உடலினை உறுதி செய்!

2 Oct

balam quote

.

தமிழகத்தின் தவப்புதல்வரான மகாகவி பாரதி, இளைஞர்நலனில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இளைஞர்நலமே தேசநலம் என்ற எண்ணம் கொண்ட பாரதி,  ‘இளைய பாரதத்தினாய் வா வா வா’ என்று அழைத்து மகிழ்ந்தவர்.

இளைய தலைமுறையின் நல்வாழ்க்கைக்காக அவர் எழுதிய புதிய ஆத்திசூடி, இளைஞர்கள் செய்ய வேண்டியவற்றை தெளிவாக வரையறுக்கிறது. புதிய ஆத்திசூடியில் உள்ள 110 அறிவுரைகளில் அதிகமாகக் காணப்படுவது இளைஞர்களின் உடல்பலத்திற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் தான்.

‘இளைத்தல் இகழ்ச்சி’ என்று பலவீனத்திற்கு எதிரான கருத்தை முன்வைக்கும் பாரதி,  ‘நொந்தது சாகும்’ என்று மற்றொரு வரியில் எச்சரிக்கிறார். இதையே தான் சுவாமி விவேகானந்தரும்,  ‘பலமே வாழ்வு, பலவீனமே மரணம்’ என்று அறைகூவுகிறார்.

‘உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்று திருமூலரும் கூறுகிறார். பாரதியின் புதிய ஆத்திசூடி, இளமையை பேணிக் காத்து மிடுக்குடன் வாழுமாறு உபதேசிக்க எழுதப்பட்டதாகவே உள்ளது. ஒருவரியில்  ‘யௌவனம் காத்தல் செய்’ என்று பாரதி அறிவுறுத்துகிறார். எதற்காக? “வையத் தலைமை கொள்’வதற்காக!

‘மூப்பினுக்கு இடங்கொடேல்’,  ‘நோய்க்கு இடங்கொடேல்’ என்றெல்லாம் கூறிய பாரதி ‘உடலினை உறுதி செய்’ என்கிறார். இந்த உடலினை உறுதி செய்வது எப்படி?

நமது உடலை இளமைத்துடிப்புடன், நோய் அணுகாமல் காக்க சில உடற்பயிற்சிகள் அவசியம். அதிகாலையில் துயிலெழுவதும், சில மணிநேரங்கள் கடும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், உடலை சுறுசுறுப்பாக்கும் விளையாட்டு, யோகா ஆகியவற்றில் ஈடுபடுவதும் இளமையை நீடிக்கச் செய்ய வல்லவை.

தினசரி ஒருமணி நேரமேனும் உடலின் அனைத்துப் பாகங்களும் இயங்கும் வகையில் உடற்பயிற்சி செய்பவரின் உடல் அவர் சொன்னதைக் கேட்கும்.  ‘விசையுறு பந்தினைப் போல் மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்று பராசக்தியிடம் பாரதி வேண்டிய உடல்நலம் உடற்பயிற்சியால் தான் சாத்தியமாகும்.

உடற்பயிற்சியால், நமது உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. அப்போது நமது ரத்தத்தின் வேகமான சுழற்சியால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சியால் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகிறது; பசி பெருகி, உணவைச் செரிக்கும் ஆற்றல் அதிகரிப்பதால் ஜீரண மண்டலமும் நலம் பெறுகிறது. வேகமான உடற்பயிற்சி காரணமாக நுரையீரல்களின் ஆற்றல் அதிகரித்து சுவாச மண்டலமும் தெளிவடைகிறது.

ரத்த ஓட்டத்தின் வேகமான சுழற்சியால் சுத்திகரிக்கப்படும் ரத்தத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்குமó கொழுப்பு கரைகிறது. அதனால் உடலை இயக்கும் இதயம் வலிமை பெறுகிறது.

உடற்பயிற்சியின்போது எலும்பு மூட்டுகள் உரம்பெறுகின்றன. உடலின் வளையும் திறன் அதிகரிக்கிறது. தவிர வியர்வை ஆறாகப் பெருகுவதால் உடலின் தாதுக்கழிவுகள் இயல்பாக வெளியேற்றப்படுகின்றன. இவை அனைத்தாலும், நோய் அணுகமுடியாமல் ஆரோக்கியம் வலுப்பெறுகிறது.

உடற்பயிற்சியால் உடலின் வலிமை அதிகரிக்கிறது; எதையும் தாங்கும் திறன் அதிகரிக்கிறது; உடலின் வளையும் தன்மை கூடுகிறது. தவிர, ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடலுறுதி’ கிடைக்கிறது.

தவறான உணவுப்பழக்கம், போதைப்பழக்கம், தகுதியற்ற சேர்க்கை போன்றவற்றைத் தவிர்க்கச்செய்து, இளைஞர்களைக் காக்கும் கவசமாகத் திகழ்வதும் உடற்பயிற்சியே.

வேகமான நடைப்பயிற்சி, ஓட்டம், மிதிவண்டி ஓட்டுதல், திறந்தவெளி விளையாட்டுகள், உடற்பயிற்சி சாதனங்களைப் பயன்படுத்துதல், சிலம்பம், நீச்சல், தற்காப்புப் பயிற்சிகள், யோகாசனம் போன்றவற்றை இளைஞர்களும் இளைஞிகளும் தொடர்ந்து மேற்கொள்வது அவர்களின் வாழ்க்கைக்கு ஊக்கம் தரும்.

தொடர் உடற்பயிற்சியால், தோற்றப்பொலிவும், முகத்தில் தெளிவும் மலர்கின்றன. தளர்ச்சி குறைந்து, உடலின் மிடுக்கு நடையில் வெளிப்படுகிறது.  ‘ஏறுபோல் நட’ என்ற பாரதியின் அறிவுரைப்படி அப்போது தான் இளைஞர்கள் நடைபயில முடியும்.

உறுதியான உடலில் மட்டுமே உறுதியான, தெளிவான மனம் அமையும். உடற்பயிற்சியால் சோம்பல் காணாமலாகிறது. சுறுசுறுப்பான உடலில் மனம் துடிப்புடன் செயலாற்றும்போது மட்டுமே வாழ்வில் உயர முடியும்.

இதுவே மகாகவி பாரதியின் விருப்பம். நமது இளைய பாரதம் உயர்வதற்கான வழியும் இதுவே.

தினமணி- இளைஞர்மணி (22.09.2015)
.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: