Archive | October, 2012

வடசித்தூரில் கொண்டாடப்படும் மயிலந்தீபாவளி!

31 Oct


நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் இருந்தாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பல  நாள் கொண்டாட்டமாக தீபாவளி மகிழ்ச்சியை அள்ளி வழங்குகிறது. தமிழகத்திலோ தீபாவளி கொண்டாட்டம் ஒருநாள் மட்டுமே.

அதேசமயம், கோவை மாவட்டத்திலுள்ள வடசித்தூர் கிராமத்தில் மட்டும் தீபாவளி இரண்டுநாள் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாளை இவ்வூர் மக்கள் “மயிலந்தீபாவளி’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று இக்கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் கிடாவெட்டு உண்டு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள வடசித்தூர் கிராமம் சிற்றூராட்சியாகும். குரும்பபாளையம், செல்லப்ப கவுண்டன்புதூர் ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கிய வடசித்தூர், சுற்றுவட்டாரக் கிராமங்களின் மையமாக உள்ளது. இங்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே இங்கு முக்கியத் தொழில். சமீபகாலமாக இப்பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டு வருகின்றன.

இங்கு பல தலைமுறைகளாக, தீபாவளிக்கு மறுநாள் “மயிலந்தீபாவளி’ என்ற பெயரில் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வழக்கம் எப்போது துவங்கியது என்று தெரியவில்லை என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். எப்படியும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பண்டிகை அனுசரிக்கப்பட்டு வருகிறது என்கிறார், இந்த ஊரைச் சேர்ந்த எஸ்.நஞ்சுக்குட்டி.

சிறிய தீபாவளி என்ற அர்த்தத்தில் மயிலந்தீபாவளியைக் கொண்டாடுவது துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் இவர். அருகிலுள்ள நகரமான பொள்ளாச்சியில் வியாழக்கிழமை கூடும் பெரிய சந்தையை அடுத்து, மறுநாள் வெள்ளிக்கிழமை சிறிய சந்தையான “மயிலஞ்சந்தை’ கூடுவதை அவர் உதாரணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

எல்லா ஊர்களையும் போலவே வழக்கமான உற்சாகத்துடன் வடசித்தூரிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதிகாலை எண்ணெய்க் குளியல், பட்டாசு வெடிப்பு, ஊரின் பிரதானமான கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் வழிபாடு ஆகியவை வடசித்தூரில் தீபாவளியின் வழக்கமான அம்சங்கள். அத்துடன் ஊரின் மையத்தில் ஊராட்சித் திடலில் அமைக்கப்படும் ராட்டினங்கள், கேளிக்கை விளையாட்டுக்கள் ஆகியவை வித்யாசமான அனுபவத்தை இவ்வூர் மக்களுக்கு ஆண்டுதோறும் வழங்குகின்றன.

இதற்குக் காரணமாக அமைந்தது தான், மறுநாள் வரும் மயிலந்தீபாவளி. இதுவே  வடசித்தூர் நோக்கி சுற்றுவட்டார மக்களை திரளச் செய்கிறது. அன்று வடசித்தூரில் வாழும் பெரும்பாலோர் இல்லங்களில் அசைவ விருந்து பரிமாறப்படுகிறது. மாறாக தீபாவளியன்று இம்மக்கள் அசைவ உணவைத் தவிர்க்கின்றனர்.

வடசித்தூரில் பெரும்பான்மையாக வாழும் கொங்கு வேளாள கவுண்டர் மக்கள் “செம்பங்குலம்’ என்ற உட்பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்கள் அமாவாசை நாளில் அசைவ உணவைத் தவிர்ப்பது குடும்ப வழக்கம். இவர்களுக்காகவே அமாவாசைக்கு மறுநாள் மயிலந்தீபாவளி கொண்டாடப்படுவது துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் இங்கு டீக்கடை வைத்திருக்கும் பொன். இளங்கோ.

”வடசித்தூரைச் சேர்ந்த பெண்கள் வேறு ஊர்களுக்குத் திருமணமாகிச் சென்றுவிட்டாலும், தீபாவளிக்கு மறுநாள் கணவர் வீட்டினர் மற்றும் குழந்தை குட்டிகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விருந்தில் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது. புகுந்த வீட்டிற்குச் சென்ற தங்கள் பெண்களுக்கு தீபாவளியன்று அசைவ விருந்து தர முடியாததால், அதற்கு மறுநாள் ‘மயிலந்தீபாவளி’ என்ற பெயரில் புதிய பண்டிகையையே வடசித்தூர் மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள்” என்கிறார், இந்த ஊராட்சியின் தலைவர் கே.தேவராஜ்.

மயிலந்தீபாவளியின் மற்றொரு சிறப்பு, இவ்வூரில் வாழும் இஸ்லாமியர்களும் இப்பண்டிகையில் பங்கேற்பது என்கிறார் இவர். மயிலந்தீபாவளியன்று இந்துக்களின் வீடுகளுக்கு விருந்தினராகச் செல்வதை இங்குள்ள முஸ்லிம் மக்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அன்று இந்துக்களும் முஸ்லிம்களும் பாசத்துடன் உறவுமுறை கூறி அழைத்துக் கொள்வதைக் காண முடியும்.

இரு நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுவதால், வடசித்தூரின் மையத்தில் பஞ்சாயத்து மைதானத்தில் கேளிக்கை விளையாட்டுகள் களைகட்டுகின்றன. இதற்காக பலவிதமான ராட்டினங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் விளையாட வரும் சிறுவர் சிறுமியரின் உற்சாக ஆரவாரம் ஊர் எல்லை வரை கேட்கும்.

நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வாரச்சந்தை நடந்ததாகத் தகவல். பிற்காலத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்காக, ஊரின் தெற்கே சந்தை இடம் மாற்றப்பட்டுவிட்டது. எனினும், மயிலந்தீபாவளிக் கொண்டாட்டங்கள் அதே இடத்தில் தொடர்கின்றன என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த கண்டியப்பன்.

சுற்றுவட்டார கிராமங்களின் மையமாக இருப்பதால், அருகிலுள்ள குருநல்லிபாளையம், மன்றாம்பாளையம், கொண்டம்பட்டி, மெட்டுவாவி, பனப்பட்டி, ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வடசித்தூரிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டிற்கு பண்டிகை கொண்டாட மக்கள் வருகின்றனர்.

வெளியூர்களில் வசிக்கும் வடசித்தூர் கிராம மக்களும் இவர்களது உறவினரும் ஆண்டுக்கு ஒருமுறை கூடும் திருநாளாகவும் மயிலந்தீபாவளி விளங்குகிறது. இளைஞர்களும் கன்னியரும் கண்ணால் பேசி மகிழவும் இப்பண்டிகை வாய்ப்பளிக்கிறது.

பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி மட்டுமல்ல, அன்பையும் உறவுகளையும் வளர்ப்பது. அதைச் சிறப்பாக நிறைவேற்றுவதால் தான், தமிழகத்திலேயே புதுமையாக, ஆண்டுதோறும் இங்கு இரண்டுநாள் தீபாவளி கோலாகலமாக நடக்கிறது. வரப்போகும் மயிலந்தீபாவளிக்காக, சென்ற ஆண்டு நினைவுகளுடன் வடசித்தூர் காத்திருக்கிறது.

தினமணி – கோவை (28.10.2012 )
ஒளி விழா கொண்டாட்டம் விளம்பரச் சிறப்பிதழ்

.

Advertisements

புனர் ஜென்மம்

30 Oct

அனல்காற்று வீசும் பாலைப் பெருவெளியின்
கானல் குளங்களின் ஊடே ஒற்றை ஈச்ச மரம்.
கூகைகளும் அஞ்சும் மயான வெயிலில்
முன்ஜென்ம நினைவுகளில் மூழ்கி
கண்கள் செருகுகிறது
வாயுலர்ந்த ஒட்டகம்.

*********

கானகப் பசுமையைச் சிதைத்தபடி
முன்னேறும் கோடரிக் கும்பல்களின்
தோள்களில் காயம் பட்ட மான்கள்.
ரம்பத்தின் பேரோசையில் அமிழ்ந்து போகிறது
குருதி வழியும் மான்களின் ஈனசுரம்.

*********

பாலைவனச்சோலையில் நிழல்தரும்
ஒற்றைமரம் மனிதனாகலாம்-
அடுத்த ஜென்மத்தில் ஒட்டகம் போல.
புண்ணியக் கணக்கை பாவத்தால் சரிக்கட்ட
வேறுவழி?

.

சீக்கியர்கள் கொண்டாடும் தீபாவளி….

21 Oct

வண்ணமயமான தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் உற்சாக வெள்ளத்தைக் கரைபுரளச் செய்யும் முதன்மையான பண்டிகை தீபாவளி தான். இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் கொண்டாடப்படுவதல்ல என்பது பலரும் அறியாத தகவல்.

சமண மத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தீபாவளி தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் சங்கமத் திருநாள்.

“சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் தீபாவளி” என்று மூன்றாவது சீக்கிய குருவான குரு அமர்தாஸ் (1552- 1574) அறிவித்தார். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

சீக்கியர்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் ஹர்மந்திர் சாஹிப் எனப்படும் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒரு தீபாவளி நன்னாளில் தான். அமிர்தசரஸ் குளத்தையும் அதையொட்டிய நகரையும் நிர்மாணித்த நான்காம் சீக்கிய குரு ராம்தாஸ் 1577ம் ஆண்டு தீபாவளியன்று இப்பணியைத் துவக்கினார். இப்பணியை முழுமையாக்கி அமிர்தசரஸ் நகரை உருவாக்கினார் அடுத்துவந்த ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜூன் தேவ்.

சீக்கியர்களின் எழுச்சிக் காலமாகக் கருதப்படும் காலம் ஆறாவது குரு ஹர்கோவிந்த சிங்கின் காலம் (1595 – 1644). இவர் அப்போதைய முகலாய மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டார். அவருடன் 52 இந்து அரசர்களும் கைது செய்யப்பட்டு குவாலியர் கோட்டையிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதமாற்றத்தை வலியுறுத்தி சிறைக்குள் இவருக்கு கொடிய சித்ரவதைகள் இழைக்கப்பட்டன. அவை அனைத்தையும் தனது ஆன்ம வலிமையால் தாண்டிய குரு ஹர்கோவிந்த சிங்கின் பெருமையை மன்னர் ஜஹாங்கீர் உணர்ந்தார். இறுதியில் சிறையில் இருந்து குருவை விடுவிக்க மன்னர் முன்வந்தார். ஆனால், தன்னுடன் சிறையிலுள்ள 52 இந்து மன்னர்களையும் விடுவித்தால் மட்டுமே தானும் வெளிவருவேன் என்றார் குரு ஹர்கோவிந்த் சிங்.

கடைசியில் குருவின் மனவலிமையே வென்றது. ஒரு தீபாவளி நன்னாளில் குரு ஹர்கோவிந்தருடன் 52 இந்து மன்னர்களையும் விடுவித்தார் மொகலாய மன்னர் ஜஹாங்கீர். 1619, அக்டோபர் 26ம் நாள் இந்த சரித்திரப்புகழ் பெற்ற நிகழ்வு நடைபெற்றது.

அதனை ஆண்டுதோறும் நினைவுகூரும் விதமாக, “பந்தி சோர் திவஸ்’ என்ற விழா சீக்கிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அமிர்தசரஸ் திருக்குளத்தில் சீக்கியக் குழந்தைகள் வண்ண விளக்குகளை மிதக்கவிட்டு, பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர்.

சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங், 1699ம் ஆண்டு, சீக்கியர்களின் பண்டிகைகளில் பைசாகிக்கு அடுத்ததாக, முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளியை அறிவித்தார். அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்கள் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அமிர்தசரஸ் பொற்கோவிலின் நிர்வாகியும் குரு கோவிந்தரின் பால்ய நண்பருமான குரு பாயி மணிசிங் மொகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்ததால், 1737, டிசம்பரில் கைது செய்யப்பட்டு லாகூர் கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு லாகூர் ஆளுநர் சஹாரியா கானால் கடும் சித்ரவதைக்கு ஆளாகி பாயி மணிசிங் தீபாவளியன்று பலியானார்.

அவரது மரணம் சீக்கியர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. ஏற்கனவே பத்தாவது குருவான குரு கோவிந்தரால் அமைக்கப்பட்ட கால்சா படை மொகலாயருக்கு எதிராக தீவிரமாகப் போராட இவரது படுகொலை காரணமாக அமைந்தது.

இவ்வாறாக, தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் பதிவுகளுடன், முந்தைய குருமார்களின் புனிதமான நினைவுகளுடன் தீபாவளியை சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர். இந்நாளில் சிறப்பு மிகுந்த நமது பாரம்பரியத்தை நாமும் நினைவில் கொள்வோம்.

தினமணி- கோவை (21.10.2012 )

ஒளி விழா கொண்டாட்டம் – விளம்பரச் சிறப்பிதழ் 

.

நடுநிசி நாய்கள்

19 Oct

ஒன்றை ஒன்று மோப்பம் பிடித்தபடி,
ஒன்றை ஒன்று உறுமியபடி,
வாலைக் குழைத்தபடி,
அங்கும் இங்கும் அலைகின்றன தெருநாய்கள்.

இருபுறமும் வெறிக்கப் பார்த்தபடி
தலையைச் சொறிந்துகொண்டு நடக்கும்
பித்தனைக் கண்டு காதை விரைக்கும் நாய்களை
கல்லெடுத்து விரட்டுகிறாள்
இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் அரவாணி.

மிதிவண்டியை உந்திச் செல்லும்
கூர்க்காவின் தடிவீசலுக்கு
பயந்து பம்முகின்றன
சிரங்கு பீடித்த தெருநாய்கள்.

ஒதுக்குப்புறமாய் கோணி விரித்துப் படுத்திருக்கும்
பிச்சைக்காரியை நோட்டமிடும்
மர்ம ஆசாமியைக் கண்டு குரைக்கிறது
ஜோடி கிடைக்காத தெருநாய் ஒன்று.

சற்றுத் தள்ளி இருக்கும் கடைத் திண்ணையில்
சுருண்டு கிடக்கும் தொழுநோயாளியின்
இருமல் சத்தம் எங்கும் எதிரொலிக்கிறது;
அருகில் படுத்திருந்த தெருநாய்
விருட்டென எழுந்து வேறிடம் நகர்கிறது.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.
தெரு விளக்குகள் மந்தமாக எரிகின்றன.
நகரமே தூங்குகிறது தெருநாய்களைத் தவிர.

போர்வை போர்த்தியது போல
இருளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது
லேசான நடுநிசிப்பனி.

இரவு ரோந்தை சபித்தபடி
தெருமுனையில் நாற்காலியில் அமர்ந்து
பூனைத் தூக்கத்தில் இருக்கும் காவலரை
நெருங்கி முகர்ந்துவிட்டு நகர்கிறது
இன்னொரு தெருநாய்.

இரவுத் தொழிலாளிகளுக்காக
பீடியும் தேநீரும் கொண்டு செல்லும்
இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் விரட்டிவிட்டு
மூச்சிரைக்கத் திரும்புகின்றன தெருநாய்கள்.

திடீரென்று எங்கோ ஒரு நாய் குரைக்கிறது.
தொடர்கிறது இதர நாய்களின் குரைப்பு.
பத்து நிமிடத்திற்குப் பிறகு அமைதி.

விடியும்வரை தொடரும்
நாய்களின் ராஜாங்கத்தில்
நிம்மதியாகத் தூங்குகிறது நகரம்.

சாக்காட்டில் ஆழ்ந்துவிட்ட நகரின் உயிர்த்துடிப்பாக
முன்னங்கால்களை முன்னே பரப்பி
இருளைக் கிழித்தபடி ஊளையிடுகிறது,
கைவிடப்பட்ட ஜாதிநாய்.

வேசை வார்த்தைகளால் ஏசியபடி
கம்பெடுத்து துரத்துகிறான்
கோயில் வாசல் பிச்சைக்காரன்.

.