Archive | July, 2014

விதையின் விதி

25 Jul

Jungle

வீழ்கின்ற விதையெல்லாம்

 மண்ணை ஜெயிப்பதில்லை.

முளைக்கின்ற விதையெல்லாம்

மரமாவதில்லை.

விதையெல்லாம் மரமானால்

 காடு தாங்காது.

.

விரிந்து கிடக்கிறது காடு.

விதவிதமான பசுமையில்

எத்தனை செடிகள், கொடிகள், மரங்கள், புதர்கள்?

எங்கும் வெளிப்படுகிறது இறைமை.

.

முளைப்பதும் கருகுவதும்

விதைக்குள் எழுதப்பட்டிருக்கும்  விதி.

சிறுவிதைக்குள் காடும் இருக்கலாம்;

காடெங்கும் புதைந்து கிடக்கிறது

காடுகளின் எழுதப்படாத விதி.

.

சாத்தியக் கூறுகளால் ஆனது

விதைகளின் விழிப்பு.

சாத்தியங்களின் அசாத்தியம்

உறக்கம் கலையும்

விதையின் உயிர்ப்பில் தெரியும்.

.

குறிப்பு:

இக்கவிதை, அடிக்கடி தனது பேச்சில் ‘சாத்தியக்கூறு’ என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்தும்  அறம் அறக்கட்டளை நண்பர் குப்புசாமி சிவகுமாருக்கு ‘டெடிகேட்’ செய்யப்படுகிறது.

.