Archive | October, 2014

அஹிம்சை தத்துவத்தின் மூலவர்

28 Oct

மகாவீரர்

(பரிநிர்வாண தினம்: ஐப்பசி-  தேய்பிறை சதுர்த்தசி- தீபாவளி)

பாரதப் பண்பாட்டு வளர்ச்சியிலும் மலர்ச்சியிலும் சமண சமயத்திற்கு பெரும் பங்குண்டு. கொல்லாமை, அஹிம்சை, வாய்மை உள்ளிட்ட பாரதத்திற்கே உரித்தான குணநலன்களை சமயம் வாயிலாக மக்களிடம் பதிவு செய்தவர்கள் சமணர்களே.
சமண சமயத்தைப் பரப்ப உதித்தவர்கள் ‘தீர்த்தங்கரர்கள்’ எனப்படுகின்றனர். அதன் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.

பாரதத்தின்  வடபகுதியில், (தற்போதைய பீகாரில் ஜமுயி மாவட்டத்தில்) லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்ற இடத்தில், சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் மகனாக,   பொது யுகத்திற்கு முன் (கி.மு.) 599-ஆம் ஆண்டில், சித்திரை மாதம், வளர்பிறை பதின்மூன்றாம் நாள் வர்த்தமானர் பிறந்தார்.

அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே நாட்டில்  வளங்களைப் பெருக்கியதாக நம்பப்படுகிறது;  அவர் பிறக்கும் தறுவாயில் அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி காணப்பட்டது.  எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய  ‘வர்த்தமானன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

அரசி திரிசாலாவுக்கு மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், அவர் கருவுற்றிருக்கையில் 14  சுப கனவுகளைக் கண்டதாகவும் சமண புராணங்கள் கூறுகின்றன.  உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜெயின் – ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர்.

சிறு வயதிலேயே ஆன்மிக நாட்டம்:

மன்னர் சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார் வர்த்தமானர். இருப்பினும் அச்சிறுவயதிலேயே  ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.

வர்த்தமானரின் குடும்பம் சமண மதத்தைப் பின்பற்றிய குடும்பம்.  வர்த்தமானர், தியானத்திலும் தன்னையறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக அவர் விளங்கினார்.  மெதுவாக, உலகச் சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.

தமது முப்பதாவது வயதில் அரசாட்சியையும் குடும்பத்தையும் துறந்து, துறவறம் மேற்கொண்டார் வர்த்தமானர்.  பிறகு துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டார்.  மனிதர்கள்,  தாவரங்கள்,  விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும்  அவர்  மதிப்பளித்தார்; அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.

இந்தக் காலகட்டத்தில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். புலன்களை வென்ற அவரது பொறுமையும் வீரமுமே அவர்  ‘மகாவீரர்’ என அழைக்கப்படக் காரணமாயிற்று. இந்த ஆன்மிகத் தேடலின் விளைவாக  ‘கைவல்ய ஞானம்’ கிடைக்கப் பெற்றார்.

அதன்பிறகு மகாவீரர்  நாடு முழுவதும் யாத்திரை செய்து, மக்களிடையே தாமறிந்த ஆன்மிக விடுதலையின் உண்மையை பரப்பத் துவங்கினார். காலணியில்லா வெறும் கால்களில், துணிகள் ஏதும் அணியாமல், கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரது பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது.

தீபாவளியன்று மோட்சம்:

தமது 72-வது வயதில், பவபுரி என்னுமிடத்தில், தீபாவளியன்று பரிநிர்வாணம் (சமணர்கள் மோட்சம் அடைவதை இவ்வாறு கூறுவர்) அடைந்தார் மகாவீரர். அவர் இறைப்பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் இல்லங்களில் தீபமேற்றிக் கொண்டாடுகிறார்கள்.

மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது அணுக்கச் சீடர்களால்  ‘அஹம் சூத்திரங்கள்’ என வாய்மொழியாகவே மனனம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டன. காலப்போக்கில் பல அஹம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும்,  மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன.

சமணர்களின் ஒரு பிரிவினரான  ‘சுவேதம்பரர்கள்’ இவற்றை அப்படியே வரிக்கு வரி உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர்; சமணர்களின் மற்றொரு பிரிவினராகிய  ‘திகம்பரர்கள்’ இவற்றை உபதேச ஆதாரமாக மட்டுமே ஏற்கின்றனர்.

காலப்போக்கில் சமணர்கள் வேத சமயப் பழக்கங்களையும் சடங்குகளையும் கைக்கொண்டனர். மகாவீரரை உருவச்சிலையாக வடித்து வழிபடும் போக்கு பிற்காலத்தில் உருவானது. எனினும், பாரதத்தின் சைவ உணவுப் பழக்கம், கொல்லாமை, துறவுநெறி ஆகியவற்றை வளர்த்தெடுத்ததில் சமணம் பெரும் பங்கு வகித்துள்ளது.

மகாவீரரின் எட்டு கொள்கைகள்:

மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன.  இவற்றில் மூன்று கொள்கைகள் கருத்துமயமானவை;  ஐந்து கொள்கைகள் நெறிவழிப்பட்டவை. இவற்றின் குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும்.

இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஒருமையையும், நெறிவழிப்படுத்தப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மிக வளமை பெறும் வழியையும் காட்டுவனவாக உள்ளன.

அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன. அவை: அநேகாந்தவடா, சியாத்வடா, கர்மா.

ஐந்து நெறிவழிகள்: அகிம்சை, சத்தியம், அஸ்தேயம்,  பிரமச்சரியம்,  அபாரிகிருகம்.

மகாவீரரின் மும்மணிகள்:

மகாவீரர்  ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு;  அது தனது செயல்களின் விளைவாக கர்மா (விதிப்பலன்) எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது’ என்று கூறுகிறார்.

கர்மவினையின் மாயையால் ஒருவர் தற்காலிகமான,  மெய்யின்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறார். இவற்றின் தேடலில் அவருக்கு சுயநலத்தால் வன்முறை எண்ணங்களும் செயல்களும், கோபம், வெறுப்பு, பொறாமை உள்ளிட்ட குணங்களும்,  பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மவினைப் பளு கூடுகிறது.

இவற்றிலிருந்து விடுபட,  நன்னம்பிக்கை (சம்யக்-தர்சனம்),  நல்லறிவு  (சம்யக்-ஞானம்),  நன்னடத்தை (சம்யக்-சரித்திரம்) ஆகிய மூன்று மணிகள் தேவை  என்று மகாவீரர்  வலியுறுத்தினார்.

ஐந்து உறுதிமொழிகள்:

நன்னடத்தைக்கு துணைநிற்க ஜைன மதத்தில் ஐந்து உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்:

  • வன்முறை தவிர்த்தல் (அஹிம்சை)

எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்.

  • வாய்மை (சத்தியம்)

தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்

  • திருடாமை (அஸ்தேயம்)

தனக்கு உரிமையற்ற எதையும் அபகரிக்காது இருத்தல்

  • பாலுறவு துறவு (பிரமச்சரியம்) –

உடலின்பம் துய்க்காதிருத்தல்

  • உரிமை மறுத்தல்/ பற்றற்றிருத்தல் (அபாரிகிருஹம்) –

மக்கள்,  இடங்கள்,  பொருள்கள் மீது பற்றற்று இருத்தல்.

சமய சீர்த்திருத்தம்:

மகாவீரர், ஆண்களும் பெண்களும் ஆன்மிக நோக்கில் சரிசமமானவர்கள் என்றும், இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார்.

அவரை அனைத்துத் தரப்பு மக்களும்,  சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்களும், விளிம்புநிலை மக்களும் பின்பற்றினர்.

அன்றைய காலகட்டத்தில் பாரதத்தில் நிலவிய வர்ணாசிரம முறையை விலக்கி,  சமயத்தில் நான்கு நிலைகளை உருவாக்கினார்; அவை,  ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்), பொதுமகள் (ஷ்ராவிக்).  இதனை ‘ சதுர்வித ஜைன சங்கம்’ என்று அழைக்கலாயினர்.

சமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது.  மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை அடியொற்றியவையே.  மகாவீரர் பண்டைய மதத்தின் சீர்திருத்தவாதியே; அவர் புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்ல.

தனது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர் மகாவீரர். எனினும் தமது காலத்திற்கேற்ப சமண மதக் கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார். அதன் விளைவாக, பாரத ஞான தரிசனங்களில் ஒன்றான சமணம் தனி மதமாக வளர்ந்து, பாரத வரலாற்றில் பேரிடம் பெற்றது.

உண்மையில் மகாவீரர், பாரதத்தின் தொன்மையான சனாதன   மதத்தின்  சீர்திருத்தவாதியே ஆவார். மகாத்மா காந்தி சமணர்களின் அடிப்படைக் கொள்கையான அஹிம்சையை அரசியல் போராட்ட ஆயுதமாக மாற்றியபோது தான் அதன் மாபெரும் சக்தி உலகிற்கு தெரிந்தது.

பாரதம் என்ற தேசத்தின் அடியாழத்தில் பாயும் நீரோட்டங்களில் சமணர் சமயமும் அவர்கள் வழங்கிய ஞானமும் முக்கியமானவை. மகாவீரர் அந்த நதிப்பெருக்கில் மாபெரும் அலைகளை ஏற்படுத்திய மகத்தான ஞானி ஆவார்.

 

காண்க: தேசமே தெய்வம்

Advertisements

ஜக்குபந்தி

22 Oct

.

பழுப்பும் பசுமையும் கலந்த மானாவாரி பூமியில்

சோளமும் கடலையும் மிளகாயும்

வெண்டையும் துவரையும் வெள்ளரியும்

பனையும் தென்னையும் பருத்தியும்

விளைந்த வயல்களில் கழிந்த பால்யம் எனது…

.

படித்துப் பட்டம் பெற்று

பல தலைமுறை விவசாயம் துறந்து

தொழில்வயிற் பிரிந்துசென்ற

சொந்த கிராமம் காண

நாற்பது ஆண்டுகளாகிவிட்டது-

காலம் கருணையற்றது.

.

ஊருக்கு கிழக்கே

மாபெரும் மணல் பள்ளம்.

இங்குதான் ஆண்டுக்கு ஆறுமாதம்

நீச்சலடித்த ஆறு ஓடியது.

ஆற்றுமேட்டில் ஆயிரம் தென்னைகள்

இருந்த இடத்தில் வரவேற்கிறது

‘லட்சுமி கார்டன்’ மனைப்பிரிவு.

பத்திரப்பதிவுக் கட்டணம் இலவசம்

என்கிறது அருகிலுள்ள விளம்பரம்.

.

இதன் பக்கவாட்டில் இருந்த மாந்தோப்பில்

பூப்பறிக்கும் நோன்புக்குக் கூடி

கும்மாளமடிப்போம்.

அங்கு நிமிர்ந்து நிற்கின்றன

ராட்சதக் காற்றாலைகள்.

.

ஊருக்குத் தெற்கே கிராமக்கோடியில்

விரிந்துகிடந்த மயானம் கூட மாறிவிட்டது.

உடைந்த கூரையுடன் காட்சியளிக்கும்

சுடுகாட்டின் அருகில் பெருகி நிற்கிறது

‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’.

அங்கு பறக்கின்றன கட்சிக் கொடிகள்.

.

தென்மேற்கே வாரச்சந்தை மைதானம்

இருந்த இடத்தில் இருக்கிறது

ஓட்டுக்கூரைகளுடன் ‘இந்திரா நகர்’.

அருகில் பெட்ரோல் பங்க்.

அதன் இடப்புறம் பருத்திகிடங்கு இருந்த இடத்தில்

மும்முரமாக இயங்குகிறது டாஸ்மாக் மதுக்கடை.

.

ஊருக்கு மேற்கே

கற்கள் பரவிய பாவடித்திடலில்

முளைத்திருக்கிறது பேருந்து நிலையம்.

அங்கு முடைநாற்றமெடுக்கிறது

கட்டணக் கழிப்பிடம்.

அதன்முன் அமர்ந்து பீடி வலிக்கும் பெரியவரை

எங்கோ பார்த்ததாக ஞாபகம்.

.

அரை டிராயர் பருவத்தில் தாவி விளையாடிய

மாரியம்மன் கோயிலின் தூண்களைக் காணவில்லை.

அந்த இடத்தில் கிரானைட் தளத்துடன்

மின்னுகிறது அர்த்த மண்டபம்.

வண்ணங்களில் மிளிர்கிறது கோபுரம்.

கோயில் வாயிலில் வைக்கப்பட்டிருக்கிறது

அறநிலையத் துறையின் கட்டண அறிவிப்பு.

.

வடமேற்கில் இருக்கும்

காமராஜர் காலப் பாலம் மட்டும்

அப்படியே கிடக்கிறது.

துணிவெளுக்க இந்தப் பாலம் கடந்துதான்

மணியகாரர் தோப்புக்கு அம்மாவுடன் செல்வோம்.

பேய் இருப்பதாக வதந்தி உலவிய

அங்கிருந்த புளியந்தோப்பு இருந்த அதே இடத்தில்

சிறு கற்கள் நட்ட மனைப்பிரிவு

வண்ணக்கொடிகளுடன் விரிந்திருக்கிறது.

ஆங்காங்கே கான்கிரீட் வீடுகளுடன் கூடிய

‘ஐஸ்வர்யா லேஅவுட்’டில்

இரண்டு மனை வாங்கினால் ஒரு மனை

இலவசம் என்கிறது அறிவிப்புப் பலகை.

.

ஊருக்கு வடக்கே இருந்த

பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி

மேல்நிலைப் பள்ளியாகி விட்டது.

பள்ளியில் முன்புறம்

புதிதாக அமைந்திருக்கிறது

வேன், டாக்ஸி ஸ்டாண்ட்.

ஏடிஎம் வசதியுடன் கூடிய

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை

கூட வந்துவிட்டது.

கிராமம் முன்னேறிவிட்டது.

.

புழுதிபடப் புரண்டு திரிந்த செம்மண் சாலைகளில்

குண்டும் குழியுமாக தார்ச்சாலைகள்.

எல்லா வீடுகளின் முன்புறமும் தூர்ந்து கிடக்கும்

புத்தம்புதிய சாக்கடைக் கால்வாய்கள்.

ஊரின் மையத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தின்

வலப்புறம் அமைக்கப்பட்ட உலர்தளம்

டூவீலர் ஸ்டாண்ட் ஆகிவிட்டது.

பக்கத்தில் கிராமக் கூட்டுறவு வங்கியின் முன்புறம்

கரைவேட்டிகள் கூட்டம்.

.

வேளாண் கிடங்கு பூட்டிக் கிடக்கிறது.

அதன் ஒருபகுதியில் செயல்படுகிறது ரேஷன் கடை.

எல்லாத் தெருக்களிலும்

ஒளிர்கின்றன மின்விளக்குகள்.

எல்லாத் தெருமுனைகளிலும்

குடிநீர்க் குழாய்களில் காத்திருக்கும் பெண்கள்.

அனைத்து வீடுகளையும் இணைத்திருக்கிறது

டிவி கேபிள் ஒயர்.

.

ஊரின் வடகிழக்கே

சமத்துவத்தை உறுதிப்படுத்த

சுதந்திர வருஷத்தில் அமைக்கப்பட்ட

வட்டக்கிணறு தான் பாழடைந்து கிடக்கிறது.

அதன் உள்ளே ஊரின் கழிவுக் குப்பைகள்

கொட்டப்படுவதைக் காண

கஷ்டமாக இருக்கிறது.

.

– விஜயபாரதம் – தீபாவளி மலர் 2014

.

பாரதத்தின் அறிவியல் ரிஷி

16 Oct

ஜெகதீச சந்திர போஸ்

ஜெகதீச சந்திர போஸ்

(பிறப்பு: 1858, நவ. 30- மறைவு: 1937, நவ. 23)

பூஜ்யம் முதல் வானவியல் வரை,  உலகம் வாழ பாரதம் வழங்கிய அருட்கொடைகள் ஏராளம். ஆனால், நமது அறிவியல் சாதனைகள் முறைப்படி பதிவு செய்யப்படாததால்,  நம்மைப் பற்றி நாமே தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த மயக்கத்தைப் போக்கிய அண்மைக்கால விஞ்ஞானி, வங்கம் தந்த ரிஷியான ஆச்சார்ய ஜெகதீச சந்திர போஸ்.

அடிமைப்பட்ட பாரதத்தில் உதித்து, ஆங்கிலேயனே வியக்கும் வண்ணமாக அரிய சாதனைகளை நிகழ்த்திய போஸ், தனது கண்டுபிடிப்புகளை சொந்த சொத்தாகக் கருதாமல், பழங்கால ரிஷிகள் போலவே உலகுக்கு அர்ப்பணித்தார். தனது தார்மிக நெறி மூலமாக, அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் உலக மக்களை சுரண்டும் போக்கிற்கு எதிராக அமைதியான முறையில் அறிவியல் சாதனைகளை செய்த போஸின் வாழ்க்கை,  இளம் தலைமுறையினர்  அறிய  வேண்டியதாகும்.

பிறப்பும் கல்வியும்:

வங்கத்தின் முன்ஷிகன்ச் மாவட்டத்தில் (தற்போது  வங்கதேசத்தில் உள்ளது) 1858, நவ. 30 ம் தேதி, பிறந்தார் ஜெகதீச சந்திரர். இவரது தந்தை, பகவான் சந்திர போஸ், உதவி ஆணையராகவும் துணை நீதிபதியாகவும் பாரித்பூர் என்ற நகரில் பணியாற்றினார்.  அவர் பிரம்ம சமாஜம் அமைப்பில் தலைவராக இருந்தவர்.   அவரது  தாய்மொழிப்  பற்றின்   காரணமாக, வங்க மொழியில் பயிலும் பள்ளியிலேயே ஜெகதீச சந்திரர் ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.

1869 ல் கொல்கத்தாவின் ஹரே பள்ளியில் சேர்ந்த அவர், பிறகு புனித சேவியர்  பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். 1875 ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேறிய போஸ், புனித சேவியர் கல்லூரியில் சேர்ந்தார். 1879 ல் போஸ் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஐ.சி.எஸ். படிக்கவே போஸ் விருப்பம் கொண்டார். ஆனால், ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யும் அந்தப் படிப்பு வேண்டாம் என்று போசின் தந்தை கூறியதால், லண்டன் சென்று  மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் ஜெகதீச சந்திரர். ஆனால், உடல்நலக் குறைவால் இடையிலேயே படிப்பைவிட்டு விலகி தாய்நாடு திரும்ப வேண்டியதாயிற்று.

அப்போது, அவரது சகோதரியின்  கணவர் ஆனந்தமோகன் (இவர் இந்தியாவின் கணித மேதைகளுள் ஒருவர்) பரிந்துரைப்படி, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் சென்று கிறிஸ்ட் கல்லூரியில் இயல்அறிவியல் படிப்பில் சேர்ந்தார். அதுவே போசின் வாழ்வில் மகத்தான திருப்புமுனையாக அமைந்தது. அங்கு இயல்அறிவியலில்   ‘டிரிப்போஸ்’ பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டமும்  பெற்று (1884) போஸ் நாடு திரும்பினார் (1885). போஸ் உலகம் வியக்கும் இயற்பியல் மேதையாக வேண்டும் என்ற இறைவன் வகுத்ததை யாரால் மாற்ற முடியும்?

கல்லூரிப்  பணியும் சுயமரியாதையும்:

பிறகு, அப்போதைய வைஸ்ராய் ரிப்பன் பிரபு பரிந்துரைப்படி, கொல்கத்தாவின் பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் துறையில் பயிற்சி பேராசிரியராக இணைந்தார். விஞ்ஞான ஆராய்ச்சியில் பெரும் தாகம் கொண்டிருந்த ஜெகதீச சந்திரருக்கு அங்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆயினும் அவர் சிறிதும் மனம் தளரவில்லை.  ஆங்கிலேய அரசின் நிறவெறிக்  கொள்கையால் பாதிக்கப்பட்ட அவர், சுயமரியாதைக்காகவும் போராட வேண்டிவந்தது.

பிரெசிடென்சி கல்லூரியில் போசுக்கு வழங்கப்பட்ட  ஊதியத்திலும் பாரபட்சம் காட்டப்பட்டது. வைஸ்ராய் பரிந்துரைத்தும்கூட, ஜெகதீச சந்திரர் இரண்டாம் பட்சக் குடிமகனாகவே அங்கு நடத்தப்பட்டார். அங்கு பணிபுரிந்த ஐரோப்பாவைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு மாதம் ரூ. 300 சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், போசுக்கு ரூ. 100  மட்டுமே வழகப்பட்டது.  இந்த பாரபட்சத்திற்கு  எதிராக போஸ் போராடினார்.

தனக்கும் ஐரோப்பிய பேராசியர்களுக்கு வழங்கும் அதே  ஊதியம் தரும் வரையிலும், கல்லூரி நிர்வாகம் தரும் ஊதியத்தை வாங்கப் போவதில்லை என்று போஸ் அறிவித்தார்.  அதன்  காரணமாக பொருளாதார சிக்கல்களுக்கு ஆளான போதும், அவர் மனம் கலங்கவில்லை. அவ்வாறு மூன்று ஆண்டுகள் சம்பளம் பெறாமலே பேராசிரியர் பணியில் ஈடுபட்டார், போஸ். அந்த சமயத்தில் தான் (1887) பிரபல பிரம்ம சமாஜத் தலைவர் துர்க்கா மோகன்தாசின் மகள் அபலா என்பவரை திருமணம் செய்து கொண்டார், போஸ். அபலா கணவருக்கேற்ற  பத்தினியாக விளங்கி, அவரது விஞ்ஞான சாதனைகளுக்கு துணை நின்றது வரலாறு.

போசின் மூன்று ஆண்டுகாலப் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. அவரது திறமையை உணர்ந்த கல்லூரி நிர்வாகம், அவரை பணி நிரந்தரம் செய்ததுடன், மூன்று ஆண்டுகளுக்கும் சேர்ந்து போஸ் கேட்ட ஊதியத்தையே வழங்கியது.

ஆராய்ச்சிகளும் நிவேதிதை உதவியும்:

பிரசிடென்சி கல்லூரியில் ஆராய்ச்சி சாலை போதிய வசதிகள் இன்றி இருந்தது. வெறும் 24 சதுர அடி பரப்பளவுள்ள ஆய்வகத்தில் போஸ், தான்  எண்ணிய ஆராய்சிகளை செய்ய முடியாமல் தவித்தார். கல்லூரி நிர்வாகம் ஆய்வுகளை   ஊக்குவிக்காதபோதும்,   தனது ஊதியத்தின் பெரும்பகுதியை செலவிட்டு, தனது வீட்டிலேயே சிறு ஆய்வகம் அமைத்து இயற்பியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் ஜெகதீச சந்திரர். அதற்கு ஊக்கம் அளித்தவர், சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதை.

அயர்லாந்தில் பிறந்த அந்த மாதரசி, பாரதத்தையே தனது தாயகமாக வரித்துக் கொண்டவர். அவருடனான நட்புறவு ஜெகதீச சந்திரருக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. கொல்கத்தாவில் வெளியான சில பத்திரிகைகளில் நிவேதிதை, போஸ் நடத்தும் ஆய்வுகள் குறித்து எழுதி விளம்பரப்படுத்தினார். தவிர, இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் சிலருக்கு தனிப்பட கடிதம் எழுதி, ஜெகதீச சந்திரருக்கு தேவையான கருவிகளை வரவழைத்துக் கொடுத்தார்.

போஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. அந்தக் கட்டுரைகளை இங்கிலாந்தின் இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு அனுப்பி, அவர்களது கருத்துகளைக் கேட்டார்; அமெரிக்காவிலுள்ள விவேகானந்தரின் சீடர்கள் வாயிலாகவும், போஸ் எழுதிய கட்டுரைகளை அமெரிக்க விஞ்ஞானிகளின் பார்வைக்கு நிவேதிதை கொண்டு சென்றார். அவரது முயற்சிகளின் விளைவாக, இங்கிலாந்து, அமெரிக்க விஞ்ஞானிகளிடையே  போசின் புகழ் பரவியது. அதன்பிறகு, இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசால் போசின் திறமைகளை மூடி மறைக்க முடியவில்லை; அவர் கோரிய வசதிகளை அரைகுறை மனத்துடன் அரசு செய்து கொடுத்தது.

தொடர் தவமும் கண்டுபிடிப்புகளும்:

கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டே போஸ் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். மின்காந்த அலைகள் குறித்து அவர் கவனம் சென்றது.  வளிமண்டலத்தில்  உள்ள  மின்காந்த அலைகளின் இருப்பு குறித்து அப்போதுதான் ஆராயப்பட்டு வந்தது. தகவல் தொடர்பில் அவற்றை பயன்படுத்த  முடியும் என்று போஸ் கூறினார். அதற்கு மின்காந்த அலைகளின் நீளத்தை குறைப்பது அவசியம் என்று அவர் சொன்னார்.

1893 ல் ஐரோப்பிய விஞ்ஞானி நிக்கோலா டெஸ்லா ரேடியோ அலைகளை முதல்முறையாக நிரூபித்தார். அதற்கு ஓராண்டு கழித்து, அலைநீளம் குறுக்கப்பட்ட மின்காந்த அலைகளின் பயன்பாட்டை கொல்கத்தாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் நிரூபித்துக் காட்டினார் போஸ். 1894 , நவம்பரில்,  கொல்கத்தா நகரமன்ற அரங்கில், துணைநிலை ஆளுநர் வில்லியம் மெக்கன்சி முன்னிலையில், வெடிமருந்தை எரியச் செய்து, சிறிது தொலைவிலிருந்த மணியை மி.மீ. நீள மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்கச் செய்தார் போஸ்.

இதனை ‘கண்ணுக்குத் தெரியாத ஒளி’ என்று குறிப்பிட்ட போஸ், ”இந்த ஒளி செங்கல் சுவர்களையும் கட்டடங்களையும் ஊடுருவும் தன்மை கொண்டது. இந்தக் கண்டுபிடிப்பின் உதவியால், கம்பியில்லாத  தொலைதொடர்பு  எதிர்காலத்தில் சாத்தியமாகும்” என்று கூறினார்.

அடுத்ததாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய போஸ்,  மின்காந்த அலைகளை வசீகரிக்கும் ‘செமி கண்டக்டர்’ குறித்து பல உண்மைகளைக் கண்டறிந்தார். அதன் பயனாக தொலைதொடர்புத் துறையிலும்  மின்னணுவியலிலும்    அரிய பல கண்டுபிடிப்புகள் பிற விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன.

வானொலியைக்   கண்டுபிடித்ததாக உலகம் புகழும் மார்கோனிக்கு முன்னதாகவே அதன் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ஜெகதீச சந்திர போஸ். ஆனால், அதனை அவர் தனது காப்புரிமையாக பதிவு செய்வதைத் தவிர்த்தார். அதன் காரணமாகவே, அந்த கண்டுபிடிப்புகளுக்கான  பெருமை (1897)  மார்கோனியைச் சென்றடைந்து. அவரது ரேடியோ அலைகளை ஈர்க்கும் ‘செமி கண்டக்டர்’ குறித்த ஆய்வு முடிவுகள், பிற்காலத்தில்  கண்டறியப்பட்ட  (தற்போது புழக்கத்திலுள்ள) என்-பி-என் மின்னணுவியல் கண்டுபிடிப்பில் மிக்க உதவியாக இருந்தன.

நோபல் விஞ்ஞானி சர். நெவில் மோட் (1977), ”ஜெகதீச சந்திர போஸ் தான் வாழ்ந்த காலத்திலேயே,  பின்னாளில் 60   ஆண்டுகள் கழித்து நிகழவுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தை கணித்திருக்கிறார்” என்று புகழ்கிறார்.

தாவரவியலிலும் சாதனை:

இயற்பியலில் மட்டுமல்லாது, உயிரியல், தாவரவியல், தொல்லியல் ஆகியவற்றிலும் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர் போஸ். தாவரங்களின் இயங்கியல் குறித்த போசின் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளன.

ரேடியோ  அலைகளுக்கு தாவரங்கள்  எதிர்விளைவு காட்டுவதையும், தாவரங்களின் திசுக்களும் விலகுகளின் திசுக்களும் ஒத்திருப்பதையும், போஸ் தான் கண்டறிந்த கருவி மூலமாக நிரூபித்தார். தாவரங்களுக்கும் உயிருண்டு என்று தனது  ‘கிரஸ்கோ  கிராப்’ கருவியால் உலகிற்கு போஸ் நிரூபித்துக் காட்டினார். இனிய இசையால் தாவரங்கள் அதிக வளர்ச்சி பெறுவதையும் போஸ் கண்டறிந்தார். ரசாயனங்களால் தாவரங்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதையும் போஸ் கண்டறிந்தார்.

”தாவரங்களும்  மனிதர்களைப் போலவே வழியால் துடிக்கின்றன; மனிதர்களைப் போலவே அன்புக்காக ஏங்குகின்றன” என்று போஸ் பிரகடனம் செய்தார். தாவரவியலிலும், உயிர் இயற்பியலிலும் போஸ் கண்டறிந்து கூறிய உண்மைகள் பிற்கால விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அறிவுசார் சொத்துரிமைக்கு எதிர்ப்பு:

பல அரிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வு முடிவுகளையும் கண்டறிந்தபோதும், அவற்றை தனது தனிப்பட்ட அறிவுசார் சொத்துரிமையாக பதிவு செய்வதை போஸ் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது உலகை சுரண்டுவதாகும் என்று அவர் கருதினார்.

கம்பியில்லா தொலைதொடர்பில் மின்காந்த அலைகளின் பயன்பாடு, மின்காந்த அலைகளின் அலைநீளத்தைக் குறைத்தல் ஆகியவற்றில் போஸ் உருவாக்கிய கருதுகோள்கள் முன்னோடியாக இருந்தபோதும், அவற்றை தனது தனிப்பட்ட சொத்தாக  அவர் சொந்தம் கொண்டாடவில்லை. அதன் காரணமாக வானொலியைக்  கண்டறிந்த விஞ்ஞானி  என்ற சிறப்பை மார்கோனி பெற வாய்ப்பு ஏற்பட்டது.

கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, போசை அணுகி, அவரது கண்டுபிடிப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் உரிமைக்காக பெரும்பொருள் வழங்குவதாக அறிவித்தபோதும், போஸ் அதனை ஏற்கவ்ல்லை. தனது கண்டுபிடிப்புகள் உலகம் நன்மை பெற பயன்படுமானால், யார் வேண்டுமாயினும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் போஸ்.

எனினும், போசின் அமெரிக்க நண்பர்கள்,  அவரது கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (பேட்டன்ட்) பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி, அதில் வெற்றியும் பெற்றனர். சாரா சாப்மன் புல் என்ற அமெரிக்க விஞ்ஞானியின் வேண்டுகோளை ஏற்று, தனது ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து காப்புரிமை (US755840)  பெற்றார் போஸ். அந்த வகையில், இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற விஞ்ஞானி என்ற சிறப்பை (1901)போஸ் பெற்றார்.

பன்முகத் திறமைகள்:

போஸ் விஞ்ஞானி மட்டுமல்ல. வங்க மொழியில் சிறந்த எழுத்தாளரும் ஆவார். ‘நிருடேஷ்வர்  கஹ்னி’  என்ற போசின் அறிவியல் புதினம், வங்க மொழியில் எழுதப்பட்ட முதல் அறிவியல் புதினமாகும்.

பலநூறு அறிவியல் கட்டுரைகளை வங்க மொழியில் எழுதியுள்ள போஸ், Response in the Living and Non-லிவிங் (1902) ,   Plant response as a means of physiological investigation (1906), Comparative Electro -Physiology, Researches on Irritability of Plants (1913),  Physiology of the Ascent of Sap  (1923),  The physiology of photosynthesis (1924), The Nervous Mechanisms of Plants (1926), Plant Autographs and Their Revelations (1927), Growth and tropic movements of plants  (1928), Motor mechanism of plants(1928) ஆகிய ஆராய்ச்சி நூல்களையும் உலகிற்கு வழங்கியுள்ளார்.

1917 ல் கொல்கத்தாவில் போஸ் ஆராய்சிக் கழகத்தை நிறுவினார் போஸ். இன்றும் அது தனது அறிவியல் பணியை செம்மையாகச் செய்து வருகிறது. 1937, நவ. 23 ல் டாக்டர் சர். ஜெகதீச சந்திர போஸ் மறைந்தார்.

உலக அளவிலான பல்வேறு விஞ்ஞானக் கழகங்களின் விருதுகளையும் சர் உள்ளிட்ட கௌரவப் பட்டங்களையும் போஸ் பெற்றவர் போஸ்.  பணமும், அதிகாரமும் ஜெகதீச சந்திர போசை என்றும் மயக்கியதில்லை. அறிவியல் ஆய்வே தனது வாழ்வாகக் கொண்டிருந்த மகத்தான மேதையான போஸ், இக்கால விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டி; அரும்பும் பருவத்திலுள்ள மாணவமணிகளுக்கு ஆசார்ய ஜெகதீச சந்திரர் ஒரு கலங்கரை விளக்கம்.

.

மீள்பதிவு: தேசமே தெய்வம்

.

பரிதாபத்திற்குரியவர்கள்…

6 Oct

ஈரம் கசியும்

வெட்டப்பட்ட அடிமரத்தில்

அமர்ந்து

யாரை வெறிக்கிறது

குட்டி அணில்?

.

மரமில்லா வெற்றிடத்தை

பதைப்புடன் ஏன்

சுற்றிப் பறக்கிறது

குயில்?

.

சுட்டெரிக்கும் தரையில்

கிடக்கும் மரத்துகள்களில்

எதனை முகர்கிறது

சொறிநாய்?

.

சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட

மரத்துண்டுகளின் மீது

எந்த நம்பிக்கையில்

பயணிக்கிறது

பரிதாப ஓணான்?

.