Archive | June, 2015

அளவுக்கு மிஞ்சினால்…

27 Jun
anna univty

அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை

தங்க முட்டையிடும் வாத்தினை அறுத்துப் பார்த்த பேராசைக்காரனின் நிலை எப்படி இருந்திருக்கும்? தமிழகத்தில் அதீத ஆர்வத்துடன் அவசரமாகத் துவக்கப்பட்ட பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய நிலையைக் காணும்போது தங்க முட்டை வாத்துக் கதை தான் நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் 550. இவற்றில் கணிசமானவை தனியார் பொறியியல் கல்லூரிகள். 2005-ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களிடையே பெருகிய பொறியியல் கல்வி மோகத்தைப் பயன்படுத்திக்கொள்ள விழைந்து துவக்கப்பட்ட கல்லூரிகள் பல.

கிராமப்புறங்களில் பல ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பிவிட்டால் போதும் என்ற மனநிலையில், அரசியல்வாதிகளும்கூட இந்தக் களத்தில் குதித்தனர்.

நமது அரசுகள் உயர் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில், உயர் கல்வி தனியார் வசமாவதையும் வணிகமயமாவதையும் அரசால் தடுக்க முடிவதில்லை. புற்றீசல் போல கிளம்பிய பொறியியல் கல்லூரிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசுகள் வேடிக்கை பார்த்ததற்கு இதுவே காரணம்.

தவிர, நாட்டில் எங்கும் நிலவும் ஊழல் கல்வித் துறையையும் விட்டுவைக்கவில்லை. எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத வெற்றுக் கட்டடங்களும்கூட பல இடங்களில் பொறியியல் கல்லூரிகளாக அங்கீகரிக்கப்பட்டன. பொறியியல் கல்லூரிக்குப் பெருகிய மதிப்பைக் கண்டு ஒரே வளாகத்தில் வெவ்வேறு பெயர்களில் பல கல்லூரிகள் இயங்க அனுமதி பெற்ற நிறுவனங்களும் உண்டு.

குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை அடைந்த அதிவேக வளர்ச்சியை அடுத்து, பல கல்லூரிகளில் ஐ.டி. படிப்புகளும் அதற்கான சேர்க்கை இடங்களும் அதிகரிக்கப்பட்டன. இது ஒருவகையில் வெற்றிபெறும் குதிரை மீது பந்தயம் கட்டுவது போலத்தான்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டதால், இத்துறைக்கான வரவேற்பு மங்கிவிட்டது. இந்தியாவை பி.பி.ஓ. சேவை மையமாகப் பயன்படுத்திவந்த அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெருத்த சவாலானது. அதன் விளைவாகப் பல ஐ.டி. நிறுவனங்கள் ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் இறங்கின. அதன் தொடர்ச்சியாக இந்தப் படிப்பு மீதான கவர்ச்சி குறைந்தது.

அது மட்டுமல்ல, கல்லூரிகளில் முறையான கட்டமைப்பு வசதிகள் இன்மை, தகுதி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஆரம்பக் கல்வியின் தரவீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பொறியியல் கல்வியின் தரமும் வீழ்ச்சி அடைந்தது. சொல்லப்போனால், கலை, அறிவியல் துறைகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதன் தாக்கம் பொறியியல், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதி. இதன் காரணமாகவே, பொறியியல் பட்டதாரிகள் பெரும்பாலோர் பணிக்கேற்ற தகுதி உடையவர்களாக இல்லை என்று வேலை அளிக்கும் நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அதாவது, பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை தரத்துடன் இல்லை என்பதும், அவற்றிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளின் தரம் மெச்சும்படியாக இல்லை என்பதும்தான் முக்கியமான தகவல்கள். அதன் அதிர்ச்சிகரமான விளைவுகள், கல்லூரிகள் மூடப்படும் நிகழ்வுகளாகத் தென்படத் துவங்கியுள்ளன.

தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் சதவீத அடிப்படையில் இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல், கல்லூரிகளின் பயிற்றுவித்தல் திறன் சரிவையும் மாணவர்களின் தர வீழ்ச்சியையும் ஒருசேரக் காட்டின. ÷

இதற்கு நமது பெற்றோரின் சுயநலமும் ஒரு காரணம். தங்கள் குழந்தைகளின் திறனையும் விருப்பத்தையும் புரிந்துகொள்ளாமல், எல்லோரும் படிக்கும் படிப்பையே அவர்களிடமும் திணிக்க நினைக்கும் பெற்றோரே இத்தகைய கல்லூரிகள் பெருகக் காரணம் என்பதும் உண்மை.

ஆனால், சாயம் விரைவில் வெளுத்துவிட்டது. 2014-இல் மொத்தமிருந்த 546 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 135 கல்லூரிகளில் பல பாடப்பிரிவுகளில் சேர மாணவர்களே இல்லை. சென்ற கல்வியாண்டில் மொத்தமிருந்த 2.87 லட்சம் இடங்களில் சுமார் 1.25 லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. நடப்புக் கல்வியாண்டில் இந்த நிலை மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த முன்யோசனையும் இல்லாமல், அதிகமான கல்லூரிகளையும், புதிய பாடப்பிரிவுகளையும் துவங்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்ததே இந்த வீக்கத்துக்குக் காரணம்.

அரசுகள், பொறியியல் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாமல் வாளாயிருந்ததன் விளைவு, இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் தரமற்ற கல்வி பயின்று எப்படியோ தேர்ச்சி பெற்று பட்டங்களுடன் வேலைவாய்ப்பின்றிக் காத்திருக்கிறார்கள். இவர்களால் சொந்தக் காலிலும் நிற்க முடிவதில்லை.

திறமை படைத்த மாணவர்கள் எந்தக் கல்லூரியில், எந்தப் படிப்பில் படித்தாலும் சாதித்து விடுவார்கள். அவர்களைப் பார்த்து நகலெடுக்க முயன்றதன் விளைவு ‘கல்விப் போலிகள்’ எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இவர்களால் தகுதி படைத்த மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

‘கல்வி வள்ளல்கள்’ தங்க முட்டையிடும் வாத்தினை அறுத்தவர்கள் என்றால், அதற்கு வித்திட்டவர்கள் ‘மந்தை’ மனப்பான்மையுடன் போய் விழுந்த மாணவர்களும் பெற்றோரும் தான். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள்?

.

-தினமணி (26.06.2015)

.

Advertisements

தடம் மாறிய பயணம்… தடுமாறும் இலக்கியம்

15 Jun

பாரதத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் வெறும் கதையல்ல; இந்த மண்ணில் நிகழ்ந்த வரலாறே கவித்துவமாகவும், உயர்வு நவிற்சியுடனும் இலக்கியமாகப் படைக்கப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்வையும், அப்போது நிலவிய அதிகாரப் போட்டியையும் வெளிப்படுத்தும் ஆவணம் மகாபாரதம்.

மகாபாரதம் காலந்தோறும் புதிய வடிவில் மீள்பார்வைக்கும் மறுவாசிப்புக்கும் உள்படுத்தப்பட்டு வருகிறது. காண்டேகரின் யயாதி முதல் ஜெயமோகனின் வெண்முரசு வரை, பாரத இலக்கியகர்த்தர்களின் மனம் கவர்ந்த காப்பியமாக உள்ள மகாபாரதம், அவ்வப்போது புதிய வடிவில் தன்னை அரங்கேற்றிக் கொள்கிறது. அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதினமே திரௌபதி.

தெலுங்கு மொழி எழுத்தாளரான யார்லகட்ட லட்சுமிப்ரசாத், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பேராசிரியராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது (தமஸ் புதினத்துக்கு- 1992), தெலுங்கு இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது (திரௌபதி புதினத்துக்கு- 2009) ஆகியவற்றைப் பெற்றவரான லட்சுமிப்ரசாத், மகாபாரதக் கதையின் மைய நாயகியான பாஞ்சாலியை ஆதார விசையாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார்.

திரௌபதியின் பார்வையில் மகாபாரத நிகழ்வுகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், காப்பிய மாந்தர்களின் மனோநிலைகளையும் வாசகர்களுக்கு தனது கற்பனைவளம் கொண்டு புலப்படுத்த முயல்கிறார் யார்லகட்ட லட்சுமிப்ரசாத். எழுத்தாளருக்கே உரித்த தன்னிச்சையான சுதந்திரத்துடன் அக்கால நிகழ்வுகளை புதினமாக்கியிருக்கும் ஆசிரியர், பல இடங்களில் வரம்பு மீறுகிறார். மகாபாரதத்தை புனிதமாகக் கருதுபவர்கள் இதனைப் படிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஐவரின் மனைவியாக வாழ்க்கைப்பட்ட பெண்ணின் உடலியல்- உளவியல் சிக்கல்கள், அரசு அதிகாரத்தில் பகடையாக்கப்படும் பெண்களின் வாழ்க்கை, தனிப்பட்ட விதத்தில் சாதாரண வாழ்க்கை வாழத் துடிக்கும் அரசகுல மகளிரின் துயரம் எனப் பலவற்றை புதினம் வெளிப்படுத்துகிறது.

துருபதனின் பழிவாங்கும் அரசியலின் உபவிளைவே திரௌபதியின் பிறப்பு. பாண்டவர் ஐவரை மணந்ததும்கூட ஓர் குடும்ப அரசியல் நிர்பந்தமே. நடுச்சபையில் கௌரவர்களால் துகிலுரியப்பட்டபோது அதிகார ஆணவத்தின் பலிக் குறியீடானவள் அவள். யாக குண்டத்தில் உதித்தது முதல் இறுதி யாத்திரை வரை அவளுக்கு நிற்க நேரமில்லை. மகாபாரதக் கதையை வழிநடத்தும் பெருநெருப்பு அவளே.

அத்தகைய திரௌபதி குறித்து எழுதும் பல இடங்களில் விரச எல்லைகளை மீறுகிறார் ஆசிரியர். உளவியல் கண்ணோட்டம் என்ற எண்ணத்தில், பெண்ணின் உடலியலை ஓர் ஆணியக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளதால்தான் பல இடங்களில் காமரசம் ததும்புகிறது. அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய புதினத்தை வயது வந்தோருக்கு மட்டுமாக மாற்றியதை லட்சுமிப்ரசாத் தவிர்த்திருக்க வேண்டும்.

படித்தவுடன் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்குவதே நல்ல இலக்கியம். அத்தகைய அனுபவத்தை இந்தப் புதினம் தராமல் போனதற்கும் இந்தக் குறைபாடே காரணம்.

***

திரௌபதி

யார்லகட்ட லட்சுமிப்ரசாத்

தமிழாக்கம்: இளம்பாரதி

368 பக்கங்கள், விலை: ரூ. 200.

சாகித்ய அகாதெமி,

குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை,

தேனாம்பேட்டை, சென்னை- 600 018.