Archive | October, 2015

காப்புரிமை பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி!

27 Oct
J.C.Bose 3

ஜெகதீச சந்திர போஸ்

அறிவுசார் சொத்துரிமை (இன்டலக்சுவல் பிராப்பர்ட்டி) குறித்து இப்போது உலக அளவில் பேசப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய வணிகத் தயாரிப்பு, புதிய உற்பத்தி முறை, புதிய இலக்கியம் உள்ளிட்டவற்றை உருவாக்குபவர், தனக்கும் தனது நாட்டுக்கும் உலக அளவில் பெறும் அங்கீகாரம் இது.

எழுத்தாளர்களுக்கு பதிப்புரிமையாகவும் (காப்பிரைட்), வணிக நிறுவனங்களுக்கு வர்த்தகச் சின்னமாகவும் (டிரேட் மார்க்) கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையாகவும் (பேடன்ட்) அறிவுசார் சொத்துரிமை விளங்குகிறது. இவற்றை வைத்திருப்போருக்கு, பயனாளிகள் குறிப்பிட்ட காலத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நியதி.

இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. நமது கவனக்குறைவால், பல்லாயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் வேம்பு, மஞ்சள் ஆகியவற்றுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று காப்புரிமை பெற்றதும், அதனால் ஏற்பட்ட சர்ச்சையும் நினைவிருக்கலாம்.

பொதுவாகவே நமது நாட்டில் ஆராய்ச்சித் துறையில் கொடுக்கப்படும் கவனம் குறைவு. எனவே, புதிய கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமை பெறுவதில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். சமீபகாலமாகத் தான் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விழிப்புணர்வு நம் நாட்டில் பெருகி வருகிறது.

இந்தக் குறைபாட்டை முதலில் போக்கியவர், தாவரங்களுக்கும் உயிருண்டு என்று, தான் கண்டறிந்த ‘கிரஸ்கோகிராப்’என்ற கருவியால் நிரூபித்த விஞ்ஞானி ஜெகதீச சந்திர போஸ்.

1904-ஆம் ஆண்டு, தனது ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து, அதற்கு காப்புரிமை (யுஎஸ்755840ஏ) பெற்ற போஸ், அதன்மூலம், ‘இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற விஞ்ஞானி’ என்ற பெருமையைப் பெற்றார். அவர் காப்புரிமை பெற்றதே ஒரு சுவையான வரலாறு.

கிரெஸ்கோகிராப்

கிரெஸ்கோகிராப்

கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய போஸ், தீவிர அறிவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகள் குறித்த ஆராய்ச்சி தொடங்கிய காலகட்டம் அது. இந்த அலைகளின் நீளத்தைக் குறைத்தால் தகவல் தொடர்பில் பயன்படுத்த முடியும் என்று போஸ் கூறினார். ஆனால் அதை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சி வசதியும் நிதி வசதியும் போஸிடம் அப்போது இல்லை.

1893-இல் ஐரோப்பிய விஞ்ஞானியான நிக்கோலா டெஸ்லா, மின்காந்த (ரேடியோ வேவ்ஸ்) அலைகளின் இருப்பை நிரூபித்தார். அப்போது போஸின் கருத்து உண்மையானது.

அடுத்த ஆண்டில் (1894 நவம்பர்), அலைநீளம் குறுக்கப்பட்ட மின்காந்த அலைகளின் பயன்பாட்டை கொல்கத்தா நகர்மன்ற அரங்கில் துணைநிலை ஆளுநர் வில்லியம் மெக்கன்ஸி முன்னிலையில் நிரூபித்துக் காட்டினார் போஸ்.

வெடிமருந்தை எரியச் செய்து, அதன் தூண்டலால் குறைந்த அலைநீள மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி, எந்தத் தொடர்பு ஊடகமும் இன்றி தொலைவிலிருந்த மணியை இயங்கச் செய்தார் போஸ்.

அதற்கு அப்போது ‘கண்ணுக்குத் தெரியாத ஒளி’ என்று பெயரிட்ட போஸ், ‘இந்த ஒளி (மின்காந்த அலை) சுவர்களையும் கட்டடங்களையும் கூட ஊடுருவும். இதன் உதவியால் கம்பியில்லாத் தொலைதொடர்பு எதிர்காலத்தில் சாத்தியமாகும்’ என்றார்.

மின்காந்த அலைகளைக் கவரும் குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) குறித்த பல உண்மைகளை போஸ் கண்டறிந்தார். அவை தற்போது பயன்பாட்டிலுள்ள என்-பி-என் (டிரான்சிஸ்டர்) என்ற மின்னணுவியல் கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக இருந்தன.

கிறிஸ்டல் ரேடியோ டிடெக்டர்

கிறிஸ்டல் ரேடியோ டிடெக்டர்

மின்காந்த அலைகளின் பயன்பாட்டைக் கண்டறிந்த போஸ் அதனை தனது அறிவுசார் சொத்தாகப் பதிவு செய்வதை விரும்பவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளை சுயநலத்துடன் பதிவு செய்வது கூடாது; அது உலகைச் சுரண்டுவதாகும் என்று அவர் வாதிட்டார். ஆனால் இந்தத் தத்துவமே வானொலியின் (ரேடியோ) இயக்கத்துக்கு அடிப்படை. அதே ஆண்டில் வானொலியை இயக்கி அதற்கு காப்புரிமமும் பெற்ற இத்தாலியரான மார்க்கோனி அதற்கான பெரும் புகழை அடைந்தார்.

கம்பியில்லாத் தகவல் தொடர்பு சாதனம் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று போஸை அணுகி, அவரது கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமைக்காக பெருமளவில் பணம் தருவதாகக் கூறியபோதும் அவர் அதை ஏற்கவில்லை. தனது கண்டுபிடிப்புகளால் உலகம் நன்மை அடையுமானால், யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

ஆனால், போஸின் நெருங்கிய நண்பரும், சுவாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யையுமான சகோதரி நிவேதிதை, அவரது கருத்தை ஏற்கவில்லை. அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் குறித்து போஸிடம் விவாதித்து அவரது மனதை மாற்ற முயன்றார் நிவேதிதை.

இந்நிலையில் தான், ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆராய்ச்சி முடிவை போஸ் 1901-இல் வெளியிட்டார். அப்போது போஸின் நலம் விரும்பிகளும், சாரா சாப்மன் புல் என்ற அமெரிக்க விஞ்ஞானியும் தொடர்ந்து வற்புறுத்தியதால், தனது ஆராய்ச்சி முடிவை உலக அளவிலான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, 1904 மார்ச் 29-இல் காப்புரிமை பெற்றார் போஸ். அதுவே முதல் இந்திய காப்புரிமை என்ற சிறப்பைப் பெற்றது.

ஜெகதீச சந்திர போஸின் பல சாதனைகள் நமக்கு ஊக்கமும் பெருமிதமும் அளிப்பனவாகும். 1858, நவ. 30-இல் பிறந்து 1937, நவ. 23-இல் மறைந்த வங்க விஞ்ஞானியான ஜெகதீச சந்திரபோஸ், இயற்பியல், உயிரியல், தாவரவியல், தொல்லியல், வங்க இலக்கியம் எனப் பல துறைகளில் முத்திரை பதித்திருக்கிறார். கொல்கத்தாவில் 1917-இல் இவர் நிறுவிய போஸ் ஆராய்ச்சிக் கழகம் இன்றும் பல விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறது.

.

தினமணி- இளைஞர்மணி (27.10.2015)

.

Advertisements

நட்புகளின் பதிவு…

20 Oct

nool2c

தற்போதைய வேலூர் மாவட்டத்தின் ராணிப்பேட்டை அருகே பிஞ்சி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியரின் மகனாக 1928-இல் பிறந்த ஆ.பத்மநாபன், தான் கற்ற கல்வியால் வாழ்வில் உயர்ந்து தனது சமுதாயத்துக்கும் வழிகாட்டியானார். நாட்டிலேயே முதன்முதலாக ஐஏஎஸ் (1962) தேறிய தாழ்த்தப்பட்ட மாணவர் என்ற பெருமையைப் பெற்ற இவர், தமிழகத்தில் ஆட்சிப்பணியில் பல்வேறு நிலைகளை வகித்திருக்கிறார்.

தனது தெளிந்த பார்வையாலும் தலைமைப் பண்பாலும் தமிழக தொழில் துறைக்கும் சமூகநலனுக்கும் பல நன்மைகள் செய்த இவர், கடைசியாக தமிழக அரசின் தலைமைச் செயலராக உயர்ந்தார். பின்னாளில் மிசோரம் மாநில ஆளுராகப் பதவி வகித்தபோது மிசோ மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து தமிழின் புகழைப் பரப்பினார்.

ஆ.பத்மநாபன் பல நூல்களை எழுதியிருக்கிறார். தவிர, பலரது நூல்களுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். அத்தகைய அணிந்துரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளது பூம்புகார் பதிப்பகம்.

இதன்மூலம் இவரது பரந்துபட்ட பலதுறை அறிவு புலப்படுகிறது; சமுதாயத்தின் பலதரப்பினருக்குடனும் இவர் கொண்டிருந்த நட்பும் வெளிப்படுகிறது. ஆ.பத்மநாபன் எழுதிய நூல்களுக்கு அன்பர்கள் எழுதிய வாழ்த்துரைகளும் இந்நூலில் உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே இவரது அடிநாதமாக இழையோடுவதை ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது.

***

நூல் அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும்

ஆ.பத்மநாபன் ஐஏஎஸ்

180 பக்கங்கள், விலை: ரூ. 150

பூம்புகார் பிரசுரம்,

127 (பழைய எண்: 63), பிரகாசம் சாலை,

பிராட்வே, சென்னை- 600 108.

தொலைபேசி: 044- 2526 7543.

நீதித்துறைக்குள்ளிருந்து ஓர் கலகக்குரல்

20 Oct

chandrubook

ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான நீதித்துறை மீதே மக்கள் நம்பிக்கை இழந்துவரும் காலகட்டம் இது. நாட்டின் சகல துறைகளிலும் காணப்படும் தரவீழ்ச்சியிலிருந்து நீதித்துறை மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியாது என்பது உண்மையே. அதேசமயம், இருண்ட வானில் அவ்வப்போது சில ஒளிக்கீற்றுகள் தோன்றி, நமக்கு தெம்பூட்டுகின்றன.

இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராக விளங்கி, வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி, உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த சந்துரு, தனது பதவிக்காலத்தில் முன்னுதாரணமான தீர்ப்புகளை வழங்கி, நீதித்துறையின் நெஞ்சை நிமிர்த்தியவர்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், தனது கருத்துகளை நாளிதழ்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். அவை தருக்க முறையிலும், நியாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தன. அவற்றை நல்ல முறையில் தொகுத்து, காலச்சுவடு பதிப்பகம் நேர்த்தியான நூலாக வெளியிட்டுள்ளது.

இந்நூலுக்கு பஞ்சாப்- ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அளித்துள்ள முகவுரை சிறப்பாக அமைந்துள்ளது. நூலின் முன்னுரையில், ‘விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எந்த நிறுவனத்தின் செயல்பாடும் திருப்தி அளிப்பதில்லை’ என்கிறார் சந்துரு.

நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்ற மாயத்தோற்றம் காரணமாக பலரும் மனதுக்குள் புழுங்கி வரும் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளிப்பதுடன், மக்களின் விழிப்புணர்வையும் பட்டை தீட்டுகிறார் சந்துரு.

தங்கு தடையற்ற உரைநடையில் ஆங்காங்கே அவல நகைச்சுவையும் மிளிர்கிறது. ‘1971ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. அதனால் குடிசைகள் செங்குத்தான சிமென்ட் குடிசைகளாக மாறிவிட்டன’ என்ற ஒரு வாக்கியம் போதும், நூலின் சுவைக்கு.

சுதேசிகளும் விதேசிகளும், மதுக்கடைகளை சட்டப்படி ஒழிப்பது எப்படி? சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மதுரை அமர்வு சுழலும் பலகையா? ஆகியவற்றை இந்நூலின் முத்திரைக் கட்டுரைகள் எனலாம். கட்டுரைகள் வெளியான நாள்களையும் உடன் குறிப்பிட்டிருந்தால் ஆதாரப்பூர்வமாக இருந்திருக்கும்.

நீதிமன்றங்கள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டும் என்ற கருத்துடன், ‘நீதிபதிகளுக்கு ஓய்வு தேவை, நீதிமன்றங்களுக்கு அல்ல. நீதிக்கு விடுமுறை என்பதில் நீதியில்லை’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் சந்துரு.

நீதித்துறையின் உள்ளிருந்து ஒலிக்கும் கலகக்குரலாகவும், சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்தும் எழுத்தாளராகவும், இந்நூலில் வெளிப்படுகிறார் நீதிபதி சந்துரு. அவரது அனுபவங்களின் திரட்சியாகவும், எண்ணங்களின் தொகுப்பாகவும் இந்த நூல் விளங்குகிறது.

***

கனம் கோர்ட்டாரே!

கே.சந்துரு

264 பக்கங்கள், விலை: ரூ. 225

காலச்சுவடு பதிப்பகம்,

66, கே.பி.சாலை,

நாகர்கோவில்- 629 001.

.

ஆச்சியின் நேர்காணல்…

18 Oct
achi manorama article - vm murali

விஜயபாரதம் தீபாவளி மலர்- 2010

.

படத்தின் மீது சொடுக்கினால், பெரிதாக்கிப் படிக்கலாம்!

.