Archive | January, 2013

கருவாடு

31 Jan

ஒரு கவிதை
நிராகரிக்கப்பட்டுவிட்டது-
படிக்கப்படாமலேயே-
வாழாமலே முடிந்துபோன
வாழ்க்கை போல.

அந்தக் கவிதையின்
ஒவ்வொரு வரியிலும்
துடிப்பு இருந்தது-
நிலத்திலும் வாழத் துடிக்கும்
மீன் போல.

காய்ந்த மீன் கூட
கருவாடாகும்-
இந்தப் புலம்பல் போல.

//

உதய ரேகையின் உன்னத ஒளி

22 Jan

Indian Former

உதயரேகையின் உன்னத ஒளி அதோ தெரிகிறது, அதோ…
என்று எண்ணியிருப்பதில் எள்ளளவும் பயனில்லை,
எழு உழவனே எழு.

இனிமேலும் வானத்தை அண்ணாந்து
வரப் போவது எதுவுமில்லை.
விஞ்ஞான யுகம் விரிந்து படருகையில்
மூலையில் முடங்கி
முணுமுணுத்துப் பயனில்லை.
எழு உழவனே எழு.

தன்னம்பிக்கை இழந்து தளர்ந்துபோய்-
கலப்பைக்கு முட்டுக் கொடுத்து,
காத்திருந்து பயனில்லை.
எழு உழவனே எழு.

இந்த பாரதம் உன் விரல் நுனியில்.
பார் உன் கைகளினில்.
எழு –
உன் கைகளைப் பார்.

உதய ரேகையின் உன்னத ஒளி
உன்னிடத்தில் தான் ஒளிந்திருக்கிறது –
எழு உழவனே,
உன் கைகளை சிறிது விரி.

உலகமும் அந்த உன்னதத்தை
உணரட்டும்!

நன்றி: கோவை வானொலி நிலையம்
(1991, பொங்கல் அன்று ‘இளைய பாரதம்’ பகுதியில் ஒளிபரப்பானது)

.

வீரத்துறவியின் கதை

9 Jan

VIVEKA

நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் புத்தெழுச்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர். இந்து மதம் குறித்து மேற்கத்திய நாடுகளில் பரப்பப்பட்டிருந்த நச்சுக் கருத்துகளை சிகாகோவில் தான் நிகழ்த்திய ஒரே சொற்பொழிவில் தகர்த்தவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்க்கை வரலாற்றை சுவையான நடையில், மாணவர்களும் எளிதாகப் படிக்கும் கதை வடிவில் எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் நெல்லை விவேகநந்தா.

சிறுவன் நரேந்திரனின் தாத்தா துவங்கி, அவரது அன்னை, உடன் பிறந்தவர்கள் வரை சிறு தகவல்களையும் பொருத்தமான இடங்களில் பதிவு செய்திருப்பதில் நூலாசிரியரின் சிரத்தை புலப்படுகிறது. சுவாமி விமூர்த்தானந்தர் அணிந்துரை வழங்கி இருக்கிறார்.

ஒவ்வோர் அத்தியாயத்திலும் பெட்டிச் செய்திகளாக துணுக்குத் தகவல்கள் அளிக்கப்பட்டிருப்பதும் சிறப்பு. சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா தருணத்தில் இந்நூலை வெளியிட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும்.

எனினும், ஆதாரப்பூர்வமான வரலாறு என்ற கோணத்தில் இந்நூலைக் கருத முடியாது என்பது முக்கியமான குறை. நூலின் ஆக்கத்தில் பயன்படுத்திய ஆவணங்களையும், குறிப்புகளையும் ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருந்தால் நூலின் சிறப்பு கூடியிருக்கும்.

சுவாமி விவேகானந்தர் என்ற மாபெரும் ஆளுமை உருவானதில் தமிழகத்தின் பங்கு பெருமிதம் அளிக்கக் கூடியது. அதனை தெளிவாக இந்நூலில் காட்டி இருக்கிறார் நூலாசிரியர்.

நூலின் உள்பக்கங்கள் அனைத்திலும் ‘இந்து மதத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்’ என்றே காணப்படுகிறது; அட்டையில் மட்டும் பெயர் மாறியிருக்கிறது. இந்தப் பிழையைத் தவிர்த்திருக்கலாம்.

***

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்:
நெல்லை விவேகநந்தா

252 பக்கங்கள், விலை: ரூ. 125,

வானதி பதிப்பகம்,
23,  தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை- 17.
போன்: 044- 2434 2810.

.

அவலச்சுமை

1 Jan

advance wishes

இன்னும்
104 நாட்கள்* இருக்கிறது
புத்தாண்டு பிறக்க.

ஒரு நாளுக்கு
24 மணி நேரம்.
ஆக மொத்தம்
2596 மணி நேரம்
கழிந்தாக வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு
3600 வினாடிகள்.
104 நாட்களுக்கு
நீங்களே
கணக்கு போட்டுக்
கொள்ளுங்கள்.

அதற்குள் இப்படி
அவசரப்பட்டால்
எப்படி?

காலண்டரை
மாற்றிவிடுவதால்
புத்தாண்டு பிறந்து விடுமா?

கிழிந்துபோன
தாள்களில்
கழிந்துபோன
நாள்கள்
இருந்தன.
நாளுக்கு
அவ்வளவு தானா
மரியாதை?

இறந்தகாலத்தை
போகியிட்டு
புத்தாண்டில்
பொங்கலிட முடியாது.

இறந்த காலம் தான்
அனுபவம்.
காலச்சக்கரத்தின்
சரித்திரம்.

அடிமைத் தளையை
அறுப்பதற்காக
ஆருயிர்த் தியாகியர்
ஆகுதியானது
நமது சரித்திரம்.

ஆயினும் அழுத்துகிறது-
அவலச்சுமையாய்
ஆங்கிலப் புத்தாண்டு.

பழைய தாள்களை
பறக்க விட்டதால்
வந்த வினை இது.
பஞ்சாங்கம் போல்
பாதுகாத்திருந்தால்
பரிதாபச்சூழல்
நேர்ந்திருக்காது.

வீட்டுப்பரணில்
தாத்தா காலப் பெட்டியில்
செல்லரித்துக் கிடக்கிறது –
60 வருடப்
பஞ்சாங்கம்.

அதனைக் கொஞ்சம்
தூசு தட்டுங்கள்.
பாதுகாப்பாக
பத்திரப் படுத்துங்கள்.
.
இன்னும்*
104 நாட்கள் இருக்கிறது
புத்தாண்டு பிறக்க.
அதற்கு இப்போதே
தயாராகுங்கள்!
– விஜயபாரதம் (26.12.2003)
.
*குறிப்பு: ஜனவரியில் துவங்கும் ஆங்கிலப் புத்தாண்டைக் கண்டித்து (104 நாட்களுக்கு முன் பிரசுரம் ஆகும் வகையில்) எழுதிய கவிதை இது.
 .
.

2012- வேர்ட்பிரஸ்ஸில் நான்: ஒரு மீள்பார்வை

1 Jan

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

600 people reached the top of Mt. Everest in 2012. This blog got about 4,600 views in 2012. If every person who reached the top of Mt. Everest viewed this blog, it would have taken 8 years to get that many views.

Click here to see the complete report.