Archive | February, 2013

பந்தின் வாழ்க்கை

15 Feb

Footballs

மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும்
உருண்டோடுகிறது பந்து.

எதிரெதிர் அணியினர் கால்களிடையே சிக்கி
அங்குமிங்கும் அலைபாய்கிறது பந்து.

காலால் உதைத்தாலும் தலையால் முட்டினாலும்
எம்பிப் பாய்கிறது காற்றடித்த பந்து.

உதைக்கும் கால்களுக்கு வெற்றியைத் தர
சுயவிருப்பம் இன்றிச் சீறுகிறது பந்து.

ஏதாவது ஒரு இலக்கை எட்டும்போது
அரங்கை அதிரவைக்கிறது பந்து.

விளையாட்டு முடியும் வரை
ஓய்வின்றி உருளுகிறது பந்து.

எல்லாம் ஒரு போட்டி நேரம் வரை.

பிறகு –
மாற்றப்படும் வேறு பந்து.

Advertisements

நினைவுச் சார்பின்மை

11 Feb
வெட்டப்படும் வரை
வெள்ளாடு நம்புவது
கசாப்புக்காரனை.
வெளிநாட்டில் இருந்துவந்த
கசாப்புக்காரி என்றால்
உள்ளூர் வெள்ளாடுகளுக்கு
சொல்லவே வேண்டாம்.
.
வெளியூர் கசாப்புக்காரி
தலையை உடனே வெட்டுவதில்லை;
முடிந்தவரை குருதியை உறிஞ்சிவிட்டு,
கொல்லாமல் விடக்கூடும் என்ற
நம்பிக்கையில் நம்பி ‘கை’ நனைக்கலாம்.
அவ்வப்போது போடும் புல்லும்
மேய்ச்சலுக்கு தனியே விடும் சுதந்திரமும்
வெள்ளாடுகளுக்குப் போதும்-
ஆட்டு மந்தையை கட்டிக் காக்க வந்த
தியாக அன்னை பட்டம் வழங்குபவருக்கு
கூடுதலாக கிடைக்கலாம்,
மந்தை நாட்டாண்மை பதவி.
.
வெளிநாட்டு கசப்புக்காரியுடன்
கூட்டணி அமைக்க
உள்ளூர் கசாப்புக்காரர்களில்
நன்றாக குருதி உறிஞ்சுபவருக்கே முன்னுரிமை.
குறிப்பாக,
நினைவுச்சார்பின்மை வியாதி இருப்பவருக்கு
எப்போதும் முதலிடம்.
.
ஆடுகளின் நினைவுகளைத் தட்டி எழுப்பவர்களுக்கு
கசாப்புக் கூட்டணி என்றுமே கொள்கை விரோதி.
நினைவுச் சார்பின்மை பேசிக்கொண்டே
ஆடுகளைக் காயடிப்பதிலும்
கொள்ளையடிப்பதிலும்
கசாப்பு முனைவோர் திறமைசாலிகள்.
.
கடைசியில் கழுத்தில் கத்தி இறங்கும்போது
வெள்ளாடுகளின் கண்களில் விரக்தி வெளிப்படலாம்.
காலம் கடந்த ஞானோதயங்களால்
பட்டிகளில் பரவும் குருதியின் ஈரம்.
அதைக் கண்டும்கூட,
வெட்டப்படாத வெள்ளாடுகள்
கெக்கலி கொட்டலாம்-
அதன் முறை வரும்வரை.
..
கசாப்புக்காரர்களின் பாவம்
தின்றால் போகும்.
சுய விளம்பரம் கொடுத்து சரிக்கட்டினால்
சிறப்புமலர் வெளியிட்டு
பாராட்ட வெட்டியான்கள் எப்போதும் தயார்.
.
வெட்டப்பட்ட அப்பாவி ஆடுகளும்
குருதி இழக்கும் வெள்ளாடுகளும்
எப்போது மாறின செம்மறி ஆடுகளாய்?
சிந்தித்தால் சித்தம் கலங்குகிறது-
நினைவுச் சார்பின்மை வேலையைக் காட்டிவிட்டது.
.

தந்திடவா, என்னவளே!

4 Feb

Mariage

என்னவள் கேட்டாள் ஒரு கவிதை- அதை
எப்படித் தருவேன் என் இறைவா?
அன்பினைப் பொழியும் ஒரு கவிதை – என்
அகத்தினில் வழிவதைத் தந்திடவா?

மெல்லிய முறுவல் வதனத்தில் – தன்
மெட்டியில் என்னுயிர் மெட்டிடுவாள்!
பல்லினில் மிளிரும் வெண்மையிலே – நான்
பணிந்ததைக் கவியாய்த் தந்திடவா?

வம்பினைச் செய்யும் அவள் அதரம் -அதன்
வனப்பினில் பாடல் பாடுவதா?
தெம்பினை ஊட்டும் அவள் விழிகள் – தரும்
தெளிவினைக் கவியாய்த் தந்திடவா?

கொஞ்சிடு குரலில் கிளி தோற்கும் – மணி
கொட்டிய ஓசை நகைப்பினிலே!
அஞ்சிடு மென்மை உடையவளாம்- அவள்
அழகினைக் கவியாய்த் தந்திடவா?

கொம்பினில் படரும் கொடியினைப் போல் – இடை
கொண்டவள் பண்பைப் பாடுவதா?
அம்பென விரையும் நடையழகில் – நான்
அமிழ்ந்ததைக் கவியாய்த் தந்திடவா?

பொங்கிடும் இளமை பூத்தவளாம் – நல்
பொறுமையும் இயல்பாய் வாய்த்தவளாம்!
தங்கமும் தோற்கும் நிறத்தவளாம் – உயர்
தன்மையைக் கவியாய்த் தந்திடவா?

தஞ்சமும் தருவாள் மலர் நெஞ்சில் – அவள்
தயையினை மகிழ்ந்து பாடுவதா?
விஞ்சிடும் அறிவால் என் வாழ்வை – அவள்
விளைப்பதைக் கவியாய்த் தந்திடவா?

நங்கையின் நாணம் தூண்டிலைப் போல் – பெறும்
நன்மைகள் யாவும் விளைவுகளே!
மங்கலம் நல்கும் மனையாட்டி – அவள்
மாண்பினைக் கவியாய்த் தந்திடவா?

கண்களில் தெரியும் அவள் ஒளியில் – வரும்
காலங்கள் கழிவதைப் பாடுவதா?
பெண்களில் அவளே பேரரசி – எனும்
பெருமையைக் கவியாய்த் தந்திடவா?

வல்லமை மிகுந்த வளமை அவள் – என்
வாழ்வில் நுழைந்த தென்றல் அவள்!
நல்லதும் அல்லதும் இனியவளே – எனும்
நன்றியைக் கவியாய்த் தந்திடவா?

என்னவள் கேட்டாள் ஒரு கவிதை – அதை
எப்படித் தருவேன் என் இறைவா?
அன்பினைப் பிழியும் ஒரு முத்தம் – அதை
அழகிய கவியாய்த் தந்திடவா?

.

குறிப்பு: இது என்னவளுக்கு எழுதிய கவிதை
எழுதிய நாள்: 29.12.2000

.