Archive | May, 2013

கொங்கு கோயில்கள் குறித்த அறிமுகம்

20 May

kongu

பழந்தமிழகத்தின் மேற்குப்பகுதி கொங்குநாடு என்று வழங்கப்பட்டது. தற்போதைய கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்கள் கொங்கு மண்டலத்திற்கு உள்பட்டவையாக இருந்துள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு முக்கியமானது.

ஒரு பண்பாட்டின் வளர்ச்சியில் பேரிடம் வகிப்பவை ஆலயங்களே ஆகும். ஆன்மிகம், கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ள ஆலயங்கள் தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாறு கூறும் சாட்சியங்களாக நிற்கின்றன. அந்தவகையில் கொங்கு மண்டலத்திலுள்ள கோயில்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்த பேராசிரியர் கி.வெங்கடாச்சாரி மேற்கொண்ட முயற்சியே இந்நூல்.

பொள்ளாச்சியில் ந.க.ம. கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது ஆர்வத்தால், கொங்குநாட்டுக் கோயில்களின் சிறப்புகளை எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் இந்நூலை எழுதியிருக்கிறார்.

தேவாரப்பாடல் பெற்ற கொங்கேழ் தலங்கள், சிறப்பு மிக்க சிவாலயங்கள், திருமால் ஆலயங்கள், பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள், குன்றுதோறாடும் குமரன் கோயில்கள், பவானி ஆற்றங்கரைக் கோயில்கள் என 50 கோயில்களைப் பட்டியலிட்டு, அவை குறித்த எளிய அறிமுகத்தை இந்நூலில் ஆசிரியர் அளித்திருக்கிறார்.

நூலாசிரியரின் ஓவியத் திறமையால் உயிர்பெற்ற கருவறை மூலவர்களின் படங்களும் இந்நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. இந்நூலிலுள்ள புகைப்படங்கள் காலவெள்ளத்தில் அழியாத படிமங்களாகக் காட்சி தருகின்றன. பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் இளையபட்டம் மருதாசல அடிகள் ஆசியுரை வழங்கியுள்ளார்.

வெளியில் தெரியவராத பல கொங்குநாட்டு ஆலயங்களின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ள ஆசிரியரின் பணி போற்றுதற்குரியது. இதில் விடுபட்ட கோயில்கள் குறித்து ஆவணப்படுத்த வேண்டியது இளைய தலைமுறையினரின் கடமை.

***

கொங்குநாட்டுக் கோயில்கள்:

பேராசிரியர் கி.வெங்கடாச்சாரி

252 பக்கங்கள், விலை: ரூ. 225.

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்,
கோனார் மாளிகை,
25, பீட்டர்ஸ் சாலை, சென்னை- 600 014,
கோவை கிளை போன்: 0422- 2393704.

//

Advertisements

சிபிஎஸ்இ பள்ளிகள் பெருகுவது வளர்ச்சியா?

4 May

school-pic

அண்மைக்காலமாக தமிழகத்தில் புதிய கல்விக் கலாசாரம் பரவி வருகிறது. நகரப் பகுதிகள் மட்டுமல்லாது, ஊரகப் பகுதிகளிலும் கூட ‘சர்வதேச உறைவிடப் பள்ளிகள்’,  ‘சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில் இயங்கும் பள்ளிகள்’ மளமளவெனப் பெருகி வருகின்றன. இது நமது கல்வி வளர்ச்சியைத் தான் பிரதிபலிக்கிறதா என்பதை நேர்மையுடன் ஆராய வேண்டிய தருணம் இது.

தமிழகத்தின் கல்வி வரலாற்றைக் கூர்ந்து கவனித்துவரும் எவருக்கும், 1980-களுக்குப் பிறகே கல்வி தனியார்மயமானதன் வேகம் அதிகரித்தது புலப்படும். அதுவரை கல்வி என்பது பொதுவாக அரசின் கடமையாகவே கருதப்பட்டது.

மற்றபடி, பெரும் செல்வந்தர்கள் மட்டுமே ஆங்காங்கே பள்ளிகளைத் தோற்றுவித்து, அவற்றையும் அரசு உதவியுடன் நடத்திவந்தனர். அவர்கள் யாருக்கும் வர்த்தக நோக்கம் இருந்ததில்லை. இன்றும் கல்வித்துறையில் சாதனை படைத்துவரும் பல தனியார் பள்ளிகள் இவ்வாறு துவக்கப்பட்டவை தான்.

இந்த நிலைமை 1980-களில் மாறத் துவங்கியது. அப்போதுதான் ‘கான்வென்ட்’ எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புற்றீசல் போல முளைக்கத் துவங்கின. பள்ளிக் கட்டமைப்பு தகுந்த அளவுக்கு உள்ளதா, விளையாட்டு மைதானம் உள்ளதா, போதிய ஆசிரியர்கள் உள்ளனரா போன்ற பல கேள்விகளுக்கு முறையான பதிலின்றி, பட்டிதொட்டிகள் எங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவங்க அனுமதிக்கப்பட்டன.

அங்கு ஆங்கிலவழிக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டதால், பெற்றோரும் தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்க்கத் துடித்தனர். அதன் விளைவாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிரபலமடைந்தன; அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி அடையத் துவங்கியது. இதன் விளைவாக, ஆரம்பக் கல்வியே வணிகமயமாக மாறத் துவங்கியது.

இந்தப்போக்கு 2010 வரை நீடித்தது. இதே காலகட்டத்தில் தான் தொழிற்பயிற்சிப் பள்ளிகள் (ஐ.டி.ஐ.), பல்தொழில்நுட்பப் பயிலகங்கள் (பாலிடெக்னிக்) போன்றவையும் அதிகமாகத் தோன்றின. பெரும் எண்ணிக்கையில் பரபரப்பாகத் துவங்கப்பட்ட ஐ.டி.ஐ.களும், பாலிடெக்னிக் கல்லூரிகளும், மாணவர் சேர்க்கையில் நிலவிய தேக்கத்தால் செல்வாக்கிழந்தன.  ‘தகுதி உள்ளது மட்டுமே வாழும்’ என்ற நியதியின்படி, பல நிறுவனங்கள் ‘மூடுவிழா’ கண்டன.

இந்நிலையில் பல பாலிடெக்னிக்குகள் பொறியியல் கல்லூரிகளாக மாற்றம் பெற்றன. 1995 முதல் பொறியியல் கல்லூரிகளின் ‘பொற்காலமாக’ இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் தாலுகாவுக்கு ஒரு பொறியியல் கல்லூரி இருப்பதே அதிசயமாக இருந்தது. இப்போது ஒன்றியத்துக்கு 5 பொறியியல் கல்லூரிகள் இருப்பது சாதாரணமாகிவிட்டது. இவ்வாறு அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டதன் காரணமாக, பல கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப மாணவர்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. இக்கல்லூரிகளிலும் திறமையுள்ள கல்லூரிகள் மட்டுமே நிலைக்கும் என்ற நிலை காணப்படுகிறது. ஒவ்வோராண்டும் நிரப்பப்படாமல் உள்ள பொறியியல் கல்லூரி இடங்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் அதிகரித்தபடியே உள்ளது.

இவ்வாறாக, காலத்துக்கேற்ற கல்வி நிறுவனங்கள் துவங்கப்படுவது வாடிக்கையாகி இருக்கிறது. அரசுகளும் கல்வித்துறையில் தங்கள் பங்களிப்பு குறைந்தால் போதும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடைமுறையை ஊக்குவிக்கின்றன.

தவிர, குறுகிய காலத்தில் கருப்புப் பணத்தை சொத்தாக மாற்றுவதற்கான எளிய வழிமுறையாக கல்வி நிறுவனங்கள் இருப்பதால், பணபலம் படைத்தவர்கள், அரசியல்வாதிகள் பலரும் கல்வியைக் காக்கும் கனவான்களாக மாறி வருகின்றனர்.

இந்தச் சூழலில் தான் தற்போதைய சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் பெருக்கத்தைப் பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் திண்டாட்டங்களால், பணம் படைத்தவர்கள் பலரும் இப்போது சர்வதேச உறைவிடப் பள்ளி, மத்திய கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளைத் துவக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

புதிதாகத் துவங்கும் எந்தப் பள்ளியும் மெட்ரிகுலேஷன் பள்ளியாக இருப்பதில்லை என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தமிழக அரசு 2010-ஆம் ஆண்டில் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டமே இதற்கு அடிப்படைக் காரணம்.

சமச்சீர் கல்வி திட்டத்தின்படி, மாநில அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் ஆகிய நான்கு விதமான பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதனை பெரும்பாலான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விரும்பவில்லை. இதன் காரணமாக, பல மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிர்வாகிகளே சிபிஎஸ்இ பள்ளிகளைத் துவக்குவதும் நடைமுறையாகி இருக்கிறது.

புதிதாகத் துவக்கப்படும் சர்வதேச உறைவிடப் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்குச் செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்தாலே, அவற்றின் வணிக நோக்கம் தெளிவாகத் தெரியும். அரசே கல்வி அளிக்கும் தனது கடமையைத் தட்டிக் கழிக்கும்போது, தனியாரிடம் மட்டும் பொதுநோக்கை எதிர்பார்ப்பது தவறுதான்.

இந்தப் பள்ளிகளின் கட்டுமானங்களைக் கண்ணுறும் எவரும், சாதாரண மக்களுக்கு இப்பள்ளிகளில் இடமிருக்குமா என்று ஐயுறுவர். பலகோடி முதலீட்டில் துவங்கப்படும் இப்பள்ளிகள் நமது கல்வித்தரத்தை உயர்த்துமா, நமது மாணவர்களை பொருளாதார அடிப்படையில் பிரிக்குமா என்பதைக் காலம்தான் கூற முடியும். எனினும், இதில் நமது அரசுக்கும் பெரும் பங்குண்டு.

2009-ஆம் ஆண்டில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகிதம் இடங்களை ஒதுக்கீடு செய்வது கட்டாயமாகும். ஏட்டில் மட்டுமே உள்ள இந்த விதிமுறையை உறுதியுடன் கண்காணித்து நடைமுறைப்படுத்தினால்,கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் நீங்க வாய்ப்பு உருவாகும். இதையேனும் நமது மத்திய, மாநில அரசுகள் தட்டிக் கழிக்காமல் செய்யுமா?

தினமணி (04.05.2013)