Archive | April, 2013

புத்தாண்டு கணக்கீட்டில் வானியல் கண்ணோட்டம்

14 Apr

உலகம் முழுவதிலுமே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அனுசரிப்பது வழக்கமாக உள்ளது. இதில் பலவித காலக் கணக்கீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக காலனி ஆதிக்கம் மூலமாக உலகம் முழுவதும் பரவலான ரோமானிய காலண்டர் முறை பொதுவான காலமுறையாகக் கருதப்படுகிறது.

இதற்கு மாறாக, இயற்கையோடு இயைந்ததாக இந்து காலக் கணக்கீடு முறை காணப்படுகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது. தவிர, இந்தியாவின் வானியல் கோட்பாடுகளே, கிழமைகள், மாதங்களை உலகம் முழுவதும் பரவலாக்கின என்பதை மேலைநாட்டு அறிஞர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

இந்தியாவில் தான் காலத்தின் மிகச் சிறிய கூறான “மாத்திரை’ முதற்கொண்டு, மிகப் பெரும் அளவான “கல்பம்’ வரை கணக்கிடப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளன. நாம் வாழும் உலகம் மாபெரும் பிரபஞ்சத்தின் சிறிய அலகே என்பது நமது முன்னோரின் நம்பிக்கை. காலவெள்ளத்தில் பல்வேறு யுகங்கள், மன்வந்திரங்களைக் கடந்து பிரபஞ்சம் உயிர்த்திருக்கிறது.

இவ்வாறிருக்கையில் ஓராண்டின் துவக்கம் இதுதான் என்று எதன் அடிப்படையில் கூறுவது? மாபெரும் காலச்சுழலில் சிறு அலகான ஆண்டை எப்படிக் கணக்கிடுவது? இதில் தான் நமது முன்னோரின் கணித ஞானமும் வானியல் அறிவும் நம்மை வியக்கச் செய்கின்றன.

தலைமுறைகள் தாண்டி வாழும் மனிதன், தான் வாழும் உலகில் நியதிகளை உருவாக்கத் துவங்கியபோது முதலில் கவனத்தில் கொண்டது காலக் கணக்கீடே. ஏனெனில் பருவச் சுழற்சியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால், அதனை பக்குவமாகப் பயன்படுத்த காலக் கணக்கீடு தேவையானது. அதற்காக உருவாக்கப்பட்டதே, பாரதத்தின் பாரம்பரிய ஞானக் கருவூலமான பஞ்சாங்கம்.

இப்பூவுலகின் அடிப்படை சூரியனே என்பதில் நமது முன்னோருக்கு தெளிவான பார்வை இருந்தது. எனவே தான் தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் “ஞாயிறு போற்றுதும்’ என்று துவங்கியது. நமது வாரத் துவக்கம் ஞாயிற்றுக் கிழமையாக அமைந்ததும் தற்செயல் அல்ல.

ஆகவே, சூரியனின் பயணத்தை பூமியின் தளத்தில் இருந்தபடி கிரகித்து, வான மண்டலத்தை தலா 30 பாகைகள் கொண்ட 12 ராசிகளாக நமது முன்னோர் பிரித்தனர். சூரிய மண்டலத்திலுள்ள பிற கோள்களின் இயக்கத்தையும் இந்த அடிப்படையில் தான் அவர்கள் கணக்கிட்டனர்.

இந்த ராசி மண்டலம், பூமியிலிருந்து பார்க்கும்போது வானில் தென்படும் விண்மீன்களின் தொகுப்புகளின் வடிவங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்டது. உதாரணமாக, ஆட்டின் தலை வடிவில் உள்ள விண்மீன் கூட்டத் தொகுப்பு மேஷம் (ஆடு) எனப்பட்டது. இதுவே ரோம காலக்கணிதத்தில் “ஏரிஸ்’ எனப்படுகிறது. இதுபோலவே, ரிஷபம் (எருமைத்தலை), மிதுனம் (இரட்டையர்), கடகம் (நண்டு), சிம்மம் (சிங்கத் தலை), கன்னி (பெண்), துலாம் (தராசு), விருச்சிகம் (தேள்), தனுசு (வில்), மகரம் (முதலை), கும்பம் (பானை), மீனம் (மீன்) ஆகிய ராசிகள் உருவாக்கப்பட்டன.

பூமி சூரியனைச் சுற்றிவர ஆகும் கால அளவு தோராயமாக 365.25 நாட்கள். இதனை எந்த நவீனக் கருவியும் இல்லாத 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர் துல்லியமாகக் கணித்துள்ளனர். இதையே ஓர் ஆண்டு என்று குறிப்பிட்டனர். வான மண்டலத்தில் கற்பனையாகப் பகுக்கப்பட்ட 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் கடந்து செல்லும் கால அளவை 12 மாதங்களாகப் பகுத்தனர்.

இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் “சூரியமானம்’ என்ற முறையில் அமைந்தவை. பிற்காலத்தில் இம்மாதங்களுக்கு சித்திரை முதலாய் பங்குனி வரையிலான பெயர்கள் சூட்டப்பட்டன. அதற்கு “சந்திரமானம்’ என்ற மற்றொரு முறை காரணமானது.

வானிலுள்ள நட்சத்திரத் தொகுப்புகளை 27 ஆகப் பகுப்பது வானியல் மரபு. அஸ்வினி முதலாக ரேவதி வரையிலான 27 நட்சத்திரக் கூட்டங்களே 12 ராசிகளாகவும் பிரிக்கப்பட்டன. தவிர, பூமியின் துணைக் கோளான சந்திரனும் பூமியின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதை நமது முன்னோர் அறிந்திருந்தனர். சந்திரன் பூமியைச் சுற்றிவர 30 நாட்கள் ஆகின்றன. இதில் சந்திரனின் தேய்பிறை நாட்கள் 15; வளர்பிறை நாட்கள் 15. இவையே திதிகள் எனப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் சந்திரன் முழுமையாக மறையும் அமாவாசையும், முழுமையாக வெளிப்படும் பெüர்ணமியும் ஒருமுறை வருகின்றன. இதில் பெüர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே மாதங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. சித்திரை நட்சத்திரத்தில் பெüர்ணமி வரும் மாதமே சித்திரை மாதமாகியது. விசாக நட்சத்திரத்தில் பெüர்ணமி வரும் மாதமே வைகாசி ஆகியது. இவ்வாறே 12 மாதங்களும் பெயர் பெற்றன.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதையும் நமது முன்னோர் கணித்துள்ளனர். அதன் காரணமாக, ஒவ்வொரு ராசியிலும் சூரியன் இருக்கும் காலம் மாறுபட்டு, மாதங்களின் மொத்த நாட்களை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக, சித்திரை, புரட்டாசி, பங்குனி மாதங்களின் நாட்கள் 30; வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் நாட்கள் 31; ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களின் நாட்கள் 29. உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள ரோமானிய ஆங்கில காலண்டர் முறையில் மாதங்களின் நாள் பகுப்பை ஒப்பிட்டால் நமது முன்னோரின் வானியல் அறிவு பிரமிப்பூட்டும்.

இவ்வாறு காலத்தை மாதங்களாகப் பிரித்த நமது முன்னோர், சூரியனுக்கு முதன்மை அளித்து, சூரியன் முதலில் கடந்துசெல்லும் மேஷ ராசியை முதல் மாதமாகக் கணக்கிட்டனர். அதுவே சித்திரை மாதமாக வழங்கப்படுகிறது.

சதுர் மகாயுகம் துவங்கியபோது அனைத்து கோள்களும் மேஷ ராசியில் பூஜ்ஜிய பாகையில் நிலைபெற்றிருந்தன என்பதே சோதிடக் கணக்காகும். அதுவே யுகாதி ஆகும்.  கால வெள்ளத்தில் கோள்களும் நட்சத்திரங்களும் சுழற்சி வேகத்தால் மாறி அமைந்தன.

இருப்பினும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கோள் பழைய நிலைக்கு வருகிறது. சனிக் கோள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய நிலைக்கு வருகிறது. பூமியின் இயக்கத்திலும் மாந்தரின் வாழ்விலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இக்கோள்கள் இரண்டும் ஒரே நேரத்தில் பழைய நிலைக்கு வர 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அடிப்படையில் தான் “பிரபவ’ முதலாக “துன்முகி’ வரையிலான 60 தமிழ் ஆண்டுகள் உருவாக்கப்பட்டன.

உலக உயிர்களை வாழ்விப்பவன் ஒளியும் வெம்மையும் நல்கும் சூரியன் தான். எனவே தான் கோடைக்காலம் துவங்கும் சித்திரையை தலைமாதமாகக் கொண்டு புத்தாண்டை நமது முன்னோர் அனுசரித்தனர். கோடைப் பருவம் 4 மாதங்களைத் தொடர்ந்து மழைப்பருவம் 4 மாதங்களும், பனிப்பருவம் 4 மாதங்களும் வருகின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தினமணி
(புத்தாண்டுச் சிறப்பிதழ்- சென்னை- 14.04.2013)

Advertisements

திராவிட மோசடிகளை வெளிப்படுத்தும் ஆவணம்

1 Apr

dravida
தமிழகத்தின் போக்கை மாற்றி அமைத்ததில் திராவிட அரசியலின் பங்கு மிகப் பெரிது. இன்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக திராவிட இயக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாம் அனைவரும் நம்பும் திராவிட இயக்கம் என்ற ஒன்று என்றாவது இருந்ததுண்டா? இந்தக் கேள்வியே திடுக்கிடலை ஏற்படுத்தக் கூடியது.

இந்தக் கேள்வியுடன், ‘அப்படி எந்த ஒரு இயக்கமும் இருந்ததில்லை’ என்ற தெளிவான பதிலுடன் தான் இந்த நூலையே ஆரம்பிக்கிறார், மலர்மன்னன். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளராக இருந்த, அண்மையில் மறைந்த மலர்மன்னன், திமுக நிறுவனர் அண்ணாதுரையின் நெருங்கிய நண்பராக இருந்தவர். கடந்த நூற்றாண்டின் முக்கிய அரசியல் தருணங்களில் நேரடி சாட்சியாக நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பு பெற்றவர்.

தனது வாழ்பனுவம், சரித்திரத் தேர்ச்சி, மொழியறிவு, இதழியல் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்நூலை மிகப் பொருத்தமான சமயத்தில் எழுதி தமிழுலகத்துக்கு நன்மை செய்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கத்துக்கு நூற்றாண்டுக் கொண்டாடும் காலத்தை விட, அதை விமர்சிக்க பொருத்தமான நேரம் எது?

உண்மையில் ‘திராவிட’ என்ற வார்த்தையே சமஸ்கிருத வார்த்தை என்பதையும், அது எவ்வாறு அரசியல்வாதிகளின் கருவியானது என்பதையும் நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. இதில் தமிழறிஞராகப் போற்றப்படும் கால்டுவெல்லின் பங்கு என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

‘திராவிட’ என்ற சொல் அரசியல் மயமாவதற்கு வித்திட்ட அயோத்திதாசர் (திராவிட ஜனசபை), எம்.சி.ராஜா (ஆதிதிராவிடன்), நடேச முதலியார் (சென்னை திராவிட சங்கம்) போன்ற மறைக்கப்பட்ட பலரைப் பற்றிய சுவையான தகவல்கள் இந்நூலில் உள்ளன.

பிராமணரல்லாதோர் இயக்கம் எவ்வாறு தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பாக மாறியது? அது எவ்வாறு ஜஸ்டிஸ் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது? அதில் இருந்த பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் போன்றவர்கள் எவ்வாறு தடம்புரண்டனர்? ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக ஈ.வெ.ராமசாமி எப்போது உருவானார்? ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் எவ்வாறு விழுங்கியது? உண்மையிலேயே திராவிட இயக்கம் உள்ளதா? இருந்தால் அதன் வயது 100 தானா?

இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி இந்நூலில் சரித்திரச் சான்றுகளுடன் பதில் அளித்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கம் என்ற சொல்லாட்சியே ஒரு மோசடியான புனைவு, தமிழகத்தில் இருப்பது திராவிட அரசியல் மட்டுமே என்று முடிக்கிறார். சுள்ளெனச் சுடும் உண்மைகள் நிறைந்த நூல் இது.

***

திராவிட இயக்கம்- புனைவும் உண்மையும்

மலர்மன்னன்

200 பக்கங்கள், விலை: ரூ. 135,

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,

57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை,

தி.நகர், சென்னை- 17.

போன்: 044- 4286 8126.