Archive | June, 2012

திருட்டு ராசாக்கள்

30 Jun

திருடன்… திருடன்… திருடன்…
கத்திக்கொண்டு ஓடுகிறான்
திருடும்போது சிக்கிய திருடன்…

கூட்டாய்த் திருடி உதை வாங்குபவனை
கைவிடவும் காப்பாற்றவும் முடியாமல்
தவிக்கிறான் சக திருடன்.

சிக்கியவன் வாய் திறக்கும் சமயம்
‘பொதுமாத்து’ தருகிறான்
தப்ப எத்தனிக்கும் திருடன்.

பிடித்துக் கொடுத்தவர்களையே
திருட்டுக்கு உதவியதாக
வாக்குமூலம் கொடுக்கிறான் திருடன்.

குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது
நீதிபதி மீதும் பாய்கிறான் –
நீங்களும் திருடனென்று.

திருடனின் ஜாதியைக் காட்டி
இயன்றவரை நியாயப்படுத்துகிறான்
திருட்டுக் கும்பல் தலைவன்.

இத்தனைநாள் வாங்கிய
திருட்டுப்பொருளை மறந்து
கைவிடுகிறான் கூட்டாளிகளின் தலைவன்.

திருடன்… திருடன்… திருடன்…
துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்…
பலநாள் கூட்டாளிகளும்   ‘உடன் பிறந்த’ சகாக்களும்…

.

குறிப்பு: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இக்கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

.

தேசியம் காத்த தமிழர்

27 Jun

ம.பொ.சிவஞானம்

(பிறப்பு: ஜூன் 26, 1906 – மறைவு: , அக்டோபர் 3, 1995)

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பொன்னுசாமி கிராமணியார்- சிவகாமி அம்மாள் தம்பதியாருக்கு  மகவாக 1906, ஜூன் 26 ல் பிறந்தார் சிவஞானம். பிற்காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்தபோது, மயிலாப்பூர்   பொன்னுசாமி சிவஞானம் என்பதே சுருக்கமாக ம.பொ.சி. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரபலமான பெயராயிற்று.

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த சிவஞானம், மூன்றாம் வகுப்போடு பள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிவந்தது. குலத் தொழிலான நெசவுத்  தொழிலில் குழந்தையாக இருந்தபோதே ஈடுபட்ட அவர், பிற்பாடு  அச்சுக்  கோர்க்கும் தொழில் ஈடுபட்டார். டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் தான் அவரது அச்சுப்பணி (1927-1934) துவங்கியது. அதுவே அவரது இலக்கிய தாகத்திற்கும்,  தேசிய  வேகத்திற்கும்  ஊற்றாக அமைந்தது.

31  வயதில் திருமணம் நடந்தது; ஒரு மகன், இரு மகள்கள் பிறந்த நிலையில்,  நாட்டு விடுதலைப் போரில்  சிவஞானமும் ஈர்க்கப்பட்டார். அவரது அரசியல் ஈடுபாடு காங்கிரசில் அவரைச் சேர்த்தது. மகாத்மா காந்தியின் ஹரிஜன முன்னேற்றப் பணிகளில் ம.பொ.சி. இணைந்தார். சென்னை ஹரிஜன சேவா சங்கத்தின் பிரசாரகராகவும் செயலாளராகவும் (1934) பணியாற்றிய ம.பொ.சி, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை செயலாளர் ஆனார் (1936). 1947 ல் அதன் செயலாளராக உயர்ந்தார். 1928  முதல் 1947  வரை, பல முறை விடுதலைப்போராட்டங்களில் பங்கேற்ற ம.பொ.சி, ஆறு முறை  சிறைவாசம் அனுபவித்தார்.

700  நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ள ம.பொ.சி, தனது சிறைக்காலத்தை  தமிழின் முதல்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தைக் கற்பதில் செலவிட்டார். அந்த அனுபவமே ‘சிலம்புச்செல்வர்’ என்ற பட்டப்பெயர் கிடைக்கும் வகையில் அவரை உயர்த்தியது. இந்தப் பட்டத்தை  ம.பொ.சி.க்கு வழங்கியவர்  சொல்லின் செல்வர் ரா.பி.சேது பிள்ளை!  சிலப்பதிகாரத்தைக் கொண்டே,  தனித்தமிழ்நாடு கோரிய பிரிவினைவாதிகளை தனது அறிவுத்திறமான வாதத்தால் முடக்கியவர் ம.பொ.சி.

தேசிய இயக்கமான காங்கிரசில் இருந்தபோதும், தமிழகத்தின் உயர்வே ம.பொ.சி.க்கு நோக்கமாக இருந்தது. இது தனது மொழி மீதான பற்றின் காரணமாக விளைந்தது. அதன் காரணமாக 1946  ல் ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவினார். அதன் வாயிலாக, மொழியின் அடிப்படையில் தமிழகம் தனி மாநிலமாக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். அப்போது தென் மாநிலங்கள் இணைந்து சென்னை மாகாணமாக  இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எல்லைப் பிரச்னைகள் ஏற்பட்டன. அப்போது திருப்பதியை தமிழகத்தில் இணைக்கப் போராடிய ம.பொ.சி.க்கு வெற்றி கிடைக்கவில்லை; ஆயினும் திருத்தணி தமிழகத்தில் சேர அவரது போராட்டம் வழி வகுத்தது. திருப்பதி ஆந்திராவில் இணைந்தது. அதேபோல, குமரி மாவட்டம், பீர்மேடு, செங்கோட்டை, தேவிகுளம் பகுதிகள் கேரளாவில் சேராமல் தமிழகத்தில் இணைய பாடுபட்டார். கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளை, நேசமணி, டி.வி.ராம சுப்பையர், தாணுலிங்க நாடார் ஆகியோருடன் இணைந்து அதற்காக குரல் கொடுத்தார்.  இப்போராட்டத்தால் குமரி மாவட்டத்தையும் செங்கோட்டை பகுதிகளையும் மட்டுமே பெற முடிந்தது. ஆயினும் ம.பொ.சி.யின் போராட்டம் காரணமாக தமிழ் பேசும் பல பகுதிகள் தமிழகத்திற்கே கிடைத்தன.

தவிர, சென்னை நகருக்கு ஆந்திரா தலைவர்கள் உரிமை கொண்டாடிய போது,  ‘தலையைக்  கொடுத்தேனும் தலைநகரைக்  காப்போம்’ என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் செய்யவைத்து, சென்னை தமிழக  தலைநகராகத்  தொடரக் காரணமானார்.  புதிய மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என பெயர்சூட்ட வேண்டும் என்றும்  ம.பொ.சி. வலியுறுத்தி போராடினார். இந்தக் கோரிக்கை 1969 ல், தியாகி சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்தால் நிறைவேறியது.

இடைக்காலத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட வேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் (1954) ம.பொ.சி. ஆயினும் தனது தமிழரசுக் கழகம் மூலமாக அரசியல் பணிகளைத் தொடர்ந்தார். அக்காலத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய திராவிடர் கழகம் உமிழ்ந்த வெறுப்பூட்டும் தேசவிரோத, சமயவிரோத பிரசாரங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸ் ஆட்சியை இழந்து  திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தேசிய ஒருமைப்பாட்டிற்கான ம.பொ.சி.யின் குரல் ஓங்கி ஒலித்தது. தனது வாழ்வின் இறுதிவரை, தமிழ் மொழி  தேசியத்தின் ஓர் அங்கமே என்று அவர் முழங்கி வந்தார். மாநிலங்கள் தேசிய உணர்வுடன் வலிமையாக தேசமாகப் பிணைந்திருக்க மாநில சுயஆட்சி வழங்கப்பட வேண்டும் என்று ம.பொ.சி. குரல் கொடுத்து வந்தார்.

சிறந்த மேடைப் பேச்சாளரான ம.பொ.சி. சிலப்பதிகாரம் குறித்து மணிக் கணக்கில் பேச வல்லவர். பேச்சாளராக மட்டுமல்லாது சிறந்த  எழுத்தாளராகவும்  அவர் விளங்கினார். தவிர தேர்ந்த பத்திரிகையாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். மாதமிருமுறை இதழான ‘கிராமணி குலம்’ (1934-1937),  தமிழக எழுத்தாளர் சங்கத்தின் மாத இதழான ‘பாரதி’ (1955-1956), ‘தமிழ் முரசு’ (1946-1951), ‘தமிழன் குரல்’ (1954-1955), வார இதழான ‘செங்கோல்’ (1950-1995) ஆகிய பத்திகைகளின் ஆசிரியராக திறம்பட இயங்கிய ம.பொ.சி, அவற்றில் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் மதிப்பற்றவை.

அவரது எழுத்துகள்  பல நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர தனியே பல நூல்களையும் ம.பொ.சி. எழுதியுள்ளார். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற அவரது நூல், சாஹித்ய அகாதமி விருது (1966) பெற்றது. வ.உ.சி,  கட்டபொம்மன்,  பாரதி,  சிங்காரவேலர்   போன்றவர்களது  வாழ்க்கை வரலாறுகளை   எழுதியுள்ள ம.பொ.சி,  ‘விடுதலைப்போரில் தமிழகம்’ , ‘விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’, ‘எனது போராட்டம்’ ஆகிய நூல்களின் வாயிலாக விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பை அரிய ஆவணமாகப் பதிவு செய்தார். தனது வாழ்நாளில் 140 க்கு மேற்பட்ட நூல்களை ம.பொ.சி. எழுதினார்.

– இவ்வாறு இலக்கிய உலகிலும் எழுத்துலகிலும் முத்திரை பதித்த ம.பொ.சி,  கல்விப்பணிகளிலும் சமூகப் பணிகளிலும், தொழிலாளர் சங்கப் பணிகளிலும்  இடையறாத   ஆர்வத்துடன் ஈடுபட்டார். சென்னை, மதுரை, தஞ்சை, சிதம்பரம் பல்கலைக்கழகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த ம.பொ.சி, நூலக ஆணைக்குழுவுக்கென தமிழகத்தில் தனித்துறை நிறுவவும் காரணமானார்.

இத்தனைக்கும் அவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. தனது தொடர்ச்சியான இலக்கிய நாட்டத்தாலும், பட்டறிவாலும், தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொண்ட ம.பொ.சி, தனது அனுபவங்கள் எதிர்கால தலைமுறையும் பெற வேண்டியே அற்புதமான நூல்களை ஆக்கித் தந்துள்ளார். அவரது பல நூல்கள் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழிசையைப்  பரப்புவதிலும் ம.பொ.சி. முன்னின்றார்; 1982 -83 ல் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவை விழாக்குழுத் தலைமையேற்று திறம்பட நடத்தினார். சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தை (1948-1955), சட்ட மேலவை உறுப்பினர் (1952-1954 மற்றும் 1978-1986), சட்டமன்ற உறுப்பினர் (1972-1978) ஆகிய பதவிகளில் மக்கள் பிரதிநிதியாகவும் ம.பொ.சி. விளங்கினார். தமிழக சட்ட மேலவையின் தலைவராக (1978-1986) ம.பொ.சி. இருந்த காலகட்டம், மேலவையின் பொன்னான காலம் என்று போற்றப்படுகிறது. 1986 ல் மேலவை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனால் கலைக்கப்பட்டது.

தனது வாழ்வின் இறுதிக்காலகட்டத்தில், அரசியல்ரீதியாக துறவு மேற்கொண்ட ம.பொ.சி, 1995, அக்டோபர் 3 ல் மண்ணுலகை நீத்தார்.

பாரதத்தின் அடித்தள ஒற்றுமையில் தமிழின் பங்களிப்பையும் தமிழர்களின் ஒத்துழைப்பையும் பதிவு செய்ததே ம.பொ.சி.யின் மகத்தான சாதனை. தமிழும் தேசியமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த அன்னாரின் பிறந்த நாளன்று அவரது அமரத்துவமான வாழ்வை நினைவுகூர்வோம்.

மீள்பதிவு: தேசமே தெய்வம்

.

பெத்த மனம்

26 Jun

.

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு – அட
இது வெறும் பழமொழியா? இல்லை
இதுவே தலைவிதியா?
இதை மாற்றிட வேண்டாமா? உலகம்
போற்றிட வேண்டாமா?

(பெத்த மனம்)

அன்னை பாரதியின் அருந்தவப் புதல்வா
அன்னையின் அவல நிலை – நீ
கண்டும் கலங்கவில்லையா?

(பெத்த மனம்)

எல்லையில் எதிரிகள் தொல்லைகள் தந்திட
எண்ணியிருக்கின்றார்- நம்
கொல்லையில் துரோகிகள் நெஞ்சினில் நஞ்சுடன்
கொடும்சதி தீட்டுகிறார்!

(இதை மாற்றிட வேண்டாமா?)

ஏழைகள் அரைவயிற்றுக் கூழுக்கும் வழியில்லை
என்பதை அறிவாயா? வெறும்
கோழையைப் போலநம் சோதரர் படும் துயர்
துடைத்திட மறுப்பாயா?

(இதை மாற்றிட வேண்டாமா?)

சாதிகள் பல சொல்லி சச்சரவிட்டதால்
சக்தி இழந்துவிட்டோம்- நாம்
ஆதியில் அனைவரும் அன்புற வாழ்ந்ததை
அறியா திருந்துவிட்டோம்!

(இதை மாற்றிட வேண்டாமா?)

வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பதாய்
வையகம் இருப்பதுவா? நம்
செல்வங்கள் யாவையும் அந்நிய நாடுகள்
செல்லாய் அரிப்பதுவா?

(இதை மாற்றிட வேண்டாமா?)

சித்தரும் புத்தரும் பக்தரும் மறவரும்
சீர்மிக வாழ்ந்த கதை- அது
மொத்தமும் பழங்கதை, செப்பிடு வித்தையாய்
மொந்தை ஆகுவதா?

(இதை மாற்றிட வேண்டாமா?)

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு…

.

-விஜய பாரதம் (10.07.1998)

.

கவனத்துக்கு: சுதந்திர இந்தியாவில் ஜனநாயக உரிமைகளைப் பறித்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட (26.06.1975) நாளின் 37 வது நினைவு தினம் இன்று.

ஜனநாயகத்தை மீட்கப் போராடிய வீரர்களுக்கு நன்றியுடன் இக்கவிதை சமர்ப்பணம்.

.

வீரத்தின் விளைநிலம்

25 Jun

ராணி துர்காவதி

(பிறப்பு: அக்டோபர் 5, 1524,  மறைவு: ஜூன் 24, 1564)

இந்தியப்  பெண்கள் ஆண்களுக்கு சிறிதும் சளைத்தவர்களல்ல; போர்முனையிலும் கூட சாகசங்களை நிகழ்த்தியவர்கள் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், கோண்ட்வானா ராணி துர்காவதியின் தீரம் மிகு சரித்திரம்.

ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த, சந்தேல் மன்னர் பரம்பரையில் மன்னர் கீர்த்திராயின்  மகளாக 1524 , அக்டோபர் 5  ல் பிறந்தார் துர்காவதி.

சந்தேல் மன்னர் பரம்பரைக்கு ஆக்கிரமிப்பாளன்  கஜினி முகமதுவை எதிர்த்துப் போரிட்ட பாரம்பரியம் உண்டு. இந்த மன்னர் பரம்பரையில் வந்த வித்யாதர் மன்னர்தான் கஜினியின் கொள்ளைகளை தனது பிராந்தியத்தில் தடுத்து நிறுத்தியவர். உலகப் புகழ் பெற்ற கஜுரேகா கோயிலும், கலஞ்சார் கோட்டையும் இவரால் கட்டப்பட்டவை. அந்தப் பரம்பரையில் வந்த துர்காவதியும் தனது வீர பராக்கிரமத்தால் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

கோண்ட்வானா ராஜ்ஜியத்தின் மன்னர் சங்க்ராம் ஷாவின் மைந்தர் தல்பத் ஷாவை 1542  ல் திருமணம் செய்தார் துர்காவதி. இதன்மூலமாக சந்தேல், கோண்ட்வானா ராஜ்ஜியங்களுக்குள் இணக்கமும் பிணைப்பும் ஏற்பட்டன. இந்த ஒற்றுமையின் விளைவாக முஸ்லிம் ஆட்சியாளர் ஷேர்ஷா ஷுரியின் படையெடுப்பை இரு நாட்டுவீரர்களும் இணைந்து எதிர்த்து முறியடித்தனர். அந்தப் போரில் ஷேர்ஷா (1545, மே 22 ) கொல்லப்பட்டார். அதே ஆண்டுதான் ராணி துர்காவதி வீர்நாராயண் என்ற மகனை ஈன்றார்.

வீர்நாராயணனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது (1950) மன்னர் தல்பத்ஷா இறந்தார். எனவே ஆட்சிப்பொறுப்பு முழுவதும் ராணி துர்காவதியின் பொறுப்பில் வந்தது. மகனை முன்னிறுத்தி, ராணி துர்காவதியே கோண்ட்வானா  நாட்டின் அரசியாக ஆட்சி செய்தார்.

அடுத்துவந்த 14  ஆண்டுகளும் தனது மதியூகமும் நிர்வாகத் திறனும் கொண்டு நாட்டை சிறப்பாக ஆண்டுவந்தார். அவருக்கு திவான் ஆதர் சிம்ம கயஸ்தா உள்ளிட்ட அமைச்சர்கள் உதவி புரிந்தனர். அவர் தனது தலைநகரத்தை   சவ்ரகாரிலிருந்து சாத்புரா மலைத்தொடரில் உள்ள ஷிங்ககாருக்கு   மாற்றினார். இது போர் முக்கியத்துவமும் பாதுகாப்பும் வாய்ந்த முடிவாகும்.

ஷேர்ஷாவின் மறைவுக்குப் பிறகு, மாள்வா பிராந்தியத்தை சுஜத்கான் என்ற முஸ்லிம் தளபதி ஆக்கிரமித்தார். அப்பகுதியை அவரது மகன்  பாஜ் பகதூர் (1556) ஆண்டுவந்தார். ராணி துர்காவதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அவரது ராஜ்ஜியத்தை பாஜ் பகதூர் தாக்கினார். ஆனால் அப்போரில் அவர் படுதோல்வியுற்றார். இதனால் ராணி துர்காவதியின் புகழ் நாடு  முழுவதும் பரவியது.

1562  ல் மாள்வா ராஜ்யத்தை முகலாயப் பேரரசர் அக்பர் ஆக்கிரமித்தார். அப்போது ராணி துர்காவதியின் நாட்டின் செல்வச் செழிப்பு குறித்து கேள்வியுற்ற அக்பர் அதனையும் ஆக்கிரமிக்க விரும்பினார். தனது தளபதி குவாஜா அப்துல் மஜீத் ஆசப்கானை கோண்ட்வானா மீது படையெடுக்குமாறு பணித்தார்.

முகலாயப் பேரரசின் படைபலத்தை விளக்கிய திவான், அக்பருடன் சமாதானமாகப்  போவதே நல்லது என்று ராணிக்கு  அறிவுரை  கூறினார்.   ஆனால், ”அவமானப்பட்டு உயிர் வாழ்வதைவிட, மரியாதைக்குரிய விதமாக தன்மானத்துடன் சாகவே விரும்புகிறேன்” என்று முழங்கினார் ராணி துர்காவதி;  தனது படைகளை போருக்கு ஆயத்தப்படுத்தினார்.

நாராய் என்ற பகுதியில் இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. இருதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயினும் முதல்நாள் போரில் ராணி துர்காவதியின் கரமே ஓங்கியது. எனினும் ராணியின் தளபதி அர்ஜுன்தாஸ் போரில் கொல்லப்பட்டார். எனவே துர்காவதியே போருக்கு தலைமை ஏற்றார்.

மறுநாள் போருக்கு முன்னதாக, இரவே முஸ்லிம் படைகளை தாக்க வேண்டும் என்று ராணி துர்காவதி கூறினார். ஆனால், அது போர் தர்மமல்ல என்று அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிநவீன ஆயுதங்களுடன் நன்கு பயிற்சி அளிக்கப்பட படையுடன் உள்ள முகலாயப் படையை நேருக்கு நேர் மோதுவதை விட மறைமுகமாகத் தாக்குவதே நல்லது என்று ராணி கருதினார். ஆயினும் அமைச்சர்கள் ஆலோசனைப்படி இரவுத் தாக்குதலைக் கைவிட்டார்.

மறுநாள் தில்லியிலிருந்து  வந்த பெரும் பீரங்கிப்படையுடன் ஆசப்கான் போர்முனைக்கு வந்தார். யானை மீதேறி ராணி துர்காவதியும் மைந்தர் வீர் நாராயணும் போர்முனைக்கு வந்தனர். இந்தப் போரில், பீரங்கி முன் தாக்குப்பிடிக்க முடியாமல் கோண்ட்வானா  வீரர்கள் பெருமளவில் பலியாகினர். வீர் நாரயணும் படுகாயமுற்று போர்க்களத்திலிருந்து விலகினார். ஆயினும் ராணி துர்காவதி சளைக்காமல் போரில் ஈடுபட்டார்.

அப்போது எதிரிப்படையினரின்  அம்புகள் ராணி துர்காவதியின் கழுத்தை துளைத்தன. அவரது தோல்வி உறுதியாகிவிட்டது. அவரும் நினைவிழந்தார். அப்போது, போர்க்களத்திலிருந்து வெளியேறிவிடலாம் என்று மாவுத்தன் அறிவுறுத்தினான். ஆனால், துர்காவதி அதனை ஏற்கவில்லை. ”படுதோல்வியுற்று எதிரியின்  கரத்தில் சிக்குவதை விட, உயிரை மாய்த்துக் கொள்வதே சிறப்பானது” என்று கூறிய ராணி துர்காவதி, தனது குறுவாளால் மார்பில் குத்திக்கொண்டு போர்க்களத்திலேயே (1564, ஜூன் 24) உயிர்நீத்தார்.

ராணி துர்காவதியின் வீரமரணம் முகலாயப் பேரரசர் அக்பரையே நிலைகுலையச் செய்தது. அவரது ஆக்கிரமிப்புத் திட்டங்கள் பலவற்றை ராணியின் வீர மரணம் மறுசிந்தனைக்கு உள்ளாகியது.

ராணி துர்காவதியின் தீரம் இன்றும் பழங்கதைப் பாடல்களில் புகழப்படுகிறது. அவரது வீரம் இந்தியப் பெண்களின் வீரத்திற்கான மறைக்க முடியாத  சான்றாக  விளங்குகிறது.

மீள்பதிவு: தேசமே தெய்வம்

.

கானாம்ருதம்

23 Jun

”அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும்.. அந்த சாமி சிரிக்கும்…”

உச்சஸ்தாயியில் பாடுகிறான்,
தெருவோரம் ஒட்டுத்திண்ணையில் சுருண்டிருக்கும்
கந்தலாடை பிச்சைக்காரன்.

இரவு குடித்த சாராயத்தை மீறி
வாய்க்குழறலைப் பொருட்படுத்தாமல்
பொன்னான உலகை சபித்தபடி பாடுகிறான்
விரல்கள் இற்றுப்போன கபோதி.

நள்ளிரவு; உடலை ஊடுருவுகிறது கடும் பனி.
தெருவில் நாய்களைத் தவிர எதுவுமில்லை.
அவனருகில் சுருண்டு கிடக்கிறது அவனைப் போலவே
சிரங்கு பீடித்த நாயொன்று.

”ஆளுக்கொரு வீடு கட்டுவோம்…”
திடீரென பாட்டை மாற்றுகிறான் பிச்சைகாரன்.
சிதம்பரம் ஜெயராமன் குரல் தோற்றது.
அவன் காலடியில் துண்டுப்பீடிகள்.
தலைமேட்டில் குப்பைமூட்டைகள்.

வாழ்க்கையைத் தவறவிட்ட பெண்ணொருத்தி
சேலை நழுவ அன்றைய வாழ்க்கைக்கான பொருளை
தெருவில் தேடிக் கொண்டிருக்கிறாள்.
தெருநாய்கள் நைச்சியமாய்
அவளை முகர்ந்து பார்த்து நகர்கின்றன.
‘சூ…’ விரட்டுகிறான்
பாடலை சிறிது நிறுத்திய இரவுப் பாடகன்.

”என்ன பெரிசு தூக்கம் வரலையா?”
விசாரித்துவிட்டு நகர்கிறாள்
தலையும் உடலும் கலைந்த பரிதாபி.
”தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே,
வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதை என்ன?”
அவளைத் தொடர்கிறது இன்னிசை.

வீடுகள் மூடிக் கிடக்கின்றன.
தெருவில் நாய்களையும்
இருவரையும் தவிர யாருமில்லை.
சாக்கடையிலிருந்து குதித்தோடுகின்றன
பெருச்சாளிகள்.

”ஒன்று எங்கள் ஜாதியே..
ஒன்று எங்கள் நீதியே..
உலக மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே…”

இரவை விழிக்கச் செய்துகொண்டே இருக்கிறது
திண்ணைப் பாடகனின் கானாம்ருதம்.

.

‘வாக்குமூலம்’ ஏற்படுத்திய சிக்கல்!

21 Jun

”நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காக்க இறுதி வரை போராடுவேன்” என்றார், பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துச் சுதந்திரம் இல்லாத தேசங்களில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதையே காண்கிறோம்.

நமது நாடு ஜனநாயக நாடு; தேர்தல்கள் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தும் நாடு. அதற்காக வாக்காளரிடம் பிரசாரம் செய்யவும், வாக்குச் சேகரிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அலகுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் மீதான நம்பிக்கை பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரமாணப் பத்திரம் அளித்து தேசிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் கேரளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டத் தலைவர் எம்.எம்.மணி, கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயனின் நம்பிக்கைக்குரியவர். இவர் கடந்த மே 27-ஆம் தேதி தொடுபுழாவில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் எல்லை மீறிப் பேசி இருக்கிறார்.

2008-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைத் துவங்கியவர், டி.பி.சந்திரசேகரன். இவர் கடந்த மே 4-ஆம் தேதி, கோழிக்கோடு அருகே கொல்லப்பட்டார். இவரது படுகொலையில் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கவே தொடுபுழாவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதில் கட்சியின் மாவட்டத் தலைவர் பேசிய அனைத்தும், நோக்கத்துக்கு மாறாகவும், மார்க்சிஸ்ட் கட்சி அளிக்கும் சுய வாக்குமூலமாகவும் அமைத்துவிட்டது விந்தைதான்.

“ஆமாம். எங்கள் அரசியல் எதிரிகளை நாங்கள் கொலை செய்துள்ளோம். இதற்காகப் பட்டியல் தயாரித்து வரிசைக்கிரமமாகக் கொன்றோம். இனிமேலும் கொல்வோம்” என்று தன்னிலை மறந்து கொட்டித் தீர்த்துவிட்டார், இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் எம்.எம்.மணி.

அதுமட்டுமல்ல, தங்களை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்றும் விளக்கமாக எடுத்துரைத்தார் மணி. எதிர்பார்த்தது போலவே இவரது பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சுயரூபம் வெளிப்பட்டிருப்பதாக காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. மணியின் பேச்சு முழுவதும் விடியோ பதிவாகி தொலைக்காட்சிகளில் வெளியாகிவிட்டது. இவரது பேச்சின் அடிப்படையில், பழைய கொலை வழக்குகளைத் தூசி தட்டி, எம்.எம்.மணி மீது கொலைச் சதி வழக்கை கேரள மாநில காவல்துறை தொடர்ந்துள்ளது.

மணியின் பேச்சை அவரது அரசியல் குருவான பினராயி விஜயனே ரசிக்கவில்லை. கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக மணி பேசி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

இவரது பேச்சுக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான், “மார்க்சிஸ்ட் கட்சி கொலைகாரர்களின் கூடாரமாகிவிட்டது’ என்று, முன்னாள் முதல்வரும் பழுத்த மார்க்சிஸ்டுமான வி.எஸ்.அச்சுதானந்தன் குற்றம் சாட்டி இருந்தார். டி.பி.சந்திரசேகரன் கொலையில் தங்கள் கட்சியினர் தொடர்பு கொண்டிருப்பதை அவர் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார்.

கேரளத்தில் அரசியல் எதிரிகளை மார்க்சிஸ்ட் கட்சியினர் பந்தாடுவது புதிதல்ல. மார்க்சிஸ்ட் கட்சியினரின் கொலைவெறித் தாக்குதலுக்கு காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் எனப் பல கட்சிகளும் இலக்காகி உள்ளன. ÷

1999-இல் பள்ளி வகுப்பறையிலேயே புகுந்து ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் என்பவரை, அவர் பா.ஜ.க.வைச் சார்ந்தவர் என்பதற்காக, மாணவர்கள் கண்ணெதிரில் மார்க்சிஸ்டுகள் கொலை செய்தனர். இவ்வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

குறிப்பாக, முன்னாள் முதல்வர் இ.கே.நாயனாரின் சொந்த மாவட்டமான கண்ணூரில் இதுவரை நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் – ஆர்.எஸ்.எஸ். மோதல் கேரளத்தில் அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது.

இவ்வாறாக, வன்முறையை மட்டுமே நம்பி அரசியல் நடத்தும் நிலையை கேரள மார்க்சிஸ்ட் கட்சியினர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்த தேசியத் தலைமை, இப்போது வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர், தர்ம சங்கடத்துடன் தவிக்கிறது.

மார்க்சிஸ்டுகள் ஆண்ட கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும், அக்கட்சி மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இது, அக்கட்சியின் சித்தாந்தத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒருபுறம் எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார் மயம் என்கிற போக்கு. தொழிலாளிகளின் நலனைப் பாதுகாக்க அரசே தயாராக இல்லாத நிலைமை. ஏழை எளியவர்களுக்காகவும், அல்லல்படும் விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், பாட்டாளி வர்க்கத்தினருக்காகவும் குரலெழுப்ப இடதுசாரி இயக்கங்களும் இல்லாமல் போனால், இந்தியாவின் நிலைமைதான் என்ன? வன்முறை மூலம் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவது என்று தொடங்கினால், அதற்கு முடிவுதான் என்ன?

மக்களாட்சியில் நம்பிக்கை இருப்பதாக மார்க்சிஸ்டுகள் வாய்கிழியப் பேசியதெல்லாம் பொய்யா? பசுந்தோல் போர்த்திய புலிகளாகவா இருந்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள் என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள்.

சோவியத் ரஷியாவில் ஸ்டாலின் அதிபராக இருந்தபோது லட்சக் கணக்கான அரசியல் எதிரிகள் கொல்லப்பட்டது வரலாறு. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களும்கூட ஸ்டாலினிடமிருந்து தப்பவில்லை. அங்கு கம்யூனிஸம் காலாவதியாகிப் போனதற்கு ஸ்டாலினும் ஒரு காரணம். அதேபோன்ற நிலையை நோக்கி இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செல்கிறார்களோ என்கிற சந்தேகம் மேலெழுகிறது.

(படம்: இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் எம்.எம்.மணி)

– தினமணி (21.06.2012)

.

பரிதாப ஜீவன்கள்

20 Jun

சாலையின் இருபுறமும்
புழுதியையும் கரியையும்
ஜீரணித்தபடி நிற்கின்றன
நிழல் மரங்கள்-
கசாப்புக் கடையில் தவிக்கும்
ஆடுகள் போல.

கடந்துபோகும் வேக வாகனங்கள்
எப்போதும் ஏற்படுத்தும்
அதிர்வுகளைத் தாங்கியபடி,
மோதுமோ மோதாதோ என்ற
பதைபதைப்புடன்
காட்சி அளிக்கும் பரிதாப மரங்கள்.

சாலை விரிவாக்கத்துக்காக
அளக்கும் கருவிகளுடன் நிற்கும்
ஊழியர்களுக்கும்
அதே மரம் நிழல் தருகிறது-
எல்லைக் கோட்டுக்குள்
தான் வருவது தெரியாமல்.

அதுசரி.
தெரிந்துதான்
என்ன ஆகப் போகிறது?
தன்னை அறுக்கும் ரம்பத்தை
மௌனமாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர?

.

அத்தனைக்கும் ஆசைப்படும் காங்கிரஸ்

19 Jun

‘கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை’ என்ற பழமொழி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. கோவையில் கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம், அக்கட்சியினரின் காமராஜர் ஆட்சிக் கனவுகளுக்கு தூபம்போட்டது. அதேசமயம், திமுக.வுடனான கூட்டணியை சுகமான சுமையாகத் தாங்க வேண்டிய கட்டாயம் இருப்பது, தலைவர்களின் அடக்கமான பேச்சில் வெளிப்பட்டது.

முன்னாள் நிதியமைச்சரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டை ஒட்டி,கோவையில் பிரத்யேகமாக நடந்த விழாவில் சி.எஸ். நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டுவிழா, சி.எஸ். நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக, கோவை நகரின் பல பகுதிகளில் பெரிய அளவிலான கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பல்வேறு கோஷ்டியினரின் வரவேற்பு விளம்பரங்கள், திராவிடக் கட்சிகளுக்கு போட்டியாக வைக்கப்பட்டிருந்தன. இந்த விளம்பரங்களில் மரியாதைக்குரிய பெரியவர் சி.சுப்பிரமணியத்தைத் தேட வேண்டியிருந்தது.

‘விரலுக்கேற்ற வீக்கம்’ போல, காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கூட்டம் திரண்டிருந்தது. இதையே பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் குழுமிவிட்டதாக, மேடையில் முழங்கியவர்கள் குறிப்பிட்டனர். பல கோஷ்டியினர் இந்தப் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தும் கூட, நிகழ்ச்சி நடந்த சிறு மைதானம் நிறைந்தது அவர்களுக்கு பூரிப்பை அளித்தது. ஆனால், வராத காங்கிரஸ் கோஷ்டியினர் குறித்த கவலையே எங்கும் தென்படவில்லை.

கட்சி பொதுக்கூட்ட அழைப்பிதழில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பெயர் விடுபட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தி அளித்தது. அதன்விளைவாக, விழாவில் மாநிலத்தலைவர் கே.வீ.தங்கபாலுவுக்கு கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்ததால், இளங்கோவன் ஆதரவாளர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் காரணமாக, ஈவிகேஎஸ்.இளங்கோவனும் அவரது ஆதரவாளர்களும் இந்த விழாவைப் புறக்கணித்தனர்.

கோவை மாநகர மேயராக இருப்பவர் ஆர்.வெங்கடாசலம்; முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் தீவிர ஆதரவாளர். பிரபுவுக்கு தகுந்த முக்கியத்துவம் தராததால், இவரும், பிரபு ஆதரவாளர்களும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். விமானநிலையம் சென்று பிரணாப் முகர்ஜியை வரவேற்ற கோவை மேயர், நாணய வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை; பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. மாநகரின் முதல்குடிமகன் தங்கள் கட்சிக்காரராக இருந்தும், அவர் வராதது குறித்து யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

மற்றொரு மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் தரப்பினரும், தங்கள் தலைவருக்கு உரிய கெüரவம் தரப்படாததால், இந்நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவை தங்கம் (வால்பாறை), விடியல் சேகர் (காங்கயம்), ஆர்.எம்.பழனிசாமி (மொடக்குறிச்சி) ஆகியோரது புறக்கணிப்பு காரணமாக, மக்கள் பிரதிநிதிகள் பலர் இருந்தும் பயனின்றி விழா நடந்தது. சிதம்பரம் ஆதரவாளரான எம்என்.கந்தசாமி (தொண்டாமுத்தூர்) மட்டுமே விழாவில் பங்கேற்றார்.

மகாத்மா காந்தியின் ஓர் அறைகூவலுக்காக, வீடு,வாசல், குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு ராட்டைக்கொடி ஏந்தி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை, அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்காக கோஷ்டிகானம் இசைக்கும் அளவுக்கு தாழ்ந்துவிட்டது வேதனைதான்.

இத்தனைக்கும் காரணம், அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லாத மாநிலத் தலைமையே என்றாலும், சி.சுப்பிரமணியம் என்ற மகத்தான மனிதருக்காகவேனும், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கோஷ்டி மனப்பான்மையைக் கைவிட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பலரும், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று முழங்கினர்; காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்க பலர் சூளுரைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “தமிழகத்தில் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான கடும் முயற்சியை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்” என்று உருவேற்றினார்.

இறுதியாகப் பேசிய ப.சிதம்பரமும், “தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இடம்தரும் அரசு அமையும்” என்று பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு என்பதை அவர் சொல்லவில்லை.

திமுக கூட்டணி ஆட்சியை ‘வலி’ப்படுத்தியதாலேயே ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்நிகழ்ச்சிகளில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம், பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள், அதிமுக.வை விமர்சிப்பதைத் தவிர்த்தனர். மாநில அரசின் நலத்திட்டங்கள் பல மத்திய நிதியால் நடப்பதை சிலர் குறிப்பிட்டனர்.

எது எப்படியோ, காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த உத்வேகம் அளித்திருக்க வேண்டிய கோவை பொதுக்கூட்டம், வெறும் சம்பிரதாய நிகழ்வாக மாறிவிட்டது. ஆயினும், காமராஜர் ஆட்சி, மாநில அரசில் பங்கு, கூட்டணி அரசு உள்ளிட்ட முழக்கங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் குறை வைக்கவில்லை.

அரசியல்கட்சி என்றால் ஆட்சிக்கனவு இருப்பதில் தவறில்லை. ஆனால் என்ன செய்ய? ஆளுக்கொரு கோஷ்டி, நாளுக்கொரு சண்டை என்று தொடரும்போது, கனவு நனவாவது எப்படி?

ஆசை இருக்கிறது ஆட்சியைப் பிடிக்க. ஆனால் அதிர்ஷ்டம் இருப்பதோ கோஷ்டியாய் பிரிய…

– தினமணி (சென்னை பதிப்பு; அரசியல் அரங்கம் – 04.09.2010)

.