Archive | November, 2013

தேசியமும் தெய்வீகமும் கமழும் மலர்

19 Nov

vijayam1

vijayam2

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழான ‘விஜயபாரதம்’, தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டுள்ள தீபாவளி மலர் இரண்டு புத்தகங்களுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ கணேச பஞ்சரத்தினத்தை தமிழில் வழங்கியுள்ளார் கவிமாமணி மதிவண்ணன். கவிஞர் மா.கி.ரமணன், சமூகசேவகர் கிருஷ்ண ஜெகநாதன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் உள்பட 14 பேர் எழுதிய கவிதைகள் மலருக்கு மணம் சேர்க்கின்றன.

புராதன பாரதத்தில் நீதி நிர்வாகம் குறித்த ஆர்.பி.வி.எஸ். மணியனின் கட்டுரை நமது பாரம்பரியப் பெருமிதத்தைத் தூண்டுகிறது. மதமாற்றம் ஒரு மோசடி என்ற மகாத்மா காந்தியின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு காந்திய அறிஞர் லா.சு.ரங்கராஜனும், மகாபாரத சிகண்டி குறித்து தஞ்சை வெ.கோபாலனும், கணிதமேதை ராமானுஜன் குறித்து பருத்தியூர் கே.சந்தானராமனும் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

ராஜாஜியின் ஜெயில் டைரி தொடர்பான திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை நெஞ்சை உருக்குகிறது. மங்கள்யான் குறித்து விஞ்ஞானி நெல்லை சு.முத்துவும், சமுதாய வளர்ச்சியில் சாதிகளின் பங்கு குறித்து பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசனும் அற்புதமான கட்டுரைகளை எழுதி இருக்கின்றனர்.

புஷ்பா தங்கதுரை, வெ.இன்சுவை, பாக்கியம் ராமசாமி, சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், நரசய்யா, இளசை சுந்தரம், காம்கேர் புவனேஸ்வரி போன்ற பிரபலங்களின் கட்டுரைகளும் மலரில் இடம்பெற்றுள்ளன. சதுரகிரி, கோயில் கட்டடக்கலை, தேசியகவிகள், ராமர்பாலம், குழந்தை இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் 53 கட்டுரைகள் மலரில் இடம்பெற்றுள்ளன.

எழுத்தாளர்கள் அசோகமித்திரன், கெüதம் நீலாம்பரன், விமலா ரமணி, ராஜேஷ்குமார், தேவிபாலா, சுபா, படுதலம் சுகுமாறன், ஆதலையூர் சூரியகுமார் உள்ளிட்டோரின் 27 சிறுகதைகள் தீபாவளி மலரை மெருகூட்டுகின்றன.

மொத்தத்தில் மிகுந்த சிரத்தையுடனும், கவனத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ள இம்மலரில், கடவுளர்கள், மகான்களின் வண்ணப்படங்களும் ஆங்காங்கே மிளிர்கின்றன. இம்மலரில் பக்கத்திற்குப் பக்கம் தேசியமும் தெய்வீகமும் கமழ்கின்றன.

***

விஜயபாரதம் தீபாவளி மலர்- 2013

2 புத்தகங்கள்

608 பக்கங்கள், விலை: ரூ. 150,

விஜயபாரதம் வெளியீடு,

12, எம்.வி.தெரு, பஞ்சவடி,

சேத்துப்பட்டு, சென்னை- 600 031.

தொலைபேசி எண்: 044- 2836 2271.

Advertisements

புட்டிகளின் உலகம்

8 Nov
.
அங்கிங்கெனாதபடி எங்கும்
பரவிக் கிடக்கின்றன புட்டிகள்.
.
சாக்கடைக் கால்வாய்களில்…
குப்பைமேடுகளில்…
முட்டுச்சந்துகளில்…
சாலையோரங்களில்…
இருட்டு மூலைகளில்…
எல்லா இடங்களிலும்
காணக் கிடைக்கின்றன புட்டிகள்.
.
கரும்பச்சை நிறப் புட்டிகள்…
தங்கநிறம் மின்னும் புட்டிகள்…
கழுத்து நீண்ட புட்டிகள்…
சப்பையான புட்டிகள்…
குடுவை வடிவிலான புட்டிகள்…
எல்லா வடிவங்களிலும்
பொறுக்கக் கிடைக்கின்றன புட்டிகள்.
.
மப்பில் மல்லாந்து கிடப்பவன் போல,
அதீதக் குடிகாரனின் உடல்
கோணிக் கிடப்பதுபோல,
போதையில் சட்டை கிழிந்து
குப்புறக் கிடப்பவன் போல,
எச்சில் வழிய ஈக்கள் மொய்க்க்
மண்ணில் கிடப்பவன் போல,
சொறிநாய்களின் பக்கத்திலேயே
பரிதாபமாகக் கிடக்கின்றன புட்டிகள்.
.
மதுக்கடைகளின் புறக்கடையிலும்
ஐந்து நட்சத்திர விடுதித் தாழ்வாரங்களிலும்
மாபெரும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும்
நதிக்கரையோர ஆக்கிரமிப்புக் குடிசைகளிலும்
தொழிற்சாலைகளின் கழிவறைகளிலும்
பொதுஉடைமை பேசுகின்றன புட்டிகள்.
.
அடித்த சரக்கின் வீரியத்தில்
அடித்துக் கொண்ட குடிமகன்கள்
குருதிவழிய மடிந்து கிடப்பது போல,
உடைந்தும் கிடக்கின்றன
சில புட்டிகள்.
.
அருவிகளில் தலைகுப்புற விழுந்து
சிதறிக் கிடக்கும் கண்ணாடிப் புட்டிகள்…
வனப்பகுதியில் வீசப்பட்ட
கிறுக்கர்களின் புட்டிகள்…
மேல்தட்டு இளைஞர்களால்
நடுச்சாலையில் உடைக்கப்பட்ட
உற்சாகப் புட்டிகள்.
கடல் மணலில் புதைக்கப்பட்டு
மாயமான புட்டிகள்.
புட்டிகள் இல்லாத இடமில்லை.
.
சொர்க்கத்தையும் நரகத்தையும்
மண்ணில் காட்டும் திரவத்தை
காலி செய்து கிடப்பவை
இந்தப் புட்டிகள்.
.
எந்த இடத்திலும் எல்லா வடிவிலும்
எத்தனை வேண்டுமாயினும்
புட்டிகள் கிடைக்கும்.
தேடுங்கள் தட்டுப்படும்-
இறைவனைப் போல.
சேகரியுங்கள் காசு கிடைக்கும்
இதுவே மறுசுழற்சி முறை.
அதே காசில் நுரைத்துத் தளும்பி
மூர்ச்சையாகுங்கள்-
அரசு உருப்படும்.
.
இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள்
கழித்து இம்மண்ணில் நடக்கும்
தொல்லியல் ஆய்வுகளில்,
அழிந்துபோன நமது நாகரிகத்தின்
சாட்சியாக விளங்கக் கூடியவையும்
அங்கிங்கெனாதபடி
எங்கும் கிடைக்கும் இதே புட்டிகள் தான்…
.
-விஜயபாரதம் – தீபாவளி மலர்- 2013
.

காணாமல் போன அன்னபூரணி

6 Nov

vb picture

அம்மா எதையோ பரபரப்பாக தேடிக் கொண்டிருந்தாள். நான் வழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்தபோது பூஜை அறையை முழுவதுமாகக் கலைத்துப் போட்டிருந்தாள். என்ன ஆயிற்று அம்மாவுக்கு?

சட்டென்று சிறு கோபம் வந்தாலும், அம்மாவின் பதற்றத்தைப் பார்த்தபோது மனம் அமைதியாகிவிட்டது. என்னதான் மூப்புக்கே உரித்தான சங்கடங்கள் இருந்தாலும், விஷயம் இல்லாமல் அம்மா பதற மாட்டாள்.

நான் குளியலறைக்குப் போனபோது மனைவி வந்து காதைக் கடித்தாள். பூஜையறையில் வைத்திருந்த அன்னபூரணி சிலையைக் காணவில்லையாம். அதிகாலையிலிருந்தே வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் துழாவியாகி விட்டதாம். “”நீங்கள் எங்காவது பார்த்தீர்களா?” என்று கேட்டாள் மனைவி.

அண்மையில் காசி யாத்திரை போய்வந்த அத்தை வாங்கி வந்த சிறு பித்தளை விக்கிரஹம். காலை மடக்கி அமர்ந்து, கையில் சிறு கரண்டி ஏந்தி, பாத்திரத்தில் இருந்து அன்னம் வழங்கும் அம்மையின் திருவுருவச் சிலை. அதை, பத்து வருஷத்துக்கு முன்னால் காசி சென்றபோது அப்பா வாங்கிவந்த சிவலிங்க விக்கிரஹத்தின் அருகில், சிறு தட்டில் அரிசியைப் பரப்பி அதன் மீது எழுந்தருளச் செய்திருந்தாள் அம்மா.

அம்மாவுக்கு தினசரி காலையில் ஒரு மணி நேரம் பிரார்த்தனைக்கே போய்விடும். வேலைக்குப் போகும் அவசரத்தில் நானும் மனைவியும் அலைபாய்ந்து கொண்டிருப்போம். பெரியவளை 9 மணிக்குள் பள்ளிக்கு அனுப்பியாக வேண்டும். பூஜையறையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கவே விசேஷ நாள்களில் தான் முடிகிறது. நிலைமை இவ்வாறிருக்கும்போது, அங்கிருந்த அன்னபூரணி விக்கிரஹம் எங்கு போனதோ, யாருக்குத் தெரியும்? கேள்வி கேட்ட மனைவியை முறைத்தேன்.

“ஏங்க, எனக்கு மட்டும் என்ன தெரியும்? அன்னபூரணி சிலையை நிவேதிதா தான் நேற்று கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாளாம். அவதான் எங்காவது எடுத்துப் போட்டிருப்பா என்று மாமா கோபப்படறார். அவளோ, தெரியவே தெரியாதுங்கிறா. அதான் உங்களைக் கேட்டேன்”

அப்போது தான் பார்த்தேன். அழுது சிவந்த விழிகளோடும், விசும்பல்களோடும் பெரிய மகள் நிவேதிதா படுக்கையில் உட்கார்ந்திருப்பதை. அழுததில் முகம் வீங்கியிருந்தது. “”அப்பா, நான் அதை எடுக்கவே இல்லை. ஆனா நான் தான் எடுத்தேங்கிறார் தாத்தா. நான் பார்க்கவே இல்லப்பா”.

அவள் சொல்வது உண்மையாகவே இருக்கும். நான்கூட இப்படித் தான். நான் செய்யாத தவறுக்கு யாராவது என்னைப் பொறுப்பாளி ஆக்கினால் பொங்கிவிடுவேன். என் மகள் என்னைப் போலவே இருக்கிறாள். அழுகை மட்டும் அம்மாவிடம் கடன் வாங்கி இருக்கிறாள்.

“சரி. நீ எடுக்கலை, போதுமா? நான் தேடிக்கறேன். நீ ஸ்கூல் கிளம்பற வழியப் பாரு” அதட்டினேன். பேத்திக்கு ஜடை பின்ன, கால்களைத் தாங்கியபடியே வந்த அம்மாவைப் பார்த்துக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்தேன். அப்பா வீட்டின் பின்புறம் உள்ள செடிகளுக்குள் சிலையைத் தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

***

குளிர்ந்த நீர் தலையில் விழுந்து வழிகையில் உடலின் சூடு முழுவதும் கரைந்துபோனதுபோல இருந்தது. பக்கத்துத் தெரு கோவில் ஒலிபெருக்கியில் கந்தர் சஷ்டிக் கவசத்தை சூலமங்கலம் சகோதரிகள் பாடிக் கொண்டிருந்தார்கள்.

அம்மாவுக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் பிடிக்கும். இதையும் “கற்பூர நாயகியே கனகவல்லி’ பாடலையும் தினசரி பாடாவிட்டால் அம்மாவுக்கு பிரார்த்தனை செய்த திருப்தியே இருக்காது. அப்பாவின் ரசனை தனி. மார்கழியில் பாடும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் அத்தனையையும் எல்லா மாதங்களிலும் பாடிக் கொண்டிருப்பார்.

சின்னவள் நித்யாவை தாலாட்டித் தூங்கவைக்கவும் கூட “போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே’ தான் பாடுவார் அப்பா. எப்படியோ நித்யா தூங்கிவிடுவாள். சமீபகாலமாக அவளும் “போற்றி போற்றி’ என்று மழலைக்குரலில் பாடிக் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கும் பூஜையறை மீது ஒரு ஈர்ப்பு உண்டு. பூஜையறை என்றால் தனியறை ஏதுமில்லை. சமையலறை ஓரமாக ஒரு அலமாரியில் சுவாமி படங்களும் விக்கிரஹங்களும் பூஜைப்பொருள்களும் இருக்கும். அவ்வளவுதான். அதன் முன்னால் நாற்காலியில் அமர்ந்தபடி சாமி கும்பிடுவாள் அம்மா. சில நேரங்களில் பாட்டியின் மடியில் நித்யா உட்கார்ந்துகொண்டு ரகளை செய்துகொண்டிருப்பாள்.

தாத்தா, பாட்டியுடன் வளரும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். நாங்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பிறகு, குழந்தைகளை அவர்கள் தானே வளர்த்தெடுக்கிறார்கள்?

நிவேதிதா குழந்தையாக இருந்தபோது எப்போதும் அப்பா தான் அவளை தூக்கிக்கொண்டு திரிவார். இப்போது அவள் ஐந்தாம் வகுப்பு வந்துவிட்டாள். அவரது தோளில் அமரும் ஆளும் மாறியிருக்கிறது. தாத்தாவுடனான தனது பாசத்தைப் பங்குபோட தங்கை வந்தது நிவேதிதாவுக்கு ஒருவகையில் வருத்தம் தான். இதெல்லாம் தெரியாமல் நித்யா மழலை மொழியில் “அக்கா, அக்கா’ என்று, அவள் பின்னாலேயே திரிவாள்.

அப்பாவும் அத்தையும் சிறுவயதில் அப்படித்தான் இருப்பார்களாம். குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் மலரும் நினைவுகளில் மூழ்கிவிடுவார் அப்பா. சகோதர உறவுகளுடன் பிறந்தவர்கள் பாக்கியவான்கள். தற்போதெல்லாம் வீட்டுக்கு ஒரு குழந்தை மட்டுமேயான காலமாகிவிட்டது. எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் உதவக்கூட உறவுகள் இல்லாமல் போய்விடக் கூடும்.

ஏதேதோ எண்ணங்கள் வந்து போகின்றன. ஷவரில் இருந்து தண்ணீர் விழ விழ மூளையும் வேகமாகச் சிந்திக்கிறது. ஐந்து நிமிடத்துக்குள் எங்கெங்கோ மனம் சென்று வந்துவிட்டது. கோவில் ஒலிபெருக்கியில் இப்போது சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது கேட்கிறது.

சட்டென்று நினைவுக்கு வந்தது, பக்கத்து வீட்டு நண்பர் கோவிந்தராஜ் காசி சென்று வந்தபோது தந்த இதேபோன்ற இன்னொரு அன்னபூரணி சிலை. அதை வைத்து பூஜை செய்தால் போயிற்று.

***

குளியலறையிலிருந்து வெளிவந்ததும் அம்மாவிடம் தான் போனேன். ஜடை பின்னிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் நிவேதிதா. வாசலில் மனைவி போட்டிருந்த புள்ளிக்கோலத்தின் மீது, இடுப்பில் கைவைத்தபடி நின்று கொண்டிருந்தாள் நித்யா. “ஏம்மா சிலை கிடைச்சுதா?”

“இல்லப்பா” என்றாள் அம்மா. “”ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திரத்தில விரதம் இருந்து அன்னபூரணிக்கு பூஜை பண்ணனும். நாளைக்கு மூல நட்சத்திரம். இந்த நேரம் பார்த்து விக்ரஹம் காணாமப் போயிடுச்சே” அங்கலாய்ப்பு தொடர்ந்தது. இதுதான் பரபரப்புக்கு காரணமா?

“ஏம்மா, இதேமாதிரி நம்ம கோவிந்தராஜ் சார் காசியிலிருந்து வாங்கிவந்த இன்னொரு சிலை இருக்குமே. அதை வச்சு பூஜை செய்யலாமே?” என்றேன்.

“ஆமா, இருக்கு. ஆனால் அது சிறிசு. கொஞ்சம் கீறலும் விழுந்திருச்சு. அதனால் தான் அதை அரிசி மூட்டையில் போட்டுட்டேன். பூஜையில் வைக்கிற விக்ரஹத்தில் பின்னம் இருக்கக் கூடாதுப்பா” என்றாள் அம்மா.

“நானும் எல்லா இடத்திலயும் தேடிப் பார்த்துட்டேன். எங்கேயும் காணோம்” என்றபடி வந்தார் அப்பா. சட்டையில்லாத மார்பில் வியர்வை வழிந்தது. துண்டை எடுத்துத் துடைத்துக் கொண்டார். “இவளும் எடுக்கலைங்கறா. எங்க போயிருக்கும்? அன்னபூரணி சிலைக்கு கால் முளைச்சிருச்சா?” பேத்தியை குறும்புடன் பார்த்தார் அப்பா.

எதிர்பார்த்தது போலவே சீறினாள் நிவேதிதா. “”பாருப்பா. நான் எடுக்கலைன்னு சொன்னால், தாத்தா நம்பவே மாட்டேங்கறார்” எந்த நேரமும் அழத் தயாராக இருப்பதுபோல கண்களில் நீர் திரளத் துவங்கிவிட்டது. விவகாரத்தை முற்றவிட்டால் ஆபீஸ் போவது சிரமம் தான்.

“விடுங்கப்பா. அவள் தான் எடுக்கலைங்கறாளே. நான் சாயந்திரம் தேடிப் பார்க்கிறேன்” என்றேன். பேத்தியை செல்லமாக முறைத்தபடி, போர்டிகோவில் கிடந்த தினமணியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார் அப்பா.

அங்கு நடந்தது எதுவும் புரியாமல், அக்காவின் தட்டிலிருந்து ஒரு விள்ளல் இட்டிலியை எடுத்துக்கொண்டு முகம் மலரச் சிரித்தாள் நித்யா.

***

ஆபீஸ் கிளம்பியாகிவிட்டது. செல்லும் வழியில் மனைவியை அவளது கம்பெனியில் இறக்கிவிட்டுப் போக வேண்டும். இந்த நேரம் பார்த்து {ஷாக்ஸ் காணவில்லை. இந்த வீட்டில் ஒரு பொருள் வைத்த இடத்தில் இருக்காது. எப்போதும் வைக்கும் இடத்தில் மறுபடியும் பார்த்தேன். இல்லை. நேற்று மாலை வந்தவுடன் ஷூவுக்குள் தானே வைத்தேன்?

“அப்பா” என்னருகில் வந்த நித்யாவை, தேடும் மும்முரத்தில் நான் கவனிக்கவில்லை. அனிச்சையாகத் திரும்பியபோது தான் கவனித்தேன், அவள் கையில் ஒரு ஷாக்ஸ் மட்டும் இருந்ததை.

“அட குட்டிம்மா, எங்கிருந்துச்சுடா?” ஷாக்ûஸ வாங்கிக்கொண்டே கேட்டேன். அவள் கண்களில் ஒரு ஒளி வந்து போனதைக் கவனித்தேன். லேசான வெட்கம் வேறு. இரண்டு வயது தான் ஆகிறது. நல்ல சூட்டிகை. அவள் கைகாட்டிய திசையில் அழுக்குத் துணிக் கூடை இருந்தது.

அதற்குள்ளிருந்து எடுத்து வந்திருக்கிறாள். இன்னொரு ஷாக்ஸýம் அங்கு தான் இருக்க வேண்டும். சென்று பார்தேன். இருந்தது. இதற்குள் எப்படிப் போனது? “குட்டிம்மா, நீயா இதை இதுக்குள்ள போட்டே?” அவள் நாணிக் கோணியதிலேயே இது அவள் வேலைதான் என்று தெரிந்தது. எப்போதோ அழுக்கு ஷாக்ஸ் அதில் போட்டபோது பார்த்திருக்கிறாள். அதையே அவளும் செய்திருக்கிறாள்.

“நல்ல புள்ளை” கொஞ்சினேன். “கெட்ட புள்ளை” என்று மறுத்தாள். கன்னங்களில் குழி விழச் சிரித்தாள். இறுக்க அணைத்துக் கொண்டேன். சட்டென்று பொறி தட்டியது. ஒருவேளை இவளுக்குத் தெரியுமா? அன்னபூரணி சிலையை இவள் பார்த்திருப்பாளா?

பரபரவென்று அவளைத் தூக்கிக்கொண்டு சமையலறைக்குப் போனேன். அங்கிருந்த அரிசி மூட்டைக்குள்ளிருந்த சிறிய அன்னபூரணி விக்கிரஹத்தைக் காட்டினேன். “குட்டிம்மா, இதே மாதிரி இன்னோரு சாமி பொம்மையை எங்காவது பார்த்தியா?”

அவளது கண்ணில் மின்னல் தெறித்தது. அவளது தலையசைப்பில் அவளுக்குத் தெரியும் என்பது புரிந்தது. குடுகுடுவென ஓடினாள். பூஜை அலமாரி அருகே வைத்திருந்த இட்லி அரிசி மூட்டைக்குள் கைவிட்டாள்.

ஏதோ பெரிய சாதனை படைத்துவிட்டது போல பெருமிதத்துடன் எடுத்து நீட்டினாள். அவள் கைகளில் இருந்தது அம்மா தேடிக் கொண்டிருந்த அதே அன்னபூரணி விக்கிரஹம்.

சற்றே உன்னிப்பாகக் கவனித்தேன். விக்கிரஹத்தில் இருந்த கரண்டியில் இரண்டு அரிசிகள் ஒட்டியிருந்தன.

.

விஜயபாரதம்  தீபாவளி மலர்-2013

.

தேவையற்ற சடங்குகள்

5 Nov

Pumpkin on Road

மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் ஆனந்தமாக வந்த அந்த இளைஞர் இன்று மருத்துவமனையில் படுத்திருக்கிறார். காரணம் சிறு தேங்காய்ச் சிதறல்; சாலையில் கிடந்த சிதறு தேங்காயைக் கவனிக்காத சிறு கவனச்சிதறல். அதன் காரணமாக, அவரது குடும்பமே இன்று மருத்துமனையில்.

வெள்ளிக்கிழமை இரவுகளில் நகரங்களில் வாகனம் ஓட்டுவோர் மிகவும் கவனத்துடன் இருந்தாக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சாலையில் சறுக்கி விழுந்து மருத்துவமனைக்குப் போக வேண்டியது தான்.

அந்த ஒரு நாள் இரவில் மட்டும் நகரத் தெருக்களில் பல்லாயிரக் கணக்கான பூசணிக் காய்களும் தேங்காய்களும் உடைக்கப்படுகின்றன. சாலை நடுவே கிடக்கும் திருஷ்டிப் பூசணிக் காயைக் கவனிக்காமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அதோகதி தான்.

வாரம் முழுவதும் கடைகளில் நடைபெறும் வர்த்தகத்தில் கண்ணேறு ஏற்படாமல் தவிர்க்கவே இந்த திருஷ்டி கழிக்கும் சடங்குகள் நிகழ்கின்றன. வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படும் பூஜை முடித்தவுடன் இவை உடைக்கப்படுகின்றன.

இதையே ஒரு கற்பூரம் கொளுத்தியும் கழிக்கலாம். ஆனால், பூசணிக்காயை உடைப்பதிலும் தேங்காயைச் சிதறடிப்பதிலும் தான் நமது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மிருகபலிச் சடங்கிற்கு மாற்றாக அறிமுகமான பூசணிக் காய் உடைப்பு இப்போது மனிதர்களை வதைக்கும் சடங்காக மாறியிருப்பது வேதனையான வேடிக்கை.

இதுமட்டுமல்ல, வெள்ளிக்கிழமை இரவுகளில் சாலையில் வீணாகும் காய்களால் மட்டும் பல லட்ச ரூபாய் நாசமாகிறது. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு தெருக்களில் உடைக்கப்படும் பூசணி, தேங்காய்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் தெருவில் எறியப்படும் பணத்தின் மதிப்பு புலப்படும்.

காய்கறிச் சந்தையில் பூசணிக்காயின் விலை கிலோ ரூ. 15-க்கு மேல் இருக்கிறது. ஒரு பூசணிக் காயின் விலை எப்படியும் ஐம்பது ரூபாய்க்குக் குறையாது. ஒரு தேங்காயின் சராசரி விலை ரூ. 10. தெருவில் வீணாகும் சத்தான உணவுப் பொருள்களின் மதிப்பு புலப்படுகிறதா?

முழுத் தேங்காய் வாங்கக் காசில்லாமல் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் “தேங்காய்ப் பத்து’ வாங்கும் ஏழைகள் நடந்துசெல்லும் அதே சாலையில் சிதறிக் கிடக்கின்றன ஆயிரக் கணக்கான தேங்காய்கள்.

கிடுகிடுவென உயர்ந்துள்ள காய்கறி விலையைச் சமாளிக்க முடியாமல் நடுத்தரக் குடும்பங்களே காய்கறிப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டன. அதேசமயம், எந்தப் பயனும் இன்றி சாலையில் வாகனங்களால் அரைக்கப்பட்டு கூழாகிக் கிடக்கின்றன ஆயிரக் கணக்கான பூசணிக் காய்கள். இதை பொருளாதாரக் குற்றம் என்று ஏன் சொல்லக் கூடாது?

இதைவிடக் கொடுமையான இன்னொரு பழக்கம், இறுதி ஊர்வலத்தில் செல்வோர், சடலத்தின் மீது அணிவிக்கப்பட்ட மாலைகளைக் குதறி அதிலிருக்கும் பூக்களை சாலையில் வீசிச் செல்வது! இதை எதற்காகச் செய்கின்றனர் என்பது புரியாத புதிர்.

இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டுசெல்லும்போது சிற்றுயிர்களுக்கு உணவளிக்க பொரி வீசுவது கிராமங்களில் உருவான பண்பாடு. அத்துடன் அன்றலர்ந்த உதிரிப் பூக்களை வீசிச் செல்வது, உயிரிழந்தவரைப் போற்றும் செயலாக அமையலாம்.

ஆனால், உயிரழந்தவரின் சடலம் மீது பல மணி நேரம் அணிவிக்கப்பட்டிருந்த மலர்மாலைகளில் இருந்த பூக்களையே சாலைகளில் வீசிச் செல்வது, எவ்வாறு அவரைப் போற்றுவதாக அமையும்? அது மாபெரும் சுகாதாரக் கேடல்லவா?

இத்தகைய தவறான பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நாம் நாகரிக சமுதாயம் என்பதற்கான அடையாளமாக இருக்கும்.

யாரோ ஒருவரது திருஷ்டி கழிய உடைக்கப்படும் பூசணியால், வேறு யாரோ சிலர் சாலையில் அடிபட வேண்டுமா? மரணித்தவரின் மீது அணிவிக்கப்பட்ட மலர்கள், சாலையில் செல்வோரின் முகச்சுழிப்புக்கு வித்திட வேண்டுமா? நாம் சிந்திக்க வேண்டும்.

நதிகள் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும் என்ற நல்நோக்கத்துடன் மாநிலம் முழுவதும் யாத்திரை செல்லும் அகில பாரதிய துறவியர் பேரவை, நதிகளில் சடங்குகளின் பெயரால் செய்யப்படும் மாசுபாடுகளைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோல, சாலையை மாசுபடுத்தும் தேவையற்ற சடங்குகளையும் துறவியர் கண்டிக்க வேண்டும். சடங்குகள் வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்க உருவாக்கப்பட்டவை. அவை அநர்த்தம் ஆகும்போது, அதைத் தடுப்பது சமுதாயத் தலைவர்களின் கடமை.

தேவைப்பட்டால், இத்தகைய அநாவசியச் சடங்குகளைத் தடுக்க அரசு சட்டமே கொண்டுவர வேண்டும். அதற்கு துறவிகளும் மக்கள்நலம் விழையும் சமுதாயத் தலைவர்களும் வழிகாட்ட வேண்டும்.

தினமணி (01.11.2013)