Archive | July, 2012

வாழ்க திலகர் நாமம்!

31 Jul

பாலகங்காதர திலகர்
(ஜூலை 23, 1856 – ஆக. 1, 1920)

.
பாலன் என்றிட பறங்கியர் பதறுவர்!
கங்கா தரனென கயவரும் கலங்குவர்!
திலகர் என்றிட தீயவர் ஒதுங்குவர்!
அவரே அன்னையின் விலங்கை வளைத்தவர்!
.
கீதையின் ரகசியம் கீழ்மையை எதிர்ப்பது;
அடிமைத்தனமே கீழ்மையின் மறுபெயர்!
என்பது இவரது தத்துவ தரிசனம்!
அஞ்சா நெஞ்சம் திலகரின் தனிக்குணம்!
.
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என
சுள்ளென உறைக்கும் வகையினில் உரைத்தவர்!
உரிமையைப் பேணிட யாசகமா வழி?
உதையே நல்வழி என கர்ஜித்தவர்!
.
வீட்டினில் வசித்த விக்னேஸ்வரர்களும்
வீதியில் வலம் வர வித்தினை இட்டவர்!
தமிழ்க்கவி பாரதி குருவாய் ஏற்றவர்!
தாய் பாரதியின் தவத்தால் உதித்தவர்!
.

சுதேசி செய்தி (ஜூலை – 2009)

.

ஆறறிவு அற்ற குரங்குகள்

26 Jul

குரங்குகள் அடித்துக் கொள்வதுண்டு
உணவுக்காக,
கலவிக்காக,
அதிகாரத்திற்காக.

யாரேனும் வீசி எறியும்
வாழைப்பழத்திற்காக
பல்லைக் காட்டி உறுமி
சண்டையிடும் குரங்குகள்…

துணைக் குரங்கை
வேறு குரங்கு கைப்பிடிக்காமல் தடுக்க
சீறும் குரங்குகள்…

தனது எல்லைக்குள் அந்நியக் குரங்கு
பிரவேசிக்காமல் தடுக்கும்
கோபாவேசக் குரங்குகள்.

தனக்குத் தானே வரையறுத்த
கட்டுப்பாடுகள் உண்டெனினும்
குரங்குகளுக்கென தனித்த
அரசியல் சாசனம் இல்லை.

வாழ்வதற்கான போராட்டத்திலும்
குரங்குகள் எல்லை மீறாது.
அடுத்த குரங்கின் வாலில்
தீ மூட்டி கைகொட்டாது.

வன எல்லை ஆட்சியைக் காக்க
இடம் விட்டு இடம் சகாக்களை கடத்தி
மிரட்டத் தெரியாது.

தனக்கென சட்டம் வகுத்துக்கொண்டு
அதை மீறத் தெரியாத
பகுத்தறிவு சிறிதும் கிடையாது.

வாலறிவன் தாள் வணங்கும்
மனிதருக்கு வால் இல்லை;
குரங்குகளுக்கு அறிவு இல்லை.

வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது.
ஆயினும் குரங்குகள்
அடித்துக் கொல்வதில்லை.

.

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு?

24 Jul

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு முன் நடந்த அரசியல் கூத்துக்கள் அனைவருக்கும் தெரியும். பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சி முன்வைத்த உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை நிராகரித்த இவ்விருவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர். இது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் அவசரமாக அறிவித்தது.

அதன் பிறகு நடந்ததை நாடு அறியும். மம்தாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முலாயம் சிங், ஒரேநாள் இரவில் அந்தர்பல்டி அடித்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் நகைச்சுவை.

பிரணாப் முகர்ஜியின் திறமைக்காகவும், பாஜக வென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் தான் அவரை ஆதரிப்பதாக முலாயம் சிங் கூறினார். அதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடக் கூடாது என்பதே அவரது தொலைநோக்குப் பார்வை.

இந்த ஞானோதயம், மம்தாவுடன் இணைந்து மிரட்டல் விடுத்தபோது எங்கே போயிருந்தது? இடையில் என்ன நடந்தது? பேரங்கள் ஆட்சி செய்யும் அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இப்போது, முலாயமை நம்பி காங்கிரசை எதிர்த்த மம்தா தனிமைப்பட்டு நிற்கிறார்.

நமது ஊடகங்கள் முலாயமின் புத்திசாலித்தனத்தையும் மம்தாவின் முட்டாள்தனத்தையும் விவரித்து செய்திகளை அள்ளி வழங்குகின்றன. அதாவது நம்பகத் தன்மையற்றவராக இருப்பதே புத்திசாலித்தனம் ஆகிவிட்டது.

முலாயம் சிங்கின் புத்திசாலித்தனம் இப்போது தான் வெளிப்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவரது கட்சியின் குட்டிக்கரணங்கள் பிரசித்தமானவை. 2004ல் அயோத்தி நாயகன் கல்யாண் சிங்குடன் குலாவியபோதுதான் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. பிறகு அவரையும் நட்டாற்றில் விட்டார் முலாயம்.

1999ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தபோது சோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்த முலாயம், திடீரென போர்க்கொடி உயர்த்தி, சோனியாவின் ஆசையில் மண்ணைப் போட்டார். அதன் விளைவாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சி பகுஜன் சமாஜ். அக்கட்சிக்கும் காங்கிரஸ் அரசியல் எதிரி தான். ஆனால், நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டுக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை சிக்கலான தருணங்களில் காத்து வருகின்றன.

மக்களவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும், நம்பிக்கைத் தீர்மானங்களில் வெல்லவும் காங்கிரஸ் கட்சியை இக்கட்சிகள் என்ன காரணத்துக்காக ஆதரித்தன என்பது சாமானியர்கள் அறியாத புதிர். இவ்விரு கட்சிகளும் கடைசியில் சொல்லும் காரணமோ வேடிக்கையானது. மதவாத பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதாம். இதைக் கூறியே இக்கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன.

இக்கட்சிகள் மட்டுமல்ல, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பஸ்வானின் லோக் ஜனசக்தி, மு.கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக போன்ற கட்சிகளும் அடிக்கடி கூறும் அரசியல் பூச்சாண்டி பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே.

நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டுள்ளன. முலாயமும், லாலுவும் கூட 1989 தேர்தலில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்கள் தான். பஸ்வானும், கருணாநிதியும், ராம்தாசும், மம்தாவும், நவீன் பட்நாயக்கும், பரூக் அப்துல்லாவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தான். மாயாவதியோ பாஜகவுடன் இணைந்து உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அரசையே நடத்தி இருக்கிறார்.

அவர்களே இன்று பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி முழக்கமிடுவது முரண். நாட்டிலுள்ள 20 சதவீதத்துக்கு மேற்பட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவே இக்கட்சிகள் நாடகமாடுகின்றன. உடனடி லாபத்துக்காக பாஜகவுடன் கைகோர்க்கத் தயங்காத நமது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள், தேர்தல் லாபத்துக்காக பாஜகவை விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

‘பாஜக’ என்ற வார்த்தையைப் பூச்சாண்டியாகக் காட்டியே தேர்தல் களங்களில் வாக்குகளை பல கட்சிகள் அறுவடை செய்கின்றன. அரசியல் களத்தில் தாங்கள் நிகழ்த்தும் கூத்துக்களை நியாயப்படுத்தவும் இக்கட்சிகளுக்கு உதவுவது ‘பாஜக’ பூச்சாண்டி தான். ஊழலில் திளைக்கும் மத்திய அமைச்சர்கள் தப்பிப் பிழைத்திருப்பதற்கும் இதே பூச்சாண்டி தான் உதவி வருகிறது.

இன்றைய அரசியல் சூழலில் பிரதான எதிர்க்கட்சியின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வேறு கையில் நாட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு? ஒன்று பாஜக தன் மீதான மதவாதக் கறையைப் போக்கிக்கொள்ள வேண்டும். அல்லது, இந்தப் பூச்சாண்டி அச்சத்தைவிட ஆபத்தான அரசியல் கோமாளித்தனங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லாவிடில் ஊழல் அரக்கன் சத்தமின்றி நாட்டை கபளீகரம் செய்துவிடுவான். பூச்சாண்டியா? அரக்கனா? எது ஆபத்தானது? காலத்தின் கரங்களில் பதில் காத்திருக்கிறது.

மீள்பதிவு: குழலும் யாழும்

.

செம்மொழியின் காதலன்

23 Jul

கண்ணதாசன்
(1927 ஜூன் 24 – 1981 அக். 17)

.

கண்ணனின் தாசனாய்ப் பெயர் புனைந்து
கடவுளின் தத்துவம் விளங்க வைத்து,

கன்னலின் சாறெனக் கவி புனைந்து
காவிய கண்ணியம் உணரச் செய்து,

திண்ணிய நூல்களை எழுதிவைத்து
திகைப்புறு தன்கதை நிலைகள் சொல்லி,

மண்டிய அரசியல் சேற்றினிலே
மலர்ந்திடு பங்கய மணம் பரப்பி,

தன்னது வாழ்வினைச் சுட்டிக்காட்டி
தவறான துணிச்சலை மறுக்கவைத்து,

தென்றலின் தேரென பவனி வந்து
தெவிட்டாத நற்றமிழ்க் கவிதை பெய்து,

மின்னலின் வேகமாய்ப் பிறந்திறந்து
மிளிர்ந்திடு ரத்தின ஒளி விரிந்து,

சென்றவர் புகழினை நினைந்து காண
செழிப்புறு பற்பல நூல் பிறக்கும்.

.

கர்மவீரர் வழி நடப்போம்!

14 Jul

பள்ளி செல்லணும் பிள்ளைகளே!
நல்ல பாடம் படிக்கணும் பிள்ளைகளே!
துள்ளித் துள்ளி ஆடிடணும்! நீ
சுறுசுறுப்பாக இருந்திடணும்!

அம்மா, அப்பா மகிழ்ந்திடணும்! நீ
அனைவரும் போற்ற உயர்ந்திடணும்!
நம்மால் இயன்ற உதவிகளை நாம்
நலிந்தோருக்குச் செய்திடணும்!

மதிய உணவுத் திட்டத்தால் ஏழை
மாணவர் படிக்கச் செய்தவரை,
நதிகளில் அணைகள் அமைத்தவரை,
நன்றியுடன் நீ நினைத்திடணும்!

ஆட்சியில் இருந்த போதிலுமே -ஓர்
அகந்தை மனதில் அண்டாது,
காட்சி அளித்த தலைவர் அவர் – காம
ராஜர் சரிதம் மறக்காதே!

பதவிகள் தேடி வருகையிலும் – மனம்
பதறாது உழைத்த பேராளர்!
நிதமும் மக்கள் நலம் கருதி – தன்
குடும்பம் மறந்த தவசீலர்!

எளிமை வாழ்வு, உயர் உள்ளம்- சொல்
என்றும் மாறாப் பெருந்தன்மை,
தெளிந்த பார்வை, செயலூக்கத்தால்
தேசம் காத்த தலைவர் அவர்!

நாட்டுக்காக வாழ்ந்தவரை – நாம்
என்றும் மறக்கக் கூடாது!
வீட்டுக்காக படித்திடணும்! பின்
நாட்டை நாமும் காத்திடணும்!

மாணவப் பருவம் படிப்பதற்கே! கல்வி
வாழ்வில் உயர வழிகாட்டும்!
காமராஜரின் கருத்து இது- உன்
கல்வியும் நாட்டுக்கு வழிகாட்டும்!

.

நாளை (ஜூலை 15) கர்மவீரர்  காமராஜர் பிறந்தநாள்

– தினமணி- சிறுவர் மணி (14.07.2012)

.

பண்பாட்டின் அச்சாணிகளைப் பாதுகாப்போம்!

13 Jul

அண்மையில்  கோவில் திருவிழாக்களில் நடந்த சில அசம்பாவிதங்கள், விழா முன்னேற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தி உள்ளன. குறிப்பாக, ஒரு வார காலத்துக்குள் ஐந்து வெவ்வேறு இடங்களில் நடந்த தேரோட்ட நிகழ்வுகளில் விபத்துக்கள் நேரிட்டு, பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.

குடியாத்தம் சிவகாமசுந்தரி- பாலசாதுலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மே 2ல் நடைபெற்றது. அப்போது தேரின் கலசம் மின்கம்பியில் உராய்ந்ததில் ஏற்பட்ட மின்சார விபத்தில் 4 பக்தர்கள் பலியாகினர்.

அதேநாளில் நாகூரில் நடந்த சந்தனக்குட ஊர்வலத்தில் அலங்கார வாகனத்தில் மின்சார விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகினர். இவ்விரு விபத்துகளிலும் மின்இணைப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள்வதில் இருந்த கவனக்குறைவு விழாவை அமங்கலமாக்கிவிட்டது.

ஆரணி, கோட்டை கைலாசநாதர் கோவில் தேரோட்டம் மே 3ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சக்கரம் உடைந்து தேர் கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில் தேரோட்டம் மே 4ல் நடந்தது. இதில் தேர் கட்டுப்பாடிழந்து பக்கவாட்டில் சுவர் மீது மோதியதை அடுத்து தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் தேரோட்டம் மே 6ல் நடந்தது. அப்போது தேரின் அச்சாணி முறிந்ததால் தேர் கவிழும் நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இத்தேரோட்டம் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்டது.

கோவை அருகிலுள்ள பாலமலை மீது மே 5ல் நடந்த தேரோட்டம், சாலையில் இருந்த பள்ளத்தால் விபத்தைச் சந்தித்தது. இதில் தேர் கவிழ்ந்து பக்தர் ஒருவரது உயிரைக் காவு கொண்டது; மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேற்கண்ட விபத்துக்கள், ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் கோவில் திருவிழாக்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுசிந்தனைக்குள்ளாக்கி உள்ளன. ÷ஊர் கூடித் தேர் இழுப்பது என்பது தமிழகப் பண்பாட்டின் சிறப்பான அங்கம். தேரோட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு சமூக மக்களின் பங்களிப்பு கட்டாயமாக உள்ளது. அனைவரும் இணைந்து தேரோட்டம் நடத்தும்போது சமூக ஒற்றுமை உறுதிப்படுகிறது.

இதை உணராமல் கண்டதேவி கோவிலில் தேரோட்டத்தில் நடந்த குளறுபடிகளால் சமூக ஒற்றுமை பாதிக்கப்பட்டதை அறிவோம். இப்போது தேரோட்டமே ஆபத்தானதாக மாறி வருவது, அறநிலையத் துறையிலுள்ள குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.

நமது மரச்சிற்பிகளின் அற்புதக் கலையாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை கோவில் தேர்கள். நுண்ணிய, அழகிய சிற்பங்கள் நிறைந்த திருவாரூர் ஆழித்தேரும், அவிநாசித் தேரும் பிரபலமானவை. ஆனால் தேர்களை நமது கோவில் நிர்வாகங்கள் பராமரிப்பது எப்படி என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.

மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பனியில் உறைந்து, சாலையோரம் தகரத் தடுப்புகளுக்குள் தத்தளிக்கின்றன நமது கோவில் தேர்கள். தேரோட்டத்தின்போது மட்டுமே இவற்றுக்கு மரியாதை.

இந்தத் தகரத் தடுப்புகளும் கூட 1989ல் அவிநாசி கோவில் தேர் எரிந்த பிறகு ஏற்பட்ட ஞானோதயத்தால் தான் அறநிலையத் துறையால் அமைக்கப்பட்டன. மற்றபடி தேரை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கு எந்த வழிகாட்டிக் குறிப்புகளும் கோவில்களில் இல்லை.

இயற்கையாகவே உளுத்துப் போகும் தன்மை கொண்ட மரத்தேர்களைப் பாதுகாப்பது குறித்து அறநிலையத் துறை கவலைப்படுவதும் இல்லை. தேரோட்டத்துக்கு ஒரு வாரம் முன்னதாக வார்னிஷ் பூசுவதும், சக்கரங்களைச் செப்பனிட்டு உயவு எண்ணெய் பூசுவதும், தோரணங்களால் அலங்கரிப்பதும் மட்டுமே பராமரிப்பு என்று கருதப்படுகிறது.

இதே நிலை நீடித்தால், நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழகத் தேர்கள் பலவும் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கோவில் கோபுரம் போலவே பூஜைக்குரியதான கோவில் தேர்களின் அவல நிலை குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டிய வேளை வந்துவிட்டது.

ரதவீதிகளின் பராமரிப்பு, விழாக்காலங்களில் மின்இணைப்பு பராமரிப்பு, திருவிழாக் கூட்டத்தைக் கையாள்வது ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்விஷயத்திலும் அரசு தெளிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டுதான் அதிகமான தேரோட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கோவில் கொடிக்கம்பம் சாய்வதும் கோவில் தேர் கவிழ்வதும் அரசுக்கு ஆபத்தான அறிகுறிகளாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன. இவற்றின் பின்னணியில் வேறு சதிச்செயல்கள் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவது நல்லது.

கோவில் திருவிழாக்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான மாறுதலை அளித்து, ஆண்டு முழுமைக்குமான உந்துசக்தியைத் தர வல்லவை. அவ்விழாக்களில் நேரிடும் விபத்துக்கள் நமது சிறப்பான பாரம்பரியம் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்வதாக மாறிவிடும்.

எனவே ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அன்பர்கள், தேர்களைப் பராமரிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

கோவில் தேர்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள்; நமது ஒற்றுமையின் அச்சாணிகள். அவை முறிந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.

மீள்பதிவு: குழலும்யாழும் (17.05.2012)

.

தமிழ்த் தாத்தா பஞ்சகம்

12 Jul

.

தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே
துடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த
சங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம்
எங்கள் தமிழ்த்தாத்தா தான்.

ஊரூராய்த் திரிந்து உறுபொருள் செலவிட்டு
பாருய்யத் தமிழகத்தின் பழமையான இலக்கியத்தை
பாதுகாத்து அச்சிட்டுப் பாங்காகக் கொடுத்திட்ட
தூதர் தமிழ்த்தாத்தா தான்.

தமிழென்று சொன்னாலே தரணிக்கு நினைவில்வரும்
அமிழ்தான நூல்களினை அரித்தொழித்து தின்றுவந்த
சூழ்ந்த கரையானை சுட்டெரித்துத் தமிழ்காத்த
வாழ்வே தமிழ்த்தாத்தா தான்.

வாய்ச்சொல்லில் வீரரென வாழ்ந்தோரின் மத்தியிலே
ஆய்ச்சியர் குரவையும் அணித்தமிழ் இலக்கணமும்
பரவும் தமிழிசையின் பெருமிதத்தை ஊட்டியநல்
குருவே தமிழ்த்தாத்தா தான்.

ஆரணங்காம் தமிழ்த்தாயின் ஆபரண மானபெரும்
பூரணத்தின் மணித்திரளாம் புத்திளமை பூத்திருக்கும்
மங்காத இலக்கியங்கள் மாயாமல் காத்தவரே
எங்கள் தமிழ்த்தாத்தா தான்.

காண்க: உ. வே. சாமிநாதையர்

.

பயன்மர இலக்கணம்

7 Jul

.

மராமரம் காவியம் தந்தது.
மாமரம் கனி தருகிறது.
மரம் எல்லாம் தரும்.
பயன்மரம் வினைத்தொகை;
மனிதர்கள் மரங்களின்
எச்சங்கள்.

உலகம் என்ற ஆகுபெயரில்
மானிடர்கள் வெட்டும்
மரங்களின் வேர்களில் கசியும்
தாய்மையின் ஈரம்.
நிலம் அறியும் உருவகம்:
கோடரிகளுக்கு காம்பு
மரமல்ல.

நுனிக்கிளையில் அமர்ந்து
அடிமரம் வெட்டும்
உவமைத்திறன்
ஓரறிவு மரத்திற்கு
கிடையாது.

மரங்களை இனியும்
மக்கட்பண்புக்கு
உவமை கூறாமல் இருக்கலாம்.
அரம் போலும் கூர்மை
நமக்கு நாமே அறுத்துக்கொள்ள அல்ல.

.