீகாரில் தற்போது ஹிந்தியின்  நிலைமை’ என்ற கட்டுரை எழுதி பரிசு பெற்றார். பிறகு கல்வி உதவித் தொகையுடன் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். எனினும் விடுதலைப்போரில் ஆர்வம் கொண்டிருந்த அவரால் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தக் கல்லூரி ஆங்கிலேயர் நிதியுதவியால்  நடத்தப்பட்டது என்பதால், இரண்டாமாண்டு படித்தபோது அங்கிருந்து வெளியேறினார் ஜெயப்பிரகாஷ். அப்போதுதான், அங்கு பாபு ராஜேந்திர பிரசாத்தின் (நமது நாட்டின் முதல் ஜனாதிபதி) தொடர்பு ஜெயப்பிரகாஷுக்கு ஏற்பட்டது. அவர் நடத்திவந்த பீகார் வித்யாபீடத்தில் ஜெயப்பிரகாஷ் இணைந்தார்.

ஜெயப்பிரகாஷுக்கு இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எனினும் அவரது குடும்பப்பாரம்பரியம் காரணமாக மகாபாரதம், பகவத்கீதை ஆகியவற்றை சிறு வயதிலேயே படித்துவிட்டார். அந்தக்கால நவீன இளைஞர்கள் போலவே அவரும் மேலைநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திவந்த மார்க்ஸிசம் தத்துவம் மீது மோகம் கொண்டார். இந்த உலகின் அனைத்து செல்வ வளமும்  எல்லோருக்கும் பொதுவானது  என்ற கார்ல்மார்க்ஸின் முழக்கம் ஜெயப்பிரகாஷை கவர்ந்ததில் வியப்பில்லை. ஆயினும் அவர் காங்கிரஸ் கட்சியில் விருப்பம் கொண்டிருந்தார்.

மகாத்மா காந்தி இந்தியா அரசியலில் நுழைந்த சமயம் அது. அவரது அறைகூவலை ஏற்று நாடே ஒத்துழையாமை இயக்கத்தில் (1919) குதித்தது. ஜெயப்பிரகாஷும் விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபட்டார். அடக்குமுறை சட்டமான ரௌலட்   சட்டத்தை எதிர்த்து நடந்த இந்தப்போராட்டம் நாட்டில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதே காலகட்டத்தில் ஜெயப்பிரகாஷுக்கு திருமணம் நடந்தது. அவரது 18 -வது வயதில், பிரிஜ் கிஷோர் பிரசாத் என்பவரின் மகள் பிரபாவதியை மணந்தார். பிரிஜ் கிஷோர் காந்தீயவாதி. அவருக்கு காந்தியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவர்களது மணவாழ்க்கை சிறிது காலமே நீடித்தது. 1922 -ல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல ஜெயப்பிரகாஷ் முடிவெடுத்தார். அப்போது அவருடன் வெளிநாடு செல்ல மறுத்து, சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்துக்கு சென்றுவிட்டார் பிரபாவதி. அங்கு கஸ்தூரிபா காந்தியின் மகளாகவே அவர் உடன் வாழ்ந்தார்.

வெளிநாட்டுப் பயணமும் கம்யூனிச மோகமும்:

அமெரிக்கா சென்ற ஜெயப்பிரகாஷ் அங்கு பல சிறிய வேலைகள் செய்து  சம்பாதித்துக் கொண்டே மேற்படிப்பு படித்தார்.  ஹோட்டல் தொழிலாளியாகவும் கூட அவர் வேலை செய்திருக்கிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சில நாட்களிலேயே தனக்கு ஆர்வமுள்ள துறை சமூகவியல் தான் என்பதைக் கண்டுகொண்டார். எனவே விஸ்கான்சின் பல்கலையில் சமூகவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், டிராட்ஸ்கி, ரோசா லக்சம்பர்க் ஆகியோரது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

காரல்மார்க்ஸின் ‘மூலதனம்’  நூலின் மூன்று பெரும் பாகங்களையும் படித்த ஜெயப்பிரகாஷுக்கு ஏற்கனவே இருந்த இடதுசாரி நாட்டம் அதிகரித்தது. அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் படித்து முடித்த பின், சோவியத் ரஷ்யாவில் முனைவர் படிப்பு படிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவரது குடும்பச் சூழல் காரணமாக இந்தியா (1929) திரும்ப நேர்ந்தது.

நாடு திரும்பிய ஜெயப்பிரகாஷுக்கு அவரது மனைவி பிரபாவதியின் மனமாற்றம் அதிர்ச்சி அளித்தது. அவர் காந்தி ஆசிரமத்திலேயே துறவு வாழ்க்கை வாழ விரும்பியதை ஏற்றுக்கொண்டு குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கினார் ஜெயப்பிரகாஷ். அவரது உள்ளம் முழுவதும் சோஷலிசக் கொள்கைகள் தீவிரமாகி இருந்த சமயம் அது. ஆயினும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதை  அவரால் ஏற்க முடியவில்லை.

அந்தக் காலகட்டத்தில் கம்யூனிச இயக்கத்தை இந்தியாவில் கட்டி  எழுப்பிய எம்.என்.ராயின்  பல ஆக்கங்களை படித்த அவர், தேசிய நீரோட்டத்துடன்  இணைய  முடியாமல்  கம்யூனிஸ்ட்கள் ஒதுங்கி நிற்பதை விமர்சித்தார்.   விடுதலைப்போரில்  முன்னிற்கும்  காங்கிரஸ் கட்சியுடன் மோதும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பற்றை அவர் கண்டித்தார். அதே சமயம் அலகாபாத்தில் இயங்கும் தொழிலாளர் ஆய்வு மையத்துக்கு தலைமை தாங்குமாறு தன்னை  ஜவகர்லால் நேரு அழைத்ததையும் அவரால் ஏற்க முடியவில்லை. வசதியான வாழ்விலோ, ஆடம்பரங்களிலோ அவருக்கு சிறிதும் நாட்டமில்லை. எளிய மக்களின் வாழ்க்கைக்கு உதவக் கூடியதாக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் மட்டும் ஜெயப்பிரகாஷ் பிடிவாதமாக இருந்தார்.

விடுதலைப்போரில் அதிதீவிரம்:

காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே சமதர்ம சமுதாயம் குறித்தும் சிந்தித்துவந்த ஜெயப்பிரகாஷுக்கு கம்யூனிஸ்ட்கள் விடுதலைப்போரில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது, ஆனால் காலம் அதற்கு முரணாக இருந்தது. இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் செயல்வேகம் மிகுந்த தலைவராக ஜெயப்பிரகாஷ் உருவெடுத்தார். 1932 -ல் தனது தலைமைப்பண்பை அவர் வெளிப்படுத்த அரிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஆண்டு காங்கிரஸ் அறிவித்த சட்டமறுப்பு இயக்கம் அரசை சீண்டுவதாக இருந்தது. அதையடுத்து காந்தி, நேரு உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ஜெயப்பிரகாஷ், தலைமறைவாக இருந்தபடி விடுதலை இயக்கத்தை வழிநடத்தினார்.

முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதான நிலையிலும் சட்ட மறுப்பு இயக்கம் தொடர்வதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த அரசு, இறுதியில் ‘காங்கிரஸ் போராட்டத்தின் மூளை’ ஜெயப்பிரகாஷ் என்று கண்டறிந்து,  சென்னையில்  இருந்த அவரை அதே ஆண்டு செப்டம்பரில் கைது செய்தது. அவர் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாசிக் சிறைவாசம்  தான் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்படுத்திய நிகழ்வாகும். அமெரிக்கா சென்று படித்தபோது இடதுசாரி சிந்தனைக்கு ஆளானது போலவே, நாசிக் சிறையில் உடனிருந்த தோழர்களுடனான விவாதம் காரணமாக இந்திய அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது.

நாசிக் சிறையில் இருந்த ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மினு மசானி,  அச்யுத் பட்வர்த்தன், யூசுப் தேசாய்  போன்ற சக சிறைவாசிகளுடன்  வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷுக்கு சோஷலிசம் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது.

சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை ஆனவுடன், ஒத்த சிந்தனையுள்ள தலைவர்கள் ஒருங்கிணைந்து (1934) காங்கிரஸ் சோஷலிச கட்சியை நிறுவினர். அதன் தலைவராக ஆச்சார்யா நரேந்திர தேவும், செயலாளராக ஜெயப்பிரகாஷும் தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சோஷலிசம் கொள்கையுடன் தனித்து இயங்கும் ஒரு குழுவாக அக்கட்சி செயல்பட்டது. எனினும் இக்கட்சி, தேர்தல் அரசியலுக்கு ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

சமதர்மக் கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட்களையும் தேசிய இயக்கமான காங்கிரசையும் இணைக்கும் முயற்சியில் தோல்வி கண்டாலும், இரு இயக்கங்களின் அடிப்படையான சமதர்ம சமுதாயம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியை அமைக்க ஜெயப்பிரகாஷால் இயன்றது. இக்கட்சியின் அரசியல் தாக்கம் இன்றளவும் பேரிடம் வகிப்பது கண்கூடு.

புரட்சியாளராக மாற்றம்:

இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது (1939) காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து பேதங்கள் ஏற்பட்டன. போரில் ஈடுபடும்  ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்தியப் படைகள் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதில் மோதல்  ஏற்பட்டது. இந்த இக்கட்டான சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதே ஜெயப்பிரகாஷின்  எண்ணம். காங்கிரஸ் சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், ஆங்கிய அரசின் சுரண்டலுக்கு எதிராக வேலை நிறுத்தத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். போருக்கு ஆயத்தமாகும் ஆங்கிலேயப் படைக்கு இந்தியர்கள் உதவாது போனால் அவர்கள் வேறு வழியின்றி நம் நாட்டை விட்டு தாமாகவே வெளியேறும் நிலை ஏற்படும் என்பதே ஜெயப்பிரகாஷின் கருத்து. ஆனால் காந்தியின் கருத்து வேறாக இருந்தது. எனினும் காந்தி ஜெயப்பிரகாஷை மதித்தார்.

இந்நிலையில், ஆங்கிலேய அரசால் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் தான் காந்திஜி – நேதாஜி மோதல் முற்றி நேதாஜி காங்கிரசிலிருந்து வெளியேறி இருந்தார். 9  மாத சிறைவாசத்துக்குப் பின்னர், சிறையிலிருந்து மீண்ட ஜெயப்பிரகாஷ் இவ்விருவரிடையே இணக்கம் ஏற்படுத்த முயன்றார். ஆனால், பலன் கிட்டவில்லை. அதன்பிறகு (1942) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்தி துவக்கினார். நேதாஜி காங்கிரசிலிருந்து முற்றிலும் வெளியேறி தனி புரட்சிப்பாதை அமைத்தது தனி வரலாறு.

இதனிடையே ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டு மும்பை, ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தில்லி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஆயுதப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் கடிதங்களுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, ஆயுதப்போருக்கு மக்களைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த மகாத்மா காந்தி, ”ஆயுதப் போருக்கு இந்தியத் தலைவர் ஒருவர் ஆயத்தமாகிறார் என்றால், அதற்கு ஆங்கிலேய அரசின் கீழ்த்தரமான அடக்குமுறை  ஆட்சியே காரணம்” என்றார்.

பிறகு காந்தி அறிவித்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி பெரும்பங்கு வகித்தது. ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், அங்கிருந்து 5  தோழர்களுடன் சிறைச்சுவரை சுரண்டி ஓட்டையிட்டுத் தப்பினார். அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு நேபாளம் சென்ற ஜெயப்பிரகாஷர், ‘ஆசாத் தாஸ்தா’ எனப்படும் விடுதைப்படையைத் திரட்ட முயன்றார். எனினும் ரயிலில் பஞ்சாப் செல்லும்போது 1943, செப்டம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டார். டிசம்பரில் இவர் ‘அதிமுக்கியமான அரசாங்கக்  கைதி’ என்று அறிவிக்கப்பட்டார்.

லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷரை ஆங்கிலேய அரசு கடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தியது.  அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வந்தது. இதன் விளைவாக 1945, ஜனவரியில்  16  மாதங்கள் கழிந்த நிலையில் ஜெயப்பிரகாஷர் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைப்போரின் இறுதிக் கட்டத்தில் நாடே கொந்தளித்திருந்த காலம் அது. அரசுடன் பேச்சு நடத்த வேண்டுமானால் சிறையிலுள்ள ராம் மனோகர் லோகியாவையும் ஜெயப்பிரகாஷரையும் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி நிபந்தனையிட்டார். அதன்படி இருவரும் 1946, ஏப்ரலில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை நாடே கொண்டாடியது. ‘இந்திய  இளைஞர் இதயங்களின் மன்னன்’ என்று ஜெயப்பிரகாஷ் புகழப்பட்டார்.

கட்டமைப்புப் பணியில் ஈடுபாடு:

அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சுயநலமிகளால் சோஷலிச கட்சியினர் புறக்கணிக்கப்பட்டனர். தேசப்பிரிவினை கட்டாயமானது என்றே சோஷலிசக் கட்சியினர் கருதினர். இதுபோன்ற கருத்து வேற்றுமைகளால் காங்கிரஸ் தலைமையிலான விடுதலைப் போராட்ட  மைய நீரோட்டத்திலிருந்து காங்கிரஸ் சோஷலிசக் கட்சியினர் விலகினர். பிற்பாடு தேசம் பிரிவினை செய்யப்பட்டபோது (1947)  நிகழ்ந்த சோகங்கள் சோஷலிசக் கட்சியினரையே அதிரவைத்தன.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆட்சி அதிகாரத்தில் நாட்டமில்லாத சோஷலிச கட்சியினர் தனியே எதிர்க்கட்சியாக இயங்கினர். அவர்கள் ஒருங்கிணைத்து ‘பிரஜா சோஷலிஸ்ட்’  கட்சியைத் துவக்கினர். காந்தியின் மறைவுக்குப் பின் ஜவஹர்லால் நேரு முன்னெடுத்த தொழில்மயமாக்க  அடிப்படையிலான சோஷலிசக் கனவினை  ஜெயப்பிரகாஷால் ஏற்க முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு கடிவாளமாக சோஷலிஸ்ட்கள் செயல்பட்டனர்.

1954 -ல் ஆச்சார்யா வினோபா பாவே துவங்கிய சர்வோதய இயக்கத்துக்கும் பூதான  இயக்கத்துக்கும்  ஆதரவளிப்பதாக அறிவித்த ஜெயப்பிரகாஷர்,  ஹசாரிபாகில் அதற்கென ஓர்  ஆசிரமத்தை நிறுவினார். ”கிராமங்களை  முன்னேற்றுவதே  தனது நோக்கம்” என்று அவர் அறிவித்தார். இந்நிலையில், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியுடன்  சித்தாந்தம் தொடர்பான  கருத்து வேறுபாடுகளால் 1957 -ல்   அக்கட்சியிலிருந்து ஜெயப்பிரகாஷர் விலகினார். அதன்பிறகு நேரடி  அரசியலில் ஆர்வம் குறைந்த அவர் சர்வோதயப் பணிகளில் ஈடுபட்டார்.

1964 -ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி தொடர்பாக இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் தனது கருத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

முழுப்புரட்சியும் நெருக்கடி நிலையும்:

1970 -களில் பிகாரில் தீவிர அரசியலுக்கு ஜெயப்பிரகாஷர் மீண்டும் திரும்பினார். அம்மாநிலத்தில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும், தார்க்குண்டே உடன் இணைந்து முழுப் புரட்சி இயக்கத்தைத் துவக்கினார். இந்த இயக்கம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து இந்திய அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றுள்ள பிரதானமான அரசியல் தலைவர்கள் பலர் (முலாயம் சிங்,  லாலு,  நரேந்திர மோடி, நிதிஷ் குமார்  உள்பட பலர்)  அந்தக் காலத்ததில் வார்க்கப்பட்டவர்களே.

முழுப்புரட்சி இயக்கத்துக்காக,  ஜனநாயகம் வேண்டும் குடிமக்கள்  (1974), மக்கள் குடியுரிமைகளுக்கான  மக்கள் கூட்டமைப்பு (1976) என்ற அரசு சாரா அமைப்புகளைத் தோற்றுவித்தார்.

அதே காலகட்டத்தில், தனது பதவிக்கு வந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள   முயன்ற அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டின் (25.06.1975) மீது நெருக்கடி நிலை (Emergency) ஏவப்பட்டது. பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நிலையில், ஜெயப்பிரகாஷரும் கைதானார். சண்டிகார் சிறையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானார். நாடு முழுவதும் கொந்தளித்த  நிலையில், அதே ஆண்டு நவம்பரில் ஜெயப்பிரகாஷர் விடுதலை ஆனார்.

நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டம் குறித்து மட்டுமே தனி ஒரு அத்தியாயம் எழுதப்பட வேண்டும். நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் ஜெயப்பிரகாஷரின் பங்கு அளப்பரியது. பல்வேறு சித்தாந்த வேறுபாடுகள் கொண்ட பிரஜா சோஷலிஸ்ட், லோக்தளம், பழைய காங்கிரஸ், சுதந்திரா, பாரதீய ஜனசங்கம் உள்ளிட்ட இடதுசாரிகள் அல்லாத கட்சிகளை இந்திரா காந்தியின் அடுக்குமுறை  ஆட்சிக்கு எதிராக ஒன்றுபடுத்தினார் ஜெயப்பிரகாஷர். அதன் விளைவாக ஜனதா கட்சி மலர்ந்தது. நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய தலைமறைவுப் போராட்டமும் ஜெயப்பிரகாஷர் ஆசியுடன் நடைபெற்றது.

நெருக்கடி நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், உலக நாடுகளின் எதிர்ப்புகளால் மிரண்ட இந்திரா காந்தி தேர்தல் நடத்துவதாக அறிவித்தார். அந்தத் தேர்தல் தான் ஜனநாயகத்தை நாட்டுக்கு மீட்டுத் தந்த தேர்தல். நெருக்கடி நிலைக் காலத்திலேயே எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய ஜெயப்பிரகாஷர், இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசியலுக்கு சவாலானார்.

இந்தத் தேர்தலில் ஜெயப்பிரகாஷர் வகுத்த வியூகம் வென்றது. இந்திரா காந்தி தோல்வியுற்றார்; ஜனநாயகம் மீட்கப்பட்டது; ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமர் (24.03.1977) ஆனார். அதன் பிறகு ஜனதா கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் ஜெயப்பிரகாஷருக்கு மனவேதனை அளித்தன. அவரது உடல்நலமும் குன்றிவந்தது.

ஆட்சியை மாற்றியபோதும் பதவியை நாடாத அந்த உத்தமர், வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் வாழ்க்கை முன்னேறுவது குறித்து சிந்தித்த அந்த தவயோகி,  தனது  ஒப்பற்ற தலைமையால் இந்திய ஜனநாயகத்தை மீட்ட அந்த மாவீரர், நாட்டுநலனே  உயிர்மூச்செனக் கொண்ட  அந்த லோக்நாயகர்,  உடல்நலக்குறைவால் 1979, அக். 8-ல் மண்ணுலகை விட்டு மறைந்தார். அவருக்கு பாரத நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ 1998 -ல் வழங்கப்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் ‘இந்திய  மனங்களின் மனசாட்சி’ என்று வர்ணிக்கப்படுகிறார்.

அவர் ஒருபோதும் அதிகார அரசியலை நாடவில்லை. 1977-ல் அதிகாரவர்க்கமே அவர் முன் மண்டியிட்டபோதும், அவர் ஒரு சித்தராக, தபஸ்வியாக வாழ்ந்து மறைந்தார். அவரது வாழ்க்கை நமக்கு என்றும் வற்றாத ஆற்றலை வழங்கும் ஜீவநதியாகும்.

நாட்டில் ஊழல் மலிந்த இன்றைய சூழலில், ஜே.பி. குறித்த நினைவுகளே நமக்கு ஒரே நம்பிக்கையூற்றாகும்.

மீள்பதிவு: தேசமே தெய்வம்

.

கேள்விக்குறியாகும் பா.ஜ.க.வின் வருங்காலம்!

26 May

பா.ஜ.க. மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் சுயசரிதையான  ‘என் தேசம் என் வாழ்க்கை’ புத்தகத்தில் இரு அரிய புகைப்படங்கள் உள்ளன. 55 ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் மூன்று நண்பர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவை.

இளம் வயதில் அன்றைய பாரதிய ஜனசங்கத் தலைவர்களாக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பைரோன் சிங் ஷெகாவத், லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் எடுத்துக்கொண்ட படம் முதலாவது.

அதன் எதிரில், பிரதமர் வாஜ்பாய், குடியரசு துணைத் தலைவர் ஷெகாவத், துணைப் பிரதமர் அத்வானி என அதே மூவரும் 55 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. அதற்கு  ‘அரசியலைத் தாண்டி நீடித்திருக்கும் நட்பு’ என்று அத்வானி தலைப்பிட்டிருக்கிறார்.

இன்றைய பா.ஜ.க.வுக்குள் நிகழும் குழப்பங்களையும் மோதல்களையும் காணும்போது, மேலே குறிப்பிட்ட புகைப்படங்கள் நினைவில் வருவதைத் தடுக்க முடியவில்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக வளர்ந்து, கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பா.ஜ.க.வுக்கு என்ன ஆயிற்று?

இன்று பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 9 மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க. தான்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்தால் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், அதற்கான தகுதியை பா.ஜ.க. சமீபகாலமாக இழந்து வருவதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கி உள்ளன. பல்வேறு ஊழல் புகார்களால் நம்பகத்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சி தத்தளித்து வரும் நிலையில் பா.ஜ.க.வுக்கு அது சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், உள்கட்சிக் குழப்பங்களாலும், கட்டுப்பாடற்ற தன்மையாலும் நிலைகுலைந்து காணப்படுகிறது பா.ஜ.க. தேசியத் தலைமை. போதாதகுறைக்கு, பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் காணப்படும் நிலைமை ஊழலை எதிர்த்துக் கேள்விக்குறியாக்குகிறது.

பா.ஜ.க. வலுவாக உள்ள பல மாநிலங்கள் உள்கட்சிப் பூசல்களால் கேலிப்பொருளாகி இருக்கிறது. இதற்கு உச்சகட்ட உதாரணம், கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கலகக்குரல். முதல்வர் சதானந்த கவுடாவுக்கு குடைச்சல் தருவதே எடியூரப்பாவின் அன்றாடப் பணியாகி விட்டது.

கர்நாடக பா.ஜ.க.வில் நிலவும் பூசல்களால், தென்மாநிலத்தில் அக்கட்சி அமைத்த முதல் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இது போதாதென்று, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை முதுகெலும்பின்றித் தள்ளாடுவதாகக் குற்றம்வேறு சாட்டியிருக்கிறார் எடியூரப்பா.

பா.ஜ.க.வின் நம்பிக்கை நட்சத்திரமான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல். அவருக்கு எதிராக, முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் வரிந்து கட்டுகிறார். கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கோர்தன் ஜடாபியா மகா குஜராத் ஜனதா கட்சியைத் துவங்கி பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஒரு காலத்தில் குஜராத்தில் பா.ஜ.க.வை வளர்த்த இன்னொரு தலைவரான சங்கர் சிங் வகேலாவோ காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி நரேந்திர மோடியின் ஜென்ம வைரியாகப் பிரசாரம் செய்கிறார்.

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் 43 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாக மிரட்டி, கட்சியின் இன்னொரு தலைவரான குலாப் சந்த் கடாரியா நடத்துவதாக இருந்த பிரசார யாத்திரையைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்; இப்போதைக்கு அம்மாநிலத்தில் பூசல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை.

80 எம்.பி.க்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர கட்சியின் ஆதரவோ, தொண்டர் பலமோ அதிகரித்ததாகத் தெரியவில்லை. தமிழக காங்கிரஸ் போல உ.பி. மாநில பா.ஜ.க. மாறிவிட்டது. உமா பாரதி, ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா, வருண் காந்தி, யோகி ஆதித்யநாத் என்று கோஷ்டிகளின் பட்டியல்தான் நீள்கிறது.

முன்னாள் முதல்வரும் அயோத்தி இயக்க நாயகனுமான கல்யாண் சிங் நடத்தும் ஜன கிராந்தி கட்சி, முலாயம் சிங் கட்சியை விடத் தீவிரமாக பா.ஜ.க.வை எதிர்க்கிறது.

உத்தரகண்டில் நூலிழையில் ஆட்சியை இழந்த பா.ஜ.க.வுக்கு, முன்னாள் முதல்வர்கள் பி.சி. கந்தூரி, ரமேஷ் போக்ரியால் ஆகியோரது நிழல் யுத்தம் மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

காங்கிரஸ் முதல்வர் பகுகுணாவுக்கு ஆதரவாக இரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்டில் பா.ஜ.கவுக்கு எதிரி, அக்கட்சியின் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டிதான். அவரது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா வாக்குகளைப் பிரித்தால் பா.ஜ.க. நிலைமை சிக்கல்தான்.

தில்லியில் ஆட்சியைப் பிடிக்கப் பல சாதகமான வாய்ப்புகள் இருப்பினும், மதன்லால் குரானா, விஜய்குமார் மல்ஹோத்ரா, விஜய்கோயல், விஜேந்தர் குப்தா என்று நீளும் தலைவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், காங்கிரஸ் தெம்பாக இருக்கிறது.

இமாச்சலில் முதல்வர் பிரேம்குமார் துமலும், முன்னாள் முதல்வர் சாந்தகுமாரும் எதிரணியாகவே செயல்படுகின்றனர். மகாராஷ்டிரத்தில் முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டேவின் அதிருப்திக் குரலை இப்போதைக்கு கட்டுப்படுத்தி இருக்கிறது மத்தியத் தலைமை. ஜம்மு-காஷ்மீரில் பாஜக மாநிலப் பிரிவு முற்றிலும் குலைந்திருப்பது தலைமைக்கு கவலை அளிக்கும் விஷயம்.

பாஜகவின் மத்திய தலைமையிடம் எடுத்துச்செல்லாமல், இப்போதே பிரதமர் கனவில் வலம் வரத் தொடங்கிவிட்டார் சுஷ்மா சுவராஜ். அவருக்கும் அருண் ஜெட்லிக்கும் இடையேயான ‘நீயா, நானா’ போராட்டம் தலைநகர அரசியல் வட்டாரங்களில் சிரிப்பாய் சிரிக்கிறது. ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்ஹாவும் கட்சியில் இருக்கிறார்களா இல்லையா என்பது எப்போதாவது தான் தெரிகிறது. அவர்களுக்குள்ளும் போட்டியும் பொறாமையும்.

இப்படி, கொள்கைக்காக வாழ்ந்த தலைமுறை மாறி, தனிப்பட்ட பிரமுகர்களிடையிலான போட்டிக்களமாக பா.ஜ.க. மாறி வருவது துரதிருஷ்டம். வேடிக்கை என்னவென்றால், இந்தத் தலைவர்கள் யாருக்குமே வாஜ்பாயிக்கோ, அத்வானிக்கோ இருப்பது போன்ற தனிப்பட்ட மக்கள் செல்வாக்குக் கிடையாது என்பதுதான்.

கட்சிக்குள் அன்னியோன்யமாக இணைந்து பணி புரிந்த தலைவர்கள் இன்று சுயநலனுடன் மோதிக் கொள்வதைத் தடுக்காவிட்டால், பா.ஜ.க.வின் ஆட்சிக் கனவு நிறைவேறாமலே போய்விடும்.
 .
இப்போதைய பா.ஜ.க. தலைமை முன்னுள்ள கடுமையான சவால், ‘என் பதவி, என் குடும்பம்’ என்று மாறத் துடிக்கும் தலைவர்களைக் கட்டுப்படுத்துவது தான். இச்சவாலில் பா.ஜ.க. வெல்லுமா? நிதின் கட்கரி முன்பு நிகழ்காலம் கேள்வியாக நிற்கிறது.
.
ஜனதா என்றாலே குழப்பம் என்று பெயர் போலிருக்கிறது. ஒருவேளை, பாரதிய ஜனதா கட்சி  மீண்டும் பாரதிய ஜனசங்கம்  என்று பெயரை மாற்றிக் கொண்டால்  பிரச்னைகள் தீருமோ என்னவோ?

 

தினமணி (25.05.2012)

.

கலப்புத் திருமணம் செய்வீர்!

24 May

கலப்புத் திருமணம் செய்வீர்!
கலியென இங்குள ஜாதியை மாய்ப்பீர்!
கலப்புத் திருமணம் செய்வீர்!

முதலியும் பிள்ளையும் ஒன்றே!
முக்குலத்தோர்களும் ஒன்றே!
கவுண்டனும் செட்டியும் ஒன்றே!
ஹரிஜனும் நாயுடும் ஒன்றே!
வன்னியர், அந்தணர் ஒன்றே!
வகைமிகு பற்பல ஜாதியும் ஒன்றே!

கலப்புத் திருமணம் செய்வீர்!

அனைவரின் குருதியும் செம்மை – நாம்
அனைவரும் ஆண்டவன் பொம்மை!
மனிதருள் வெறுப்புகள் ஏனோ?
மதியது வெற்றிடம் தானோ?
உலகினில் ஜாதிகள் இரண்டு!
உடலதால் பெண்களும் ஆண்களும் உண்டு!

கலப்புத் திருமணம் செய்வீர்!

.

ஈட்டிக் கதைகள்

23 May


பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் பல்வேறு வார, மாத இதழ்களில் எழுதிய 55 சிறுகதைகளின் தொகுப்பு இது. பளிச்சென்று கண்கூசச் செய்யும் உண்மைகளை பல சிறுகதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

சமுதாயத்தின் போக்கால் அதிருப்தியுற்று அதைத் திருத்தும் வேகத்துடன் பயணிப்பவை மாலனின் எழுத்துக்கள். எனவே அவரது கதைகளில் (உ.ம்: கடமை) பிரசார நெடி தூக்கலாகவே இருக்கிறது. “எனக்குப் பூடகமாகச் சொல்வதில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஊசிகள் செய்வதில் ஆர்வம் இல்லை. ஈட்டிகள் செய்யப் பிறந்தவன் நான்” என்று அவரே தனது முன்னுரையில் சொல்லிவிடுகிறார்.

குடும்ப உறவுகள் தொடர்பான கதைகளில் நெகிழ்ச்சி இழையோடுகிறது. ‘புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே’ போன்ற உருவகமான கதைகளும் உண்டு. பெண்களை நசுக்கும் சமுதாயம் மீதான கோபமும் சில சிறுகதைகளில் ஆவேசமாக வெளிப்படுகிறது.

முன்னோடி எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், பிரபஞ்சன் ஆகியோரது அணிந்துரைகள் மாலனை சிறப்பாக அறிமுகம் செய்கின்றன. இச்சிறுகதைகள் வெளிவந்த இதழ்களைக் குறிப்பிட்டவர்கள், வெளியான தேதியையும் குறிப்பிட்டிருந்தால் ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

சிறுகதையின் வடிவ நேர்த்தி (உ.ம்: அறம்), அதை பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் உத்தி, சிறுகதைக்கு தலைப்பிடல் (உ.ம்: மாறுதல் வரும்), பரீட்சார்த்தச் சிறுகதை (உ.ம்: வழியில் சில போதைமரங்கள்) என இளம் எழுத்தாளர்கள் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய நுட்பங்கள் பல இத்தொகுப்பில் உள்ளன; பதிப்பும் சிறப்பாக உள்ளது.

***

மாலன் சிறுகதைகள்

மாலன்

416 பக்கங்கள், விலை: ரூ. 200

கவிதா பப்ளிகேஷன்,

தபால்பெட்டி எண்: 6123, 8, மாசிலாமணி தெரு,

பாண்டிபஜார், தி.நகர்,  சென்னை – 600017,

போன்: 044- 2436 4243.

.

‘திடக்கழிவு மேலாண்மை’ – நாமகரணம் தீர்வாகுமா?

22 May

குப்பை இல்லாத நகரத்தைப் பார்ப்பது ஊழலற்ற அரசியல்வாதியைப் பார்ப்பது போலாகிவிட்டது. நகரங்கள் என்றில்லை, கிராமங்களிலும் கூட இப்போது திடக்கழிவு மேலாண்மை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பின்மையே காரணம் எனில் மிகையில்லை.

மனித உடலே தினசரி தன்னிடம் சேரும் அசுத்தத்தை வெளியேற்றிக்கொண்டு தான் உயிர் வாழ்கிறது. அவ்வாறே நமது வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தினசரி வீட்டைப் பெருக்கி குப்பைகளை அகற்றாத இல்லத்தில் திருமகள் வாசம் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையும் நம்மிடம் உண்டு.

அதேசமயம், நமது வீடு மட்டும் சுத்தமானால் போதும், தெருவும் ஊரும் எப்படிப் போனால் என்ன என்ற அலட்சிய மனப்பான்மை பலரிடமும் உள்ளது. அதன் விளைவையே தெருக்களிலும் முச்சந்திகளிலும் குப்பை மலைகளாக நாம் காண்கிறோம். அவற்றை மூக்கைப் பொத்தியபடி, மறுபுறம் திரும்பியபடி வேகமாகக் கடக்கிறோம்.

இந்தக் குப்பைகளைக் கிளறியபடி வலம் வரும் பன்றிகளும், நாய்களும், கோழிகளும் சுகாதாரக் கேட்டை அதிகப்படுத்துகின்றன. இதுகுறித்து மக்களுக்கும் கவலையில்லை; மக்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளாட்சிப் பதவிகளில் அமர்ந்திருப்போருக்கும் கவலையில்லை.

குப்பைகளை அகற்றுவதற்கு ‘திடக்கழிவு மேலாண்மை’ என்ற புதிய நாமம் சூட்டியது மட்டுமே நமது அரசுகளின் சிறப்பு. ஒவ்வொரு உள்ளாட்சியிலும் திடக்கழிவுகளைக் குவிக்க தனியிடம் ஏற்பாடு செய்வதற்குள் நிர்வாகங்களின் விழி பிதுங்கி விடுகிறது. இதற்கு அதனருகே குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவிப்பது எல்லா ஊர்களிலுமே காட்சியாகி வருகிறது.

இந்தக் குப்பையை உரமாக்க பல லட்சம் செலவில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் எந்த இடத்திலும் குப்பைகள் உயிர் உரமாக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனையானதாக செய்திகள் இல்லை.

குப்பைகளில் மறுசுழற்சிக்கு உரியவற்றைத் தரம் பிரித்துப் பயன்படுத்துவதும் திடக்கழிவு மேலாண்மையில் ஓர் அம்சம். நிதர்சனத்திலோ, மட்க இயலாத குப்பைகளைத் தீவைத்து எரிப்பதே நிகழ்வாக இருக்கிறது. அந்தப் புகைக்கு அஞ்சியே அதன் அருகிலுள்ளோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வீதிதோறும் குப்பை சேகரிக்கும் ஏற்பாடும் பலவீனமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் குப்பை தெருவை நாறடிக்கிறது. குப்பை சேகரிப்பதற்கு உள்ளாட்சிகளில் இருந்த பணியாளர் எண்ணிக்கையும் சிறுகச் சிறுகக் குறைந்து வருகிறது.

உதாரணமாக, திருப்பூர் மாநகராட்சியில் தோராயமாக இருக்க வேண்டிய தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை: 3,000. ஆனால் இருப்பவர்களோ 1,200 பேர். கிட்டத்தட்ட மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. இந்த எண்ணிக்கையிலுள்ள பணியாளர்களைக் கொண்டு மாநகரைத் தூய்மையாகப் பராமரிப்பது எப்படி?

கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் 72 பேர் இருக்க வேண்டும். ஆனால்  ‘மருந்துக்கும்கூட’ சுகாதார ஆய்வாளரே இல்லை. இந்தப் பணியை தற்போது மேற்கொள்பவர்கள், இதற்கு அடுத்தநிலையில் உள்ள மேற்பார்வையாளர்கள் தான். எனில் மேற்பார்வையாளர்களின் பணியை யார் மேற்கொள்வது?

இதேபோன்ற நிலைதான் பெரும்பாலான உள்ளாட்சிகளில் காணப்படுகிறது. புதிய பணியாளர் நியமனம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. இருக்கும் பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் காலியாகவே விடப்படுகின்றன. இதன்மூலமாக, செலவினத்தைக் குறைப்பதாக உள்ளாட்சிகளும் அரசும் கருதுவதாகத் தெரிகிறது.

மாறாக, குறைந்த ஒப்பந்தக் கூலியுடன், குப்பை சேகரிக்கும் பணிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. குறைந்தபட்சக் கூலி, தொழில் நிரந்தரமின்மை, பணிப் பாதுகாப்பின்மை போன்ற காரணிகளால், அவர்களால் இப்பணியில் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய முடிவதில்லை. இதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் முடங்கினால் ஊரின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். எது எதற்கோ கோடிக் கணக்கில் செலவு செய்யும் நமது அரசுகள், நாட்டின் சுகாதாரம் காக்கும் பணியில் தங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்துப் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளித்தால் குறைந்தா போய்விடும்?

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு பல முறை ஊதிய உயர்வு வழங்கும் அரசுகள், நமது அடிப்படை சுகாதாரத்தைக் காக்கும் பணியாளரின் வாழ்க்கை நிலை குறித்து கவலைப்படாமல் இருப்பது முறையல்ல. பிற அரசுத் துறைப் பணியாளர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களது ஊதியம் மிகக் குறைவாகவே இருக்கும்.

நகர சுத்தித் தொழிலாளர்கள் தேர்தல் பணியாளர்களாக இருக்கப் போவதில்லை என்பதால், அவர்களது முக்கியத்துவம் இல்லாது போய்விடாது. இதை அரசு உணர்வது அவசியம். திடக்கழிவு மேலாண்மையை திறம்படச் செய்வது எப்படி என்பதற்கான அணுகுமுறைகளை வகுப்பதும் அதைவிட அவசியம்.

மீள்பதிவு: குழலும்யாழும் (22.03.2012)

.