Archive | December, 2015

இந்திய அறிவியலின் தந்தை

29 Dec
சர் சி.வி.ராமன்

சர் சி.வி.ராமன்

டல் ஏன் நீல நிறமாகத் தோற்றமளிக்கிறது? 1921-இல் லண்டனுக்கு பணி நிமித்தமாகச் சென்று கப்பலில் திரும்பிய இந்திய விஞ்ஞானி வெங்கடராமனுக்கு எழுந்த கேள்வி இது. இந்தக் கேள்வி அவரை பல நாட்கள் தூங்க விடவில்லை. இதுகுறித்து அவர் இடைவிடாத ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். பலவிதமான திரவங்கள் வழியாக ஒளியைப் பாய்ச்சி மூன்றாண்டுகள் அவர் நடத்திய ஆராய்ச்சி வீண் போகவில்லை.

அதன் விளைவாக,  ‘கடல் நீரில் சூரிய ஒளிக்கதிர்கள் புகும்போது, நீரிலுள்ள மூலக்கூறுகளின் கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு, வெவ்வேறு அலைநீளமுடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. திரவங்களில் ஒளி ஊடுருவும் தன்மைக்கேற்ப ஏற்படும் வேறுபாடுகளால் கடல் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது’ என்று கண்டறிந்து 1928-இல் அறிவித்தார். இதை நிரூபிக்க ரூ. 200 செலவில் ‘ஸ்பெக்ட்ராஸ்கோபி’  என்ற ஒரு கருவியையும் வெங்கடராமன் உருவாக்கினார்.

இது உலக இயற்பியல் வரலாற்றில், குறிப்பாக ஒளியியலில் (Optics) புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்ட கண்டுபிடிப்பாகும். இது ‘ராமன் விளைவு’ (Raman Effect) என்றே அழைக்கப்படுகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக வெங்கடராமனுக்கு 1930-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகத்தின் திருவானைக்காவலில் 1888 நவம்பர் 7-இல் பிறந்த சந்திரசேகர வெங்கடராமன், சிறு வயதிலேயே படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். அவரது தந்தை இயற்பியல் பேராசிரியர் என்பதால், இயல்பிலேயே அவருக்கும் அறிவியல்மீது தீராத மோகம் ஏற்பட்டுவிட்டது.

1904-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்ற வெங்கடராமன், 1907-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார். பிறகு கொல்கத்தாவில் அரசின் நிதித் துறையில் துணை தலைமைக் கணக்கராகப் பணியில் சேர்ந்தார்.

அரசுப் பணியில் இருந்தபோதும் வெங்கடராமனின் அறிவியல் ஆர்வம் அவரை விஞ்ஞான ஆராய்ச்சி நோக்கி உந்தித் தள்ளியது. கொல்கத்தாவில் மருத்துவர் மகேந்திரலால் சர்க்கார் நிறுவியிருந்த இந்திய அறிவியல் வளர்ச்சிக் கூட்டமைப்பில் (Indian Association for the Cultivation of Science) சேர்ந்து ஒலியியல் தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட்டுவந்தார். ஒலியின் அதிர்வுகள், இசைக் கருவிகளின் கோட்பாடு மற்றும் இயக்கம் குறித்த அவரது ஆய்வுகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன.

அவரது அறிவியல் ஆர்வத்தை அறிந்த கொல்கத்தா பல்கலைக்கழகம், அங்கு தாராகநாத் பாலித் என்ற சமூகசேவகரால் உருவாக்கப்பட்டிருந்த பாலித் இருக்கையின் இயற்பியல் பேராசிரியராக 1917-இல் நியமித்தது. இதற்காக தனது அரசுப் பணியை உதறினார் வெங்கடராமன். அன்றுமுதல் சுமார் 17 ஆண்டுகள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்ததுடன் பலவிதமான ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டுவந்தார். அந்தக் காலத்தை வெங்கடராமனின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

வெங்கடராமனின் ஆய்வுகளால் ஈர்க்கப்பட்ட லண்டனிலுள்ள ராயல் சொஸைட்டி 1924-இல் பெருமதிப்புக்குரிய ஃபெல்லோஷிப்பை அவருக்கு வழங்கியது.

அறிவியல் ஆய்வறிக்கைகளை தேசிய அளவில் வெளியிட, 1926-இல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்ற சஞ்சிகையை நிறுவி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார் வெங்கடராமன்.

கொல்கத்தா பல்கலைக்கழகப் பணியிலிருக்கும் போது லண்டனில் நடைபெற்ற அறிவியல் மாநாடு சென்று திரும்பும் வழியில்தான் கடலின் நிறம் குறித்த ஆராய்ச்சியில் அவரது கவனம் திரும்பியது. அதன்விளைவாக, சக விஞ்ஞானியான கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் இணைந்து, ‘ஒரு புதிய கதிர்வீச்சு’ (A New Radiation) என்ற ஆய்வறிக்கையை வெங்கடராமன் 1928-இல் வெளியிட்டார். இதில் தான் ‘ஒளிச்சிதறல்’ குறித்த அவரது ஆய்வுத்தரவுகள் இடம் பெற்றன.

இது ‘ராமன் ஒளிச்சிதறல்’ (Raman Scattering) என்று பெயர் பெற்றது. இந்த ஒளிச்சிதறலின் விளைவுக்கு ‘ராமன் விளைவு’ என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டனர். ராமன் விளைவு, அவருக்கு நோபல் பரிசையும் (1930) பெற்றுத் தந்தது.

1928-இல் இந்திய அறிவியல் பேரவையின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929-இல் பிரிட்டன் அரசின் பெருமைக்குரிய ‘சர்’  பட்டம் வெங்கடராமனுக்கு வழங்கப்பட்டது. அதுமுதல் அவர் சர்.சி.வி.ராமன் என்று அழைக்கப்பட்டார்.

ராமனின் மேதைமையை உணர்ந்த இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science) அவரை இயற்பியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்குமாறு வேண்டியது. அதையடுத்து, கொல்கத்தாவிலிருந்து பெங்களூரு வந்த ராமன், 1948 வரை அங்கு பணிபுரிந்தார். அங்கு டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் வளரக் காரணமானார் ராமன்.

இதனிடையே மக்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்த இந்திய அறிவியல் சங்கத்தை (Indian Science Academy) நிறுவி அதன் தலைவராகவும் ராமன் பணியாற்றினார்.

சுதந்திர இந்தியாவில், நாடு இயற்பியல் துறையில் சிறந்து வளர வேண்டும் என்ற இலக்குடன் 1948-இல் ராமன் இயற்பியல் மையத்தைத் துவங்கினார். அது இன்று இந்திய அரசு நிறுவனமாக வளர்ந்து பல விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறது.

வயலின், மிருதங்கம் முதலான இசைக்கருவிகள், வைரம் போன்ற படிகங்கள் தொடர்பான அரிய ஆராய்ச்சி முடிவுகளையும் நூல்களையும் ராமன் அளித்திருக்கிறார்.

ராமனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பல துறைகளில் அமைந்தவை. ஒளிச்சிதறல் மீது ஒலி அலைகள் (1935), படிகங்களில் அணுக்களின் அதிர்வுகள் (1940), ரத்தினக் கற்களில் எழும் ஒளிவீச்சு (1950), மனிதக் கண்கள் காணும் பலவண்ணக் காட்சி (1960) ஆகிய அவரது ஆய்வுகள் இன்றும் நவீன அறிவியலுக்கு வழிகாட்டுகின்றன.

‘ஒளியானது ஒளித்திரள் வடிவத்தில் (photons) துகள்களைப் போலவே (Particles) நடந்து கொள்கின்றன’ என்ற ராமனின் கண்டுபிடிப்பு, தற்போதைய நுண்துகள் இயற்பியல் (Quantum Physics) ஆராய்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தது.

ராமனின் தேச சேவையையும் விஞ்ஞான சேவையையும் பாராட்டி, அவருக்கு 1954-இல் ‘பாரதரத்னா’ விருது இந்திய அரசால் அளிக்கப்பட்டது. ருஷ்யாவின் உலக லெனின் அமைதி விருது (1957), அமெரிக்காவின் பிராங்ளின் விருது (1941) உள்ளிட்ட உலக அளவிலான பல விருதுகளை ராமன் பெற்றுள்ளார்.

அறிவியல் சாதனைகள் பலவற்றின் நாயகரான சர்.சி.வி.ராமன் 1970, நவம்பர் 21-இல், தனது 82-வது வயதில் மறைந்தார். அவர் ‘இந்திய விஞ்ஞானத்தின் தந்தை’  என்று போற்றப்படுகிறார்.  ‘ராமன் விளைவை’  அவர் கண்டறிந்த 1928, பிப்ரவரி 28 தினத்தை கௌரவிக்கும் விதமாக, அந்நாளை தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

.

-தினமணி -இளைஞர்மணி (29.12.2015)

.

உலகம் வியந்த கணிதப்புலி

22 Dec

ramanujan2

(இன்று கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாள்)

ந்த இளைஞன் வாழ்ந்த காலம் 33 ஆண்டுகள். அதற்குள் அவன் நிகழ்த்திய கணித சாதனைகள் இன்னமும் பலருக்கு வியப்பூட்டும் நிகழ்வாகவே இருக்கின்றன. அந்த இளைஞன், தமிழகத்தின் தவப்புதல்வன் ஸ்ரீநிவாச ராமானுஜன்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன்- கமலத்தம்மாள் தம்பதிக்கு, ஈரோட்டில் 1887, டிசம்பர் 22-இல் பிறந்தார் ராமானுஜன். 1894-இல் அவரது குடும்பம் சொந்த ஊருக்குக் குடிபெயர்ந்தது. தொடக்கக் கல்வியில் மாவட்டத்திலேயே முதலிடம் வந்ததற்காக உயர்நிலைப் பள்ளியில் படிக்க உபகாரச் சம்பளம் அவருக்குக் கிடைத்தது.
12-வது வயதில் தனது பக்கத்து வீட்டு கல்லூரி மாணவரின் பாடப்புத்தகமான, லண்டனைச் சேர்ந்த எஸ்.எல்.லோனி எழுதிய திரிகோணவியல் புத்தகத்தை இரவலாகப் பெற்றுப் படித்த ராமானுஜன் அதிலிருந்த தேற்றங்களால் கவரப்பட்டார். அந்நூலில் இடம்பெற்ற பிற கணிதத் துறைகளான மடக்கை, பகுவியல், முடிவிலாத் தொடர்கள் ஆகியவை அவரை ஈர்த்தன.

அடுத்து ஜி.எஸ்.கார் என்ற பிரிட்டீஷ் கணித நிபுணரின் கணிதத் தொகையையும் (A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics) சிறுவன் ராமானுஜன் படித்தார். இத்தனைக்கும் அதைச் சொல்லித் தர அங்கு யாருமில்லை. அதிலிருந்த தேற்றங்கள் ராமானுஜனின் புத்திக்கு சவால் விடுத்தன. அதன் தேற்ற நிறுவல்களை தனிக் குறிப்பேட்டில் எழுதத் தொடங்கினார். இவ்வாறாக 16 வயதுக்குள் அவர் கணிதத் தேற்ற நிறுவல்களில் (Proving Theorems) நிபுணராகிவிட்டார்.

1903-இல் மெட்ரிக். தேர்வில் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்ற ராமானுஜன், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் எஃப்.ஏ. வகுப்பில் சேர்ந்தார். ஆனால் அங்கு கணிதம் தவிர பிற பாடங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்படவில்லை. அதன் விளைவாக தேர்வில் தோல்வியுற்று கல்லூரியைவிட்டு வெளியேறினார். சில மாத அலைச்சலுக்குப் பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சுவாமி விவேகானந்தரின் சீடரான ‘கிடி’ என்று அழைக்கப்பட்ட சிங்காரவேலு முதலியாரிடம் அவர் கணிதம் பயின்றார்.

இதனிடையே உடல்நிலை பாதிப்பால் படிப்பை நிறுத்தி ஊர் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, தன்னிடமிருந்த கணிதக் குறிப்பேடுகள் மூன்றை, சிங்காரவேலு முதலியாரிடம் கொடுக்குமாறு நண்பரிடம் கூறிச் சென்றார் ராமானுஜன். அந்தப் புத்தகங்கள்தான் அவருக்கு பின்னாளில் உலகப்புகழைப் பெற்றுத் தந்தன.

தலா 212, 352, 33 பக்கங்கள் கொண்ட ராமானுஜனின் கையெழுத்தில் உருவான அந்த மூன்று குறிப்பேடுகளும் பின்னாளில் கணித மேதைகள் விரும்பும் புனித நூலாக மாறிப் போயின. மாயச் சதுரங்கள் (Magic Squares), தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions) உள்ளிட்ட உயர்தர கணிதம் தொடர்பான குறிப்புகள், 3,542 தேற்றங்களின் தொகுதிகள் அவை. அவற்றுள் 2,000-க்கு மேற்பட்டவை, அதுவரை கணித உலகம் கண்டிராதவை!

1909-இல் தனது 22-வது வயதில் சிறுமி ஜானகிக்கு அவர் திருமணம் செய்துவைக்கப்பட்டார். அதன்பிறகு குடும்பச் சுமைக்காக வேலை தேடும் நிலை ஏற்பட்டது. இதனிடையே இந்திய கணிதக் கழகம் பற்றியும் அதன் நிறுவனர் ராமஸ்வாமி ஐயரைப் பற்றியும் கேள்விப்பட்ட ராமானுஜன் அவரைச் சந்திக்க திருக்கோவிலூர் சென்றார். அவரது உதவியால் நெல்லூர் துணை ஆட்சியர் ராமசந்திர ராவின் நிதியுதவி சிறிது காலத்துக்குக் கிடைத்தது. ஆயினும் குடும்பத் தேவைகளைச் சமாளிக்க சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

1911-இல் ராமானுஜனின் முதல் ஆய்வுக் கட்டுரை இந்திய கணிதக் கழக சஞ்சிகையில் வெளியானது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த நீதிபதி பி.ஆர்.சுந்தரம், பேரா. ஹனுமந்த ராவ், ராமசந்திர ராவ் உள்ளிட்டோர் தீவிர முயற்சி எடுத்து ராமானுஜனை சென்னை பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ. 75 சம்பளத்தில் ஆராய்ச்சியாளர் பணியில் (1913) அமர்த்தினர்.

1913-இல் பிரிட்டீஷ் எண்ணியல் வல்லுநர் ஜி.எச்.ஹார்டி குறித்து ராமானுஜனுக்குத் தெரியவந்தது. அவருக்கு 120 தேற்றங்களுடன் கூடிய கடிதத்தை ராமானுஜன் அனுப்பிவைத்தார். அதிலிருந்த அதிசயமான கணித மேதைமையைக் கண்ட ஹார்டி, உடனடியாக ராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதையேற்று 1914-இல் லண்டன் சென்ற ராமானுஜன் 1918 வரை அங்கு ஹார்டியுடன் சேர்ந்து கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

அந்த 4 ஆண்டுகளில் அவர் 27 அற்புதமான கணித ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். ஹார்டியுடன் இணைந்து வெளியிட்ட 7 ஆய்வுக் கட்டுரைகளும் அவற்றுள் அடக்கம். கணிதத்தின் விடுபடாத முந்தைய பல புதிர்களுக்கு தீர்வு கண்ட ராமானுஜன், நூற்றுக் கணக்கான புதிய புதிர்களை கணித உலகுக்கு அளித்தார்.
1918-இல் அவருக்கு லண்டன் ராயல் சொஸைட்டியின் எஃப்ஆர்எஸ் பட்டமும், டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோஷிப்பும் வழங்கப்பட்டன. ஆனால், அவரது கணிதப் பயணத்துக்கு இடையூறாக, உடல்நிலை மோசமடைந்தது. எனவே 1019-இல் தாய்நாடு திரும்பினார்.

உடல்நிலை பாதித்த நிலையிலும் கணித ஆராய்ச்சிகளில் அவர் மனம் லயித்திருந்தது. அதன்விளைவாக அவர் குறித்துவைத்த குறிப்பேடு, அவரது மரணத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து 1976-இல் கண்டறியப்பட்டது. ‘தொலைந்துபோன குறிப்பேடு’ (Ramanujan’s lost notebook) என கணித உலகில் புகழ்பெற்ற இக் குறிப்பேட்டில் 600 தேற்றங்கள் உள்ளன. இந்நூல் 1987-இல் வெளியானது.

ராமானுஜனின் அறிவுக்கூர்மையும், நினைவாற்றலும், கணித ஞானமும் நமது கற்பனைக்கு எட்டாதவை. ஆனால் அவரது உடல் ஆரோக்கியம் சிறு வயதிலிருந்தே நலமானதாக இருக்கவில்லை. கணித உலகின் சாதனை மன்னரான ராமானுஜன் இளம் வயதிலேயே (1920, ஏப்ரல் 26) சென்னையில் காலமானார்.

ராமானுஜனின் கணிதத் தேற்றங்கள் இயற்பியலிலும் மின்தொடர்பியலிலும் வெகுவாகப் பயன்படுகின்றன. லண்டாவ்- ராமானுஜன் மாறிலி (Landau-Ramanujan constant), ராமானுஜன் ஊகம் (Ramanujan conjecture), ராமானுஜன் சால்ட்னர் மாறிலி (Ramanujan-Soldner constant), ராமானுஜன் செறிவெண் செயல்பாடு (Ramanujan theta function), ராமானுஜன் கூட்டு (Ramanujan’s sum), ராமானுஜன் உயர் தேற்றம் (Ramanujan’s master theorem) ஆகியவை கணித உலகுக்கு அவர் அளித்த அரிய படைப்புகள்.

உலகப் புகழ் பெற்ற கணித மேதையான ஹார்டி, ‘நான் அவருக்கு கற்றுக் கொடுத்ததை விட, அவரிடம் கற்றுக் கொண்டது அதிகம்’  என்றார். ஹங்கேரியைச் சேர்ந்த கணித மேதை பால் எர்டோஸ்,  ‘உலக கணிதவியலாளர்களை (Algorist) வரிசைப்படுத்தினால் அவர்களுள் நூறு மதிப்பெண் பெறுபவராக ராமானுஜன் இருப்பார்’  என்றார்.

அவர் அளித்த தேற்றங்கள் (Theorems) பல இன்னமும் நிறுவலுக்காக புதிய கணிதவியலாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. கணிதம் உலகில் உள்ளவரை இந்தியரான ராமானுஜரின் புகழும் முடிவிலியாக (Infinity) நிலைத்திருக்கும்.

***

ராமானுஜனின் மாயச்சதுரம்

ramanujan magic squareராமானுஜனின் பிறந்த நாள் 22.12.1887. இதிலுள்ள எண்களைக் கொண்டே 139 என்ற கூட்டுத் தொகை வரும் வகையில் 4 வரிசை மாயச்சதுரத்தை ராமானுஜன் உருவாக்கினார். இதில் எந்த வரிசையில் கூட்டினாலும், மூலைமட்டத்தில் கூட்டினாலும், இடைப்பட்ட எண்களைக் கூட்டினாலும், 139 என்ற கூட்டுத் தொகையே வரும். இது “ராமானுஜனின் மாயச்சதுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

***

ராமானுஜன்- ஹார்டி எண்: 1729

Ramanujan 1729

உடல்நலமின்றி புட்னி நகரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ராமானுஜனைச் சந்திக்க ஹார்டி ஒருமுறை வாடகை காரில் சென்றார். அப்போது தான் வந்த காரின் பதிவெண்ணான 1729 ஒரு சுவாரசியமற்ற எண் என்று குறிப்பிட்டார் ஹார்டி. உடனே அதை மறுத்த ராமானுஜன்,  ‘இந்த எண் அற்புதமானது. இருவேறு வழிகளில் இரு எண்களின் கணங்களின் கூட்டுத் தொகையாக எழுதக் கூடிய சிறிய எண் இது’ என்றார்.

1729 = 1-ன் கணம்+ 12-ன் கணம் = 9-ன் கணம்+ 10-ன் கணம்.
= 1 + 1728 = 729 + 1000.

இந்த அடிப்படையில் பல  ‘டாக்ஸிகேப் எண்கள்’ (Taxicab numbers) கண்டறியப்பட்டுள்ளன.

 

-தினமணி -இளைஞர்மணி (22.12.2015)

.

 

சமுதாய ஆய்வேட்டுக்கு முன்மாதிரி

21 Dec

Muslims and TN

இஸ்லாமியர்களின் படையெடுப்புகளால் தான் இந்தியாவில் முகமதிய மார்க்கம் பரவியது என்ற கருத்து பரவலாக உண்டு. ஆனால் அது வட இந்தியாவைப் பொருத்த வரை சரியாக இருக்கலாம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் முகமதிய மார்க்கம் கடல்வழி வாணிகத்தால் தான் வேரூன்றியது.

தமிழகத்துக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் இடையிலான தொடர்பு, ஹிஜ்ரி ஆண்டு பிறந்த சில ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. இதற்கான ஆதாரம், கோட்டாறிலுள்ள ஈராக் நாட்டு கர்ஸிம் அவர்களது அடக்கவிடம். அதில் அவர் அடக்கமான ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது (ஹிஜ்ரி 4- கி.பி. 624). இதுபோன்ற நுண்ணிய தகவல்கள் பலவற்றை ஆராய்ந்து சேகரித்து நூலாக்கியிருக்கிறார் எஸ்.எம்.கமால்.

தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்படும் யவனர்கள், சோனகர்கள் ஆகியோர் அரபு தேசத்தவரையே குறிக்கும் என்று கூறும் நூலாசிரியர், துலுக்கர், ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, அஞ்சுவண்ணம், பட்டாணி போன்ற முஸ்லிம்களைக் குறிக்கும் சொற்களின் பின்புலத்தையும் ஆராய்கிறார்.

இஸ்லாமிய இறைநேசர்களின் அடக்கத் தலங்களான தர்க்காக்களின் செல்வாக்கு இம்மண்ணின் பண்பாட்டுடன் கலந்திருப்பதையும், அராபிய மண்ணிலிருந்து வர்த்தகத் தொடர்புக்காக வந்தவர்கள் தங்களுடன் கொண்டுவந்த கலாசாரத்தை இங்கு விதைத்ததையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

1988-இல் சீதக்காதி அறக்கட்டளை நடத்திய போட்டியில் பங்கேற்று முதல் பரிசு வென்ற ஆய்வு நூல் இது. ஆசிரியரின் பல்துறை அறிவும், தமிழிலக்கிய ஞானமும், சமுதாயத் தரவுகளைச் சேகரிக்கும் நேர்த்தியும், ஆய்வாளரின் சிரத்தையும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகின்றன.

தமிழக அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்புகள், சமுதாய விழாக்கள், முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளான கல்வெட்டுகள், செப்பேடுகள், வழக்காறுகள் தொடர்பான தகவல்களை தனது உழைப்பால் தொகுத்திருக்கிறார் கமால்.

முஸ்லிம் தமிழ்ப் புலவர்களது காணிக்கைகள் என்ற தலைப்பிலான பின்னிணைப்பு, 700-க்கு மேற்பட்ட நூல்களின் பெயர்களை, அவற்றின் இலக்கிய வகையுடன் பட்டியலிட்டிருக்கிறது. அந்தாதி, கலம்பகம், பதிகம், கோவை உள்ளிட்ட சிற்றிலக்கிய வகைகளில் இஸ்லாமியர்கள் கொண்டிருந்த திறனை வெளிப்படுத்துவதாக இப்பட்டியல் உள்ளது.

ஒரு சமுதாயம் குறித்த ஆய்வேடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இந்நூல் விளங்குகிறது.

***

முஸ்லிம்களும் தமிழகமும்

டாக்டர் எஸ்.எம்.கமால்
256 பக்கங்கள், விலை: ரூ. 140
இலக்கியச் சோலை,
26, பேரக்ஸ் சாலை,
பெரியமேடு, சென்னை- 600 003.
தொலைபேசி: 044- 2561 0969
.

இந்திய வேதியியல் துறையின் முன்னோடி

16 Dec
Prafulla Chandra Ray 2

ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய்

விடுதலைப் போராட்டக் காலம் அது. அப்போது, பிளேக் நோயால் கொத்துக் கொத்தாக மக்கள் மாண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகளை ஐரோப்பாவிலிருந்து வாங்க வேண்டியிருந்தது. ‘நமது நாட்டு மக்களின் நோயை சரிப்படுத்த வெளிநாடுகளிலிருந்து பெரும் செலவில் ஏன் மருந்து வாங்க வேண்டும்? மருந்து உற்பத்தியில் நாமே ஏன் ஈடுபடக் கூடாது?’  என்று கேட்டார் நமது நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி.

இந்தக் கேள்வியுடன் அவர் நிற்கவில்லை. தனது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், நண்பர்களின் உதவியுடன் 1901-இல் கொல்கத்தாவில் ‘பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மாசூடிகல்ஸ்’ என்ற நிறுவனத்தை ரூ. 700 முதலீட்டில் துவங்கிவிட்டார்.  இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமான அந்நிறுவனம் இன்று  ஆல்போல வளர்ந்து, ரூ. 65 கோடிக்கு மேல் ஆண்டு விற்றுமுதலாகக் கொண்ட பிசிபிஎல் என்ற பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர், ‘இந்திய நவீன வேதியியலின் தந்தை’ என்று போற்றப்படும் ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய்.

வேதியியல் விஞ்ஞானி, கல்வியாளர், மருந்து தயாரிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி, சமூக சேவகர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட ராயின் வாழ்க்கையே தியாக மயமானது.

1861, ஆகஸ்டு 2-இல், பிரிக்கப்படாத பாரதத்தில் (வங்கதேசம்) குல்னா மாவட்டம், ராருலி கத்தபாரா என்ற கிராமத்தில், நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் ராய்.
தொழில் நிமித்தமாக அவரது குடும்பம் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தபோது ராய்க்கு வயது 9. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும்போது சீதபேதியால் பாதிக்கப்பட்ட ராயின் படிப்பு இடையில் நின்றுபோனது. ஆனால் வீட்டிலிருந்தபடியே பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஆங்கில இலக்கியம், அறிவியல் நூல்களை ஆர்வத்துடன் படித்தார் ராய்.

அடுத்த ஆண்டு பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்த ராய், பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நிறுவிய மெட்ரோபாலிடன் இன்ஸ்டிட்யூட்டில் 1879-இல் பி.ஏ. படிப்பில் சேர்ந்தார். ஆனால் அறிவியல் மீது தீரா தாகம் கொண்ட அவரால் கலைப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

தனது ஆர்வத்தை ஈடுகட்ட, கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியின் அறிவியல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கினார் ராய். அங்கு அலெக்ஸôண்டர் பெட்லர் என்ற பேராசிரியரின் வேதியியல் வகுப்புகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதன்காரணமாக வேதியியல் மீது ராய்க்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

அதன் பின்விளைவாக, தனது பி.ஏ. படிப்பைக் கைவிட்டு, பிரிட்டனிலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. படிக்க கப்பலேறினார் ராய். 1887-இல் அங்கு வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர் வெளியிட்ட ‘தாமிரம், மெக்னீசியம் தனிமக் குழுமத்தின் சல்பேட் கலப்பினம்’ என்ற ஆய்வறிக்கை  (Conjugated Sulphates of the Copper-magnesium Group: A Study of Isomorphous Mixtures and Molecular Combinations) அவருக்கு புகழை அளித்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் சபை துணைத் தலைவராக 1888-இல் தேர்வானார் ராய்.

1889-இல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார் ராய். அவருக்கு துறை சார்ந்த அனுபவமும் உயர் கல்வித் தகுதியும் இருந்தபோதும், ஆங்கிலேயராக இல்லாத காரணத்தால் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டவில்லை. அந்த பாரபட்சத்தை எதிர்த்துப் பாராடியும் பலன் கிடைக்கவில்லை. இதுவே பின்னாளில் இந்திய வேதியியல் பள்ளி (1924) என்ற ஆராய்ச்சி மையத்தைத் துவங்க அவருக்கு தூண்டுதலாக அமைந்தது.

வேதியியலில் புதிய சேர்மங்களை உருவாக்குவது பிரதானமானதாகும். இதில் ராய்க்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. 1896-இல் அவர் வெளியிட்ட பாதரச நைட்ரைடு (Mercurous Nitrite) சேர்மம் தொடர்பான ஆய்வறிக்கை அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது.

1916-இல் மாநிலக் கல்லூரியிலிருந்து வெளியேறி, கொல்கத்தா பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் சேர்ந்த ராய், அங்கு தங்கம், பிளாட்டினம், இரிடியம் போன்ற தனிமங்களின் சல்பேட் சேர்மத்தை உருவாக்குவதிலும், அவற்றை மருந்து மூலக்கூறாகப் பயன்படுத்துவதிலும் வெற்றி பெற்றார். இது சரவாங்கி எனப்படும் முடக்குவாதத்துக்கு சிறந்த மருந்தாகும் என்றும் கண்டறிந்தார்.

1921-இல் பணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றாலும், 1936 வரை தொடர்ந்து மதிப்புறு பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்த 15 ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் அனைத்தையும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆராய்ச்சிக்கே வழங்கிவந்தார்.

வங்க மொழியில் நூற்றுக் கணக்கான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ள ராய், பிரம்ம சமாஜ அமைப்பிலும் மிகுந்த அக்கறை காட்டினார். 1923-இல் வடக்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தின்போது நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து அந்தக் காலத்திலேயே ரூ. 2.5 லட்சம் நிதி திரட்டி மக்களுக்கு உதவினார்.

இந்தியாவின் பண்டைய ரசாயன விஞ்ஞானியான ‘ரச ரத்னாகரா’ நூலை எழுதிய நாகார்ஜுனா பெயரில் 1922-இல் ஒரு விருதை உருவாக்கிய ராய், அதற்கு பெரும் தொகையை முதலீடாக்கி, வேதியியல் துறையில் சாதனை படைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கச் செய்தார்.

தனது ஆராய்ச்சிப் பணிகளுக்கு குடும்ப வாழ்க்கை சுமையாகக் கூடாது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாக வாழ்ந்த ராய், 1944, ஜூன் 16-இல் மறைந்தார்.

தனது சுயசரிதையை இரு பாகங்களாக, ‘வங்க வேதியியலாளரின் வாழ்க்கையும் அனுபவங்களும்’ என்ற தலைப்பில் (1932, 1935) வெளியிட்டார் ராய்.

சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த ராய், பண்டைய நூல்களில் இடம்பெற்ற வேதியியல் கருத்துகளை இளம் தலைமுறைக்கு வெளிப்படுத்த, ‘இந்து ரசாயன சாஸ்திர சரித்திரம்’  என்ற நூலை இரண்டு பாகங்களாக (1906, 1909) எழுதி வெளியிட்டார்.

விடுதலைப் போராட்டத்திலும், காதி இயக்கத்திலும் ஆர்வம் காட்டிய ராய், பொருளாதாரத் தன்னிறைவே உண்மையான சுதந்திரத்தை அளிக்கும் என்றார். அவரது சுதேசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அடிப்படையே அதுதான்.

இந்தியாவில் வேதியியல் துறையின் வளர்ச்சிக்கு ராயின் பங்களிப்பு முதன்மையானது. அவரது வேதியியல் அறிவு தேச எல்லை கடந்தது. ‘தலைசிறந்த வேதியியல் மேதை’ என்று லண்டனிலுள்ள ‘ராயல் சொஸைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி’யால் அறிவிக்கப்பட்ட, ஐரோப்பாவுக்கு வெளியே வாழ்ந்த முதல் விஞ்ஞானி பிரஃபுல்ல சந்திர ராய் தான்.

 

– தினமணி- இளைஞர்மணி (15.12.2015)

.

 

வழிபாடுகள் குறித்த ஒப்பீடு

14 Dec

 

AyiramDeivangal

யற்கை விஞ்ஞானியான ஆர்.எஸ்.நாராயணன், இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கட்டுரைகளை எழுதி வருபவர். அவர் தனது தொல்லியல், பண்பாட்டு ஆய்வுகளின் விளக்கமாக ’சொல்வனம்’ இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

உலகில் இப்போது வணங்கப்படும் தெய்வங்களைப் போலவே, பண்டைக்காலத்தில் பல்வேறு நாடுகளில் தொன்மையான தெய்வங்கள் வணங்கப்பட்டுள்ளன. அவற்றில் பல இப்போது ‘செமிட்டிக்’  மதங்களின் வரவால் மறைந்துவிட்டன. பழங்குடியினரின் அந்தத் தெய்வ வழிபாடுகள்  ‘பாகன் வழிபாடு’ என்று மானிடவியல் ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிறது.

சுமேரிய நாகரிகம், எகிப்து நாட்டின் நைல் நதிக்கரை நாகரிகம், கிரேக்க நாகரிகம் ஆகியவற்றின் காலம் சுமார் கி.மு. 5,000 இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை மீதான அச்சத்தால் பலவிதமான தெய்வங்களை வணங்கியுள்ளனர். அவற்றின் எச்சங்களை இன்றும் இடிபாடுகளாகக் காண முடிகிறது. கி.மு. 4,000 காலகட்டத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் சின்னங்களும், ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.

இந்த தொல்லியல் சின்னங்களைக் கொண்டு பூர்வகுடி மக்களிடையே அக்காலத்தில் நிலவிய பிணைப்பு பற்றி ஆராய்வது தனி இயலாகவே தற்போது வளர்ந்துள்ளது. அந்தத் துறையில் உள்ள ஆர்வத்தால் இந்நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
உலகம் முழுவதிலும் பாகன் தெய்வங்கள் வழக்கொழிந்த நிலையிலும், இந்தியாவில் அவற்றின் வடிவங்கள் மாறி புழக்கத்தில் இருப்பதை ஆய்வுக் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தும் ஆசிரியர், பாகன் தெய்வங்களுக்கும் இந்திய நிலப்பரப்பில் வணங்கப்படும் தெய்வங்களுக்கும் இடையிலான ஒப்புமையையும் சுட்டிக் காட்டுகிறார்.

கிறிஸ்தவ மதமும் இஸ்லாமிய மதமும் தங்களுக்குள் நடத்திய போட்டியில் மாயமானவை தான் பாகனீய மதங்கள். அந்த மதங்களின் அழிவுடன் கோடிக்கணக்கான மக்களின் பண்பாடும் வாழ்வும் சேர்த்துப் புதைக்கப்பட்டன. இன்றும் அந்தப் போர் வேறு வடிவங்களில் உலகை அச்சுறுத்துகிறது என்ற ஆசிரியரின் கருத்து, உலகநலனுக்கான அவரது ஏக்கத்தை புலப்படுத்துகிறது.

ஏற்கனவே இருந்த ஆயிரம் தெய்வங்களுடன் ஆயிரத்து ஒன்றாக ஏசுவும், ஆயிரத்து இரண்டாக நபிகளும் இருந்திருந்தால் உலகில் குழப்பம் நேரிட்டிருக்காது என்கிறார் நூலாசிரியர். புதிய சிந்தனைகளை விதைக்கும் நூல் இது என்றாலும், நூலில் மலிந்திருக்கும் அதிகமான எழுத்துப் பிழைகள் நெருடலை ஏற்படுத்துகின்றன. அடுத்த பதிப்பில் இவை தவிர்க்கப்பட வேண்டும்.

***

ஆயிரம் தெய்வங்கள்

ஆர்.எஸ்.நாராயணன்

136 பக்கங்கள், விலை: ரூ. 100,

யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ் பதிப்பகம்,

எண்: 8, 8-வது பிரதான சாலை,

வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயல்,

சென்னை- 600 109.

.

இந்திய அணுக் கருவியலின் தந்தை

9 Dec
homi-bhabha 3

ஹோமி ஜஹாங்கீர் பாபா

லக அளவில் பசுமை மின்சாரத்தின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற சிந்தனை பரவி வருகிறது. நிலக்கரி, நில எண்ணெயைப் பயன்படுத்துவதால் கரியமில வாயு பெருகுகிறது. அதற்கு மாறாக, நீர் மின்சக்தி, சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியவை புவிச்சூழலில் மாசு ஏற்படுத்தாதவையாக உள்ளன.

அந்த வகையில் நமது நாட்டின் மின்னுற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பவையாக அணு மின்நிலையங்கள் உள்ளன. தவிர, இந்தியாவின் தற்காப்புக்குத் தேவையான அணு ஆயுதங்களும் வல்லரசு நாடுகளுக்கு இணையாக நம்மிடம் இன்று உள்ளன. இவற்றுக்கு அடிகோலியவர், ‘இந்திய அணுக்கருவியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.

1909 அக்டோபர் 30-இல் மும்பையில் வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பாபா, இளம் வயதிலேயே படிப்பிலும் அறிவியல் ஆராய்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். தனது தந்தையின் விருப்பப்படி பிரிட்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து எந்திரவியலில் பட்டம் (1930) பெற்ற பாபா, வெளிநாடுகளின் அறிவியல் வளர்ச்சியால் கவரப்பட்டார்.

பிறகு, கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) என்ரிகோ, ஃபெபெருமி போன்ற வெளிநாட்டு பிரபல விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ‘காமா கதிர்களைக் கவர்வதில் எலக்ட்ரான் பொழிவுகளின் பங்கு’ என்ற ஆய்வுக் கட்டுரையால் அவருக்கு நியூட்டன் கல்வி உதவித்தொகை மூன்றாண்டுகளுக்குக் கிடைத்தது. 1934-இல் முனைவர் பட்டம் பெற்றார் பாபா.

1935-இல் துகள் மின் இயக்கவியலில் (Quantum ElectroDynamics) எலக்ட்ரான்- பாசிட்ரான் நுண்துகள்களிடையிலான கதிர்வீச்சுச் சிதறல் குறித்த பாபாவின் சிறப்பான ஆய்வறிக்கை ராயல் சொஸைட்டி இதழில் வெளியானது. பின்னாளில் அதற்கு ‘பாபா கதிர்வீச்சுச் சிதறல்’ என்று (Bhabha Scattering) பெயரிடப்பட்டது.

1937-இல் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி ஹைட்லருடன் இணைந்து அவர் மேற்கொண்ட அண்டக்கதிர் (Cosmic rays) தொடர்பான ஆராய்ச்சி அவருக்கு மிகுந்த புகழைத் தந்தது. அவற்றில் “மேசான்’ (Meson) எனப்படும் அடிப்படைத் துகள் இருப்பதை பாபா கண்டறிந்தார்.

இரண்டாம் உலகப்போர் துவங்கியபோது (1939) தாய்நாடு திரும்பிய பாபா, பெங்களூரில் இயங்கிய இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். அதன் தலைவராக இருந்தவர் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியான சர் சி.வி.ராமன். அப்போது அவருக்குக் கிடைத்த டாடா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிதியுதவியைக் கொண்டு, அண்டக் கதிர் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். அணுக் கருவியலில் (Nuclear Physics) இந்தியாவின் துவக்கத்துக்கான முதல் புள்ளி அதுவே.

1941-இல் பெருமைக்குரிய லண்டன் ராயல் சொஸைட்டிக்கு ஆய்வு உறுப்பினராக பாபா தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றியபோது அணுக்கருவியல் உள்ளிட்ட உயர் இயற்பியல் துறைகளில் ஆராய்ச்சி செய்யத் தேவையான போதிய வசதிகள் நமது நாட்டில் இல்லை என்பதை உணர்ந்த பாபா, நாட்டின் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த தொரப்ஜி ஜாம்ஷெட்ஜி டாடாவின் உதவியை நாடினார். அவரது உதவியுடன் 1944-இல் அடிப்படை அறிவியலுக்கான டாடா ஆராய்ச்சி நிறுவனத்தை (tifr- Tata Institute of Fundamental Research) பாபா மும்பையில் நிறுவினார். அங்கு பல விஞ்ஞானிகள் உருவானார்கள்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமர் நேருவிடம் விவாதித்து, இந்தியா அணு ஆராய்ச்சியில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார் பாபா. அதன் விளைவாக, 1948-இல் இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission of India)நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1966-இல் இறக்கும் வரை தனது தலைமைப் பண்பாலும் கடும் உழைப்பாலும் அதை பல மடங்காக விரிவாக்கினார்.

பிற்பாடு மும்பை மாகாண அரசு டிராம்பே என்ற இடத்தில் வழங்கிய அரசு நிலத்தில் 1954-இல் டிராம்பே அணு ஆராய்ச்சி மையத்தைத் துவங்கினார் பாபா. அது தற்போது பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என்ற பெயரில் இயங்குகிறது.

மின்னணுவியல், விண்வெளி அறிவியல், நுண்ணுயிரியல், மின்காந்த வானியல் துறைகளிலும் பாபா ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளித் துறையில் நாடு முன்னேறுவதற்காக, இளம் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு அமையத் தூண்டுகோலாக இருந்தார் பாபா.

இந்தியா உலக அரங்கில் பாதுகாப்புடன் விளங்க வேண்டுமானால் அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் பாபா தான். அவரையே இந்திய அணு ஆயுதத் தயாரிப்பு திட்டத்தின் தலைவராகவும் நியமித்தார் பிரதமர் நேரு.

உலக அளவிலான அணுவியல் கழகத்தின் இந்தியப் பிரதிநிதியாக இருந்தபோது, அமைதிக்கான அணு ஆற்றலின் பயன்பாடாக அணு மின்சக்தியை உலக நாடுகளுக்குப் புரியச் செய்தவர் பாபா.

இவ்வாறாக இந்தியா அணுவியலில் முன்னேற உறுதியான அஸ்திவாரம் அமைத்த ஹோமி ஜஹாங்கீர் பாபா, 1966, ஜனவரி 24-ஆம் தேதி வியன்னாவில் நடைபெற்ற உலக அணுவியல் கருத்தரங்கிற்குச் செல்லும் வழியில் விமான விபத்தில் உயிரிழந்தார். அதன் பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. இருந்ததாக பிற்பாடு தகவல்கள் வெளியாகின.

உலக அளவில் முக்கியமான அணுவியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்த பாபாவுக்கு 1954-இல் பத்மபூஷண் விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியது.

***

தோரியத்தில் புதுமை கண்டவர்

உலகிலேயே வேறெங்கும் இல்லாத புதுமையாக, தோரியம் தனிமத்தைப் பயன்படுத்தி அணு மின்சக்தி உற்பத்தி செய்யும், மூன்றுநிலை அணு மின்சக்தி திட்டத்தை (Three- Stage Nuclear Power Programme) வடிவமைத்தவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.

அணு ஆற்றலுக்கு அடிப்படைத் தனிமமான யுரேனியம் இந்தியாவில் குறைவாக இருப்பதால், தோரியம் தனிமத்தை பாபா தொலைநோக்குப் பார்வையுடன் தேர்வு செய்தார். நமது நாட்டில் 5 லட்சம் டன் தோரிய இருப்பு உள்ளதால், இத்துறையில் நீண்டகாலத்துக்கு தன்னிறைவுடன் நம்மால் செயல்பட முடியும்.

தென் இந்திய கடற்கரைகளில் அதிக அளவில் கிடைக்கும் மானசைட் (monazite) கனிமப் படிவுகளில் இருந்து பெறப்படும் தோரியம் தான் இப்போது நம்மை அணு ஆற்றல் நாடாக்கி இருக்கிறது. இதற்கு மூலகாரணமானவர் பாபா.

.

-தினமணி- இளைஞர்மணி -08.12.2015

.

இந்தியாவின் மனிதக் கணினி

1 Dec
Sakunthaladevi2

சகுந்தலா தேவி

சிலர் பிறக்கும்போதே ஞானக் குழந்தைகளாகப் பிறக்கின்றனர். அவர்களை பிறவிமேதைகள் என்று கூறுவர். அவர்களின் அறிவுத்திறனுக்கான காரணத்தை விஞ்ஞான உலகால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் பிறவிமேதைகள் சிலரே தங்கள் வாழ்நாள் முழுவதும் சாதனை படைக்கிறார்கள். அதற்கு அவர்களின் அர்ப்பணிப்பும், தங்கள் திறமையை மேம்படுத்தும் ஆர்வமும் தான் காரணம்.

அத்தகையவர்களுள் ஒருவர்தான் ‘இந்தியாவின் மனிதக் கணினி’ என்று புகழப்பட்ட சகுந்தலாதேவி.

பெங்களூரில் 1929, நவம்பர் 4-இல் பிறந்த சகுந்தலாதேவி, சிறு வயதிலேயே அபார அறிவுடன் விளங்கினார். அவருக்கு 3 வயதாக இருக்கையில், தந்தையுடன் சீட்டுக்கட்டு விளையாட்டில் ஈடுபட்டபோது அவரது அறிவு வெளிப்பட்டது.

சர்க்கஸில் மாயாஜால வித்தைக்காரராக இருந்த அவரது தந்தைக்கு, தனது தொழிலைவிட தனது மகளின் திறமை மீது அதீத நம்பிக்கை ஏற்பட, தனது குழந்தையை காட்சிப் பொருளாக்கினார். முச்சந்திகளில் தனது குழந்தையை நிறுத்தி, சாலையில் செல்வோரின் கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்கச் செய்து வருவாய் ஈட்டினார் அவர்.

அறியாத வயதிலேயே குடும்பச் சுமையை தனது தோளில் ஏற்ற சகுந்தலாவுக்கு முறையான பள்ளிக்கல்விக்கு வாய்ப்பில்லாது போனது. தனது ஆறாம் வயதில் மைசூரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனது கணித அறிவை அவர் வெளிப்படுத்தினார். அதன்பிறகு அவரது உலகளாவிய கணித உலா தொடங்கியது.

பல இலக்கங்களைக் கொண்ட எண்களின் கனம், வர்க்கம், கணமூலம், வர்க்கமூலம், அடுக்குகளுக்கும், சிக்கலான கணக்குகளுக்கும் மிகக் குறுகிய நேரத்தில் மனக்கணக்காக தீர்வு கூறுவதில் சகுந்தலா திறம் மிகுந்தவராக இருந்தார். பழைய நூற்றாண்டின் ஏதாவது ஒரு தேதியைக் குறிப்பிட்டால் உடனே அதற்கான கிழமையைக் கூறும் அளவுக்கு நினைவாற்றலும் கணக்கிடும் திறனும் அவருக்கு இருந்தன.

அவரது 15-வது வயதில் (1944) லண்டனுக்கு தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது கணித அறிவுக்கு பல ரசிகர்கள் உருவாயினர். 1960-இல் நாடு திரும்பிய சகுந்தலா பரிதோஷ் பானர்ஜி என்ற ஐஏஎஸ் அதிகாரியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. 1979-இல் திருமண முறிவை அடுத்து பெங்களூரு திரும்பினார் சகுந்தலா. அதன்பிறகு கணிதம், ஜோதிடம், புதின எழுத்துகளில் அவரது கவனம் திரும்பியது.

பள்ளிக்குச் செல்லாமலே அனுபவ அறிவாலும், ஆர்வத்தாலும் தனது துறையில் அறிவினை வளர்த்துக்கொண்ட சகுந்தலாதேவி, பல விளையாட்டு கணித நூல்களை எழுதியிருக்கிறார். கணிதத்தில் மாணவர்களுக்கு அச்சத்தைப் போக்கி ஆர்வமூட்டுவதை தனது கடமையாகவே அவர் கொண்டிருந்தார்.

எண்களின் விளையாட்டு (1977), குழந்தைகளை கணித நிபுணராக்குவது எப்படி? (2005), எண்களின் புத்தகம், எண்களின் அதிசய உலகம், கணிதப்புதிர்கள் (2006) ஆகியவை அவர் கணித உலகுக்கு அளித்த சில நூல்கள். ஜோதிடத்திலும் பல நூல்களை அவர் எழுதியிருக்கிறார். தவிர, கற்பனைப் புதினங்கள், நினைவாற்றல் குறித்த நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.

இப்போது சட்ட அங்கீகாரம் பெற்றுவிட்ட ஒருபால் ஈர்ப்பு பற்றி 1977-லேயே   ‘The world of Homosexuals’  என்ற நூலை எழுதியிருக்கிறார் சகுந்தலா. தனது பிறவி மேதைமையை மேம்படுத்திக்கொண்டு பல்துறை நிபுணராக விளங்கிய சகுந்தலா, 2013, ஏப்ரல் 21-இல் மறைந்தார்.

உலக சாதனை:

தனது கணித அறிவால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர் சகுந்தலா. 1980, ஜூன் 18-இல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 13 இலக்க எண்கள் இரண்டைப் பெருக்கி (7,686,369,774,870 X 2,465,099,745,779) 28 விநாடிகளில் பதில் அளித்து (18,947,668,177,995,426,462,773,730) அவையோரை வியப்பில் ஆழ்த்தினார் சகுந்தலா. இது 1982-ஆம் ஆண்டின் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

1988-இல் கலிஃபோர்னியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஆர்தர் ஜென்சென், பெரிய கணக்குப் புதிர்களைக் கூறி சகுந்தலாவின் மனத்திறனை சோதித்தார். அவற்றுக்கு அவர் குறைந்த விநாடிகளில் பதிலளித்தார். உதாரணமாக, 61,629,875 என்ற எண்ணின் கனமூலமும், 170,859,375 என்ற எண்ணின் ஏழாவது மூலமும் கேட்கப்பட்டன. அவற்றுக்கான விடைகளை (395, 15), ஆர்தர் கேள்விகளை குறிப்பேட்டில் குறிக்கும் முன்னமே கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சகுந்தலா. அவரது அறிவுத்திறன் குறித்து ‘Intelligence’ என்ற கல்வியிதழில் ஆய்வுக் கட்டுரையை 1990-இல் வெளியிட்டார் ஆர்தர்.

1977-இல் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஓர் 201 இலக்க எண்ணின் 23-வது மூலத்தைக் கணக்கிட்டு 50 விநாடிகளில் பதில் (546,372,891) அளித்தார். அதை சரிபார்க்க அமெரிக்க தரநிர்ணய நிறுவனத்தின் யூனிவாக்-1108 என்ற சூப்பர் கணினியில் தனி நிரல் எழுத வேண்டி இருந்தது. அந்தக் கணினியும்கூட இந்தப் புதிருக்கு பதிலளிக்க கூடுதலாக 12 விநாடிகள் எடுத்துக் கொண்டது!

இவ்வாறாக தனது கணித அறிவால் உலக அளவில் புகழ் பெற்ற சகுந்தலா தேவி, கணிதத்தை எளிதாகக் கற்பிக்க பெங்களூரில் கணிதப் பயிற்சி மையத்தைத் தொடங்கினார். அது இன்றும் சிறப்புற இயங்குகிறது. அங்கு அதிவேகக் கணக்கீடுகளுக்கான வேத கணித அடிப்படையில் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.

மனிதனின் மூளை ஓர் அறிவுச் சுரங்கம். அதைத் திறம்படக் கையாள்பவர்கள் மேதைகளாகிறார்கள். இதற்கு சகுந்தலாதேவியின் வாழ்க்கை ஓர் அரிய உதாரணம்.

***

உன்னை நீ நம்பு!

கணிதமேதை சகுந்தலா தேவி, அச்சத்தைக் குறைத்தாலே கணிதத்தில் வெல்லலாம் என்கிறார்.

“முதலில் உன்னை நீ நம்பு. உன்னிடத்தில் நம்பிக்கையையும் திறனையும் வளர்ப்பதுதான் அவசியம். நீ எண்களில் பெரிய நிபுணராக இருக்க வேண்டியதில்லை. யாரும் பிறக்கும்போதே முழுமையான திறனுடன் பிறப்பதில்லை. புதிர்கள், விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால் கணிதம் வசப்படும்”  என்பது அவரது அறிவுரை.

சகுந்தலா தேவியின் பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், 2013-இல் கூகிள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் இவரது படத்தை வெளியிட்டு மரியாதை செய்தது.

.

– தினமணி இளைஞர்மணி -01.12.2015

.