Archive | January, 2016

சகோதரன் ரோஹித் வெமூலாவுக்கு…

26 Jan

RohitVemula

.

தன்னை நொந்து, உலகம் வெறுத்து

இன்னுயிர் ஈந்த சகோதர,

நின் மறைவுக்கு எம் கண்ணீர் அஞ்சலி.

 

வாழ்வதன் மூலம் தடைகளை உடைத்த

பீமராவ் இருந்திருந்தால்

நிச்சயம் உன்னைத் தடுத்திருப்பார்.

தேசத்தின் துரதிருஷ்டம்,

அண்ணலும் இன்று இல்லை.

அவரைப் புரிந்தவர்களும் உன்னுடன் இல்லை.

 

வெறுப்புணர்வில் தழைத்த அரசியலால்

நீ வேரறுந்த மரமானாய்.

தேசியத்தை எதிர்த்து கழிவிரக்கம் ஈட்டினாய்.

பல்கலைக்கழகத்தில் வன்முறை வளர்த்து

பரிதாபத்துக்குரியவன் ஆனாய்.

சட்டம் தன் கடமையைச் செய்தபோது

உன் ஜாதியை முன்னிறுத்தினாய்.

அனைத்துக் கவசங்களும் உடைபட்டபோது

அரசை எதிர்த்து விஷம் கக்கினாய்.

இறுதியில் வந்தது உன் இறுதி யாத்திரை.

.

பிறப்பின் அடிப்படையில் வேற்றுமை

நாட்டில் இல்லாமலில்லை.

அந்த இழிநிலையை மாற்றும் போராட்டம்

உன்னுடையது மட்டுமில்லை.

அங்கு தான் நீ சறுக்கினாய்.

சார்பாளர் தவிர்த்த அனைவரையும்

சந்தேகக் கண்ணால் சுட்டெரித்தாய்.

மதமாற்றத்தால் குடும்பத்தில் நிகழ்ந்த

குழப்பம் உன்னை மூர்க்கமாக்கியது.

கலகக்காரர்களின் கரங்களில் ஆயுதமானாய்.

அது கடைசியில் உன்னையே உண்டது.

.

எந்த மாணவரும் இந்த நாட்டின்

நம்பிக்கை நட்சத்திரமே.

இருப்பினும் நீ நம்பிக்கை இழந்தததற்கு

உன்னை எதிர்த்தவர்கள் காரணம் அல்ல.

அதை உண்மையில் நீ அறிவாய்.

உன் இறுதிக்கடிதம் பூடகமாக உணர்த்திய

விவரங்கள் உன் மதிப்பை உயர்த்தின.

ஆனால், உன் மரணத்தின் அதிர்வலைகள்

ஒருமை உணர்வாளர்களின் பணிகளுக்கு

மேலும் பல அடிகள் சறுக்கல்.

சாவால் நீ விதைத்த சமூகப் பிளவை

நிரப்ப இன்னும் சில காலம் ஆகும்.

இதுவே விதிபோலும்.

.

உனது வழிமுறைத் தவறுகளை

அன்றும் கண்டித்தோம்…

இன்றும் கண்டிக்கிறோம். ஆயினும்

உன் மனக்காயங்களை உணர்ந்திருக்கிறோம்.

ஆகவேதான் நாங்களும்

கண்ணீர் சிந்துகிறோம்.

 

 

.

Advertisements

ராமன் விளைவுக்கு உதவிய கிருஷ்ணன்

26 Jan
கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன்

கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன்

நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானி சர் சி.வி.ராமனை அனைவரும் அறிவோம். உலகப் புகழ் பெற்ற ‘ராமன் விளைவு’ (Raman effect) என்ற ஒளிச்சிதறல் கண்டுபிடிப்புக்காக அவருக்கு அந்த கௌரவம் வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கண்டுபிடிப்பில் வெங்கட்ராமனுக்கு உதவிபுரிந்த மற்றொரு தமிழரை பலரும் அறிய மாட்டார்கள்.

அந்த விஞ்ஞானி கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன்.

வெங்கட்ராமனின் வழிகாட்டலில் ஆய்வில் ஈடுபட்ட அவரது ஆய்வு மாணவரான கிருஷ்ணன், அதுதொடர்பாக ‘நேச்சர்’ சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் தொடர்ந்து 20 கட்டுரைகளை (1927- 1929) வெங்கட்ராமனுடன் இணைந்து வெளியிட்டார். அதன் விளைவாக ஆரம்பத்தில் அந்தக் கண்டுபிடிப்புக்கு ‘ராமன்- கிஷ்ணன் விளைவு’ என்றே பெயரிடப்பட்டிருந்தது.

ஆயினும் 1930-இல் வெங்கட்ராமன் நோபல் பரிசு பெற்றவுடன் ஒளிச்சிதறல் ஆராய்ச்சிக்கான முழுப்பெருமையும், கவனமும் வெங்கட்ராமனுக்கு கிடைத்துவிட்டன. அதுகண்டு கிருஷ்ணன் வருத்தம் அடைவில்லை. “எனது பேராசிரியர் இட்ட பணியைத் தான் நான் நிறைவேற்றினேன். அது அவரது வழிகாட்டலில் உருவான படைப்பு”  என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார் கிருஷ்ணன்.

கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன், தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகிலுள்ள விழுப்பனூர் கிராமத்தில் பிராமணக் குடும்பத்தில் 1898, டிசம்பர் 4-இல் பிறந்தார். தந்தை விவசாயி.

தனது பள்ளிப் படிப்பை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜி.எஸ்.ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் தனது ஆசிரியர்  திருமலைக்கொழுந்து பிள்ளை  இனிய தமிழில் நடத்திய அறிவியல் பாட வகுப்புகளே தனக்கு அறிவியல் மீது தீராத விருப்பத்தை ஏற்படுத்தியது என்று கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இளநிலை பட்டப் படிப்பை மதுரை அமரிக்கன் கல்லூரியிலும் பயின்ற கிருஷ்ணன், முதுநிலை பட்டப் படிப்பை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் முடித்தார். இயற்பியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றாலும், அதே கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக சில காலம் பணியாற்றினார். அவரது பள்ளி இடைவேளை வகுப்பைக் கேட்க அருகிலுள்ள கல்லூரிகளின் மாணவர்களும் கிறிஸ்தவக் கல்லூரிக்கு வருவார்கள்.

பிறகு, மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கூட்டமைப்பில் (Indian Association for the Cultivation of Science) 1920-இல் சேர்ந்த கிருஷ்ணன், அங்கு ஏற்கனவே பணியில் இருந்த வெங்கட்ராமனுக்கு உதவியாக ஆய்வுகளில் ஈடுபட்டார். அப்போதுதான் பலவித திரவங்களின் ஊடாக ஒளியைச் செலுத்தி ஏற்படும் நிறமாலை மூலமாக ஒளிச்சிதறலின் விளைவை இருவரும் கண்டறிந்தனர்.

1928-இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராக கிருஷ்ணன் சேர்ந்தார். அங்கு சக விஞ்ஞானிகளான ஆசுதோஷ் முகர்ஜி, சாந்திலால் பானர்ஜி, பி.சி.குஹா ஆகியோருடன் இணைந்து படிக காந்தவியல் (Crystal Magnetism), காந்த வேதியியல் (Magneto Chemistry), படிக இயற்பியலில் பல ஆய்வுகளை நடத்தினார். காந்தத்தின் திசைமாறுபாட்டுப் பண்பை (Magnetic anisotropy) அளவிடும் தொழில்நுட்பத்தை அவர்கள் கண்டறிந்தனர்.

1933-இல் மீண்டும் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கூட்டமைப்பில் சேர்ந்த கிருஷ்ணன், காந்தப் படிகங்கள் குறித்து சாந்திலால் பானர்ஜியுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். அவர்களது ஆய்வு முடிவுகள் லண்டன் ராயல் சொஸைட்டியால் 1933-இல் வெளியிடப்பட்டன. ‘சிறு படிகங்களின் காந்த அளவீடுகள் குறித்த கிருஷ்ணன்- பானர்ஜி முறை’  என்று அறிவியல் உலகில் அவை புகழ்பெற்றன.

1940-இல் ராயல் சொஸைட்டியின் ஃபெல்லோஷிப் அவருக்கு அளிக்கப்பட்டது. 1942-இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக இணைந்த கிருஷ்ணன் 1947 வரை பணியாற்றினார்.

சுதந்திர இந்தியாவில், பிரதமர் நேருவின் முதல் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன், தேச வளர்ச்சியில் அறிவியலின் பயன்பாட்டை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றினார்.

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) மூலமாக நிறுவப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வு மையத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்ற (1948) கிருஷ்ணன், நாடு முழுவதிலும் இயற்பியல் ஆய்வகங்களை உருவாக்கினார்.

கிருஷ்ணனின் அறிவியல் சேவைக்காக பிரிட்டன் அரசு சர் பட்டம் (1946) வழங்கியது. இந்திய அரசு பத்மபூஷண் விருதையும் (1954), முதல் முறையாக சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதையும் (1958) வழங்கி கிருஷ்ணனை கௌரவித்தது.

விஞ்ஞானி கிருஷ்ணன் தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கம்ப ராமாயணத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். ‘உலகப் புரட்சியாளர் ஐன்ஸ்டீன், பூமியின் வயது என்ன? சூரிய சக்தி’ ஆகிய நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

இவ்வாறாக, அறிவியலின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திய, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் தேச முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட விஞ்ஞானி கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன், 1961, ஜூன் 14-இல் தனது 62-வது வயதில் மறைந்தார்.

அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு கிருஷ்ணன் மீது சூட்டிய புகழ்மாலை, அவரது முழு வடிவை விளக்குவதாகும். “கிருஷ்ணன் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, அதற்கு மேலானவர். அவர் இந்த நாட்டின் சிறந்த குடிமகன்; ஒருங்கிணைந்த நற்பண்புகள் சூழ்ந்த நிறைமனிதர் அவர்” என்று அஞ்சலி செலுத்தினார் நேரு.

கே.எஸ்.கே. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட கிருஷ்ணனின் சரித்திரத்தை நிலைநிறுத்தும் விதமாக, தலைநகர் தில்லியில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டி மரியாதை செலுத்தியிருக்கிறது பாரத அரசு.

 

-தினமணி- இளைஞர்மணி (26.01.2016)

.

இரு விதமான சுயசரிதைகள்…

25 Jan

ELIYA

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் பல்கலைக்கழகப் பதிவாளராக உயர்ந்தது எப்படி என்பதன் முழு வடிவமே இந்நூல். பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரான நூலாசிரியர், தனது கடும் உழைப்பு, திட்டமிடல், இனிய குணநலன்கள், சிரத்தை, பல்துறை அறிவு ஆகியவை எவ்வாறு வாழ்வை உயர்த்தின என்பதை மிகவும் சுவையாக சுயசரிதையாக எழுதி இருக்கிறார்.

‘வெற்றிமுனை’ மாத இதழில் வெளியான தொடர் கட்டுரைகளையும், ‘தினமணி’யில் தான் எழுதிய 11 வாழ்வியல்  கட்டுரைகளையும்  தொகுத்து நூலாக்கியுள்ளார்.  பத்திரிகைகளிலும் எழுதியபோதும், வானொலி, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்தியபோதும் தனக்குள் ஏற்பட்ட மனப் போராட்டங்களையும், குழந்தைத்தனமான ஆசைகளையும் எந்த ஒளிவுமறைவுமின்றிச் சொல்லிச் செல்வதில் அவரது தூய வாழ்க்கை புலப்படுகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிளிரும் உண்மையும் எளிமையும், இறுதியில் முத்தாய்ப்பாகக் கூறும் அறிவுரைகளும், புதிய சாதனை படைக்க விரும்பும் இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக விளங்கும் என்றால் மிகையில்லை. ‘வாழ்க்கையை யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. அதுவே நமக்கு கற்றுக் கொடுக்கும்’- இதுவே இந்த சுயசரிதை சொல்லும் சேதி.

 

எளிய மனிதனின் ஏணிப்படிகள்

பேராசிரியர் பி.கே.மனோகரன்

184 பக்கங்கள், விலை: ரூ. 120

விஜயா பதிப்பகம்,
20, ராஜவீதி, கோயம்புத்தூர்- 641 001,
தொலைபேசி: 0422-2382614.

***

suvadu

சாதனை புரிந்தவர்களின் தன்வாழ்க்கைக் கதைகளுக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு. அவர்கள் வளர்ந்த பின்புலம், எதிர்கொண்ட சவால்கள், அவர்களின் வெற்றிக்கான தனித்திறன்கள் உள்ளிட்டவற்றின் சேர்க்கை தான் அவர்களின் வாழ்க்கை. அந்த வகையில், விண்வெளி விஞ்ஞானியான நெல்லை சு.முத்துவின் சுயசரிதையிலும் பல வித்தியாசமான கூறுகள் உள்ளன.

எழுத்துத் துறையிலும் ஆர்வம் கொண்ட விஞ்ஞானி என்பது இவரது தனித்தன்மை. தவிர, தனது சிறுவயது நினைவுகளை பொருட்களாகவும் சேகரித்து வைத்து, அந்த ஆதாரங்களையும் நூலில் இணைக்கும்போது, ஓர் ஆல்பமாகவே சுயசரிதை மாறிவிடுகிறது. சுய விவரங்களை மிகுந்த சிரத்தையுடன் தொகுத்திருக்கிறார்.

மாணவப் பருவ விடைத்தாள்கள், சிறு வயது ஓவியங்கள், சான்றிதழ்கள், பால பருவத்தில் எழுதிய எழுத்துகள், இலக்கிய ஆர்வம், படைப்புகள் வெளியான பத்திரிகைகள், வெளியிடப்பட்ட நூல்களின் பின்னணி, அறிஞர்களுடன் தனது தொடர்புகள், இஸ்ரோ அமைப்பில் ஆற்றிய பணிகள், கிடைத்த பாராட்டுகள், கலந்துகொண்ட கருத்தரங்குகள், பிரசுரமான 100-க்கு மேற்பட்ட நூல்கள் உள்ளிட்ட அனைத்தையும் 120 அத்தியாயங்களில் நிரல்படத் தொகுத்திருக்கிறார் நெல்லை சு.முத்து.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் விஞ்ஞானியாக சாதனை படைத்தாலும், எழுத்துத் துறையிலும் சுவடு பதிக்கும் ஆர்வமே நூலின் பக்கங்கள் தோறும் தோற்றம் அளிக்கிறது.

 

சுவடுகள்

நெல்லை சு.முத்து

414 பக்கங்கள், விலை: ரூ. 300

திருவரசு புத்தக நிலையம்,
23, தீனதயாளு தெரு, சென்னை- 641 017,
தொலைபேசி: 044-2431 2810.

 

.

அஸ்தியில் கனவுகள் கலப்போம்!

23 Jan
RohitVemula

ரோஹித் வெமூலா

.

உறையாத ரத்தத்தின்
வாசம் எங்கும்.
வெடிக்காத குண்டின்
நெடி இன்னமும்.
வெல்லாத போரின் நினைவுகள்
என்றும் எங்கும்.

தூக்குக் கயிறை
முத்தமிட்ட இளைஞர்களின்
இறுதி ஆசைகள்
நிறைவேறாத கனவுகள்.
விடுதலை வேள்வியில்
ஆகுதியான வீரர்களின்
சாம்பல் மீது எழுந்த
கட்டடம் சரிகிறது.

சாம்பலின் வீரியம் உணராமல்
கற்களைப் பிணைத்த
அரசியல் கலவையால்…
ரசமட்டம் தவிர்த்த
சுயநலமிகளின் மேதமையால்…
சரியும் கட்டடத்திற்கு
காரணமாயிரம்.

இப்போதும்
கட்டடத்தைக் காப்பாற்றலாம் –
அஸ்திவாரத்தில்
அவர்களது கனவுகளைக் கலந்தால்.

 

குறிப்பு:

பிரிவினை அரசியலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து பலியாகி, சுயநல அரசியல்வாதிகளின் கரங்களில் தற்போதும் சிக்கி சின்னாபின்னமாகிற சக மானுடன்- கனவுகள் நனவாகாமலே கரைந்துபோன இளைஞன் – ரோஹித் வெமூலாவுக்கு இக்கவிதை அர்ப்பணம்.
மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தின்போது எழுதப்பட்ட இக்கவிதை குழலும் யாழும் வலைப்பூவில் வெளியானதன் மீள்பதிவு.

.