Archive | April, 2014

காதுகள் ஜாக்கிரதை!

8 Apr

Noise

அந்தத் தனியார் பேருந்து இருளைக் கிழித்துக்கொண்டு நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. பெரும்பாலான பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தனர். பேருந்தின் ஒலிபெருக்கியில் திரைப்பாடல் ஒன்று அளவுக்கதிகமான சத்தத்தில் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது.

வயதான பயணி ஒருவர் தனக்கு வந்த அலைபேசி அழைப்பை செவிமடுக்க முடியாதவராகத் திணறினார். அருகே நின்றிருந்த பேருந்து நடத்துநரிடம் சற்றே பாடலின் சத்தத்தைக் குறைக்குமாறு வேண்டினார் அந்த முதியவர். நடத்துநரோ, சத்தம் குறைவாகத் தானிருக்கிறது என்று அசிரத்தையுடன் பதில் கூறிவிட்டு அகன்றார்.

பெரியவர் பாடலின் அதீத ஒலியால் அலைபேசியில் பேச முடியாமல் திணறினார். உடனே அவரருகே இருந்த மற்றொரு பயணி பெரியவருக்கு ஆதரவாக நடத்துநரிடம், பாடலின் சத்தத்தைக் குறைக்குமாறு கூறினார். அடுத்து நடந்தது தான் கொடுமை. ஒட்டுநரிடம் சென்ற நடத்துநர் ஏதோ கூற, உடனே அந்தப் பாடலின் சத்தத்தை மேலும் அதிகரித்துவிட்டார் ஓட்டுநர். அடுத்தவரை இம்சித்து மகிழும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருக்க, இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் பயணம் தொடர்ந்தது. அந்தத் தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் ஏதோ சாதித்துவிட்டதுபோல இறுமாப்புடன் பேருந்தை இயக்கினர். இடையிடையே, ஒற்றைக்கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்துக்கொண்டு, பாடல்களை ரிமோட் கருவியால் மாற்றவும் செய்தார் ஓட்டுநர்.

உண்மையில், பேருந்தின் பயணிகள் அதன் சேவைக்கு நுகர்வோர்கள். நுகர்வோர் உரிமைகள் அந்த பேருந்துப் பயணிகளுக்கும் உண்டு. தனக்குத் தொந்தரவான அம்சம் சேவையில் தென்பட்டால் அதைத் தடுக்கும் உரிமை பயணிகளுக்குண்டு. ஆனால் பெரும்பாலான பயணிகள் இதை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் பேருந்தின் நடத்துநருக்கும் ஓட்டுநருக்கும் கூட பயணிகளின் மதிப்பு தெரியவில்லை. பேருந்தின் இயக்கம் தங்கள் பொறுப்பில் இருக்கும்போது அந்தக் காலகட்ட அளவில் அதன் உரிமையாளர்களாகவே தங்களை அவர்கள் கருதிக் கொள்வது தான் இந்த அலட்சிய மனோபாவத்திற்குக் காரணம்.

பயணிகளின் உரிமைகளை மட்டுமல்ல, செவிட்டுத்தன்மையை உருவாக்கும் ஒலிமாசு குறித்தும், மேற்படி பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அறிந்திருக்க மாட்டார்கள். 60 டெசிபலுக்கு மேற்பட்ட ஒலியால் மனிதர்களின் காது உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன; 140 டெசிபல் அளவுள்ள ஒலியை தொடர்ந்து கேட்டால் காது மந்தமாகி செவிட்டுத்தன்மை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நமது புலன்களில் மிகவும் நுட்பமானவை காதுகள். சராசரியாக 50 டெசிபல் ஒலியைக் கேட்பதற்கான வகையிலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் இயங்கும் வாகனங்களின் இரைச்சல் அளவு 85 டெசிபல் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. அதுவே, பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களை அறியாமலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பேருந்தின் உள்ளே அதீத சத்தத்துடன் ஒலிபரப்பப்படும் பாடலின் விளைவை சொல்லத் தேவையில்லை.

அதீத ஒலியைத் தொடர்ந்து கேட்பதால், செவித்திறன் இழப்பு, தூக்கம் பாதிப்பு, உட்செவியில் ரீங்காரம், நரம்புத் தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே தான் வாகனங்களில் பொருத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அகற்றப்படுகின்றன.

காற்றொலிப்பான்கள் மீது கவனம் செலுத்தும் அதிகாரிகள், பேருந்துகளில் பொருத்தப்படும் ஒலிபரப்பு சாதனங்கள் குறித்தும் சற்றே கவனம் செலுத்த வேண்டும். பேருந்துகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கொண்ட அவர்களால் தான் பயணிகளின் செவித்திறனைக் காக்க முடியும்.

பேருந்தில் இருந்து இறங்கும்போது மேற்படி நடத்துநரிடம், ஏன் இவ்வாறு பாடலை சத்தமாக ஒலிபரப்புகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் தூக்கிவாரிப் போட்டது.

“நாங்கள் இரவு கண்விழித்து பேருந்தை இயக்குகிறோம். இவர்கள் சுகமாக பேருந்தில் தூங்கிவழிந்து, தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தைக் கூட முட்டாள்தனமாகத் தவற விடுகிறார்கள். அதனால் தான் பாடலை சத்தமாக வைக்கிறோம்” என்றார் நடத்துநர். நல்லவேளை நான் பயணத்தில் தூங்கவில்லை.

தினமணி (08.04.2014)

.

Advertisements

வெற்றிக்கு சில சூத்திரங்கள்

7 Apr

VETTRI

தன்னம்பிக்கை வழிகாட்டி நூல்கள் வெளியிடுவது இப்போது பதிப்பகங்களின் பேஷனாகிவிட்டது. குறைந்தபட்ச விற்பனை உத்தரவாதம் இருப்பதால், அரைத்த மாவையே அரைப்பதுபோல தன்னம்பிக்கை உபதேசம் மிகுந்த நூல்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது. இந்நிலையில், இந்த நூலின் தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது.

வழக்கமான தன்னம்பிக்கை நூல்கள் போலல்லாமல், தனது 17 ஆண்டுகால நிறுவன அனுபவத்தைப் பிழிந்து சாறாகக் கொடுத்திருப்பதும், பாரம்பரியக் கண்ணோட்டத்துடன் கூடியதாக எழுதியிருப்பதும் தான் இந்நூலின் தனிச்சிறப்புகள்.

இந்நூலாசிரியர் இயகோகா சுப்பிரமணியம், கோவையில் பிரபலமான தொழிலதிபர்; ஜவுளித்துறைக்குத் தேவையான சிந்தடிக் டேப்களைத் தயாரிக்கும் இந்திய- ஸ்விஸ் கூட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கோவையிலிருந்து வெளிவரும் “நமது நம்பிக்கை’ மாத இதழில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட சூத்திரம் கிடையாது என்று கூறும் இவர், மேற்கத்திய நிர்வாக முறையும் உயர்கல்வியும் மட்டுமே தொழில்துறை வளர்ச்சிக்குப் போதுமானதல்ல என்கிறார். நமது பண்பாட்டின் அடிப்படையில், தனித்துவத்துடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியை நிரந்தரமாக்க முடியும் என்று தனது அனுபவங்களுடன் விளக்குகிறார்.

உயர் குணங்களே வெற்றியை அருகில் கொண்டுவரும் என்று கூறும் நூலாசிரியர், விருந்தோம்பலால் உயர்ந்த மனிதர்களின் கதைகளை உதாரணமாகக் கூறுகிறார். கட்டுப்பாடற்ற வாழ்க்கை இலக்கை எட்டாது என்பதையும் ஒரு முன்னோடியாக எச்சரிக்கிறார்.

இந்நூலில் காணப்படும் வெற்றியாளர்கள் பலரும் வானிலிருந்து குதித்தவர்களல்ல, நம்மைப் போன்ற சாமானியர்கள் தான். அதுமட்டுமல்ல, கோடீஸ்வரராவது மட்டுமே சிகரத்தை எட்டுவதல்ல, அவரவர் துறையில் ஒவ்வொருவரும் பெறும் வெற்றியே சமுதாயத்தையும் தேசத்தையும் வாழ வைக்கிறது என்கிறார் நூலாசிரியர். வித்யாசமான சிந்தனைகளை மனதில் விதைக்கும் அற்புதமான இந்நூல், இளைஞர்களுக்குப் பரிசாக வழங்க ஏற்றது.

***

வெற்றி வெளிச்சம்

இயகோகா சுப்பிரமணியம்

176 பக்கங்கள், விலை: ரூ. 95,

விகடன் பிரசுரம்,

757,அண்ணா சாலை, சென்னை- 600 002,

தொலைபேசி: 044- 4263 4283.

.