Archive | October, 2013

ஜய ஜய பவானி!

13 Oct
Bhavani_&_Shivaji
ஜய ஜய பவானி! ஜய ஜய சங்கரி!
ஜய ஜய ஜய ஜய சாமுண்டேஸ்வரி!

.

வில்லினில் ஒலியென, விஜயத் திருவென,
இல்லினில் ஒளியென, இருட்பகை சிதறிட,
நின்றிடும் உமையவளே!
நின்னடி பணிகின்றோம்!
(ஜய ஜய)
.
நீதி நிலைத்திட, நியமம் காத்திட,
சாதி ஒழித்திட, சதிகளை வென்றிட,
உன்னருள் வேண்டுகிறோம்!
விண்ணவர் தலைமகளே!
(ஜய ஜய)
.
அன்புடன் அனைவரும் இன்புற வாழ்ந்திட,
‘தன்’னெனும் ஆணவ மாயை அகன்றிட,
எம் மனம் ஏங்கிடுதே!
இன்னருள் தந்திடுவாய்!
(ஜய ஜய)
.
பாரதம் உயர்ந்திட, பண்புகள் ஓங்கிட,
சாரணர் போற்றிடு தர்மம் பரவிட,
ஆசி அளித்திடுவாய்!
ஈசனின் இருதயமே!
(ஜய ஜய)
.
(விஜயபாரதம் – 25.09.1998)
.
Advertisements

சுதந்திரப் போராளிகளின் வீர சரித்திரம்

9 Oct

c07strugle

சுதந்திரம் என்பது போராடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. கலகம், விமர்சனம், எதிர்ப்பு ஆகியவை போராளிகளின் குணங்கள். போராளிகள் இருப்பதால் தான் ஜனநாயகம் எதேச்சதிகாரமாக மாறாமல் காக்கப்படுகிறது.

.
நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் மக்களாட்சி மாண்புக்கும் 1975 ஜூன் 25-இல் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து தேசம் மீண்டது எப்படி? நமது உரிமைகளை சத்தமின்றி மீட்டவர்கள் யார்? அதில் அவர்கள் அடைந்த கஷ்டங்கள் என்ன? என்று விளக்குகிறது இப்புத்தகம்.

தனது அரசியல் எதிரிகள் பலம் பெற்று வருவதைத் தடுக்கவும், நீதிமன்றங்களின் கண்டனங்களிலிருந்து தப்பவும் நாட்டின்
பிரதமராக இருந்த இந்திரா காந்தி கையாண்ட குறுக்குவழியே நெருக்கடி நிலை அறிவிப்பு. இதன் காரணமாக நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட தேசிய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. ஆட்சியாளர்களைப் புகழ்வது மட்டுமே வெளியில் நடமாடும் வழி என்றானது.

ஆனால், அதே இந்திரா காந்தி 1977, மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்ள நேர்ந்தது. அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் அவர் அடைந்த படுதோல்வியும் ஜனதா கட்சியின் மகத்தான வெற்றியும் சரித்திரம்.

.
இந்த இடைப்பட்ட காலத்தில் மக்களை அதிகார வர்க்கத்திற்கு எதிராகத் திரட்டி தலைமறைவுப் போராட்டம் நடத்திய நாயகர்கள் தான் நமது சுதந்திரத்தைக் காத்த தளகர்த்தர்கள்.

அரசே அராஜகத்தில் ஈடுபடும்போது பெரும்பாலோர் ஊமையாகி விடுகின்றனர். ஆனால், விதிவிலக்குகளாக அமைந்த இந்தத் தளகர்த்தர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தியதுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான இராம.கோபாலன், மிகுந்த பொறுப்புணர்வுடனும்,  அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது.

.
சரித்திர அனுபவங்கள் ஜனநாயகத்தைக் காப்பதற்கான படிப்பினைகளை அளிக்கின்றன. அந்த வகையில் இந்நூல் இளைய
தலைமுறையினர் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய அற்புதமான கருவூலமாக உள்ளது.

தினமணி (07.10.2013)

.

***

.

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்:

தொகுப்பாசிரியர்: இராம.கோபாலன்,

296 பக்கங்கள், விலை: ரூ. 200,

விஜயபாரதம் பதிப்பகம்,

12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை- 600 031,
தொலைபேசி எண்: 044-2836 0874.

.

அறியப்படாத பக்தர்கள்…

1 Oct

VENMAI

ஆன்மிகத்தின் அடித்தளம் கடவுள் நம்பிக்கை. கடவுள் இல்லாத இடமில்லை என்பதை பிரகலாதன் வாயிலாக பாகவதம் கூறுகிறது. தன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த சிறுவனின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மரால் ஆணவத்தின் சின்னமான அசுரன் மாண்டான்.

நமது இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்களில் எண்ணற்ற புனிதர்கள் உலவுகின்றனர். அவர்களில் துருவன், பிரகலாதன், நாரதர் போன்ற பக்த மகா ரத்தினங்களை அனைவரும் அறிவர்.

அதேசமயம், புராணங்களில் எதிர்மறை நாயகர்களாக இருந்த பலரும் கூட இறைபக்தியில் சளைத்தவர்களல்ல. அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல் எனலாம். மது கைடபர், சூரபதுமன், மாரீசன், சகுனி, கஜமுகன் போன்ற அசுரர்களும் கூட அடிப்படையில் கடவுளின் அவதாரங்களை நிறைவேற்ற உதவிய பக்தர்களாகவே திகழ்கின்றனர்.

அதேபோல, தொன்மங்களில் இடம்பெற்றும் பலரால் வெகுவாக அறியப்படாத, முசுகுந்தன், ஜரன், குபேரன், கெüசல்யா, சுகிர்தன், சிகண்டி போன்றவர்களின் கதைகளிலும் அவர்களின் பக்தி மேன்மை வெளிப்படுகிறது. இத்தகைய 52 புனிதர்களைப் பற்றி சுவையான நடையில் எழுதி இருக்கிறார் நூலாசிரியர் எஸ்.கே.முருகன்.

இறைவனின் படைப்பில் அனைவரும் சமமே. அவர்கள் தங்கள் மனவேற்றுமைகளால் நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் மாறுகிறார்கள். அதுவும் கூட அவர்களுக்கு விதிக்கப்பட்ட நியதிப்படியே நிகழ்கிறது. இந்த எண்ணம் தான் இந்நூலைப் படிக்கும்போது தோன்றுகிறது.

வித்தியாசமான பார்வையில், இதுவரை தொடப்படாத புராண மாந்தர்களை சுவாரசியமாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள கோட்டோவியங்கள் நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

தினமணி (30.09.2013)

***

கடவுளின் நிறம் வெண்மை:

எஸ்.கே.முருகன்

336 பக்கங்கள், விலை: ரூ. 200,

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,

தியாகராய நகர், சென்னை- 600017,

போன்: 044- 2434 2771, 6527 9654.