அஹிம்சை தத்துவத்தின் மூலவர்

28 Oct

மகாவீரர்

(பரிநிர்வாண தினம்: ஐப்பசி-  தேய்பிறை சதுர்த்தசி- தீபாவளி)

பாரதப் பண்பாட்டு வளர்ச்சியிலும் மலர்ச்சியிலும் சமண சமயத்திற்கு பெரும் பங்குண்டு. கொல்லாமை, அஹிம்சை, வாய்மை உள்ளிட்ட பாரதத்திற்கே உரித்தான குணநலன்களை சமயம் வாயிலாக மக்களிடம் பதிவு செய்தவர்கள் சமணர்களே.
சமண சமயத்தைப் பரப்ப உதித்தவர்கள் ‘தீர்த்தங்கரர்கள்’ எனப்படுகின்றனர். அதன் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.

பாரதத்தின்  வடபகுதியில், (தற்போதைய பீகாரில் ஜமுயி மாவட்டத்தில்) லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்ற இடத்தில், சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் மகனாக,   பொது யுகத்திற்கு முன் (கி.மு.) 599-ஆம் ஆண்டில், சித்திரை மாதம், வளர்பிறை பதின்மூன்றாம் நாள் வர்த்தமானர் பிறந்தார்.

அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே நாட்டில்  வளங்களைப் பெருக்கியதாக நம்பப்படுகிறது;  அவர் பிறக்கும் தறுவாயில் அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி காணப்பட்டது.  எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய  ‘வர்த்தமானன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

அரசி திரிசாலாவுக்கு மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், அவர் கருவுற்றிருக்கையில் 14  சுப கனவுகளைக் கண்டதாகவும் சமண புராணங்கள் கூறுகின்றன.  உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜெயின் – ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர்.

சிறு வயதிலேயே ஆன்மிக நாட்டம்:

மன்னர் சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார் வர்த்தமானர். இருப்பினும் அச்சிறுவயதிலேயே  ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.

வர்த்தமானரின் குடும்பம் சமண மதத்தைப் பின்பற்றிய குடும்பம்.  வர்த்தமானர், தியானத்திலும் தன்னையறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக அவர் விளங்கினார்.  மெதுவாக, உலகச் சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.

தமது முப்பதாவது வயதில் அரசாட்சியையும் குடும்பத்தையும் துறந்து, துறவறம் மேற்கொண்டார் வர்த்தமானர்.  பிறகு துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டார்.  மனிதர்கள்,  தாவரங்கள்,  விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும்  அவர்  மதிப்பளித்தார்; அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.

இந்தக் காலகட்டத்தில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். புலன்களை வென்ற அவரது பொறுமையும் வீரமுமே அவர்  ‘மகாவீரர்’ என அழைக்கப்படக் காரணமாயிற்று. இந்த ஆன்மிகத் தேடலின் விளைவாக  ‘கைவல்ய ஞானம்’ கிடைக்கப் பெற்றார்.

அதன்பிறகு மகாவீரர்  நாடு முழுவதும் யாத்திரை செய்து, மக்களிடையே தாமறிந்த ஆன்மிக விடுதலையின் உண்மையை பரப்பத் துவங்கினார். காலணியில்லா வெறும் கால்களில், துணிகள் ஏதும் அணியாமல், கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரது பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது.

தீபாவளியன்று மோட்சம்:

தமது 72-வது வயதில், பவபுரி என்னுமிடத்தில், தீபாவளியன்று பரிநிர்வாணம் (சமணர்கள் மோட்சம் அடைவதை இவ்வாறு கூறுவர்) அடைந்தார் மகாவீரர். அவர் இறைப்பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் இல்லங்களில் தீபமேற்றிக் கொண்டாடுகிறார்கள்.

மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது அணுக்கச் சீடர்களால்  ‘அஹம் சூத்திரங்கள்’ என வாய்மொழியாகவே மனனம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டன. காலப்போக்கில் பல அஹம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும்,  மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன.

சமணர்களின் ஒரு பிரிவினரான  ‘சுவேதம்பரர்கள்’ இவற்றை அப்படியே வரிக்கு வரி உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர்; சமணர்களின் மற்றொரு பிரிவினராகிய  ‘திகம்பரர்கள்’ இவற்றை உபதேச ஆதாரமாக மட்டுமே ஏற்கின்றனர்.

காலப்போக்கில் சமணர்கள் வேத சமயப் பழக்கங்களையும் சடங்குகளையும் கைக்கொண்டனர். மகாவீரரை உருவச்சிலையாக வடித்து வழிபடும் போக்கு பிற்காலத்தில் உருவானது. எனினும், பாரதத்தின் சைவ உணவுப் பழக்கம், கொல்லாமை, துறவுநெறி ஆகியவற்றை வளர்த்தெடுத்ததில் சமணம் பெரும் பங்கு வகித்துள்ளது.

மகாவீரரின் எட்டு கொள்கைகள்:

மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன.  இவற்றில் மூன்று கொள்கைகள் கருத்துமயமானவை;  ஐந்து கொள்கைகள் நெறிவழிப்பட்டவை. இவற்றின் குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும்.

இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஒருமையையும், நெறிவழிப்படுத்தப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மிக வளமை பெறும் வழியையும் காட்டுவனவாக உள்ளன.

அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன. அவை: அநேகாந்தவடா, சியாத்வடா, கர்மா.

ஐந்து நெறிவழிகள்: அகிம்சை, சத்தியம், அஸ்தேயம்,  பிரமச்சரியம்,  அபாரிகிருகம்.

மகாவீரரின் மும்மணிகள்:

மகாவீரர்  ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு;  அது தனது செயல்களின் விளைவாக கர்மா (விதிப்பலன்) எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது’ என்று கூறுகிறார்.

கர்மவினையின் மாயையால் ஒருவர் தற்காலிகமான,  மெய்யின்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறார். இவற்றின் தேடலில் அவருக்கு சுயநலத்தால் வன்முறை எண்ணங்களும் செயல்களும், கோபம், வெறுப்பு, பொறாமை உள்ளிட்ட குணங்களும்,  பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மவினைப் பளு கூடுகிறது.

இவற்றிலிருந்து விடுபட,  நன்னம்பிக்கை (சம்யக்-தர்சனம்),  நல்லறிவு  (சம்யக்-ஞானம்),  நன்னடத்தை (சம்யக்-சரித்திரம்) ஆகிய மூன்று மணிகள் தேவை  என்று மகாவீரர்  வலியுறுத்தினார்.

ஐந்து உறுதிமொழிகள்:

நன்னடத்தைக்கு துணைநிற்க ஜைன மதத்தில் ஐந்து உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்:

  • வன்முறை தவிர்த்தல் (அஹிம்சை)

எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்.

  • வாய்மை (சத்தியம்)

தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்

  • திருடாமை (அஸ்தேயம்)

தனக்கு உரிமையற்ற எதையும் அபகரிக்காது இருத்தல்

  • பாலுறவு துறவு (பிரமச்சரியம்) –

உடலின்பம் துய்க்காதிருத்தல்

  • உரிமை மறுத்தல்/ பற்றற்றிருத்தல் (அபாரிகிருஹம்) –

மக்கள்,  இடங்கள்,  பொருள்கள் மீது பற்றற்று இருத்தல்.

சமய சீர்த்திருத்தம்:

மகாவீரர், ஆண்களும் பெண்களும் ஆன்மிக நோக்கில் சரிசமமானவர்கள் என்றும், இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார்.

அவரை அனைத்துத் தரப்பு மக்களும்,  சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்களும், விளிம்புநிலை மக்களும் பின்பற்றினர்.

அன்றைய காலகட்டத்தில் பாரதத்தில் நிலவிய வர்ணாசிரம முறையை விலக்கி,  சமயத்தில் நான்கு நிலைகளை உருவாக்கினார்; அவை,  ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்), பொதுமகள் (ஷ்ராவிக்).  இதனை ‘ சதுர்வித ஜைன சங்கம்’ என்று அழைக்கலாயினர்.

சமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது.  மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை அடியொற்றியவையே.  மகாவீரர் பண்டைய மதத்தின் சீர்திருத்தவாதியே; அவர் புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்ல.

தனது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர் மகாவீரர். எனினும் தமது காலத்திற்கேற்ப சமண மதக் கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார். அதன் விளைவாக, பாரத ஞான தரிசனங்களில் ஒன்றான சமணம் தனி மதமாக வளர்ந்து, பாரத வரலாற்றில் பேரிடம் பெற்றது.

உண்மையில் மகாவீரர், பாரதத்தின் தொன்மையான சனாதன   மதத்தின்  சீர்திருத்தவாதியே ஆவார். மகாத்மா காந்தி சமணர்களின் அடிப்படைக் கொள்கையான அஹிம்சையை அரசியல் போராட்ட ஆயுதமாக மாற்றியபோது தான் அதன் மாபெரும் சக்தி உலகிற்கு தெரிந்தது.

பாரதம் என்ற தேசத்தின் அடியாழத்தில் பாயும் நீரோட்டங்களில் சமணர் சமயமும் அவர்கள் வழங்கிய ஞானமும் முக்கியமானவை. மகாவீரர் அந்த நதிப்பெருக்கில் மாபெரும் அலைகளை ஏற்படுத்திய மகத்தான ஞானி ஆவார்.

 

காண்க: தேசமே தெய்வம்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: