பதிப்பாளரின் மனப்பதிவுகள்

7 Aug

தமிழின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று தமிழ்ப் புத்தகாலயம். அதன் நிறுவனர் கண.முத்தையாவின் நினைவலைகளின் சிறு தொகுப்பே இந்நூல். அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற அரிய நூலை தமிழுக்கு வழங்கியவர் கண.முத்தையா; நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்;  தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். சுமார் 50 ஆண்டு காலம், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலருடன் பழகிய இவரது நினைவுகளை அவரது மருமகன் அகிலன் கண்ணன் கோர்வையாகத் தொகுத்திருக்கிறார்.

இது அளவில் சிறிய நூலாக இருக்கலாம். ஆனால் விஷய அளவில் பல அற்புதமான சரித்திர நிகழ்வுகளின் பதிவாக இருக்கிறது. எழுத்தாளர்கள் பேரா.வையாபுரி பிள்ளை, சாமி சிதம்பரனார், சக்தி வை.கோவிந்தன், திருலோக சீதாராம், புதுமைப்பித்தன், அகிலன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, விஜயபாஸ்கரன், அரசியல் தலைவர்கள் பெரியார், அண்ணாதுரை, பக்தவத்சலம், ப.ஜீவானந்தம், பாலதண்டாயுதம், ம.பொ.சி, மு.கருணாநிதி போன்ற முந்தைய தலைமுறையினர் குறித்த ஆசிரியரின் பதிவுகள் உள்ளத்தை உருக்குபவை.

இந்திய தேசிய ராணுவத்தில் தான் நிகழ்த்திய அரிய சாகசங்களை அடக்கமாகக் குறிப்பிட்டுச் செல்லும் ஆசிரியர் நேதாஜியின் அணுக்கத் தொண்டராக இருந்தவர். இந்நூல் அவரது நிறைகுடப் பாங்கை வெளிப்படுத்துகிறது. இந்திய தேசிய ராணுவத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் அரிய ஆவணம் இந்நூல் எனில் மிகையில்லை.

எனினும், ஒரு பதிப்பாளராகவே கண.முத்தையாவின் நினைவுகள் இந்நூலில் அதிகமாக உள்ளன. பதிப்புத் தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ந்துள்ள சூழலில் தமிழ் இலக்கிய உலகம் எதிர்பார்த்த அளவுக்கு வீரியமாக வளரவில்லை என்ற மனக்குறையை ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் இவரை மிகவும் சங்கடப்படுத்தி இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.

***

முடிவுகளே தொடக்கமாய்…

கண.முத்தையா

பக்கம்: 144,  விலை: ரூ. 30,

தமிழ்ப் புத்தகாலயம்,
34, சாரங்கபாணி தெரு,
தியாகராய நகர், சென்னை- 17.
போன்: 044- 2834 0495.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: