தந்திடவா, என்னவளே!

4 Feb

Mariage

என்னவள் கேட்டாள் ஒரு கவிதை- அதை
எப்படித் தருவேன் என் இறைவா?
அன்பினைப் பொழியும் ஒரு கவிதை – என்
அகத்தினில் வழிவதைத் தந்திடவா?

மெல்லிய முறுவல் வதனத்தில் – தன்
மெட்டியில் என்னுயிர் மெட்டிடுவாள்!
பல்லினில் மிளிரும் வெண்மையிலே – நான்
பணிந்ததைக் கவியாய்த் தந்திடவா?

வம்பினைச் செய்யும் அவள் அதரம் -அதன்
வனப்பினில் பாடல் பாடுவதா?
தெம்பினை ஊட்டும் அவள் விழிகள் – தரும்
தெளிவினைக் கவியாய்த் தந்திடவா?

கொஞ்சிடு குரலில் கிளி தோற்கும் – மணி
கொட்டிய ஓசை நகைப்பினிலே!
அஞ்சிடு மென்மை உடையவளாம்- அவள்
அழகினைக் கவியாய்த் தந்திடவா?

கொம்பினில் படரும் கொடியினைப் போல் – இடை
கொண்டவள் பண்பைப் பாடுவதா?
அம்பென விரையும் நடையழகில் – நான்
அமிழ்ந்ததைக் கவியாய்த் தந்திடவா?

பொங்கிடும் இளமை பூத்தவளாம் – நல்
பொறுமையும் இயல்பாய் வாய்த்தவளாம்!
தங்கமும் தோற்கும் நிறத்தவளாம் – உயர்
தன்மையைக் கவியாய்த் தந்திடவா?

தஞ்சமும் தருவாள் மலர் நெஞ்சில் – அவள்
தயையினை மகிழ்ந்து பாடுவதா?
விஞ்சிடும் அறிவால் என் வாழ்வை – அவள்
விளைப்பதைக் கவியாய்த் தந்திடவா?

நங்கையின் நாணம் தூண்டிலைப் போல் – பெறும்
நன்மைகள் யாவும் விளைவுகளே!
மங்கலம் நல்கும் மனையாட்டி – அவள்
மாண்பினைக் கவியாய்த் தந்திடவா?

கண்களில் தெரியும் அவள் ஒளியில் – வரும்
காலங்கள் கழிவதைப் பாடுவதா?
பெண்களில் அவளே பேரரசி – எனும்
பெருமையைக் கவியாய்த் தந்திடவா?

வல்லமை மிகுந்த வளமை அவள் – என்
வாழ்வில் நுழைந்த தென்றல் அவள்!
நல்லதும் அல்லதும் இனியவளே – எனும்
நன்றியைக் கவியாய்த் தந்திடவா?

என்னவள் கேட்டாள் ஒரு கவிதை – அதை
எப்படித் தருவேன் என் இறைவா?
அன்பினைப் பிழியும் ஒரு முத்தம் – அதை
அழகிய கவியாய்த் தந்திடவா?

.

குறிப்பு: இது என்னவளுக்கு எழுதிய கவிதை
எழுதிய நாள்: 29.12.2000

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: