சத்துணவு திட்டத்தில் அக்கறை தேவை

31 Jul

Mid day Meals

கடந்த ஜூலை 16-ஆம் தேதி, பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில், ‘தரம்சதி கண்டவான்’ கிராமத்தில் பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட குழந்தைகளில் 23 பேர் பலியானது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மதிய உணவு விஷமாகிவிட்டதே இந்த பயங்கரத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

இப்பள்ளியில் உணவு பரிமாறியபோதே சில குழந்தைகள் அதன் வாடை பிடிக்காமல் உண்ண மறுத்ததும் தெரியவந்தது. சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெய் கெட்டுப்போனதால்தான் இந்த விபரீதம் நிகழ்ந்திருப்பதாக, பிகார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அரசு வழங்கிய சமையல் எண்ணெய் தரமில்லாமல் இருக்கும்போது, குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு ஆசிரியர்களைக் குற்றம்சாட்டக் கூடாது என்பதே அவர்களது வாதம்.

இந்த விபரீத சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் எதிரொலியாக, பிகார் மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பொறுப்பிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள்.

இதேபோன்ற நிகழ்வுகள் இன்னும் பல மாநிலங்களிலும் நடந்திருக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலம், பெருமட்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், ஜூலை 20-இல், மதிய  உணவு சாப்பிட்ட 35 குழந்தைகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதே வாரத்தில், ஒடிசா மாநிலத்தில் தென்கனால் மாவட்டம், சிரியாரியா தைலசாஹி கிராமத்தில், மதிய உணவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் “தேள்’ கிடந்தது. இந்தச் சம்பவத்தில் 39 பழங்குடியினக் குழந்தைகள் சுகவீனம் அடைந்தனர். இதே மாநிலத்தில், கஞ்சம் மாவட்டம், ரெஜிடி கிராமத்தின் அரசுப் பள்ளியில் மதிய உணவுக் குழம்பில் கிடந்த மண்புழு, பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தியானது.

தலைநகர் தில்லியில் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுடன் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரைகளால் ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பள்ளியில் ஜூலை 18-ஆம் தேதி சத்துணவு சாப்பிட்ட 155 மாணவிகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். ஜூலை 24-ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு உட்கொண்ட 22 மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

ஜூலை 21-இல் ஆம்பூரிலும், ஜூலை 22-இல் அரூரிலும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேற்படி நிகழ்வுகளை அடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகளில் சத்துணவு மையங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்துமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மேற்படி நிகழ்வுகள் அனைத்திற்கும் அடிநாதமான காரணம் ஒன்றுதான். ஒருவேளை உணவிற்கும் வழியற்று பள்ளிக்கு வரும் குழந்தைகளின் நலனை அலட்சியப்படுத்தும் அதிகாரவர்க்க மனநிலைதான் அது. இதற்கு ஆசிரியர்களோ, சத்துணவு அமைப்பாளர்களோ மட்டும் காரணமல்ல. நலத்திட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தத் தவறிய அரசு அதிகாரிகளுக்கும், அரசுகளுக்கும் இதில் சம பங்கு உண்டு.

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே தமிழ்நாடுதான். சுதந்திரத்துக்கு முன்னரே சென்னையில்  அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்டது.

இதன் காரணமாக பள்ளியில் இடைநிற்றல் குறைந்து, குழந்தைகள் வருவது அதிகரித்து, கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டது.

எம்.ஜி.ராமசந்திரன் முதல்வராக இருந்தபோது, இத்திட்டம் சத்துணவுத் திட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னர் தமிழகத்தில் 1980-களில் நிகழ்ந்த ஆசிரியர் வேலைநிறுத்தம் முந்தைய தலைமுறையினருக்கு நினைவிருக்கலாம். இந்த வேலைநிறுத்தத்திற்கு அடிப்படைக் காரணமே, பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான்.

மதிய உணவு வழங்கும் பணிச்சுமையால் குழந்தைகளுக்கு கற்பிக்கும் கடமையை சரிவர நிறைவேற்ற முடிவதில்லை என்பதே ஆசிரியர்களின் முழக்கமாக இருந்தது. அந்த வேலைநிறுத்தத்தின் பலனாக, 1983-இல் மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் என்று பெயர் மாறி, அதற்கென சத்துணவு அமைப்பாளர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்கப்பட்டனர்.

இதனைக் கண்காணிக்கும் பணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் தரம் உயர்ந்ததா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் அதிகரித்துள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையே பதில். அது வேறு கதை.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பு, நாடு முழுவதும் இத்திட்டம் பரவக் காரணமானது. இன்று பெரும்பாலான மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் கட்டாயமாகிவிட்டது. ஆனால், இத்திட்டத்திற்கு அரசாங்கங்கள் அளிக்கும் கவனம் குறைந்துகொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளி மாணவர் ஒருவருக்கு தினசரி 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 3 கிராம் எண்ணெய் என்ற கணக்கீட்டில் சத்துணவு மையங்களுக்குப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. தவிர, காய்கறிக்கு 32 பைசா, விறகுக்கு 24 பைசா, தாளிகைப் பொருள்களுக்கு 14 பைசா வீதம் மாணவர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

இந்தக் கணக்கீடுகள் பல ஆண்டுகளுக்கு முந்தையவை. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் இத்தொகைகள் உயர்த்தப்படவில்லை. இந்தத் தொகையைக் கொண்டுதான் வாரத்தின் 5 நாட்களில் முட்டைகளையும் வேகவைத்துக் கொடுக்க வேண்டும். இங்குதான் முறைகேடுகள் துவங்குகின்றன.

உண்மையான அக்கறையுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும் போதுதான், நமது குழந்தைகள் அச்சமின்றியும் ஆனந்தமாகவும் மதிய உணவை உட்கொள்ள முடியும்.

தினமணி (30.07.2013)

Advertisements

One Response to “சத்துணவு திட்டத்தில் அக்கறை தேவை”

  1. நல்லது… நன்றி தினமணி…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: