Archive | December, 2013

மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான நூல்

11 Dec
 

NETHAJI

இந்திய வரலாற்றில் திருப்புமுனைகளை ஏற்படுத்திய இரு ஆளுமைகள் சுவாமி விவேகானந்தரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும்.  சுவாமிஜி அரசியல் கலப்பற்ற  ஆளுமை. அதே சமயம் அவரிடம் பொங்கிப் பிரவகித்த தேசபக்தி பல எதிர்கால அரசியல் தலைவர்களை உருவாக்கியது. மாறாக, நேதாஜியோ, தீவிர அரசியலில் ஈடுபட்டவர்; ஒருகட்டத்தில் அரசியல் கசந்து, ஆயுதப் போராட்டமே விடுதலைக்கு வழி என்று கருதி, தனது வாழ்க்கைப் பாதையையே மாற்றிக் கொண்டவர்.

இவ்விருவருமே தங்கள் அர்ப்பணமயமான வாழ்க்கையால் இந்திய இளைஞர்களின் ஆதர்ஷமாக இன்றும் விளங்கி வருபவர்கள்.  இருவருமே கடல் கடந்து இந்தியாவின் பெருமிதத்தை நிலைநாட்டியவர்கள்; இருவருமே வங்காளிகள்; இருவருமே சமய நம்பிக்கை மிகுந்தவர்கள்; இருவருமே கலாச்சார தேசியத்தின் அடிப்படையில் பாரதம் ஒரே நாடு என்பதை மிகத் திண்ணமாக உறுதிப்படுத்தியவர்கள். இருவருமே மிக இளம் வயதிலேயே நம்மிடம் இருந்து விடைபெற்றுப் போனவர்கள். அதன் காரணமாகவே, இருவரும்  -நிரந்தர இளைஞர்களாக – இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த வடிவமாக இன்றும் கருதப்பட்டு வருகிறார்கள்.

இவ்விருவரது ஆளுமைகளை ஒப்பிடும் நூல்கள் வங்காளி மொழியில் அதிகம் உண்டு. தங்கள் மாநிலத்தின் தவப்புதல்வர்களை ஒப்பிட்டு எழுதி மகிழும் வங்காளிகளின் பெருமிதத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்த நூல்கள் பிற மொழிகளில் கிடைக்காததால், அவ்விருவரின் நெருங்கிய உறவை பலரும் அறிய முடியாமல் போகிறது. அந்தக் குறையை தமிழில் நிவர்த்தி செய்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் சாருகேசி.

சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது 1863 முதல் 1902 வரையிலான 39 ஆண்டுகள் மட்டுமே.  நேதாஜி வாழ்ந்தது 1897 முதல் 1945 வரையிலான 48 ஆண்டுகள் மட்டுமே. அதாவது சுவாமிஜியின் இறுதிக் காலகட்டத்தில் பிறந்தவரான நேதாஜி சுவாமிஜியை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், சுவாமிஜி நிறுவிய இயக்கமான ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் துறவிகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பும் உறவும் இருந்தது. விவேகானந்தரின் வீர உரைகள் எவ்வாறு பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்ததோ, அவ்வாறே நேதாஜிக்கும்  அமைந்தது.

சொல்லப்போனால், நேதாஜி என்ற ஆளுமை உருவாக அடித்தளமிட்டவையே சுவாமிஜியின் நூல்கள் தான். இதனை நேதாஜியின் முழுமையான வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் உணர முடிகிறது.  நேதாஜியின் கடிதங்கள், அவரது வாழ்க்கை வரலாறு, அக்கால பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் உருவான  ‘SWAMI VIVEKANANDA AND NETAJI SUBASH CHANDRA BOSE’   என்ற ஆங்கில நூல் ராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டதாகும். அதன் தமிழாக்கமாக சுருக்கமான வடிவில் வெளியாகி இருக்கிறது “சுவாமிஜியும் நேதாஜியும்” என்ற இந்த நூல்.

விவேகானந்தர் இலக்கியத்தின் கவர்ச்சி நேதாஜி மீது செலுத்திய தாக்கம், ஞானகுருவைத் தேடி நேதாஜி அலைந்த அலைச்சல், ராமகிருஷ்ண மடத் துறவியர் அவருக்கு அளித்த ஆதரவு, நேதாஜியின் வாழ்க்கைத் திருப்புமுனைகளில் சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் அவருக்களித்த பெரும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஆறுதலும், சுவாமிஜி குறித்த நேதாஜியின் கருத்துக்கள், என பல அற்புதமான தகவல்கள் அடங்கிய நூல் இது. ‘எது உண்மையான தேசபக்தி?’ என்ற தலைப்பில் சுவாமி விவேகானந்தரின் செய்தி நூலின் இறுதியில் இடம் பெற்றிருக்கிறது.  நேதாஜி எதனால் தேசபக்திக் கணலாக ஒளிர்ந்தார் என்பதற்கு சுவாமிஜியின் இந்த உரையே ஆதாரமாக உள்ளது.

130 பக்கங்கள் மட்டுமே கொண்ட, பாக்கட் அளவிலான சிறிய நூல் தான்- ஆனால், இதன் உள்ளடக்கம் மிகப் பெரிது. விவேகானந்தர் 150வது ஜெயந்திக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நூலை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவரும் படிக்க வேண்டும். அதன்மூலமாக மாணவர்களின் எதிர்காலத்திற்கான திசையும் நாட்டிற்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமை குறித்த விசையும்  கிடைக்கும்.

காண்க: விவேகானந்தம்150.காம்

***

சுவாமிஜியும் நேதாஜியும்

தமிழில் தொகுப்பு: சாருகேசி

130 பக்கங்கள், விலை: ரூ. 25.00

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு,

மயிலாப்பூர், சென்னை- 4.

Advertisements

திராவிட அரசியலை நையாண்டி செய்யும் நூல்

1 Dec

sorgam

நூலின் அட்டையிலேயே ‘திராவிட இயக்க நூற்றாண்டு விழா வெளியீடு’ என்ற அறிவிப்புடனும், கடந்த ஐம்பதாண்டு கால தமிழக- திராவிட இயக்க வரலாற்றை அலசி ஆராயும் நாவல் என்ற விளக்கத்துடனும் வெளிவந்துள்ள இந்நூலை ‘நாவல்’ என்று எவ்வாறு வகைப்படுத்தினர் என்பது புலப்படவில்லை.

நாவல் என்பது மனித வாழ்வின் பெரும் பிரவாகத்தின் வீச்சை எழுத்தில் அடக்கிக் காட்டுவது. மாறாக, திராவிட இயக்கம் குறித்த கூர்மையான, பாரபட்சமற்ற விமர்சனங்களின் தொகுப்புத் தோரணமாகத் தான் இந்நூல் காட்சி தருகிறது.

தமிழகத்தின் 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றை கேள்விக்குள்ளாக்குவதே இந்நூலின் சிறப்பு. இரு தலைமுறையினர் இடையிலான கடித உரையாடல் வடிவில் தனது அரசியல் பார்வையை நூலாசிரியர் முன்வைக்கிறார்.

கோவலன், அவனது தந்தை எஸ்.பி, கோவலனின் ஆசிரியர் எம்.கே, இடதுசாரி நண்பர் சுப்பிரமணியன் ஆகியோரது கடிதங்கள் வாயிலாக, திராவிட இயக்கத்தின் பரிணாமமான கட்சிகளின் லட்சணம், சுயநலனுக்கு அடிமையாகி இனத்தைக் காட்டிக் கொடுத்த தலைவர்கள், விரசாய்ப் போன பொற்கனவுகள், காட்டமாக மதிப்பிடப் படுகின்றன.

பொருத்தமான இடத்தில் சி.பி.சிற்றரசு, நெல்லை கண்ணன், பெ.மணியரசன் ஆகியோரின் கட்டுரைகளை சாமர்த்தியமாகப் புகுத்தி இருக்கிறார் நூலாசிரியர். அண்ணா துரை, கண்ணதாசன், கருணாநிதி போன்றோரின் எழுத்துகளும் ஆங்காங்கே வந்துபோகின்றன.

சமூக சீர்திருத்த இயக்கமாக இருந்த திராவிட இயக்கம் எவ்வாறு அரசியல் இயக்கமானது? தமிழகத்தில் சிறு குழுவினரால் தொடர்ந்து முன்வைக்கப்படும் தமிழ்த் தேசியம் எவ்வகையில் திராவிட இயக்கத்துடன் முரண்படுகிறது? திராவிட இயக்கத்தின் பலங்களும் பலவீனங்களும் எவை? போன்ற கேள்விகளுக்கு விவாத வடிவில் இரு தரப்புக் கருத்துகளையும் முன்வைத்தாலும்,  நூலின் முடிவில், இயக்கத்தின் தோல்வி பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.

சீர்திருத்தத் திருமணம், தமிழீழம், பகுத்தறிவு, ஒழியாத தீண்டாமை, ஜாதிக் கட்சிகளின் ஆதிக்கம், மதுவிலக்கு, தமிழ்வழிக் கல்வி, பெரியாரின் இரண்டாவது திருமணம், ஸ்பெக்ட்ரம் ஊழல், வாரிசு அரசியல் எனப் பல விவகாரங்கள் விவாதத்தில் வந்து போகின்றன.

சமகால அரசியலை நையாண்டி செய்யும் விமர்சனம் என்று இந்நூலைச் சொல்லலாம்.

***

எங்கே அந்த சொர்க்கம்?…:

வே.குமாரவேல்

284 பக்கங்கள், விலை: ரூ. 200,

முல்லை பதிப்பகம்,

323/10, கதிரவன் காலனி,

அண்ணாநகர் மேற்கு, சென்னை- 40,

தொலைபேசி எண்: 044-2616 1196, 98403 58301.