Archive | January, 2014

பாரதிக்கு மரியாதை

27 Jan

c19bharathi

குழந்தைகளின் நாற்றங்கால் பருவம் ஆரம்பப் பள்ளிப் பருவம். இக்காலத்தில் அறவியல் கருத்துகளை எளிய பாடல்கள் மூலமாக நமது குழந்தைகளின் மனதில் விதைக்கும் அற்புதமான கல்விமுறை நம்மிடம் இருந்தது. ஒற்றைவரியிலான உபதேச மொழிகளாக அமைந்த நீதி நூல்கள் குழந்தைகளின் மனப் பயிற்சிக்கும் வாக்குப் பயிற்சிக்கும் மிகவும் உதவின. அதில் ஒன்றுதான் ஔவையார் எழுதிய ஆத்திசூடி.

துரதிர்ஷ்டவசமாக இந்த அற்புதமான நீதிநூல்களின் அறிமுகமின்றியே நமது குழந்தைகளின் ஆரம்பப்பள்ளிக் கல்வி தற்போது திசைதிரும்பிவிட்டது. ஆனால், சுதேசிக் கல்வியை வலியுறுத்திய மகாகவி பாரதி இந்த நீதிநூல்களின் முக்கியத்துவத்தை மிகவும் உணர்ந்திருந்தார். அதனால்தான், ஔவையாரை அடியொற்றி, அதேசமயம் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் புதிய ஆத்திசூடியை அவர் படைத்தார்.

ஆத்திசூடி மறக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில், பாரதியின் புதிய ஆத்திசூடிக்கு புதிய விளக்கம் அளிப்பதாக இந்நூலை எழுதியிருக்கிறார் புலவர் து.இராசகோபால். இந்நூலாசிரியர் பாடுபட்டு அளித்துள்ள தரவுகளும் தகவல்களும் நீதிநூல்களின் பக்கம் நமது பார்வையைத் திரும்பச் செய்யக்கூடும்.

பாரதியின் புதிய ஆத்திசூடியில் உள்ள 110 வரிகளுக்கும் தனி அத்தியாயங்களில், குறைந்த சொற்களில் விளக்கம், கருத்துரையுடன், அந்த வரி தொடர்பான பாரதியின் இதர பாடல் வரிகளையும் அடிக்குறிப்புகளுடன் அளித்துள்ளார் ஆசிரியர். தவிர, பாரதி வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், பாரதியின் கட்டுரைகள், பாரதி குறித்த பிறரது நூல்களிலிருந்தும் பொருத்தமான மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் மகாகவி பாரதி குறித்த அறிஞர் பெருமக்களின் புகழ்மாலைகள் வழங்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. சுத்தானந்த பாரதி, ராஜாஜி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வலம்புரிஜான், சுரதா, மீரா, வைரமுத்து, வாலி உள்ளிட்ட தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பாரதிக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே இப்பகுதி தோற்றம் அளிக்கிறது.

மொத்தத்தில் நூலாசிரியரின் கடின உழைப்புக்கும், சளைக்காத இலக்கியத் தேடலுக்கும் சாட்சியாக இந்நூல் திகழ்கிறது. மாணவர்கள் படிக்க வேண்டிய அரிய கருவூலம் இந்நூல் எனில் மிகையாகாது.

***

பாரதியின் புதிய ஆத்திசூடி- சுவை புதிது:

பெரியகுளம் புலவர் து.இராசகோபால்

288 பக்கங்கள், விலை: ரூ. 140,

மணிவாசகர் பதிப்பகம்,

31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை- 600 108.

தொலைபேசி எண்: 044- 2536 1039.

.

Advertisements

முருகா!

17 Jan

 Muruga

சரவண முருகா சண்முகனே – என்
சங்கடம் தீர்க்கும் திரு முருகா!
பரமேஸ்வரனின் மைந்தா – பக்தர்
பல்குறை நீக்கும் பழநியப்பா!

பிரம்மனின் செருக்கினை அழித்தவரே – என்
சிந்தைத் தெளிவை அளித்தவரே!
தரணியில் தீமை களைந்திடவே – நீ
சூரனை அழித்து மகிழ்வித்தாய்!

கரங்கள் பனிரெண்டுடையவரே -சிவ
அம்பிகை பாலா, ஆறுமுகா!
சரணம் சரணம் உன்பாதம் – நீ
அருள் கூர்ந்தென்னை ஆட்கொள்வாய்!

தினமணி (17.01.2014)

(கோவை- தைப்பூசத் திருநாளிலே சிறப்பிதழ்)

.

அருட்பெருஞ்சோதியில் வள்ளலார் கலந்த நாள்

17 Jan

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவர் அருட்பெருஞ்சோதியில் ஐக்கியமான தினம் தைப்பூசமாகும்.

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் ராமையா பிள்ளை- சின்னம்மையாருக்கு மகவாக, 1823, அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்தவர் ராமலிங்கம். உடன்பிறந்தோர் நால்வர். பிறந்த ஆறு மாதத்தில் தந்தை இறக்க, தமையனின் பாதுகாப்பில் வளர்ந்தவர். இவர்களது குடும்பம் சென்னை அருகிலுள்ள பொன்னேரிக்கு குடிபெயர்ந்தது.

அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவாற்றி குடும்பத்தைப் பராமரித்து வந்தார். அதன் காரணமாக இயல்பிலேயே ஆன்மிக நாட்டமும், இறைஞானமும் வாய்க்கப் பெற்றவராக வளர்ந்த ராமலிங்கம், சிறுவயதிலேயே ஆன்மிக உபன்யாசம் செய்து புகழ் பெற்றார். சென்னை கந்தகோட்டத்தில் உறைந்த முருகனை வழிபட்டு வந்த அவர், விரைவிலேயே உருவமற்ற அருட்பெருஞ்சோதியே கடவுள் என்று உணர்ந்தார்.

சன்மார்க்கம் உதயம்:

பிறப்பால் சைவ சமயத்தினராக இருந்தாலும், அனைத்து சமயங்களையும் நேசிக்கும் உள்ளம் கனிந்தவராக ராமலிங்கர் இருந்தார். தனது ஞானப்பெருக்கால் ‘சன்மார்க்கம்’ என்ற புதிய தத்துவத்தை அவர் நிறுவினார். புலால் மறுத்தல், பிறவுயிர்க் கொலை தவிர்த்தல், சாதி- மத- இன- மொழி பேதங்களை மறுத்தல், கடவுளருக்கு உயிர்ப்பலி தடுத்தல் ஆகியவற்றை ஊர்தோறும் சென்று பிரசாரம் செய்தார்.

ராமலிங்கர் சமய உபன்யாசகர் மட்டுமன்று. அவர் ஓர் உரையாசிரியர், கவிஞர், இதழாசிரியர், பதிப்பாளர், தீர்க்கதரிசி, சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர் எனப் பல பரிமாணங்களை உடையவர்.

தனது போதனைகளைப் பரப்ப, ஜீவ காருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகிய உரைநூல்களை ராமலிங்கர் இயற்றினார். தமிழின் உரைநடைப் போக்கில் இவரது எழுத்துகள் பெரும் மாற்றம் நிகழ்த்தியவையாகக் கருதப்படுகின்றன.

இவர் இயற்றிய ஆன்மிகப் பாடல்களின் திரட்டு ஆறு திருமுறைகளாக ‘திருவருட்பா’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆசிரிய விருத்த நடையில் அமைந்த 5,818 அருட்பாடல்கள் திருவருட்பாவில் இடம்பெற்றுள்ளன.

அமுதசுரபி ஆனவர்:

இவர் வாழ்ந்த காலம் தமிழகத்தில் பெரும் பஞ்சம் வாட்டியது. ஆங்கிலேய ஆட்சியின் தடையற்ற தானிய ஏற்றுமதியாலும், இயற்கை வஞ்சித்ததால் ஏற்பட்ட வறட்சியாலும் லட்சக் கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாகினர். அப்போது ஏழை மக்களுக்கு உணவளிக்க வடலூரில் தருமசாலையைத் துவக்கினார் ராமலிங்கர். இதற்காக வடலூர் மக்களிடம் இரந்து பெற்ற 80 காணி நிலத்தில் அணையா அடுப்புடன் கூடிய தருமசாலையை நிறுவினார் ராமலிங்கர்.

1867, மே 23-ஆம் தேதி தருமசாலை துவங்கியது. அன்றுமுதல் இன்றுவரை, அங்கு இடையறாது அன்னதானம் நடைபெற்று வருகிறது. பஞ்சத்தால் உணவின்றித் தவித்த லட்சக் கணக்கான மக்களை பேரழிவிலிருந்து காத்ததால் அவர்  ‘வள்ளலார்’ என்ற நாமம் பெற்றார். ஏழைகளுக்கு உணவளிக்க செல்வந்தர்களிடம் கெஞ்சி யாசகம் கேட்கவும் வள்ளலார் தயங்கவில்லை.

ஞானப் பகலவன்:

பசிக்கொடுமை போக்கியதுடன் மக்களின் அஞ்ஞான இருள் போக்கவும் வள்ளலார் முயன்றார். சமய நல்லிணக்கம், தீண்டாமைக்கு எதிர்ப்பு போன்ற முற்போக்குக் கருத்துகளுடன் ஆன்மநேய ஒருமைப்பாட்டை விளக்கி, எவ்வுயிர்க்கும் பேதமில்லாப் பெருநிலையை மனிதர்கள் அடைய வேண்டும் என்று வள்ளலார் போதித்தார்.

இதற்காக, வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார். அங்கு அருட்பெருஞ்சோதி வழிபாட்டை புதிய வழிமுறையாக்கினார். சோதி வடிவானவன் இறைவன்; அவனை சக மானுடருக்கு சேவை செய்வதன் மூலமாகவும், உள்ளார்ந்த தியானம் மூலமாகவும் உணர முடியும் என்பதே வள்ளாரின் உபதேசம்.

ஐம்பது ஆண்டுகாலம் எறும்பு போல சுறுசுறுப்புடன் மானுட சேவையாற்றிய வள்ளலார், 1873, ஜனவரி 30-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, தைப்பூசத் திருநாளன்று, தான் நிறுவிய சத்தியஞான சபையில் ஏற்றிவைத்த சோதியிலேயே கலந்தார்; தனது பூதஉடல் யாருக்கும் புலப்படாமலேயே மறைந்தார். அதன் காரணமாக நித்ய சிரஞ்சீவியாக வள்ளலார் வழிபடப்படுகிறார்.

இன்றும் ஆண்டுதோறும், தைப்பூச நன்னாளன்று வள்ளலார் அன்பர்கள், வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் லட்சக் கணக்கில் திரண்டு வள்ளலார் விழா கொண்டாடுகின்றனர். அன்று ஒருநாள் மட்டும் சத்தியஞான சபையில் ஏழு திரைகளை நீக்கி சோதி வழிபாடு நடத்தப்படுகிறது.

தினமணி

(பொங்கல் திருநாள்- 2014 சிறப்பிதழ்- கோவை)

பொங்கல் நன்னாள் கவிதைகள்

14 Jan

1. உவகைத் திருநாள்

.
தை மகள் வருகை- இந்தத்
தரணிக்கு உவகை
நைந்தவை ஒழிய – புது
நன்மைகள் பெருக,
தை மகள் வருகை- இந்தத்
தரணிக்கு உவகை!
.
அனுதினம் நம்மைக் காக்கும்
அருணனின் திறனைப் போற்றி,
இனிமைகள் தொடர வேண்டும்
இனிய நற் பெருநாள் பொங்கல்!
.
உணவினை நல்க வேண்டி
உழைத்திடும் உழவர் கூட்டம்
மணமிகு மகிழ்ச்சி கொள்ளும்
மங்கலத் திருநாள் பொங்கல்!
.
உழவனின் உற்ற தோழன்
உருக்கென நிகர்த்த தோளன்
கழனியில் கடமை ஆற்றும்
காளையின் பெருநாள் பொங்கல்!
.
குருதியை அமுதம் ஆக்கி
குவலயம் காக்க வாழும்
அரிய நற் பண்பின் அன்னை
ஆவினத் திருநாள் பொங்கல்!
.
அடக்கமும் அன்பும் சூழ
அழகுடன் அருளும் சேர
மடந்தையர் துணையைவேண்டும்
மாதவப் பெருநாள் பொங்கல்!
.
‘அவனியில்அல்லல் மாயும்
அரும்பிடும் இன்ப வாழ்வு!
கவலைகள் கெடுக’வென்று
களித்திடும் திருநாள் பொங்கல்!
.

***

.

2. பொங்கல் பொலிக!

.

பொங்கல் பொலிக, நன்மை மிளிருக!
எங்கள் எண்ணம் சிறக்க!
சங்கத் தமிழின் வன்மை ஓங்கிட
மங்களம் எங்கும் மிகுக!

(பொங்கல்)
.

ஏழை, செல்வன், மாற்று மதத்தான்
என்பது இங்கே இல்லை!
வாழை, கொய்யா, மாம்பழம் எனினும்
வகையினில் பழங்கள் ஒன்றே!

(பொங்கல்)
.

வருடம் முழுதும் உழைத்துக் களைத்த
உழவர் களிக்கும் திருநாள்!
கரும்பும் நெல்லும் கனிகளும்
கதிரினை வணங்கும் பெருநாள்!

(பொங்கல்)
.

மாரண வீரர் விழுப்புண்ஏந்தி
காளையை அடக்கிடுகின்றா!
பாரத மண்ணின் பண்போடு கலந்த
பசுவை வணங்கிடுகின்றோம்!

(பொங்கல்)
.

பொங்கல் பொலிக, பொங்கல் பொலிக!
மங்களம் எங்கும் மிகுக!

.

***

.

3. எரிக்கப்படாத குப்பைகள்…

.
பரணில் இருக்கும் பழைய பொருட்களில்
உபயோகமற்ற ஏதாவது இருக்கும்
ஒவ்வொரு போகியிலும் எரிக்க.
.
வீட்டின் புழக்கடையில் கரையான் அரித்து
எஞ்சிய மரச்சாமான்கள்
ஒவ்வொரு போகியிலும் சாம்பலாகும்.
.
போன வருடம் படித்த பாடப் புத்தகங்கள் கூட,
இந்த வருட போகியில்
எதுவும் கிடைக்காவிடில் எரிக்கப்படலாம்.
.
உபயோகமற்ற, வீணாகிப்போன, காலாவதியான
எந்தப் பொருளும் பொருத்தமானதே
போகியில் கொளுத்த.
.
ஆனால், ஒவ்வொரு வருடமும் வீணாகக் கடக்கிறது-
பண்டிகையின் தாத்பரியம்  உணராமல்
எதை எதையோ எரித்து.
.
.
தினமணி (14.01.2014)
(பொங்கல் திருநாள் -2014 சிறப்பிதழ் – கோவை)
.