நீதித்துறைக்குள்ளிருந்து ஓர் கலகக்குரல்

20 Oct

chandrubook

ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான நீதித்துறை மீதே மக்கள் நம்பிக்கை இழந்துவரும் காலகட்டம் இது. நாட்டின் சகல துறைகளிலும் காணப்படும் தரவீழ்ச்சியிலிருந்து நீதித்துறை மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியாது என்பது உண்மையே. அதேசமயம், இருண்ட வானில் அவ்வப்போது சில ஒளிக்கீற்றுகள் தோன்றி, நமக்கு தெம்பூட்டுகின்றன.

இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராக விளங்கி, வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி, உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த சந்துரு, தனது பதவிக்காலத்தில் முன்னுதாரணமான தீர்ப்புகளை வழங்கி, நீதித்துறையின் நெஞ்சை நிமிர்த்தியவர்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், தனது கருத்துகளை நாளிதழ்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். அவை தருக்க முறையிலும், நியாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தன. அவற்றை நல்ல முறையில் தொகுத்து, காலச்சுவடு பதிப்பகம் நேர்த்தியான நூலாக வெளியிட்டுள்ளது.

இந்நூலுக்கு பஞ்சாப்- ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அளித்துள்ள முகவுரை சிறப்பாக அமைந்துள்ளது. நூலின் முன்னுரையில், ‘விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எந்த நிறுவனத்தின் செயல்பாடும் திருப்தி அளிப்பதில்லை’ என்கிறார் சந்துரு.

நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்ற மாயத்தோற்றம் காரணமாக பலரும் மனதுக்குள் புழுங்கி வரும் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளிப்பதுடன், மக்களின் விழிப்புணர்வையும் பட்டை தீட்டுகிறார் சந்துரு.

தங்கு தடையற்ற உரைநடையில் ஆங்காங்கே அவல நகைச்சுவையும் மிளிர்கிறது. ‘1971ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. அதனால் குடிசைகள் செங்குத்தான சிமென்ட் குடிசைகளாக மாறிவிட்டன’ என்ற ஒரு வாக்கியம் போதும், நூலின் சுவைக்கு.

சுதேசிகளும் விதேசிகளும், மதுக்கடைகளை சட்டப்படி ஒழிப்பது எப்படி? சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மதுரை அமர்வு சுழலும் பலகையா? ஆகியவற்றை இந்நூலின் முத்திரைக் கட்டுரைகள் எனலாம். கட்டுரைகள் வெளியான நாள்களையும் உடன் குறிப்பிட்டிருந்தால் ஆதாரப்பூர்வமாக இருந்திருக்கும்.

நீதிமன்றங்கள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டும் என்ற கருத்துடன், ‘நீதிபதிகளுக்கு ஓய்வு தேவை, நீதிமன்றங்களுக்கு அல்ல. நீதிக்கு விடுமுறை என்பதில் நீதியில்லை’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் சந்துரு.

நீதித்துறையின் உள்ளிருந்து ஒலிக்கும் கலகக்குரலாகவும், சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்தும் எழுத்தாளராகவும், இந்நூலில் வெளிப்படுகிறார் நீதிபதி சந்துரு. அவரது அனுபவங்களின் திரட்சியாகவும், எண்ணங்களின் தொகுப்பாகவும் இந்த நூல் விளங்குகிறது.

***

கனம் கோர்ட்டாரே!

கே.சந்துரு

264 பக்கங்கள், விலை: ரூ. 225

காலச்சுவடு பதிப்பகம்,

66, கே.பி.சாலை,

நாகர்கோவில்- 629 001.

.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: