மாற்றத்தின் மறுபக்கம்

15 Nov

Short story Pic

ரயிலில் ஏறியதிலிருந்தே எதிரில் அமர்ந்திருந்த இளைஞனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வசீகரமான முகம். கட்டான உடல்வாகு. காலர் இல்லாத டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தான். வலது காதில் கம்மல் மின்னியது. நெற்றியில் சிறு குங்குமத் தீற்றல்.

சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் விரைந்து கொண்டிருந்தது. இளம் காலைநேர சூரிய ஒளியில் நனைந்த தென்னை மரங்களும், வயல்களில் பரவிய சீமைக்கருவேல மரங்களும், ஆங்காங்கே குளமாகத் தேங்கிக் கிடக்கும் சாக்கடைகளும் சாளரம் வழியே பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தன. ரயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை.

ஈரோடு ஸ்டேஷனில் அவன் ஏறினான். அருகில் நெருங்குவதற்கு முன்னரே லேசான பெர்ஃப்யூம் வாசனை பெட்டி முழுவதும் பரவியது போல இருந்தது. காலில் அணிந்திருந்த கனத்த வுட்லேண்ட்ஸ் ஷூக்கள் அவனது பொருளாதார நிலையைக் காட்டின. காதுகளிலிருந்து டி-ஷர்ட்டில் வைத்திருந்த செல்போனுக்கு இயர்போன் ஒயர்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

கால் மணிநேரம் வரை அவன் எந்தப் பக்கமும் திரும்பவில்லை. பேன்ட்ரி ஊழியர்கள் சிலர் மசாலா தோசையும் டிப் டீயும் விற்க அடிக்கடி வந்து சென்றார்கள். கையில் வைத்திருந்த புத்தகத்திலேயே ஆழ்ந்திருந்தான். இடையே, முகம் சிதைந்து கோரமாகக் காட்சியளித்த பிச்சைக்காரி ஒருத்தி வந்தபோது மட்டும் நிமிர்ந்து பார்த்த அவன், பத்து ரூபாய் கொடுத்துவிட்டு மீண்டும் புத்தகத்துக்குத் திரும்பிவிட்டான். பெரிய கர்வி போல.

படித்துக் கொண்டிருந்த நாளிதழை நான் மடித்துவைத்தபோது தான் அவன் என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தான். “சார் கொஞ்சநேரம் பேப்பர் தருகிறீர்களா?” நானும் புன்னகைத்தபடியே தந்தேன்.

ரயில் சங்ககிரியை நெருங்கியபோது அவன் இருக்கையிலிருந்து எழுந்தான். “சார் நான் பேன்ட்ரி போய் வருகிறேன். உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” கேட்டான்.

“இல்லை தம்பி, கொஞ்சம் முந்திதான் தான் சாப்பிட்டேன்” என்றேன்.

சென்றவன் திடீரெனத் திரும்பிவந்தான். அவனைப் பின்தொடர்ந்து பார்வையற்ற இளைஞன் ஒருவன் வந்தான்.

அவன் ஊதுபத்தி விற்பவன். ரயில் பயணங்களில் அவனை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பார்வையற்றோருக்காக சாயி சேவா சங்கத்தில் தயாரிக்கப்பட்ட ஊதுபத்தி, உடனடி சாம்பிராணி போன்றவற்றை விற்பனை செய்வான். கண் தெரியாமலே எப்படி இந்தப் பொருள்களை விற்கிறான் என்று நான் வியந்ததுண்டு. ஒருமுறை மலிவு விலை என்று நினைத்து, இரண்டு பாக்கெட் ஊதுபத்தி வாங்கிச் சென்று மனைவியிடம் ‘பாராட்டு’ பெற்றிருக்கிறேன்.

ஒரு பாக்கெட் ஊதுபத்தி முப்பது ரூபாய். பேரம் பேசாமல் ஐந்து பாக்கெட் வாங்கி பைக்குள் திணித்துவிட்டு பேன்ட்ரி நோக்கிப் போனான். அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகம் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. ‘இன்றைய காந்தி’ என்று புத்தகத்தின் தலைப்பு தெரிவித்தது. காந்தியைப் பற்றி ஆர்வமாகப் படிக்கும் ஒற்றைக் கம்மல் இளைஞன் செல்வதை நான் வியப்புடன் பார்த்தேன்.

***

சென்ற வாரம் கல்லூரியில் சக ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது காந்தி மீது வீசப்பட்ட கடுமையான விமர்சனக் கணைகள், எனக்கு சற்று கோபத்தை வரவழைத்தன.

“இந்த நாடு குட்டிச்சுவராப் போனதுக்கே காந்தி தான் காரணம்” என்றார் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் தமிழினியன். “ஆமாம் சார். நேதாஜி இந்த நாட்டு பிரதமரா வந்திருக்கணும். காந்தியோட பாலிடிக்ஸ் தாங்காமத் தான் அவர் நம்ம நாட்டை விட்டே ஓடிப் போனார். அந்தப் பாவத்தால தான் கடைசிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியே அவரைக் கைவிட்டிருச்சு” என்றார் கணிதவியல் பேராசிரியர் வீரரராகவன்.

தமிழினியனுக்கும் வீரராகவனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். நெற்றியில் உச்சி வரை நாமம் வரைந்திருக்கும் ராகவனைக் காணும்போதெல்லாம் கிண்டல் செய்வது தமிழினியனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. வீரராகவனும் மசிய மாட்டார். “உங்கள் பெரியாரே பெருமாளை சேவித்திருக்கிறார் தெரியுமா?” என்று வம்பு வளர்ப்பார்.

இந்த இரு துருவங்களும் காந்தி வெறுப்பு என்ற ஒரே முனையில் இணைந்ததைக் கண்டபோது ஆச்சரியமாக இருந்தது. “என்ன இருந்தாலும் அவர் தலைமை தாங்கி நடத்திய அகிம்சைப் போராட்டத்தால் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது” எனது குரல் கம்மியது.

மாலன் எழுதிய ‘ஜனகணமன’ நாவலை இளம் வயதில் படித்திருக்கிறேன். தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்து பிற்பாடு புத்தகமாகவும் வெளியானது. அதன் முன்னுரையில் காந்தியை தான் விமர்சித்ததை மாலன் குறிப்பிட்டிருப்பார்.

சாப்பாட்டு மேஜையில் குடும்பத்தினரிடையே நடக்கும் சுவாரசியமான அரட்டையில் காந்தி பெயர் இழுக்கப்பட, அவர் மீது கண்டனக் கணைகளை வீசுவார் மாலன். அப்போது எதிர்பாராத மூலையிலிருந்து அழுகையுடனும் சீற்றத்துடனும் பதில் வரும். அது அவரது அம்மா. அதேபோன்ற நிலையில் தான் நானும் இருந்தேன்.

இருவரும் என்னை ஏதோ வேற்றுக் கிரகவாசி போல வினோதமாகப் பார்த்தனர். “என்ன செல்வம், நீங்க எப்போ காந்திதாசன் ஆனீங்க?” தமிழினியன் குத்தல் பேச்சில் எமகாதகர். “நீங்க காந்தியை வெறும் அரசியல் தலைவராப் பார்க்கறீங்க… அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். சத்தியசோதனையில் தன் சொந்த வாழ்க்கையை எந்த ரகசியமும் இல்லாமல் சொன்ன அவரை விமர்சிக்க நமக்கு எந்தத் தகுதியும் இல்லை” என்றேன்.

“செல்வம் சொன்னா சரியாத் தான் இருக்கும். ஏன்னா நீங்க தமிழ்த் துறை பாருங்க” வீரராகவனுக்கும் கிண்டல் நன்றாகவே வந்தது. “பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என் தோல்வி என்று சொன்னவரல்லவா நம்ம மகாத்மா?” தமிழினியன் பகபகவெனச் சிரித்தார். அவர்களிடம் வாதாட எனக்கு நேரமும் இல்லை, அதற்கான விஷய ஞானமும் இல்லை. பேசாமல் நழுவிவிட்டேன்.

ஆனாலும் இந்த நாட்டில் இன்னமும் காந்திக்கு கொஞ்சம் மதிப்பிருக்கிறது. நவநாகரிக இளைஞர்கள் கூட காந்தி குறித்துப் படிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இருக்காது.

சிந்தனையைக் கலைப்பதுபோல ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான். “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு” ஈய வட்டலில் கைகளால் தட்டிக்கொண்டு கையேந்தி வந்தான். நான் சாளரம் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். உழைக்கத் திறனுள்ள உடல் இருந்தும் இப்படிப் பாடி பிச்சை எடுப்பவர்களை எனக்குப் பார்க்கவே பிடிப்பதில்லை. ரயிலின் வேகம் குறைந்தது. சேலம் நெருங்கிவிட்டது.

***

சேலத்தில் ரயில் நின்றபோது இளைஞன் திரும்பினான். போனவனைக் காணவில்லையே என்ற பதைப்புடன் நான் சாளரம் வழியே பார்த்ததை அவன் கவனித்திருக்க வேண்டும். “சார், இதோ வந்துவிட்டேன்”. பிளாட்பாரத்தில் முதிய பிச்சைக்காரன் ஒருவனுக்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தான்.

ஒரு மணிநேரப் பயணத்துக்குள் மனதுக்கு நெருக்கமாகிவிட்டான். வியப்பாக இருந்தது. இவனை ஆரம்பத்தில் பார்த்தபோது தவறாகக் கருதிவிட்டேனே. மனதுக்குள் வருந்தினேன். யாரையும் பார்த்தவுடன் மதிப்பிட்டுவிடக் கூடாது என்பது உண்மைதான்.

பவானி அருகே உள்ள சித்தோடுதான் ஆனந்தனுக்கு சொந்த ஊர். அப்பா போக்குவரத்துக் கழக ஊழியர். அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியை. கோவையில் பி.இ. படித்து முடித்துவிட்டு கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி டிசிஎஸ்சில் பணிபுரிகிறான். கைநிறையச் சம்பளம். மாதம் ஒருமுறை ஊருக்கு இரண்டுநாள் லீவில் வருகிறான். இத்தனை விஷயத்தையும் சொன்னவன் என்னைப் பற்றிய எந்த விவரத்தையும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.

ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் மீண்டும் புத்தகத்துக்குள் மூழ்கிவிட்டான். நானும் சற்று கண்ணயர்ந்தேன். பொம்முடியில் ரயில் நின்றபோது விழித்தேன். எதிரே, பார்வையற்ற வியாபாரியிடம் ஐந்தாறு ‘ஏடிஎம் கார்டு கவர்’களை வாங்கிக் கொண்டிருந்தான் ஆனந்தன்.

குடும்பஸ்தனாகி செலவுகள் கழுத்தை நெரிக்கும் வரை இப்படி தாராளமாக செலவு செய்யலாம். இவன் அளவுக்கு இல்லாவிட்டாலும் நானும் இளைஞனாக இருந்தபோது செலவாளி தான். ஆனால், இவன் ஊருக்கு உபகாரியாக இருக்கிறான். தராதரமில்லாமல் ரயிலில் போவோர் வருவோருக்கெல்லாம் ஏதாவது ஒரு வகையில் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

ரயில் மொரப்பூரைத் தாண்டியபோது கர்சீஃப் விற்றுக்கொண்டு பார்வையற்றவன் ஒருவன் வந்தான். அவனிடமும் நூறு ரூபாய்க்கு ஐந்து கர்சீஃப்களை வாங்கினான். நான் கேட்டே விட்டேன் “என்ன தம்பி, சென்னை போய்ச் சேருவதற்குள் ஆயிரம் ரூபாயாவது தீர்த்துடுவே போலிருக்கே?” ஆனந்தன் பதில் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டான்.

ஆனந்தனின் இரக்க சுபாவத்துக்கு வேலை கொடுப்பதற்கு திக்கற்றவர்கள் ரயிலில் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தார்கள். ஜோலார்பேட்டையில் நீலகிரித் தைலம் விற்ற ஒருவனுக்கும், வாணியம்பாடியில் ஒரு முடவனுக்கும், காட்பாடியில் முதிய பெண்மணிக்கும் படியளந்தான் பரந்தாமன்.

ரயிலுக்குள் கூட்டம் அதிகரித்துவிட்டது. முன்பதிவு செய்யாத பயணிகள் பெருமளவில் வந்துவிட்டனர். அவர்கள் அமர இருக்கை கிடைக்குமா என்று அரக்கப் பரக்கத் தேடினர். அந்தநேரம் பார்த்து ஆனந்தன் கழிவறை சென்றிருந்தான். அவனது இடத்தில் அமர இருவர் போட்டியிட்டதைத் தடுத்து நிறுத்தினேன்.

இந்தியாவில் தான் இப்படி இங்கிதமில்லாமல் அடுத்தவனின் இடத்துக்கு அடித்துக் கொள்கிறார்கள். மேலைநாடுகளில் இப்படி நிகழ்வதில்லை. அங்கு பிச்சைக்காரர்களை ரயிலில் காணவே முடியாது என்று எனது கல்லூரியின் செயலாளர் சொல்லியிருக்கிறார்.

***

எத்தனை விதமான பிச்சைக்காரர்கள், கௌரவமாக பொருள்களை விற்பனை செய்யும் ஊனமுற்றவர்கள், புறக்கணிக்கப்பட்டதால் கையேந்தும் அநாதைகள், குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், ஆண்டவனின் விசித்திரப் படைப்பான திருநங்கைகள் (மொரப்பூரில் திருநங்கைகள் இருவருக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தான் ஆனந்தன்), கணவன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள்… இப்படி பலவிதமானவர்களை வாழ வைக்கிறது ரயிலெனும் கருணைக்கடல்.

சொல்லப்போனால் இதையே தொழிலாக ஒருங்கிணைத்துச் செய்பவர்கள் பெருநகரங்களில் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்களை பயணச்சீட்டுப் பரிசோதகர்களும் கண்டுகொள்வதில்லை. அவ்வப்போது பெயரளவில் சிலருக்கு அபராதம் விதிப்பதுண்டு. ரயில் யாசகர்கள் சுதந்திரப் பறவைகள். பயணிகளின் இரக்கமே இவர்களின் முதலீடு. ஆனந்தன் போன்ற சில பயணிகள் போதாதா?

இது உழைக்கத் துப்பில்லாத சோம்பேறிகளையும் உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் ரயிலில் நான் யாருக்கும் பிச்சை போடுவதில்லை. ஆனந்தன் புதிய ரயில் பயணி. அநேகமாக படிப்பு முடிந்து வேலைக்குப் போன பிறகே ரயில் பயணம் செய்யத் தொடங்கியிருப்பான். அதனால் தான் புதுப் பெண்டாட்டி கதையாக, இரக்க சுபாவத்துடன் பார்ப்பவருக்கெல்லாம் அள்ளி விடுகிறான். என்னைப் போல வாரத்துக்கு நான்கு நாட்கள் ரயிலில் பயணித்தால் அவனும் கல்மனம் படைத்தவனாகி விடுவான்.

எதிர்த்திசை ரயிலுக்கு வழிவிட அரக்கோணம் ரயில்நிலையத்தில் சிறிது நேரம் ரயில் நின்றபோது அழுக்குப் பாவாடையுடன் சிறு குழந்தை ஒன்று ரயிலில் ஏறியது. உடன் அதன் அக்கா சிறு டோலக் வாசித்துக்கொண்டு வந்தாள். அந்தக் குழந்தை தனது உடலை அப்படி இப்படி வளைத்துக் காட்டியது. பிறகு இரும்பு வளையத்தை கால் வழியே நுழைத்து தோள் வழியே எடுத்துக் காட்டியது. தகரக் குவளையை ஒவ்வொரு பயணியாக ஏக்கத்துடன் நீட்டியது. எனக்கே பரிதாபமாக இருந்தது. படிக்கிற வயதில் இப்படி பிச்சை எடுக்கும் நிலை யாருக்கும் வரக் கூடாது. பெருந்தன்மையுடன் நானும் ஐந்து ரூபாய் போட்டேன்.

அப்போதுதான் இருக்கைக்குத் திரும்பிய ஆனந்தன் சட்டென்று ஐம்பது ரூபாய் நோட்டை அந்தத் தகரக் குவளையில் போட்டுவிட்டான். தவிர, தனது தோள்பையிலிருந்து இரு படக்கதைப் புத்தகங்களை எடுத்து அந்தக் குழந்தைக்குக் கொடுத்தான். அதுமட்டுமல்ல, அங்கு வந்த பேன்ட்ரி ஊழியரிடம் பணம் கொடுத்து இரண்டு பாக்கெட் தக்காளி சாதமும் வாங்கிக் கொடுத்தான். அந்தக் குழந்தையின் கண்ணில் மின்னியது நன்றியா, பாசமா என்று தெரியவில்லை.

***

“ஏன் தம்பி, இப்படி தண்ணியா செலவு செய்யறியே, உங்க வீட்டுல எதுவும் சொல்ல மாட்டாங்களா?” நீண்ட நேரமாக மனதுக்குள் இருந்த கேள்வியைக் கேட்டுவிட்டேன். அவன் நிமிர்ந்து பார்த்து சிரித்தான். பிறகு மீண்டும் புத்தகம் படிக்கத் துவங்கிவிட்டான்.

நான் விடுவதாயில்லை. “என்ன தம்பி, நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை…” அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். மீண்டும் புன்னகைத்தான். பேசத் தொடங்கினான். இவ்வளவு தெளிவான சிந்தனை நமது இளைஞர்களிடம் இருக்கும் என்பதை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை.

“சார், நான் சம்பாதிப்பதன் அர்த்தத்தையே இதுபோலச் செய்யற தான தருமத்தில் தான் தெரிஞ்சுக்கிறேன். சொல்லப்போனால், நான் வாழும் சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும்கிற கடமை தான் இது.

பெத்த அம்மா, அப்பாவுக்கு யாரும் தருமம் செய்யறதில்லை. அப்படித்தான் நாம் சமுதாயத்துக்கு உதவறதும். இந்த சமுதாயத்தில் யாரும் தனிமரமா வாழ முடியாதுன்னு சொல்வார் அப்பா. யோசித்துப் பாருங்க, எங்கேயோ முதுகொடிய வயலில் நீர் பாய்ச்சுற விவசாயி தானே எனக்கு சோறு போடுறார்? நான் வாங்கும் சம்பளமில்லை.

இந்த ரயிலில் சென்னைக்குப் போறோம். இதுக்கு எத்தனைபேர் உதவி இருக்காங்க? இங்கு தண்டவாளம் பதித்த தொழிலாளியின் முகம் நமக்குத் தெரியாது. இந்த ரயில் பெட்டி செய்யத் தேவையான இரும்பை வெட்டி எடுத்த தொழிலாளியையும் நமக்குத் தெரியாது. இவர்கள் அனைவரும் சேர்ந்தது தானே சமுதாயம்?

இப்ப இங்க ரயிலில் பிச்சை எடுப்பவர்களுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். இவர்களைக் கைதூக்கிவிட நாம் தானே கைகொடுக்கணும்? ஏதோ என்னால் முடிந்தது இப்படி ரயிலில் போகும்போது செய்யற உதவிகள் தான்.

இதற்காகத்தான் முதல்வகுப்பு ஏ.சி. பெட்டியில் போகாமல் இந்தப் பெட்டியில் பயணம் செய்யறேன். அந்தப் பணத்தை இப்படி முடியாதவங்களுக்குக் கொடுக்கிறேன். இதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது எனக்கு.

நாளை என் வாழ்க்கை எப்படி இருக்கும்ணு தெரியாது. அதனால்தான் இருக்கும்போதே ஏதாவது செய்யணும்னு தோணுது. சொல்லப்போனால், என்னோட அம்மா, அப்பா இரண்டுபேரும் தான் இதற்குக் காரணம்…”

ரயில் திருவள்ளூரை நெருங்கிவிட்டது. ஆனந்தன் இன்னமும் எனக்கு நெருக்கமாகி விட்டான். இளைஞர்கள் என்றாலே மது, போதை, சினிமா மோகம், பெண்கள் பற்றிய வம்பளப்புகள் தான் இருக்கும் என்ற எனது கணிப்பு தகர்ந்துவிட்டது. ஆச்சரியமாகப் பார்த்தேன்.

“சார், நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறுன்னு காந்திஜி சொல்லியிருக்கிறார். இந்த சமுதாயத்தில் எல்லோரும் சமம்கிற நிலை உருவாகணும். அதுக்கு முதலில் நானும் தயாராகணும். ஏதோ என்னால இவங்களுக்கு சின்ன உதவி செய்ய முடிஞ்சதில கொஞ்சம் சந்தோஷம். இங்க வாங்கின பொருள்களையெல்லாம், கூட வேலை செய்யறவங்களுக்குக் கொடுத்து, இதைத் தான் சொல்வேன். அவங்களும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவாங்க” மூச்சு விடாமல் சொல்லி முடித்தபோது ஆனந்தனின் கண்கள் லேசாகக் கலங்கியதைக் காண முடிந்தது.

ரயில் சென்னையை நெருங்கிவிட்டது.

-தினமணி கதிர் (15.11.2015)

 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: