Archive | September, 2012

யாருடைய குற்றம்?

22 Sep

குடும்பம் கேட்டுப் போச்சுங்க…
பொண்டாட்டி போயிட்டா..
பெத்த புள்ளையும் போயிருச்சு..பேரனும் செத்திட்டான்..
அப்பறம் நமக்கு நடுத்தெருதானே போக்கிடம்?

பலமாத தாடியை சொறிந்தபடி
கண்களில் ஒளியுடன் விவரிக்கிறான்
கந்தலாடைப் பிச்சைக்காரன்.

நான் நல்லா நடிப்பேனுங்க..
ஊருல நாடகம் போட்டா
நான் தானுங்க மேடையில டான்சு
எம்ஜியார், சிவாஜி, எம்மார்ராதா
யாரு மாதிரி வேணாலும் நடிப்பேனுங்க.

இப்பக் கூட ரத்தக் கண்ணீர் படப் பாடலை
அற்புதமாப் பாடுவேங்க…
”குற்றம் புரிந்தவன் வாழ்வினில் நிம்மதி கொள்வதென்பதேது?”
உச்சஸ்தாயியில் அவன் பாட,
தெருவில் சென்ற நாயொன்று திரும்பி நின்று பார்த்துவிட்டு
நடையைக் கட்டுகிறது.

அவனது தலைமாட்டில் பிளாஸ்டிக் குப்பை மூட்டை.
எப்படியும் ஒருநாளுக்கு ஐம்பது ரூபாய் தேறிவிடுகிறது.
அது ‘கட்டிங்’ போடவே போதாமல் போகிறது.
ஒரு கட்டு பீடி ஒரு ரூபாய் இருந்தது இப்போது ஐந்து ரூபாய் ஆகிவிட்டது.
விலைவாசி ஏற்றம் பிச்சைக்காரனையும் பாதிக்கிறது.

எல்லாக் கதையையும் கேட்டுவிட்டு
பத்து ரூபாய் எடுத்து நீட்டுகிறேன்.
”நான் பிச்சைக்காரன் இல்லைங்க சார்,
தெருப்பொறுக்கி.
ஊர்க்குப்பையில் வாழ்பவன் நான்.
பரவாயில்லை கொடுங்க.. ரெண்டு கட்டு பீடிக்கு ஆகும்…”

என்கிறார் தெருவோர அநாதை.
குடும்பம் கெட்டவர்களை இனிமேலும்
எப்படி வேண்டுமானாலும் அழைக்கக் கூடாது.

சுற்றிலும் மொய்க்கும் ஈக்களை விரட்டியபடி,
அடுத்த பாடலைத் துவக்குகிறார் –
”எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்?”
வண்டியை விரட்டி வீடு சேர்ந்த பின்னும்
பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

.

Advertisements

கோவை மக்களின் இஷ்டதெய்வம் ஈச்சனாரி விநாயகர்

20 Sep

இன்று விநாயகர் சதுர்த்தி- சிறப்புத் தகவல்கள்

கோவை மாவட்ட மக்களின் இஷ்ட தெய்வமாக அருள் பாலித்து வருகிறார், ஈச்சனாரியில் எழுந்தருளியுள்ள விநாயகர். 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்டவராக, கோவை மாவட்டத்திலுள்ள இரண்டாவது பெரிய விநாயகராக இவர் தரிசனம் தருகிறார்.

இக்கோவில் 500 ஆண்டுகள் பழமையானது; 30 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நாடிவரும் பக்தர்களின் குறைதீர்த்து வருகிறது. கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் 9 கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது.

கோவை அருகிலுள்ள பேரூரில் அமைந்திருக்கும் பழமையான பட்டீஸ்வரர் கோவிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக வண்டியில் கொண்டு செல்லும்போது ஈச்சனாரி பகுதியில் வண்டியின் அச்சு முறிந்ததாம். அதே இடத்தில் அமர்ந்து அருளாசி புரியத் துவங்கினாராம் விக்னேஸ்வரர். இது இக்கோவில் பற்றிய செவிவழிக் கதை.

எடுத்த காரியம் தடங்கலின்றி வெற்றி பெற இங்குள்ள விநாயகரைப் பிரார்த்தித்துச் செல்கின்றனர் பக்தர்கள். இங்கு ஒவ்வொரு நாளும் அன்றைய நட்சத்திரப்படி விநாயகருக்கு அலங்காரம் செய்வது சிறப்பு.

***

தாராபுரம் கோவிலில் மனிதத் தலையுடன் விநாயகர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலுள்ள பழமையான தில்லாபுரி அம்மன் கோவிலில் மனிதத் தலையுடன் கூடிய விநாயகர் சிலை உள்ளது.

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் இருந்த நகரம் விராடபுரம். இதுவே தற்போது தாராபுரம் என்று வழங்கப்படுவதாக இப்பகுதியில் நம்பிக்கை நிலவுகிறது. அஞ்ஞாதவாசம் துவங்குவதற்கு முன் தன்னிடமிருந்த ஆயுதங்களை வன்னிமரத்தில் அர்ஜுனன் மறைத்து வைத்ததாகவும் மகாபாரதம் கூறுகிறது. அந்த மரம் இருந்த பகுதியில் அமைந்த கோவில்தான் தில்லாபுரி அம்மன் கோவில் என்கிறார்கள்.

இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறிய கோவில்தான். இங்குள்ள மனிதத் தலையுடன் கூடிய ஆதிவிநாயகர்தான் இக்கோவிலின் சிறப்பம்சம். விநாயகர் உருவமேதான், ஆனால் தும்பிக்கை மட்டும் இல்லை. இங்குள்ள யாருக்கும் இதன் காரணம் தெரியவில்லை. ஆயினும் இந்தச் சிற்பத்தை ஆதிவிநாயகர் என்று வழிபட்டு வருகிறார்கள்.

– தினமணி (வெள்ளிமணி- 14.09.2012)

.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

17 Sep

நம்மை நாமே நமக்காய் ஆளஅமைத்தது தான் சட்டம்- நாம்
தம்மைத் தாமே கட்டுப்படுத்த உருவாக்கிய வட்டம்.
விதிமுறை கூறி வழிப்ப்டுத்துவதே சட்டத்தின் கடமை- அந்த
விதிகளை மீற மனிதர்கள் முனைவது விபரீத மடமை.

சட்டம் என்பது புத்தக அளவில் இருட்டறை என்பார்கள்- அதில்
பட்டம் பயின்ற வல்லுநர் வாதம் ஒளியேற்றும் விளக்கு.
சட்டம் கூறும் விதிகளை மக்கள் கடைப்பிடித்திட வேண்டும்- இதை
கட்டாயமென நடைமுறைப்படுத்த காவலர்கள் வேண்டும்.

சட்டம் சொல்லும் விதிமுறை கற்ற வக்கீல் ஒருபக்கம்- அந்த
சட்டம் காக்க கடுமையைக் காட்டும் காவலர் மறுபக்கம்.
ஒரு நாணயத்தின் இரு புறம் போல வக்கீல், காவலர்கள்- இணையாய்
இருந்திட வேண்டும் என்பது நமது முன்னோரின் திட்டம்.

குற்றம் தடுத்து குடிகளைக் காக்க இருவரும் அவசியமே- இதை
சற்றும் மறவா தகைமை வளர்ந்தால் சங்கடம் நிகழாதே!
சமுதாயத்தின் நிலை பிறழாது காப்பது சமநீதி- இதை
சமைத்துத் தருவோர் சண்டைகளிட்டால் சாய்ந்திடும் அறநீதி.

சென்னை நீதி மன்ற நிகழ்வுகள் சொல்லும் சேதி இது- தான்
என்னும் அகந்தை அழிந்தால் எங்கும் நிலைக்கும் நீதியது.

– விஜயபாரதம் (16.03.2009)

மீள்பதிவு: குழலும் யாழும்

.

வேர்களின் சாம்ராஜ்யம்

9 Sep

வேர்கள் மரத்தைத் தின்னுமா?
ஒட்டுண்ணி மரங்களின் வேர்கள்
பிற மரங்களில் ஊடி
ஆதார மரத்தை உறிஞ்சுவதை
யாரும் கண்டிருக்கலாம்.
ஆயின்-
சொந்த மரத்தையே
அந்த மரத்தின் வேர்கள்
காயப்படுத்திக் கண்டிருக்கிறீர்களா?

வேர்கள் பகுத்தறிவற்றவை;
அவற்றுக்கு சதிகள் தெரியாது.
வேர்கள் சுயசிந்தனை அற்றவை;
அவற்றுக்கு ஏமாற்றத் தெரியாது.
வேர்கள் வாழ்வதற்கே வாழ்பவை;
அவற்றுக்கு சத்தமின்றி கழுத்தறுத்து
வாழ்வைக் குலைக்கத் தெரியாது.
மரங்களைக் காப்பதே தாங்கள்தான் என்று
நடிக்க வேர்களுக்கு கண்டிப்பாகத் தெரியாது.

தவ வாழ்க்கை வாழ்ந்தாலும்
வேர்கள் யாருக்கும் உபதேசம் செய்வதில்லை;
உலகத்திற்கு நீதி போதிப்பதாகக் கூறி
நீட்டி முழக்கி, பேட்டி கொடுத்து
இருளுக்குள் நேர்மாறாக நடப்பதற்கான
அரசியல் சூத்திரங்கள் தெரியாதவை-
வெளிச்சத்தில் நடப்பதை உண்மையென்று நம்பும்
அப்பாவி மனிதரைப் போன்ற அறிவிலிகள் வேர்கள்.

மரத்தின் வாழ்வைக் காப்பதே
நீர், நிலம், காற்று, சூரிய ஒளிதான்.
இந்த நான்கு தூண்களையும் கண்காணித்து
உறுதிப்படுத்தும் ஐந்தாவது தூண்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்.
எந்த ஒன்று அற்றாலும் மரம் தாக்குப் பிடிக்கும்-
வேர்கள் பிற காரணிகளுடன் இணைந்து
கூட்டுக் கொள்ளை நடத்தி
இற்றுப் போகாமல் இருக்கும் வரையில்.

மரங்கள் மரங்கள் தான்;
மனிதர்களல்ல-
வேர்கள் மரங்களின் உறுப்புகள் தான்;
மரங்கள் கவலைப்பட வேண்டியதில்லை-
மனிதர்கள் போல.

வேர்களின் சாம்ராஜ்யமும்
ஊடக சாம்ராஜ்யமும்
ஒன்றாக முடியுமா என்ன?

——————————————

சமர்ப்பணம்:

கவிதை உருவாக கருக் கொடுத்த ஊடகவியலாளர்கள் பர்கா தத்,  வீர் சாங்க்வி ஆகியோருக்கும், அவர்களை வெளிப்படுத்த உதவிய நீரா ராடியாவுக்கும் நன்றியுடன்.

மீள்பதிவு: குழலும் யாழும்

.