Archive | November, 2015

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்…

30 Nov

amir family

தில்லியில் அண்மையில் நடைபெற்ற சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகர் ஆமிர்கான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின்போது அவரிடம் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணலில், நாட்டில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்துவிட்டதாக ஆமிர் குறிப்பிட்டதுதான் நாடு முழுவதும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையில் அந்த நேர்காணலில் ஆமிர்கான் அற்புதமான நல்ல பல கருத்துகளைக் கூறியிருந்தார். அவை எதுவும் தலைப்புச் செய்தியாகவில்லை.  “நான் இந்தியனாகவே கருத்துத் தெரிவிக்க விரும்புகிறேன்: இஸ்லாமியனாக அல்ல” என்ற அவரது கருத்து மிகவும் நேர்மையானது; துணிச்சலானது.

“இஸ்லாமியர்களின் மறையான திருக்குர்ஆன் வன்முறையை போதிக்கவில்லை; அப்பாவிகளைக் கொல்வதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. அப்பாவிகளை மதத்தின் பெயரால் கொல்பவர்களை இஸ்லாமியர்களாகக் கருத முடியாது; அவர்கள் பயங்கரவாதிகளே. ஐஎஸ் பயங்கரவாதிகளின் சிந்தனையை என்னால் ஏற்க முடியாது…”

-என்று, பத்திரிகையாளர் தவ்லீன் சிங் எழுப்பிய கேள்விக்கு ஆமிர்கான் பதில் அளித்தார். அதுதான் நேர்காணலின் கடைசிக் கேள்வியும் கூட. நியாயமாக, தற்போதைய உலகச்சூழலில் ஆமிரின் இந்தப் பதில் தான் தலைப்புச் செய்தியாகி இருக்க வேண்டும். ஆனால் என்ன நிகழ்ந்தது?

இந்த நேர்காணலில் ஆமிர்கான் கூறிய நல்ல பல கருத்துகள் மறைக்கப்பட்டு, அவர் இந்தியாவை விட்டு வெளியேற மனைவி கிரணுடன் திட்டமிடுவதாகத்தான் செய்திகள் வெளியாகின. இதுதான் ஊடகத் துறையின் இலக்கணம்.

ஆமிர்கான் வெறும் நடிகர் மட்டுமல்ல. அவர் சமூக சேவகராகவும் மக்களிடம் பெயர் பெற்றிருக்கிறார். தான் சார்ந்துள்ள மதத்தைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களிடமும் புகழ் பெற்றிருக்கிறார். விடுதலைவீரரும், முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்தின் உறவுமுறைப் பேரன் அவர்.

‘சத்யமேவ ஜெயதே’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தவர் அவர். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரையுலகில் நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் எனப் பல முகங்களுடன் உலா வரும் அவருக்கு, இந்த நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியாதா?

இங்குதான் அவர் சறுக்கினார். ஆமிர்கானின் அரசியல் வெறுப்புணர்வு அவரது நடுநிலையை வென்றதன் அடையாளம் தான், சகிப்புத்தன்மை குறித்த அவரது பதில்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே அவரை அறிவுஜீவிகள் பலர் எதிர்த்தனர். நர்மதை அணையின் உயரத்தை அதிகரிக்கும் குஜராத் மாநில அரசின் திட்டத்தை எதிர்த்து சமூக சேவகர் மேதா பட்கர் போராடியபோது, அவருடன் துணை நின்றவர் ஆமிர்கான். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அணையின் உயரத்தை அதிகரிப்பதற்குச் சாதகமானது. இன்று குஜராத் மாநிலத்தின் பசுமைப்புரட்சிக்கு நர்மதை அணைத் திட்டமே அடிப்படைக் காரணம்.

அதற்குப் பிறகும், டீஸ்டா செதல்வாட், சபனா ஆஸ்மி, தருண் தேஜ்பால் உள்ளிட்ட அறிவுஜீவி சகாக்களுடன் இணைந்து மோடிக்கு எதிரான பிரசாரங்களில் ஆமிர்கான் பங்கேற்றிருக்கிறார். அது ஆமிர்கானின் தனிப்பட்ட உரிமை. அதையெல்லாம் மீறித்தான் இந்திய மக்கள் மோடியை பெருவாரியாக ஆதரித்தார்கள்.

ஆயினும் கூட, பிரதமர் மோடியால் தூய்மை பாரதத் திட்டத்துக்கு விளம்பரத் தூதராக ஆமிர் அறிவிக்கப்பட்டார். தன்னை எதிர்த்தவர் என்பதற்காக ஆமிரை மோடி புறந்தள்ளவில்லை. மாறாக, ஆமிரின் பிராபல்யத்தை அரசின் திட்டம் வெற்றியடையச் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளவே முயன்றார். இதுவா சகிப்புத்தன்மையற்ற அரசு?

மக்களாட்சி நிலவும் நாட்டில், தங்கள் பிரசாரத்தை மீறி வென்று விட்டார் என்பதற்காக, பிரதமரைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டையும் கேவலப்படுத்தக் கூடாது; அது அறிவுள்ள செயலாக இருக்க முடியாது.
ஆனால் அதைத்தான் பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் செய்தார்கள். அவர்களும், பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் அமைதியாகிவிட்டார்கள். இப்போது அந்த அறிவுஜீவிகள் எதிர்பார்த்த சகிப்புத்தன்மை நாட்டில் நிலைநாட்டப்பட்டு விட்டதா?

இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போதுதான் ஆமிர்கான் சறுக்கினார். எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பி அளிப்பது முன்யோசனையற்ற தன்மையாகத் தெரியவில்லையா? என்பதே கேள்வி. அதற்கு அஹிம்சை முறையிலான எந்தப் போராட்ட வடிவமும் சரியே என்று கூறினார் ஆமிர்.

“பாதுகாப்பின்மை உணர்வு பல காலங்களிலும் இருந்திருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால், 1984 தில்லி கலவரங்களைக் காட்டி இப்போதைய நிகழ்வுகளை நியாயப்படுத்தக்கூடாது” என்றும் ஆமிர் சொன்னார். அத்துடன் அவர் நின்றிருந்தால் சிக்கலில்லை.

“நானும் அந்தப் பாதுகாப்பின்மையை தற்போது உணர்கிறேன். எனது மனைவி கிரணுடன் பேசிக் கொண்டிருக்கையில், எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்பின்றி இருக்க வெளிநாடு சென்றுவிடலாமா என்று கேட்டாள்”  என ஆமிர் போட்ட குண்டுதான் இப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது.

தனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியவுடன் அமீர்கானே விளக்க அறிக்கையை வெளியிட்டார்.  “நானும் எனது குடும்பமும் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை. நான் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்கு யாருடைய நற்சான்றும் எனக்குத் தேவையில்லை” என்று அவர் விளக்கம் அளித்தார். அதற்குள் அவர் ஏவிய வெடி, அவர் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்திவிட்டது.

ஏற்கெனவே மற்றொரு பிரபல நடிகர் ஷாரூக் கான் சகிப்பின்மை குறித்துப் பேசி சர்ச்சை அடங்கிய நிலையில், ஆமிர் கானும் அவரது அடியொற்றிப் பேசியது சச்சரவானது இயற்கையே. இவ்விருவரும் இஸ்லாமியர்கள் என்பதும், இருவருமே மோடி எதிர்ப்பாளர்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை.

எனவே தான் ஆமிர் கானின் கருத்து வெற்று அரசியல் கருத்தாக மாறிவிட்டது. இதுவரை அறிவுஜீவிகள் செய்துவந்த மோடி எதிர்ப்பு யுத்தம், அதன் உச்சத்தில் முனை மழுங்கிய இடமாகவே ஆமிர்கானின் நேர்காணல் காட்சி அளிக்கிறது.
மக்களின் மனநிலையையும் இயல்பு நிலையையும் உணராத வறட்டு அறிவுஜீவித்தனத்தின் குரலாகவே ஆமிரின் கருத்து முடங்கிப்போனது.

உலகளாவிய அளவில் இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் பேரழிவுகள் நிகழ்த்தப்படும் இந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் பாதுகாப்பில்லை என்று உணர்வதாக ஆமிர் குறிப்பிட்டது அவல நகைச்சுவையாகிவிட்டது.

ஆமிரின் உள்ளரசியல் அவர் நேர்காணலில் கூறிய நல்ல பல கருத்துகளையும் வீணாக்கிவிட்டது. ஒருகுடம் பாலில் ஒரு துளி விஷம் என்று சும்மாவா சொன்னார்கள்?

.

-தினமணி (30.11.2015)

.

Advertisements

புதினமும் கட்டுரையும் கலந்த கலவை

30 Nov

Kashmir book

ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, பின்னாளில் மின் பொறியாளராகவும் பாஜக நிர்வாகியாகவும் செயல்பட்ட கேப்டன் எஸ்.பி.குட்டியின் எழுத்தார்வத்தால் விளைந்த நூல் இது. அவரது துறை சார்ந்த அனுபவமும், கதை சொல்லும் ஆற்றலும், சரித்திர ஆதாரங்களும் பின்னிப் பிணைந்ததாக உள்ள இந்நூல், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என நிறுவுகிறது.

இந்தியாவின் மகுடமாகக் குறிப்பிடப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களுக்கு என்ன காரணம் என்பதை ஒரு ராணுவ வீரரின் பார்வையில் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நூலைப் படிக்கத் தொடங்கிவிட்டால் தொடர்ந்து படிக்கும் வகையில், சுவாரசியமாக, பல தகவல்களையும் நிகழ்வுகளையும் தொகுத்திருக்கிறார். இந்நூலுக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அணிந்துரை வழங்கி இருக்கிறார்.

பிரிக்கப்படாத பாரதம் இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிளவுபட்டபோது காஷ்மீர் தனிநாடாக இருக்க விரும்பியது ஏன்? பிறகு காஷ்மீர மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய சம்மதித்ததன் பின்புலம் என்ன? அப்போது முதல் பிரதமர் நேருவும் காஷ்மீர் மக்களின் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவும் செய்த தவறுகள் யாவை? எனப் பல கேள்விகளுக்கு இந்நூல் பதில் அளிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இருப்பதற்காக இன்னுயிர் ஈந்து போராடிய ராணுவ வீரர்களின் தியாகம், அந்த மாநிலத்துக்கென்று சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவு அளிக்கப்பட்டதன் பிரத்யேகப் பின்னணி, அரசியல் சாசன சபையில் அம்பேத்கரின் எச்சரிக்கை, மத அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்குண்ட அரசியல் தலைவர்கள், ஐ.நா.சபையின் தலையீட்டை தானாக வருந்தி வரவழைத்த பிரதமர் நேரு என சரித்திரத்தின் மறந்துபோன பல பக்கங்களை நினைவூட்டுகிறார் ஆசிரியர்.

ராணுவ நடவடிக்கைகளையும், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் வீரர்களின் செயல்பாடுகளையும் எழுதும்போது போர்க்களத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறார் கேப்டன் எஸ்.பி.குட்டி. இந்த நூல் புதின நடையும் கட்டுரைத் தரவுகளும் கலந்த நல்லதொரு கலவை. சரித்திரத் தேர்ச்சி கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல் இது.

***

காஷ்மீர் இந்தியாவுக்கே!

கேப்டன் எஸ்.பி.குட்டி

304 பக்கங்கள், விலை: ரூ. 250,

கிழக்கு பதிப்பகம்,

177 /103, முதல்தளம், அம்பாள் பில்டிங்,

லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,

சென்னை- 600 014.

.

அவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்….

29 Nov

 

Mathi cartoon 07-11-15

நன்றி: மதி/ தினமணி- 07.11.2015

 

அவர்கள் உன் முகத்தில் காறி உமிழலாம்.

அவர்கள் உன் அன்னையரை நிர்வாணமாக வரையலாம்.

அவர்கள் உன் தெய்வத்தை செருப்பால் அடிப்பதாக

கவிதை வாசிக்கலாம்; மேடையில் முழங்கலாம்.

அவர்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம்.

ஏனெனில் கருத்துரிமை என்னும் கேடயம்

தங்களிடம் மட்டுமே உள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள்.

 

தெருவில் தளர்ந்து நடையிடும் முதிய அந்தணரின்

பூணூலை அடாவடியாக அறுக்கலாம்.

நெற்றித் திலகத்தை ரத்தம் என்று கேலி பேசலாம்.

உன் மதத்துக்கு திருடன் என்று பொருள் கூறலாம்.

நீ வணங்கும் தெய்வத்தின் சிலையை

நடுத்தெருவில் உடைத்து கெக்கலி கொட்டலாம்.

ஏனெனில் சமூகநீதிக்கான உரிமை

தங்களுக்கு மட்டுமே உள்ளதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

 

அயல்நாட்டினரின் அன்பளிப்புகளுக்காக

பிறந்த நாட்டில் சோரம் போகலாம்.

அயல்மதத்தவரின் வாக்குகளுக்காக

அநாதை மதத்தவரை நிந்தனை செய்யலாம்.

அயல் சிந்தனைகளை இம்மண்ணில் பரப்ப

அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம்.

ஏனெனில் அதுவே முற்போக்கு என்று

அவர்கள் கருதி வந்திருக்கிறார்கள்.

 

அவர்கள் எவ்வளவு ஆத்திரமூட்டினாலும் நீ

அமைதி காக்க வேண்டும்.

யார் அக்கிரமம் செய்தாலும் நீ

கண்டுகொள்ளக் கூடாது.

எத்தனை குண்டுகள் வெடித்தாலும் நீ

சிரித்துக் கொண்டிருக்க வேண்டும்.

எப்படிப்பட்ட அவமானத்தையும் நீ

ஏனென்று கேட்டுவிடக் கூடாது.

அதாவது இதுவே சகிப்புத்தன்மை என்று

அவர்கள் காலம் காலமாக உபதேசிக்கிறார்கள்.

 

சொந்த நாட்டைக் கூறு போட்டாலும்

கண்மூடி தத்துவம் பேசலாம்.

சொந்த சகோதரர்கள் அகதிகளாயினும்

விதியை நொந்து பாடம் நடத்தலாம்.

எது நடந்தாலும் சொந்தமாக நீ

எப்போதும் சிந்தித்துவிடக் கூடாது

ஏனெனில் பகுத்தறிவு தங்கள் தனியுடைமை என்பது

அவர்களின் தீர்மானமான முடிவு.

 

இதையெல்லாம் யாரேனும் விமர்சித்துவிடாதீர்கள்.

அவர்கள் பொங்கி எழுந்து விடுவார்கள்.

அப்புறம் அவர்கள் இதுவரை பெற்ற

விருதுகளை, கௌரவங்களை, பட்டங்களை

குப்பையில் விட்டெறிந்து விடுவார்கள்.

ஏனெனில், இதுவரையிலும் அவர்கள் மட்டுமே

அவர்களால் விருதுகளை தொடர்ந்து பெற்றிருக்கிறார்கள்.

 

கருத்துரிமை, சமூகநீதி, முற்போக்கு, சகிப்புத்தன்மை, பகுத்தறிவு,…

இன்னபிற சங்கதிகளைக் காக்கும்

பேனா என்னும் ஆயுதம் தங்களிடம் மட்டுமே இருப்பதாக

அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாவம்… அவர்களை விட்டுவிடுங்கள்.

அவர்களை எதுவும் சொல்லிவிடாதீர்கள்..

அடுத்து அவர்கள் ஐ.நா.மன்றத்துக்கும் சென்றுவிடக் கூடும்.

ஏனெனில் தங்களுக்கு மட்டுமே மூளை இருப்பதாக

அவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

.

-விஜயபாரதம்

.

சமூகப் போராளியான விண்ணியல் விஞ்ஞானி

24 Nov
மேகநாத் சாஹா

மேகநாத் சாஹா

“விஞ்ஞானிகள் தங்கக் கோபுரத்தில் வசிப்பவர்களாகவும், நிதர்சனங்களை எதிர்கொள்ளும் மனம் இல்லாதவர்களாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். நானும் எனது இளம் வயதில் சில புரட்சிகரத் தொடர்புகளைத் தவிர்த்து 1930 வரை தங்கக் கோபுரத்தில்தான் இருந்தேன். ஆனால் சட்டம்- ஒழுங்கு ஒரு நாட்டின் நிர்வாகத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கியம். எனவேதான் நான் மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்தேன். ஏனெனில் என்னால் முடிந்த வழியில் நாட்டுக்கு ஏதேனும் செய்யவே நான் விரும்பினேன்”.

-இது ஒரு விஞ்ஞானியின் வாக்குமூலம். இந்த நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மேகநாத் சாஹா என்ற அந்த விஞ்ஞானியைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்திருப்பது அவசியம்.

வானியற்பியல் விஞ்ஞானியான சாஹா தனது 27-ஆம் வயதில் உருவாக்கிய சாஹா அயனியாக்க சமன்பாடு (Saha Ionization Equation- 1920), விண்ணியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வேதியியல் மாற்றம், புறநிலை மாற்றங்களை அறிய இந்தச் சமன்பாடு உதவுகிறது.

பிரிக்கப்படாத இந்தியாவில் டாக்கா அருகிலுள்ள சியோரடலி கிராமத்தில் மளிகைக் கடைக்காரரின் ஐந்தாவது மகனாக 1893 அக்டோபர் 6-இல் பிறந்தார் மேகநாத் சாஹா. பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் அளவுக்கு வறுமை குடும்பத்தில் தாண்டவமாடியது. ஆனால் நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்களின் உதவியால் படிப்பைத் தொடர்ந்தார்.

1905-இல் நிகழ்ந்த வங்கப் பிரிவினைக்கு எதிராக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடியதால், அவருக்கு அளிக்கப்பட்ட உபகாரச் சம்பளம் நிறுத்தப்பட்டது. ஆயினும் தேசிய சிந்தனை கொண்ட சிலரது உதவியால் வேறு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து, முதல் மாணவனாகத் தேறினார்.

பிறகு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை பட்டம் படித்தார். அங்கு இவரது சக மாணவராக இருந்தவர் சத்யேந்திரநாத் போஸ்.

இடைக்காலத்தில் புரட்சிகர விடுதலைப் போராளிகளுடனும் சாஹாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. பிரிட்டீஷாருக்கு எதிரான ஜெர்மனி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான பக்கா ஜதின் என்னும் ஜதீந்திரநாத் முகர்ஜியுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது. “அனுசீலன் சமிதி’ என்ற புரட்சிப்படையை உருவாக்கியவர்களுள் ஒருவரான அவர் பின்னாளில் (1915) பிரிட்டீஷ் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

இந்தத் தொடர்பால், சாஹாவின் அரசுப்பணிக் கனவு நிறைவேறாது போனது. புரட்சியாளர்களுடனான உறவு காரணமாக, அவரது இந்திய நிதிப்பணித் தேர்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதுவே அவர் அறிவியல் சாதனையாளராக மாறவும் வித்திட்டது.

வான் இயற்பியலில் இவரது ஈடுபாடு மிகுந்தது. சூரிய நிற மாலையில் காணப்படும் பிரான்ஹோபர் (Fraunhofer) என்னும் கருவரிகளின் தோற்றத்துக்குக் காரணம் புரிபடாமல் இருந்தது. இதை சாஹா உருவாக்கிய வெப்ப அயனியாக்கச் சமன்பாடு விளக்கியது.

விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வெப்பநிலை, புறநிலை மாற்றங்களை அவற்றிலுள்ள தனிமங்களே தீர்மானிக்கின்றன என்பதை சாஹா சமன்பாடு வெளிப்படுத்தியது. பின்னாளில், சூரியனில் பெருமளவில் ஹைட்ரஜன் வாயு உள்ளதை ஆய்வுகள் நிரூபிப்பதற்கு இந்தச் சமன்பாடு ஆதாரமானது.

இந்தச் சமன்பாடு மேகநாத் சாஹாவுக்கு பெரும் புகழைத் தந்தது. அதுமட்டுமல்ல, சக விஞ்ஞானியான சத்யேந்திரநாத் போஸுடன் இணைந்து மெய்வாயுக்களின் நிலைச் சமன்பாடு (Equation of state for Real gases) என்ற ஆய்வறிக்கையையும் சாஹா வெளியிட்டார்.

பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரிராகப் பணிபுரிந்த சாஹா, அதை முதல்தரமான கல்வி நிறுவனமாக்கினார்; இந்தியாவின் பாரம்பரிய நாள்காட்டி முறையான சக ஆண்டு கணக்கீட்டையும் முறைப்படுத்தினார்.

பிற்காலத்தில் இவரது ஆய்வுக் கண்ணோட்டம் உடனடி மக்கள் நலன் சார்ந்ததாக மாறியது. அதன் விளைவாக, தாமோதர் பள்ளத்தாக்கு, பக்ரா நங்கல், ஹிராகுட் அணைத் திட்டங்களுக்குத் தேவையான கள ஆய்வு உதவிகளைச் செய்தார்.

1948-இல் கொல்கத்தாவில் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தைத் சாஹா தொடங்கினார். அது இன்று அணுக்கரு இயற்பியலுக்கான சாஹா நிறுவனமாக (Saha Institute of Nuclear Physics) வளர்ந்துள்ளது.

அறிவியல் வளர்ச்சி சமூகநலனுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் தீவிர உந்துதல் கொண்ட தனது கருத்துகள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதால், தானே அரசியலில் இறங்க சாஹா தீர்மானித்தார். 1952-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு கொல்கத்தா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். நாடாளுமன்றத்திலும் மக்கள் சார்ந்த பணிகளுக்காக குரல் கொடுத்தார். அப்போது அரசியல்வாதிகளின் ஏளனங்களை அவர் பொருட்படுத்தவில்லை.

ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த சாஹா,  ‘அறிவியலும் கலாசாரமும்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார். அணுசக்தி ஆராய்ச்சியில் ரகசியத் தன்மை கூடாது என்று குரல் கொடுத்த முதல் விஞ்ஞானியும் சாஹா தான்.

விஞ்ஞானி, விடுதலை வீரர், கல்வியாளர், இதழாளர், நாடாளுமன்றவாதி, பொருளாதார நிபுணர், சீர்திருத்தவாதி எனப் பல முகங்களைக் கொண்டவராக இருந்தும், வாழும் காலத்தில் அவர் உரிய மதிப்பைப் பெறவில்லை.

ஆயினும் எதையும் எதிர்பாராமல், மக்கள் நலனுக்காகச் சிந்தித்து வாழ்ந்த விஞ்ஞானியான மேகநாத் சாஹா 1956, பிப்ரவரி 16-இல் மறைந்தார். சாஹா உரிய மரியாதையைப் பெறாமல் மறைந்திருக்கலாம். ஆயினும், விண்ணியலுக்கு அளித்த சாஹா அளித்த சமன்பாடு அவரது பெயரை அறிவியல் உலகில் சாகாவரம் பெற்றதாக்கிவிட்டது.  

 

தினமணி- இளைஞர்மணி (24.11.2015)