Archive | August, 2015

உடன்பிறப்பென உணர்வோம் நாம்!

29 Aug

Rakhi
நமது நாட்டின் பண்டிகைகள் அலாதியானவை. பல்வேறு பிராந்தியங்களின் வண்ணங்களைப் பிரதிபலிப்பவையாக அவை விளங்குகின்றன. ஆயினும், தேசத்தை இணைக்கும் பசையாக சில பண்டிகைகள் மட்டுமே அமைகின்றன. அவற்றுள் ஒன்றுதான் ரக்ஷாபந்தன் திருநாள்.

ஆவணி மாதம் வரும் பெüர்ணமியில் பெண்கள் தங்கள் சகோதரர்களின் வலது மணிக்கட்டில் ‘ராக்கி’ எனப்படும் பட்டு மணிக்கயிற்றை அணிவித்து, அவர்களிடம் பரிசு பெறும் நாள் ரக்ஷாபந்தன் நன்னாள். தமிழகத்திலும் இதேபோன்ற வழக்கம், பௌர்ணமியை ஒட்டி வரும் ஆவணி அவிட்ட நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு தான் நமது பாரத தேசியம் மலர்ந்தது. நம் மண்ணில் கண்ணுக்குத் தெரியாமல் ஆழ ஓடிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் இணைந்தே இந்தத் தேசத்தைக் கட்டியமைத்தன. அதற்கு வெளிப்புறத்தில் நாம் கொடுத்த கட்டுக்கோப்பான வடிவம்தான் இந்திய அரசியல் சாசனம். கண்ணுக்குப் புலனாகாத மின்சாரம்போல இந்த நாட்டை ஒருங்கிணைத்திருப்பதும், நம்மை இந்தியர்களாக உணரச் செய்வதும் இந்தப் பண்பாட்டு விழுமியங்களே.

இதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் அதிவேக இயந்திர உலகில் இதை நினைவுபடுத்த மகாத்மா காந்தி, லோகமான்ய திலகர் போன்ற மகான்கள் இப்போதில்லை. அதன் விளைவையே ஆங்காங்கே தென்படும் உக்கிரமான மோதல்களாகக் காண்கிறோம்.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக வித்திட்டது பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கரின் உயிர்த் தியாகம்தான். 27 நாள்கள் தொடர்ந்த அவரது உண்ணாவிரதம் அவரது உயிரைப் பறித்தது; அதேசமயம், புதிய ஆந்திரமும் மொழிவாரி மாநிலங்களும் உருவாக வழிவகுத்தது. ஆனால், இன்று நாம் காண்பதென்ன?

எந்த மொழிக்காக ஸ்ரீராமுலு தன்னுயிர் ஈந்தாரோ அதே தெலுங்கு பேசும் மக்கள், தங்கள் சகோதரத்துவத்தை மறந்து, ஆந்திரப் பிரதேசம் – தெலங்கானா என்ற இரு மாநிலங்களாகப் பிரிந்து சச்சரவிட்டுக் கொள்கிறார்கள். இதற்கு வழிவகுத்தது அரசியல் தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த நாடு, முழுவதும் புனிதத் தீர்த்தங்களால் நிறைந்தது. தினசரி நீராடலின்போது, கங்கை முதல் காவிரி வரை தியானிப்பது மரபாகவே இருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள நதிகள் அனைத்தும் புனிதம் என்ற சிந்தனையுடன், அவை அனைவருக்கும் பொது என்ற எண்ணமும் செழித்திருந்த காலமுண்டு. அதை மன்னர்கள் மறந்தபோது, இந்த மண்ணில் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரலாற்றையும் நாம் மறந்துவிட்டோம்.

அதனால்தான், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நீருக்கு கர்நாடகத்திடமும், முல்லைப் பெரியாறு நீருக்கு கேரளத்திடமும் தமிழகம் மல்லுக் கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அண்டை மாநிலத்தவரும் நம்மைப் போன்ற மக்கள் தான் என்ற சகோதரத்துவ மனப்பான்மை மங்கியதன் விளைவல்லவா இது?

இந்த உலகில் வாழும் எவருமே தன்னிச்சையாக இயங்க முடியாது. பலதரப்பட்டவர்களின் இயக்கத்தால் தான் இந்த உலகம் வாழ்கிறது. எனவேதான், சமுதாயம் சீராக இயங்க நமது முன்னோர் சில ஏற்பாடுகளைச் செய்துவைத்தனர். தொழில்ரீதியான இந்தப் வகைப்பாடுகள் காலப்போக்கில் பிறப்பின் அடிப்படையில் ஜாதியாக மாற்றம் பெற்றபோதும்கூட, ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் வன்மங்களில் ஈடுபட்டதில்லை. ஆனால் இன்றைய நிலை என்ன?

நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், மேலவளவு, நாயக்கன்கொட்டாய், உத்தப்புரம், சேஷசமுத்திரம் என தீண்டாமையின் கொடுமைகளுக்குச் சாட்சியாகும் பெயர்கள் நீள்கின்றனவே? இதுவா நமது தலைவர்கள் கனவு கண்ட சமுதாய ஒற்றுமை? அம்பேத்கர் சிலைகளுக்கும் முத்துராலிங்கத் தேவர் சிலைகளுக்கும் கம்பித் தடுப்புகளால் கவசப் பாதுகாப்பு செய்ய வேண்டிய நிலையில் தான் நமது ஒற்றுமை இருக்கிறது என்பது, மகத்தான கனவுகளைக் கண்ட நமது முன்னோருக்கு இழைக்கப்படும் அவமானமல்லவா?

‘வசுதைவ குடும்பகம்’ என்பது நமது உபநிடத மகாவாக்கியம். இதையே கணியன் பூங்குன்றனார் தமிழில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முழங்கினார். உலகம் ஒரு குடும்பம்; மக்கள் அனைவரும் உறவினர்கள் என்ற இந்த உயரிய பண்பாட்டை மறந்ததால் அல்லவா, மதத்தின் பெயரால் நாட்டில் ஆங்காங்கே ரத்தம் சிந்தப்படுகிறது? இங்கு சிந்தப்படும் ஒவ்வொரு துளி செந்நீருக்கும் கண்ணீருக்கும் விலையாக, நாட்டின் ஒற்றுமை பலிகடா ஆக்கப்படுவது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா?

கட்டிய மனைவியைத் தவிர பிற பெண்களெல்லாம் அன்னையரே; ஸ்ரீராமனே ஆண்களின் முன்மாதிரி வடிவம் என்று வாழ்ந்த நமது கலாசாரம் எங்கு போனது? ஆண் – பெண் என்ற இரு பாலின சமநிலையில் தான் உலகம் இயங்குகிறது என்பதை மறந்து, பெண்களை காமத்துடன் நோக்கும் கயமை எப்போது நம்மிடையே பரவியது?

இந்தக் கேள்விகள், பதில் கூற முடியாத கேள்விகளல்ல. இவற்றுக்கான விடைகளை நாம் அறிந்தே இருக்கிறோம். தெரிந்தோ, தெரியாமலோ, நம் ஆழத்தில் இயங்கும் பண்பாட்டு ஊற்று இப்போதும் நம்மை சில நேரங்களிலேனும் சிந்திக்கச் செய்கிறது.

நம்மைப் பிளவுபடுத்தும் கோடரிகளைவிட நம்மை இணைக்கும் வேர்கள், ஆழமானவை; வலிமையானவை. அவை நம் கண்களுக்குத் தெரியாததால், நாம் அடிக்கடி திக்கின்றித் திகைக்கிறோம். இத்தகைய சூழல்களுக்கு கலங்கரை விளக்கமாக நமது முன்னோர் உருவாக்கிச் சென்ற பண்டிகைதான் ரக்ஷாபந்தன் விழா.

‘இந்தியா எனது தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறப்புகள்’  என்று உதட்டளவில் உச்சரிப்பது மட்டுமல்லாது உளப்பூர்வமாக உணர்த்துவதே ரக்ஷாபந்தனின் சிறப்பு. கண்ணனின் மணிக்கரத்தில் பாஞ்சாலி அணிவித்த ரக்ஷையின் தொடர்ச்சி இது. ரஜபுதன வீரர்களும், மாவீரன் சிவாஜியும், மாமன்னன் ராஜராஜ சோழனும் கங்கணமாக அணிந்த மங்கலக் கயிறு இது.

இந்த நாளில், நமது சகோதர பந்தத்தை உறுதிப்படுத்த ராக்கியைப் பயன்படுத்துவோம். சகோதர – சகோதரி பாவனையை வளர்க்க உதவும் இந்த ரக்ஷை, நமது சகோதரத்துவத்தையும் மேம்படுத்தட்டும். நாம் ஒருவருக்கொருவர் அணிவிக்கும் ராக்கி நமது பந்தத்தை பலப்படுத்தும்; கூடவே நாட்டின் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும்.

(இன்று ரக்ஷாபந்தன் தினம்)

-தினமணி (29.08.2015)

.

Advertisements

செம்புலப்பெயல் நீர்…

17 Aug

நேற்றைய மழையில்
நிறைந்திருக்கின்றன
தெருவெங்கும் குழிகள்.

வேட்டியை மேலே தூக்கி
தடுமாறி நடக்கிறார் தாத்தா.

அவர் பிடியை விலக்கி
விரைந்தோடி,
செம்புலப் பெயல் நீரில்
குதிக்கிறது குழந்தை.

.

ஆபாசத்தை வேரறுப்போம்!

7 Aug
 cellsex
 .
வகுப்பறைக்குள் செல்லிடப்பேசியில் ஆபாசப்படம் பார்த்த சில மாணவிகள் மீது தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக அண்மையில் செய்தி வெளியானது. அந்த மாணவிகளின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பினர். அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?
 .
மாணவிகளே ஆபாசப்படம் பார்க்கும் நிலையில், மாணவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கைக்கு அடக்கமான அதிநவீன செல்லிடப்பேசிகளில் இணையவசதிகள் இருப்பது, எதையும் ஆராயும் மனம் கொண்ட வளரிளம் பருவத்தினரைத் தடுமாறச் செய்கிறது.
 .
கல்லூரி மாணவ மாணவிகளின் நிலைமை இன்னும் மோசம். இணைய வசதியுடன் கூடிய செல்லிடப்பேசி இல்லாத கல்லூரி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். எந்த அதிநவீன வசதியும், நன்மையும் தீமையும் கலந்ததுதான். இணைய வசதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோரை விட, கேளிக்கைக்கும், பாலுணர்ச்சித் தூண்டுதலுக்கும் பயன்படுத்துவோரே அதிகமாக உள்ளனர்.
 .
இணையதள இணைப்புடன் கூடிய செல்லிடப்பேசி இருந்தால் உலகமே நம் கையில் தான். இந்த வசதியை நாம் எவ்வகையில் பயன்படுத்துகிறோம்? இது நமது முன்னேற்றத்துக்கு உதவுவதை விட வீழ்ச்சிக்கே அதிகம் வித்திடுகிறது.
.
இங்குதான் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் தேவையாகின்றன. குறிப்பாக, பாலியல் வன்முறைக் குற்றங்களில் கைது செய்யப்பட்ட பலர், செல்லிடப்பேசியில் ஆபாசப்படம் பார்த்ததே குற்றமிழைக்கத் தூண்டியதாக வாக்குமூலம் அளித்துவரும் நிலையில், செல்லிடப்பேசியின் இணையப் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பது அவசியமாகியுள்ளது.
.
பாலுணர்ச்சி உயிர்களுக்குப் பொதுவானது. ஆனால் மனிதன் மட்டுமே பாலுறவை விஷமத்தனமான கேளிக்கையாக்கி இருக்கிறான். அந்தரங்கமாக நடைபெற வேண்டிய பாலுறவைப் பதிவு செய்து அதை வர்த்தகமும் செய்கிறான். இதற்கு உதவுகின்றன ஆபாச இணையதளங்கள்.
.
பாலுறவைத் தூண்டும் இலக்கியங்களும் திரைப்படங்களும் இதற்கு முன்னரும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை வயது வந்தோர் மட்டுமே, அதுவும் குற்ற உணர்ச்சியுடன் தனியே படிக்கவும் பார்க்கவும் செய்தனர். இதன் அடுத்தகட்ட வளர்ச்சியான ஆபாச விடியோ பேழைகளும் கூட ரகசியமாகவே ரசிக்கப்பட்டன.ஆனால், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட நவீன செல்லிடப்பேசிகளின் வருகை, நமது வெட்கமின்மையை வெளிப்படுத்தும் கருவியாகிவிட்டது.
.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி மூலம் தனியே பார்க்கப்பட்ட இத்தகைய தளங்கள் இப்போது பொது மைதானத்துக்கு வந்துவிட்டன. பயணிகள் சூழ்ந்த பேருந்திலும் ரயிலிலும் கூட செல்லிடப்பேசியில் ஆபாசப்படம் பார்க்கிறார்கள் சிலர்.
.
இந்த ஆபாசப்படத்தைப் பார்க்கும் ஆணின் பார்வை அங்குள்ள பெண்களின் அவயங்களை மேயாமல் என்ன செய்யும்? இதுவே அடுத்த நிலையில் பலாத்காரத்துக்கும் இட்டுச் செல்கிறது. 2012-ஆம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் பலவந்தப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயாவின் அவலத்துக்குக் காரணமான குற்றவாளி ஒருவன், தான் பார்த்த ஆபாசத்தளமே தன்னை மிருகமாக்கியது என்று சொன்னதை மறக்க முடியுமா?
.
இன்று உலக அளவில் கோடிக் கணக்கான ஆபாச இணையதளங்கள் இருப்பதாக புள்ளிவிரங்கள் கூறுகின்றன. செல்லிடப்பேசியில் இவை திறந்தவெளியில் இலவசமாகவே கிடைக்கின்றன. எனவே ஆபாசப்படங்களை முன்போல ரகசியமாகக் காண சிரமப்படத் தேவையில்லாத நிலை உருவாகி இருக்கிறது.
.
எனவேதான், கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுத்தார். மிக மோசமான 850 ஆபாச இணையதளங்களைப் பட்டியிலிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவர், இந்தத் தளங்களால் இளைய சமுதாயம் சீரழிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து,  ‘இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமானது. இந்த விஷயத்தில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?’ என்று கடந்த ஜூலை 8-ஆம் தேதி கேள்வி எழுப்பினார். தவிர, மத்திய அரசு இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையுடன் ஆகஸ்ட் 10-இல் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டார்.
.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, மத்திய அரசு இப்போது 857 ஆபாச இணையதளங்களைத் தடை செய்துள்ளது. தொலைதொடர்புத் துறையின் கட்டளைக்கு இணங்கி, மேற்படி இணையதளங்களை இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள் (ஐஎஸ்பி) முடக்கியுள்ளன. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
.
ஆபாசத்தளங்கள் கருத்துரிமையின் சின்னம் என்று சிலர் முழங்குகிறார்கள். பெண்களை போகப்பொருளாகச் சித்தரிப்பதுடன் பாலியல் குற்றங்களுக்கும் வழிவகுக்கிற ஆபாசதளங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களைப் பற்றி என்ன சொல்வது? மனித உரிமை வாதிகளும் அதீத அறிவுஜீவிகளும் வழக்கம்போல இவ்விஷயத்தில் அரசைச் சாடுகிறார்கள்.
.
உண்மையில், அரசு மிகவும் மென்மையான நடவடிக்கையையே எடுத்துள்ளது. இப்போதும்கூட சமூகக் கட்டுப்பாடுகளை மீறாத யு-ட்யூப் போன்ற தளங்கள் தடுக்கப்படவில்லை. சிலரது ஆட்சேபனைகளை ஏற்று சில இணையதளங்களின் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தவிர மெய்நிகர் கணினி இணையத் தொழில்நுட்பம் (விபிஎன்) மூலமாக விருப்பமுள்ளவர்கள் தங்கள் வயதை உறுதி செய்து, இத்தளங்களைக் காண்பதை அரசு தடுக்கவில்லை.
.
இப்போதைய பிரச்னை என்னவென்றால், பருவ வயதை எட்டாதவர்களும் கூட மிக எளிதாக செல்லிடப்பேசியில் ஆபாசத் தளங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் காண முடிவதுதான். எனவே, அரசின் இந்த நடவடிக்கையை பெண்ணியவாதிகளும், பண்பாட்டை நேசிப்பவர்களும் ஆதரிக்க வேண்டும்.
.
பொதுத்தளத்தில் எழும் கூக்குரல்களின் எண்ணிக்கை ஆபாசத்தளங்களுக்கு சாதகமாகிவிட்டால், அரசு தனது நிலையிலிருந்து பின்வாங்கிவிடும்.
.
இப்போதும்கூட நீதிமன்ற உத்தரவால்தான் அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஆபாச தள விவகாரத்தில் அரசு விலகியிருக்க வேண்டும் என்ற கருத்து பிரசாரம் செய்யப்படும் நிலையில், எதிர்காலத் தலைமுறையினரின் நலனை விரும்பும் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும்.
 .
பிஞ்சிலேயே வெம்பிவிடும் வாலிப வயோதிக அன்பர்களாக நமது இளைஞர்கள் மாறாமல் தடுக்க வேண்டுமானால், நமது குலம் காக்கும் பெண்களின் மாண்பு காக்கப்பட வேண்டுமானால், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களையும் தடுக்க வேண்டுமானால், இது ஒன்றே வழி.
 .

தினமணி (06.08.2015)

பெருநாவலின் இலக்கணம்

3 Aug

Gora wrapper

புதிய இலக்கிய வகையான பெருநாவல் ஐரோப்பாவிலிருந்து சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகமானபோது எழுதப்பட்ட ஆரம்பகாலப் புதினங்களுள் ரவீந்திரரின் கோராவுக்கு (1909) முக்கிய இடமுண்டு.

வங்கத்தில் எழுந்த சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கமும், ஆங்கிலக் கல்வியால் விளைந்த விழிப்புணர்வும், உருவாகி வந்த இந்தியப் பெருமிதமும் கலந்த புதிய போக்கு இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்ததன் தருணத்தை கோராவில் நாம் காணலாம். இந்திய மொழி இலக்கியங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இப்புதினம், தொடக்க காலத்தில் பலத்த விவாதங்களையும் ஏற்படுத்தியது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான பெரும்பாலான எழுத்தாளர்கள் போலவே, ரவீந்திரரின் புதினத்திலும் சமூக அக்கறையும் தேசிய விழிப்புணர்வும் மிளிர்கின்றன. நாடு- உலகம், சாதி- மதம், ஆண்- பெண் உறவுகள், முற்போக்கு- பிற்போக்கு எனப் பலதரப்பட்ட வாழ்வின் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி ஆராய்வதற்கு தனது கதைமாந்தர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார் ரவீந்திரர்.

சனாதனியாகவும், சமுதாய மாற்றம் விரும்பும் இளைஞனாகவும் ஒருசேரக் காணப்படும் தீவிர ஹிந்துவாக வளரும் கதாநாயகன் கோரா புதினத்தின் இறுதிக்கட்டத்தில் தான் பிறப்பில் ஐரிஷ்காரன் என்பதை உணர்ந்து நொறுங்கும்போது, வாழ்க்கையின் பொருளின்மை புலப்படுகிறது. ஆயினும், பாரதவர்ஷத்தின் (பாரதத்தின் பழம்பெயர்) மடியில் அவன் தஞ்சமடைகிறான்: அவனை தனது மகனாக ஏற்கிறாள், பாரத அன்னையின் உருவகமாக ரவீந்திரரால் படைக்கப்பட்ட சுசரிதா.

மதம், கொள்கை, சித்தாந்தங்களைவிட மனித உறவுகளும் அறமுமே முக்கியம் என்பதை நிலைநாட்டுவதில் கோரா வெற்றி பெறுகிறது. தனது புனைவு விளையாட்டுகளினூடே அரசியல், சமூகவியல், தத்துவ விவாதங்களை ரவீந்திரர் நுழைத்துள்ள பாங்கு வியக்கச் செய்கிறது. ரவீந்திரரின் எதிர்கால நிலைப்பாடான உலகப் பொதுமைச் சிந்தனை நோக்கி புதினம் வளர்வதையும் இந்தப் புதினத்தில் காண முடிகிறது.

இந்நூல், வங்க மூலத்திலிருந்து சுஜீத் முகர்ஜியால் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட வடிவின் தமிழாக்கமாகும். பிற மொழி இலக்கியங்களை அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் சாகித்திய அகாதெமியால் வெளிடப்பட்டுள்ள இந்நூல் தமிழுலகுக்கு நல்லதொரு புதிய வரவு.

வரலாற்றை உருவாக்குவது, உயர்ந்த தரிசனத்தை முன்வைப்பது, முழுமையை நோக்கிச் செல்லும் வடிவம் கொண்டிருப்பது ஆகியன பெருநாவலின் இலக்கணமாகச் சொல்லப்படுகின்றன. இம்மூன்றையும் நிறைவு செய்வதாக ரவீந்திரரின் கோரா திகழ்கிறது.

***

கோரா:

இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: கா.செல்லப்பன்

704 பக்கங்கள், விலை: ரூ. 350,

சாகித்ய அகாதெமி,

குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை,

தேனாம்பேட்டை, சென்னை- 600 018.