Archive | May, 2014

கருத்துரிமையின் எல்லை…

27 May

URAnandamurthy

யு.ஆர். அனந்தமூர்த்தி

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கர்நாடக மாநில பா.ஜ.க. தொண்டர்கள் மிரட்டல் விடுத்து வருவது கருத்துரிமை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம், முந்தையத் தேர்தல்களைவிட காரசாரமாக இருந்தது உண்மையே. குறிப்பாக பா.ஜ.க.வின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி பல தரப்பினரின் கண்டனங்களுக்கும் ஆளானார்.

பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகள் மட்டுமல்லாது, இடதுசாரிப் பார்வை கொண்ட அறிவுஜீவிகளும், சுதந்திரச் சிந்தனையாளர்களும்கூட மோடியைக் கடுமையாக எதிர்த்தனர். அவ்வாறு மோடியை விமர்சித்தவர்களுள் ஒருவர்தான் எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி.

அவர் தேர்தலின்போது ‘மோடி பிரதமரானால் நாட்டை ரத்தக்களறி ஆக்கிவிடுவார். அவர் பிரதமரானால் நான் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவேன்’ என்று கூறியிருந்தார்.

இப்போது மோடி மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், மோடியை எதிர்த்த யு.ஆர். அனந்தமூர்த்தி தான் சொன்னதைச் செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. தொண்டர்கள் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

யு.ஆர். அனந்தமூர்த்தி தேர்தல் நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய பேச்சுக்காக பா.ஜ.க.வினர் அத்துமீறுவது கருத்துரிமைக்கு சவால் விடுப்பதாகும் என்கின்றனர் பிரபல எழுத்தாளர்கள்.

முன்னாள் பிரதமர் தேவே கவுடா, ‘மோடி பிரதமரானால் அரசியலிலிருந்தே ஓய்வு பெறுவேன்’ என்று சொன்னதால், பா.ஜ.க.வினர் ‘எப்போது ஓய்வு’ என்று கிண்டலாகக் கேட்டு வருகின்றனர்.

மோடி பிரதமரானால் தனது பெயரை மாற்றிக் கொள்வதாக அறிவித்த பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும், பா.ஜ.க.வுக்கு வாக்களிப்போரை கடலில் தூக்கிப் போட வேண்டும் என்று சொன்ன ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் இப்போது அமைதியாகி விட்டனர். அவர்களை பா.ஜ.க.வினரும் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.

மோடியைக் கண்டதுண்டமாக வெட்டுவேன் என்று சொன்ன உ.பி. காங்கிரஸ் தலைவர் இம்ரான் மசூத்தைக் கூட பா.ஜ.க.வினர் மறந்துவிட்டனர்.

ஆனால், மோடியை எதிர்த்த எழுத்தாளர்கள் மட்டும் கண்டனத்துக்கு ஆளாவது தொடர்கிறது. இதற்கு காரணம், எழுத்தாளர்கள் அரசியல் சார்பற்று நடுநிலையில் இருக்க வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம். இந்த இடத்தில் கருத்துரிமை குறித்த விவாதம் தேவையாகிறது.

கருத்துரிமை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதுவதும் பேசுவதும் நியாயமாகாது. குறிப்பாக, அறிவுஜீவிகள் என்று கருதப்படும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நிதானமற்ற வசைகளையும் மிரட்டல்களையும் அவர்கள் வெளிப்படுத்தினால் அவர்களது மரியாதை தாழவே செய்யும்.

அதேபோல கருத்துரிமை என்பது தனக்கு மட்டுமே உரிமையானது என்ற எண்ணமும் தவறாகும். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி. குரூஸ் தேர்தலின்போது மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தபோது இடதுசாரி அறிவுஜீவிகளால் வசைபாடப்பட்டதையும் மறக்க முடியாது.

பிறரின் கருத்துரிமையை மதிப்பவர்களுக்கு மட்டுமே கருத்துரிமை பெறவும் தகுதி உண்டு. அதேபோல அடுத்தவரின் மரியாதையை மதிப்பவருக்கே தனது மரியாதையைக் காத்துக்கொள்ளும் உரிமை உண்டு. இந்த இடத்தில் கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி செய்த தவறு புரிந்திருக்கும்.

மோடியை விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு. ரொமீலா தாப்பர், கிரீஷ் கர்னாட், பிரபாத் பட்நாயக் உள்ளிட்ட ஒரு பெரும் அறிவுஜீவிகள் படையே மோடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியது. அதற்கு எதிராக பா.ஜ.க. ஆதரவு அறிவுஜீவிகளும் பிரசாரம் நடத்தினர். அதுதான் உண்மையான ஜனநாயகம்.

இப்போது யு.ஆர். அனந்தமூர்த்தி மட்டும் பத்மவியூகத்தில் சிக்கியவராகத் தத்தளிக்கிறார். முன்னர் மோடியை எதிர்த்து முழங்கிய பலர் இப்போது மெüனமாகிவிட்டனர். சுதந்திரச் சிந்தனையாளராயினும் நா காக்க வேண்டும் என்பதை இப்போது அனந்தமூர்த்தி உணர்ந்திருப்பார்.

இத்தருணத்தில், வெற்றி பெற்றவர்களுக்கு பெருந்தன்மையான அணுகுமுறை தேவை என்பதை மோடி தனது தொண்டர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய நரேந்திர மோடி, ‘ஜனநாயகத்தில் எதிரிகள் இல்லை; போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். தேர்தல் நேர விரோதங்களை மறந்து நாட்டிற்கு அனைவரும் உழைப்போம்’ என்று பேசினார். இதன் பொருளை அவரது ஆதரவாளர்கள் உணர வேண்டிய தருணம் இது.

தினமணி (27.05.2014)

Advertisements