Archive | February, 2015

ரயில் பயணத்தில் சில கசப்பான அனுபவங்கள்…

24 Feb

அந்த விரைவு ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் வயதான தம்பதி இருவரும் தங்கள் இருக்கைகளைத் தேடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் பார்வை மங்கல் என்பது பார்த்தாலே தெரிந்தது. இருக்கைகள் எதுவும் காலியாக இல்லாததால் அவர்கள் குழம்பினர். அந்தப் பெட்டியிலேயே முன்னும் பின்னும் பலமுறை அவர்கள் அலைபாய்ந்ததைக் காணச் சங்கடமாக இருந்தது.

அவர்களின் பரிதாப நிலையைக் கண்ட இளைஞர் ஒருவர் அவர்களது முன்பதிவுப் பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த இருக்கைகளில் வேறு யாரோ இருவர் அமர்ந்து, ஓரக் கண்ணால் பார்த்தபடி பத்திரிகை படிப்பது போல நடித்துக் கொண்டிருந்தனர்.

விசாரித்ததில் அவர்கள் இருவரும் முன்பதிவு செய்யாத பயணிகள் என்பது தெரியவந்தது. இளைஞரின் தலையீட்டால் அவர்கள் முனகிக்கொண்டே அங்கிருந்து எழுந்து சென்றனர். முதிய தம்பதிக்கும் அவர்களது இருக்கைகள் கிடைத்தன.

சிந்தித்துப் பாருங்கள். வேறு யாரோ முன்பதிவு செய்த இருக்கைகளில் எந்தக் கூச்சமும் இன்றி அமர்ந்திருக்க இவர்களால் எவ்வாறு முடிகிறது? பயணச்சீட்டுப் பரிசோதகர் வரும்போது சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமா? யாரும் கேள்வி கேட்காத வரை இருக்கைகளை அனுபவிக்கலாம் என்ற சுயநலமா? தனக்குச் சொந்தமில்லாத இருக்கைக்கே இவ்வாறு திருட்டுத்தனமாகச் செயல்படும் இவர்களும் ஒருவகையில் திருடர்கள் தானே?

இன்னொரு சம்பவமும் ரயிலில் காண நேர்ந்ததுதான். இரவு நேரம். பயண வழியில் உள்ள ஒரு நிலையத்தில் ரயில் நின்றபோது நடுத்தர வயதுள்ள நபர் ஒருவர் ஏறினார். அவர் தனது முன்பதிவு செய்யப்பட்ட படுக்கையைத் தேடினார்.

ஆனால், அவர் தேடிய படுக்கையில் ஆனந்தமாக ஒருவர் படுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு அவரை எழுப்பத் தயக்கம். அவரோ இவரைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

பயணச்சீட்டு பரிசோதகர் வந்து ஆய்வு செய்தபோதுதான், அவரது பயணச்சீட்டு காத்திருப்புப் பட்டியலில் இருப்பது தெரியவந்தது. ஆனாலும் எந்த சங்கோஜமும் இன்றி அவர் தனக்கு உரிமையில்லாத படுக்கையில் படுத்து வந்திருக்கிறார்.

பரிசோதகர் அவரை எச்சரித்து அடுத்த ரயில்நிலையத்தில் பொதுப்பெட்டிக்கு மாறச் செய்தது தனி கதை. ஆனால், முன்பதிவு செய்த பயணி ஒருவரை அரை மணிநேரம் சிரமத்துக்கு உள்ளாக்கிய அவருக்கு என்ன தண்டனை?

இதேபோன்ற இன்னொரு நிகழ்வில் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தை ரயிலில் காண நேர்ந்தது. ரயில் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இரண்டாம் வகுப்பு படுக்கை முன்பதிவு பெட்டியில் இரு குழந்தைகளுடனும் நான்கைந்து பெட்டிகளுடனும் ஏறிய அந்தப் பெண்மணி, காலியாக இருந்த இருக்கையை ஆக்கிரமித்தார்.

பயணச்சீட்டை ஆய்வு செய்ய பரிசோதகர் வந்தபோது, அவர் முன்பதிவு செய்யாத பயணச்சீட்டைக் காட்டி, தனது தந்தை உயர்பதவியில் இருப்பதாகவும் தனக்கு உறுதியான படுக்கை வசதியை வழங்காவிட்டால் அவரிடம் சொல்லி நடவடிக்கை எடுத்துவிடுவதாகவும் எச்சரித்தார்.

பெண்மணியின் மிரட்டலால் அரண்டுபோன பயணச்சீட்டுப் பரிசோதகர், அவருக்கு உறுதியான படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்ய பட்ட பாட்டைக் காணவே சங்கடமாக இருந்தது. அந்தப் பெட்டியில் வேறு ஒரு குழந்தைக்கு பதிவு செய்யப்பட்ட படுக்கையை பரிசோதகரே கெஞ்சிக் கூத்தாடி, அந்தப் பெண்மணிக்கு ஏற்பாடு செய்து தந்தார்.

முந்தைய இரு நிகழ்வுகளிலேனும் அடுத்தவர் இருக்கைக்கு ஆசைப்பட்டவர்களிடம் குற்ற உணர்வு இருந்தது. ஆனால், மூன்றாவது நிகழ்வில் கண்ட பெண்மணியிடம் பிறரது படுக்கை வசதியை அபகரிப்பது குறித்த கவலையே இல்லை.

ஏதோ இந்த மூன்று நிகழ்வுகளில் மட்டும்தான் அடுத்தவர் இருக்கைக்கு ஆசைப்படும் ஆசாமிகள் இருந்ததாக நினைத்து விடாதீர்கள். யாரும் அமராத இருக்கைகளை பெரும்பாலான மனிதர்கள் சொந்தம் கொண்டாட முற்படுவது பொதுவான காட்சியே. இது ஒருவகையில் நமது குடிமைப் பண்பின் சீரழிவைத் தான் வெளிப்படுத்துகிறது.

யாரும் உரிமை கோராத இருக்கையோ, இடமோ, பொருளோ எதுவாயினும் அதற்கு ஆசைப்படுவது நமது பொதுவான இயல்பாகிவிட்டது. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கும் சாமானியர்கள் முதல், கல்லூரியின் சுற்றுச்சுவரை எல்லை தாண்டிக் கட்டும் செல்வந்தர் வரை பலருக்கும் இருக்கும் வியாதி இதுதான்.

நாட்டில் நடைபெறும் பல ஊழல்களுக்கும் இதே மனநிலைதான் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டிதில்லை. மத்திய அமைச்சராக இருந்த ஒருவர், போலி தொலைபேசி நிலையமே நடத்தியிருக்கிறார். மற்றொரு மத்திய முன்னாள் அமைச்சர் தனது பதவிக் காலத்தில் கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் ஊழல் செய்ததில் உலக சாதனை படைத்தார்.

சாமானிய மனிதன் முதல் மத்திய அமைச்சர் வரை பரவியுள்ள வியாதி இது. ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்றார் மகான் புத்தர். நாமோ அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுகிறோம். யாரும் பார்க்கவில்லை என்றால் அடுத்தவர் பொருளைத் தனதாக்க யாரும் வெட்கப்படுவதில்லை.

அடுத்தவர் பொருளை விரும்புபவனுக்கு கேடே விளையும் என்கிறார் திருவள்ளுவர் (குறள்: 180). பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்று எச்சரிப்பதற்காக “வெஃகாமை’ என்ற தனி அதிகாரத்தையே (18) அவர் எழுதி இருக்கிறார். நாமோ அவருக்குச் சிலை அமைப்பதே போதும் என்றிருக்கிறோம்.

ரயில் பயண அனுபவங்கள், நமது குடிமைப் பண்பின் சில சோற்றுப் பதங்கள் மட்டுமே. சிறு தவறுகளிலிருந்தே மாபெரும் குற்றங்கள் ஆரம்பமாகின்றன என்பதை நாம் உணராத வரை, நமது குடிமைப் பண்பில் சீரழிவுகள் தொடரும்.

முன்பெல்லாம் கடவுள் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற இறையச்சமே தவறு செய்வதைத் தடுத்தது. இப்போது இறையச்சமும் இல்லாது போய்விட்டது; குடிமைப் பண்பும் காணாது போய்விட்டது.

இந்த நிலை மாற நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது குழந்தைகளுக்கு நாம் எத்தகைய சமுதாயத்தை வழங்கிச் செல்லப் போகிறோம்?

தினமணி (24.02.2015)

Advertisements

விவேகானந்த- பாரதி ஆய்வுக்கு வரப்பிரசாதம்

19 Feb

இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகரான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரிடமும் இருந்தது. அவர்களுள் தமிழகத்தின் தலைமகனான மகாகவி பாரதியார் முதன்மையானவர். விவேகானந்தரின் பிரதம சிஷ்யையான சகோதரி நிவேதிதையை தனது குருமணியாக ஏற்றவர் பாரதியார்.

சம காலகட்டத்தைச் சேர்ந்தவர்களான விவேகானந்தரும் பாரதியாரும் நேரில் சந்தித்ததில்லை. என்றபோதும், இவ்விருவரின் சிந்தனையும் கருத்துகளும் ஒத்திருப்பதைக் காண முடிகிறது.
இருவருமே ஆன்மிக அடிப்படையில் தான் இத்தேசம் உயர்வடையும் என்ற நம்பிக்கையை வலுவாக முன்வைத்தவர்கள். அதிலும் விவேகானந்தரின் பல கருத்துகளை பாரதியார் தனது படைப்புகளில் அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்.

பாரதியாரின் கவிதைகள் பேசப்படும் அளவுக்கு அவரது இதழியல் பணிகள் பரவலாகத் தெரிய வராததால், பாரதியார் மீதான விவேகானந்தரின் தாக்கம் முழுமையாகப் பதிவாகவில்லை. இந்நிலையில், இவ்விரு மகான்களிடையிலான சிந்தனை உறவை ஆதாரப்பூர்வமான தனது தொகுப்பால் இந்நூலில் நிலைநாட்டி இருக்கிறார் சுவாமி கமலாத்மானந்தர்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மதுரை கிளைத் தலைவரான சுவாமி கமலாத்மானந்தர், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தவர். எனவே, பத்திரிகை ஆசிரியரான பாரதியாரின் கருத்துகளை அற்புதமாக செரித்து, விவேகானந்தரின் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு இந்நூலை ஆக்கி இருக்கிறார்.

இந்நூல் ஆய்வு நெறிகளின் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல. ஆனால், எதிர்காலத்தில் விவேகானந்தரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்வோருக்கு மிகவும் உறுதுணையாக விளங்கக் கூடியதாக இந்நூல் அமைந்துள்ளது.

விவேகானந்தர் குறித்த பாரதியாரின் நேரடியான கட்டுரைகள், விவேகானந்தருடன் தொடர்புடையவர்கள் பற்றிய பாரதியாரின் கருத்துகள், பாரதியார் நடத்திய பத்திரிகைகளில் வெளியான ராமகிருஷ்ண இயக்கம் தொடர்பான செய்திகள் எனப் பலவற்றையும் ஒரே நோக்கில் தொகுத்திருப்பது சிறப்பாகும்.

பாரதியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாலகங்காதர திலகர், மண்டயம் எஸ்.ஸ்ரீநிவாசாச்சாரியார், பாரதியாரின் குடும்பத்தினர் உள்பட பலர் எழுதியுள்ள கட்டுரைகள், இவ்விரு மகான்களிடையிலான கருத்திணக்கத்தை வெளிப்படுத்துகின்றன. விவேகானந்த- பாரதி ஆய்வுக்கு இந்நூல் மிகப் பெரும் வரப் பிரசாதம்.

***

சுவாமி விவேகானந்தர் குறித்து மகாகவி பாரதியார் கூறியவை (பாகம்-1):

தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர்,
500 பக்கங்கள், விலை: ரூ. 200,
வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை- 600 004.