Archive | April, 2015

மன்மத ஈகை வாழி!

14 Apr

மன்மதனும் ரதியும்

மன்மத ஆண்டே மணம்மிக வருக!

மனமதில் மகிழ்வைத் தருக!

வன்மைகள் குறைய, நன்மைகள் ஓங்க,

வல்லமை நல்லோர் பெறுக!

 

இதுவரை இருந்த நாட்கள் கழிந்தன

இனிதே செல்லும் ஜயவருடம்!

புதியது பிறக்க பழையது கழிவது

புவியிதன் ஜாதகத் தொடர்சலனம்!

வெற்றிகள் பற்பல தந்து மறைந்த

வளமுறு ஆண்டு ஜயவருடம்!

குற்றம் கடியும் கோவலன் தன்னை

குடிகள் அமர்த்திய நற்தருணம்!

(மன்மத)

 

உருவம் ஒன்றென இல்லாத் தேவன்

பெயரில் அமைந்தது புதுவருடம்!

பருவம் வந்த உயிர்களிடத்தே

உலவும் உணர்வின் அருவடிவம்!

விரிசடைக் கடவுள் விழியினில் எரிந்த

வில்லவன் வாழ்வே தியாகமயம்!

வரிவிழி மங்கை ரதியவள் மட்டும்

வரமெனக் காண்பாள் கணவர்புயம்!

(மன்மத)

 

முக்தியை நாடிக் காலம் மறந்த

முக்கண் முதல்வன் யோகமயம்!

பக்தியை எள்ளும் பகைவர்கள் உவக்க

பதைத்தவர் நாடினர் பாசுபதம்!

சக்தியும் சிவனும் தன்னை உணர்ந்தால்

சங்கடம் நீங்கும் இவ்வுலகம்!

யுக்தியில் உணர்ந்தோர் வேண்டிடக் கன்னலில்

யுவனவன் தொடுத்தான் புஷ்பசரம்!

(மன்மத)

 

தவஒளி மிகுந்த சிவனின் ஞானம்

தனலாய்ப் பெருகிட சக்திமயம்!

பவமென உதித்த சரவண பாலன்

பகையினை வெல்ல பரிபூர்ணம்!

உலகம் உய்ந்திட தன்னை ஈந்து

உவகை கொண்டவன் அஸ்திமயம்!

கலகம் ஆயினும் காரியமாற்றிய

காரணன் பெயரே புதுவருடம்!

(மன்மத)

 

இன்பம் நல்கும் இளமையின் தேவன்

இனிதாய் ஈந்தான் தன்வாழ்வு!

துன்பம் ஏற்று, துயரம் நீக்கிய

தூயவன் வழியே நல்வாழ்வு!

மன்மத ஆண்டு வருகையில் இதுவே

மனதினில் உதிக்கும் புதுநினைவு!

புன்மைகள் ஒழிய, புதுமைகள் ஓங்க,

புண்ணியம் தரட்டும் இந்நினைவு!

(மன்மத)

 –விஜயபாரதம்- புத்தாண்டுச் சிறப்பிதழ் (17.04.2015)

Advertisements

குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவர்

9 Apr

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

 ‘தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாதையரை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால், அந்த மேதையை உருவாக்கிய மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை தமிழகம் உரிய அளவில் இன்னமும் அறியவில்லை.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இருநூறாவது ஆண்டு (6.4.1815) ஏப்ரல் 6-இல் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் அவரை நினைவுகூர்வது சாலச்சிறந்தது.

பிள்ளையின் சிறப்பு, அவர் இயற்றிய நூல்களால் அமையவில்லை. ஆனால், அவரது குருகுல மாணாக்கர்களாக இருந்த பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டே குருநாதரை இன்றும் நினைக்கச் செய்கிறது. அவர்களுள் ஒருவர்தான் உ.வே.சா.

திருவாவடுதுறை ஆதீனத்தால் “மகாவித்துவான்’ என்ற பட்டம் பெற்று புகழ்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழில் கரை கண்டவர்; நினைத்தவுடன் யாப்புடன் கூடிய கவி புனையும் ஆற்றல் மிகுந்தவர். தனது வாழ்நாளில் அவர் எழுதிய செய்யுள்களின் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கிறார் உ.வே.சா.

ஆனால், அக்காலத்தில் அவற்றைத் தொகுத்து வைக்க போதிய சாதனங்கள் இல்லை. அதையும் மீறி, அவருடைய நூல்கள் பலவற்றை உ.வே.சா.வின் முயற்சியால் நாம் இன்று படிக்க முடிகிறது. அவர் எழுதிய சேக்கிழார் பிள்ளைத்தமிழும், குசேலோபாக்கியானம் என்ற காப்பியமும், அவரது மேதைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தலபுராணத்திலும் தமிழின் சிறப்பு மிளிரச் செய்வதில் பிள்ளை முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் எழுதிய தலபுராணங்கள் 22.

தனது அருமுயற்சியால் கற்ற தமிழை தன்னுடைய மாணாக்கர்களுக்கு அள்ளி வழங்கும் திறனால் இவரது புகழ் பரவியது. இவரது வீடே மாணாக்கர்களின் இல்லமானது. பிரதிபலன் பாராமல் மாணவர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளித்து, தமிழ் கற்பிப்பதை தனது வாழ்வின் நோக்கமாகவே கொண்டு வாழ்ந்தவர். தன்னுடைய மாணாக்கர்களின் தரத்தை உயர்த்துவதே அவரது இலக்காக இருந்தது. நல்ல மாணாக்கர்களைத் தேடிக் கண்டறிந்து பாடம் கற்பிப்பது பிள்ளையின் இயல்பு.

 “பணத்துக்கு அடிமையாக இராமல் பணத்தை இவர் அடிமையாக்கினார். எவ்வளவு வறிய நிலையில் இருந்தாலும் தம் கொள்கைக்கு விரோதமான எதையும் செய்யாத வீரம் இவர்பால் இருந்தது. இவர் நினைத்திருந்தால் எவ்வளவோ செல்வத்தைப் பெற்றுப் பின்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். உள்ளதே போதுமென்ற திருப்தியே அத்தகைய முயற்சிகளில் இவரைச் செலுத்தாமல் இருந்தது” என்கிறார் உ.வே.சா.

தன் குருநாதரின் சிறப்புகள் குறித்து உவே.சா., 1934-இல் எழுதிய ‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற நூல் பிள்ளையின் தவ வாழ்வை விளக்குகிறது.

 “மாணாக்கர்களிடம் இவர் தாயைப் போன்ற அன்புடையவராக இருந்தார். அவர்களோ தந்தையாகவே எண்ணி இவரிடம் பயபக்தியுடன் ஒழுகினர். அவர்களுடைய குற்றங்களை இவர் மறந்துவிடுவார். அவர்களுக்கு எந்த எந்த வகையில் குறைகள் உண்டோ அவற்றை நீக்குவதற்காக முயல்வார்; அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி அவர்களுக்கு நன்மைகளைச் செய்வார். மாணாக்கர்களேயன்றிப் பிறர் சுற்றத்தாரல்லர் என்பது இவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது” என்று, தனது வாழ்வின் அரிய ஆறு ஆண்டுகளை பிள்ளையின் இறுதி நாள்களில் அவருடன் கழித்த உ.வே.சா. கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கவனித்துப் பின்பற்ற வேண்டிய அற்புதமான வாழ்க்கை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையினுடையது. குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவரான இவரின் இரு நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழரின் – தமிழகத்தின் கடமையாகும்.

தமிழ்மணி (05.04.2014)