Archive | July, 2015

அம்பலப்படுத்தும் அரசு அதிகாரி…

22 Jul

 

தாகுர் தம்பதி

தாகுர் தம்பதி

உத்தரப் பிரதேச மாநில காவல் துறை அதிகாரி அமிதாப் தாக்குர் பாலியல் புகாரில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த நிகழ்வு நமது அரசியல்வாதிகளின் கோரமான முகத்தைத் தோலுரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.

சர்ச்சையில் சிக்கியிருக்கும் இவர், பிற காவல் துறை அதிகாரிகள் போன்றவரல்லர். தனது பணிக் காலமான 18 ஆண்டுகளில் 22 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் என்பதிலிருந்தே இவரது தனிச் சிறப்பு புரியும்.

கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்த பொறியியல் பட்டதாரியான இவர், 1992-இல் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார். உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக இருந்துள்ள இவர் உளவுத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை, காவலர் பயிற்சிப் பள்ளி உள்பட பல துறைகளிலும் பணியாற்றியுள்ளார். பணிநீக்கம் செய்யப்படுகையில் ஐ.ஜி. அந்தஸ்தில் இருந்தார்.

தற்போதைய சமாஜவாதி அரசுக்கு மட்டுமல்லாது, முந்தைய மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் அரசுக்கும் நெருடலானவராகவே இருந்துள்ளார். 2008-இல் லக்னௌ ஐ.ஐ.எம்.மில் ஆராய்ச்சியில் ஈடுபட துறைரீதியாக விடுப்பு கோரியபோது, இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னர், மத்தியப் பணியாளர் தீர்ப்பாயத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து அனுமதி பெற்று 4 ஆண்டு காலப் படிப்பை நிறைவு செய்தார்.

அதிகார வர்க்கம் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததால் இவர் பிரபலமானார். தேசிய தகவல் அறியும் உரிமைக்கான தளத்தை நிறுவிய அமிதாப் அது தொடர்பான பிரசாரப் பணிகளிலும் ஈடுபட்டார்.

காவல் துறை உயரதிகாரியாக இருந்துகொண்டே இவ்வாறு சமூக விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபடுவது குறித்த சர்ச்சை கிளம்பியபோது, நாட்டின் குடிமகன் என்ற அளவில் தனது கடமையைச் செய்ய சட்டம் குறுக்கே நிற்கவில்லை என்றார்.

தன் மனைவி நூதன் உடன் இணைந்து சமூக அறிவியல் ஆவணமாக்கல், ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வந்தார். அண்மையில் உத்தரப் பிரதேச மாநில பால்வளத் துறை அமைச்சர் ராம்மூர்த்தி வர்மாவின் ஊழலை அம்பலப்படுத்தியதால் எரிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஜகேந்திர சிங்கின் மரண வாக்குமூலத்தைப் பதிவு செய்தவர் இவரே.

இவரது மனைவி பொதுநல வழக்குத் தொடுப்பதில் பிரபலமானவர். இருவரும் இதுவரை 150-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளைத் தொடுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்களைச் செய்துள்ள இவர்களது பெயரைக் கண்டாலே அதிகாரிகள் நெளிவர்.

இவர்கள் தொடுத்த பல வழக்குகள் நன்மையளித்த போதிலும், சில வழக்குகள் விளம்பர நோக்கம் கொண்டவை என்று நிராகரிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களது தொல்லை தாங்காமல்,  ‘ஓர் அரசு அதிகாரி, அரசு அனுமதியின்றி பொதுநல வழக்குத் தொடுக்கக் கூடாது’ என்று லக்னெü உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீதே வருமானத்துக்கு மீறிய சொத்துகளைக் குவித்ததாக வழக்குகள் பதியப்பட்டாலும், இதுவரை அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
பிற காவல் துறை அதிகாரிகள் போல் தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல், சமூக விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டதே அமிதாப்பின் தவறு. இவர் உத்தமமானவரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இவரை எதிர்க்கும் பல தரப்பினரும் உத்தமமானவர்களல்லர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இப்போதும்கூட, மாநில அமைச்சர் ஒருவருக்கு எதிராக இவரது மனைவி லோக் ஆயுக்தவில் புகார் செய்ததால்தான் அமிதாப் சிக்கலில் மாட்டியிருக்கிறார்.
மாநில சுரங்கத் துறை அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதி மீது ஊழல் புகார்கள் கூறி நூதன் தாக்குர் 2014 டிசம்பரில் மனு அளித்தார். அதன் விளைவு உடனடியாகத் தெரிய வந்தது.

2015 ஜனவரியில் ஒரு பெண், அமிதாப் மீது பாலியல் புகார் கூறினார். அந்தப் பாலியல் வன்கொடுமைக்கு மனைவி நூதனும் கணவருக்கு உதவியதாக அவர் கூறியதுதான் கொடுமையின் உச்சகட்டம். அந்தப் புகாரின் மீது ஜூலை 12-இல் வழக்குப் பதியப்பட்டு, இப்போது மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இதற்கும் காரணம் இருக்கிறது. உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தையும் சமாஜவாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங்கின் பகையை ஈட்டியதுதான் அமிதாப்பின் கடைசித் தவறு.

தொடர்ந்து சமாஜவாதி அமைச்சர்களுக்கு குடைச்சல் கொடுத்த அமிதாப்பை முலாயம் சிங் தொலைபேசியில் எச்சரித்தார். அதையும் பதிவு செய்து வெளியிட்ட அமிதாப், முலாயம் தன்னை மிரட்டியதாக ஜூலை 11-இல் புகார் செய்தார். மகன் நடத்தும் ஆட்சியில் தந்தைக்கு எதிராக காவல் துறை அதிகாரி ஒருவர் புகார் செய்வதா? உடனே செயல்படத் தொடங்கியது சட்டம்.

பாலியல் வழக்குடன் பணியிடை நீக்கத்தையும் சந்தித்த அமிதாப் தாக்குர், தனக்கு மாநில அரசு இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து மத்திய அரசிலும், பணியாளர் தீர்ப்பாயத்திலும் புகார் செய்திருக்கிறார். தன் மீதான புகார்களை மத்திய புலனாய்வுத் துறையே விசாரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அரசியல் அதிகார பீடங்களுடன் சமரசம் செய்து கொண்டிருந்தால் அமிதாப்புக்கு இந்த நிலை வந்திருக்காது. எது எப்படியோ, அமிதாப் தனது போர்க் குரலால், நமது ஜனநாயகத்தின் இரண்டாவது தூணான அரசு நிர்வாகம் அரசியல்வாதிகளால் ஆட்டிப் படைக்கப்படுவதை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் சென்ற ஆண்டு பந்தாடப்பட்டார். இப்போது அமிதாப் பந்தாடப்படுகிறார்.

இந்த நிகழ்வுகள் நமது அதிகார வர்க்கத்தின் எல்லைகள், அரசு நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு பதில் காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

தினமணி (21.07.2015)

 

Advertisements

திருப் பாதை

14 Jul

beautyful flower

வித்தாக என் தந்தை
விளைநிலமாய் என் அன்னை
முத்தாக நான் மலர
முறுவலுடன் பெற்றோர்கள்!

வித்தைக்கு என் ஆசான்
விழைவுக்கு என் நண்பர்
சித்தாக நான் சுடர
சிந்தனைகள் பல உதயம்!

சொத்தாக நற்கல்வி
சொந்தமென குலக்கீர்த்தி
பத்தினியாய் என் மனைவி
பக்கத்தில் நான் பெற்றோர்!

பித்தாக என் அன்பர்
பின்னாலே உறவோர்கள்
இத்தனையும் போதாது
இறைவனவன் என்னோடு!

(எழுதிய நாள்: 07.07.1991)

.