ஜக்குபந்தி

22 Oct

.

பழுப்பும் பசுமையும் கலந்த மானாவாரி பூமியில்

சோளமும் கடலையும் மிளகாயும்

வெண்டையும் துவரையும் வெள்ளரியும்

பனையும் தென்னையும் பருத்தியும்

விளைந்த வயல்களில் கழிந்த பால்யம் எனது…

.

படித்துப் பட்டம் பெற்று

பல தலைமுறை விவசாயம் துறந்து

தொழில்வயிற் பிரிந்துசென்ற

சொந்த கிராமம் காண

நாற்பது ஆண்டுகளாகிவிட்டது-

காலம் கருணையற்றது.

.

ஊருக்கு கிழக்கே

மாபெரும் மணல் பள்ளம்.

இங்குதான் ஆண்டுக்கு ஆறுமாதம்

நீச்சலடித்த ஆறு ஓடியது.

ஆற்றுமேட்டில் ஆயிரம் தென்னைகள்

இருந்த இடத்தில் வரவேற்கிறது

‘லட்சுமி கார்டன்’ மனைப்பிரிவு.

பத்திரப்பதிவுக் கட்டணம் இலவசம்

என்கிறது அருகிலுள்ள விளம்பரம்.

.

இதன் பக்கவாட்டில் இருந்த மாந்தோப்பில்

பூப்பறிக்கும் நோன்புக்குக் கூடி

கும்மாளமடிப்போம்.

அங்கு நிமிர்ந்து நிற்கின்றன

ராட்சதக் காற்றாலைகள்.

.

ஊருக்குத் தெற்கே கிராமக்கோடியில்

விரிந்துகிடந்த மயானம் கூட மாறிவிட்டது.

உடைந்த கூரையுடன் காட்சியளிக்கும்

சுடுகாட்டின் அருகில் பெருகி நிற்கிறது

‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’.

அங்கு பறக்கின்றன கட்சிக் கொடிகள்.

.

தென்மேற்கே வாரச்சந்தை மைதானம்

இருந்த இடத்தில் இருக்கிறது

ஓட்டுக்கூரைகளுடன் ‘இந்திரா நகர்’.

அருகில் பெட்ரோல் பங்க்.

அதன் இடப்புறம் பருத்திகிடங்கு இருந்த இடத்தில்

மும்முரமாக இயங்குகிறது டாஸ்மாக் மதுக்கடை.

.

ஊருக்கு மேற்கே

கற்கள் பரவிய பாவடித்திடலில்

முளைத்திருக்கிறது பேருந்து நிலையம்.

அங்கு முடைநாற்றமெடுக்கிறது

கட்டணக் கழிப்பிடம்.

அதன்முன் அமர்ந்து பீடி வலிக்கும் பெரியவரை

எங்கோ பார்த்ததாக ஞாபகம்.

.

அரை டிராயர் பருவத்தில் தாவி விளையாடிய

மாரியம்மன் கோயிலின் தூண்களைக் காணவில்லை.

அந்த இடத்தில் கிரானைட் தளத்துடன்

மின்னுகிறது அர்த்த மண்டபம்.

வண்ணங்களில் மிளிர்கிறது கோபுரம்.

கோயில் வாயிலில் வைக்கப்பட்டிருக்கிறது

அறநிலையத் துறையின் கட்டண அறிவிப்பு.

.

வடமேற்கில் இருக்கும்

காமராஜர் காலப் பாலம் மட்டும்

அப்படியே கிடக்கிறது.

துணிவெளுக்க இந்தப் பாலம் கடந்துதான்

மணியகாரர் தோப்புக்கு அம்மாவுடன் செல்வோம்.

பேய் இருப்பதாக வதந்தி உலவிய

அங்கிருந்த புளியந்தோப்பு இருந்த அதே இடத்தில்

சிறு கற்கள் நட்ட மனைப்பிரிவு

வண்ணக்கொடிகளுடன் விரிந்திருக்கிறது.

ஆங்காங்கே கான்கிரீட் வீடுகளுடன் கூடிய

‘ஐஸ்வர்யா லேஅவுட்’டில்

இரண்டு மனை வாங்கினால் ஒரு மனை

இலவசம் என்கிறது அறிவிப்புப் பலகை.

.

ஊருக்கு வடக்கே இருந்த

பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி

மேல்நிலைப் பள்ளியாகி விட்டது.

பள்ளியில் முன்புறம்

புதிதாக அமைந்திருக்கிறது

வேன், டாக்ஸி ஸ்டாண்ட்.

ஏடிஎம் வசதியுடன் கூடிய

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை

கூட வந்துவிட்டது.

கிராமம் முன்னேறிவிட்டது.

.

புழுதிபடப் புரண்டு திரிந்த செம்மண் சாலைகளில்

குண்டும் குழியுமாக தார்ச்சாலைகள்.

எல்லா வீடுகளின் முன்புறமும் தூர்ந்து கிடக்கும்

புத்தம்புதிய சாக்கடைக் கால்வாய்கள்.

ஊரின் மையத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தின்

வலப்புறம் அமைக்கப்பட்ட உலர்தளம்

டூவீலர் ஸ்டாண்ட் ஆகிவிட்டது.

பக்கத்தில் கிராமக் கூட்டுறவு வங்கியின் முன்புறம்

கரைவேட்டிகள் கூட்டம்.

.

வேளாண் கிடங்கு பூட்டிக் கிடக்கிறது.

அதன் ஒருபகுதியில் செயல்படுகிறது ரேஷன் கடை.

எல்லாத் தெருக்களிலும்

ஒளிர்கின்றன மின்விளக்குகள்.

எல்லாத் தெருமுனைகளிலும்

குடிநீர்க் குழாய்களில் காத்திருக்கும் பெண்கள்.

அனைத்து வீடுகளையும் இணைத்திருக்கிறது

டிவி கேபிள் ஒயர்.

.

ஊரின் வடகிழக்கே

சமத்துவத்தை உறுதிப்படுத்த

சுதந்திர வருஷத்தில் அமைக்கப்பட்ட

வட்டக்கிணறு தான் பாழடைந்து கிடக்கிறது.

அதன் உள்ளே ஊரின் கழிவுக் குப்பைகள்

கொட்டப்படுவதைக் காண

கஷ்டமாக இருக்கிறது.

.

– விஜயபாரதம் – தீபாவளி மலர் 2014

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: