கண்களை மூடிக்கொள்ளும் பூனைகள்…

11 Jan

காளிசாக் கலவரம்- 2016 ஜன. 3

காளிசாக் கலவரம்- 2016 ஜன. 3

பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது என்று பழமொழி உண்டு. இதை நமது அரசியல்வாதிகள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் நடைபெற்றுள்ள மதக் கலவரம் பற்றிப் பேசவும்கூட பாஜக தவிர்த்த எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை என்பதைக் காணும்போது, நமது அரசியல் பூனைகளின் போலித்தனம் வெளிப்படுகிறது.

வங்கதேசத்தின் அருகில், மாநில எல்லையிலுள்ள மால்டா மாவட்டத்தில், காளிசாக் கிராமத்தில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற்ற கலவரம், அரசுக்கும் நிர்வாக அமைப்புகளுக்கும் சவால் விடுவதாக அமைந்துள்ளது.

அன்று 24 போலீஸ் வாகனங்களும், எல்லைப் பாதுகாப்புப் படை வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டன. காளிசாக் காவல்நிலையமும் அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகமும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. அதைத் தடுத்த நூற்றுக்கு மேற்பட்ட போலீஸார் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

இந்தக் கலவரத்துக்குக் காரணம், உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் வாய் கொழுத்த ஒருவரது உளறல். அவர் இப்போது சிறையில் இருக்கிறார். ஆனால், தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டுகிறது என்பதுபோல, பல வாரங்களுக்கு முன் உ.பி.யில் பேசப்பட்ட பேச்சு, மேற்கு வங்கத்தில் மாபெரும் வன்முறையாக மாறியிருக்கிறது.

உ.பி. மாநிலத்திலுள்ள ஹிந்து மகா சபா என்ற அமைப்பின் தலைவர் கமலேஷ் திவாரி இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதன் விளைவுதான் இந்தக் கலவரம்.

இதில் தொடர்புடைய கமலேஷ் திவாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காளிசாக்கில் நெடுஞ்சாலையில் திரண்ட லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்களின் போராட்டம் திசை திரும்பியதில், பல பொதுச்சொத்துகளுக்கு சேதமும், உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழுலும் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த வன்முறை நடந்து ஒரு வாரமாகியும் வீடுகளுக்குள் கிராம மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். பல வீடுகளில் வன்முறைக் கும்பல் புகுந்து கொள்ளையடித்திருக்கிறது. பலர் காயமடைந்திருக்கிறார்கள். அதைவிட, அங்கு வாழவே விரும்பாத நிலைக்கு மக்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு நடந்தும் மாநில அரசு கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெறும் 10 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு, அவர்களிலும் 6 பேர் பிணையில் உடனே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘இது மதக்கலவரம் அல்ல, எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் உள்ளூர் மக்கள் நடத்திய மோதல்’ என்று முதல்வர் மமதா பானர்ஜி விளக்கம் அளித்திருக்கிறார். இதிலிருந்தே, மாநில அரசு வன்முறைக் கும்பல் மீது தீவிர நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்பது புலனாகிறது.

இரண்டு அரசு அலுவலகங்களும், பல பொதுச்சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டு, பல வீடுகள் சூறையாடப்பட்டு, பலர் காயமடைந்துள்ள நிலையில், இது மதக்கலவரம் அல்ல என்று மமதா ஏன் சொல்கிறார்? ஏனெனில் இந்த ஆண்டில் அங்கு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்வதற்கு மதரீதியான ஆதரவு அவருக்குத் தேவை.

மமதா தான் இப்படி என்றால் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸோ, மார்க்சிஸ்டுகளோ இதைக் கண்டிக்கத் தயாராக இல்லை. ஏனெனில் அவர்களும் வாக்கு வங்கி அரசியலைத்தான் நம்பி இருக்கிறார்கள்.

நாட்டில் எங்கு மதக் கலவரம் நடந்தாலும் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பாஜகவுக்கு எதிராக முழங்குவது வாடிக்கை. அந்தக் கலவரங்கள் பெரும்பான்மை சமூகமான ஹிந்துக்களால் நடந்ததாக இருந்தால், சம்பவம் சிறிதென்றாலும் ஊதிப் பெரிதாக்கி அதில் அரசியல் நடத்துவார்கள். இதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் தாத்ரி.

உ.பி. மாநிலம், தாத்ரியில் மாட்டைக் கொன்றதால் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டபோது இந்த நாட்டில் சகிப்பின்மைக்கு எதிராக எவ்வளவு குரல்கள் எழுந்தன? அரவிந்த் கேஜ்ரிவால், ராகுல் காந்தி, நிதிஷ்குமார், கருணாநிதி, லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், ஓமர் அப்துல்லா, மமதா பானர்ஜி,.. என எந்த அரசியல் பேதமும் இல்லாமல் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக முழங்கினார்கள். இத்தனைக்கும் அது மாநில விவகாரம்.

அவர்கள் இப்போது எங்கே போனார்கள்? மதக் கலவரத்துக்குக் கண்டனம் தெரிவிக்க இரட்டை அளவுகோல்கள் தேவையா என்ன?

மால்டாவில் இப்போது நடந்திருப்பது புதியதல்ல; தேசப் பிரிவினையின் போது இதேபோன்ற கும்பல் வெறியாட்டம் நடந்தது கண்டு பதைத்துத்தான் நாட்டைப் பிளக்க மகாத்மா காந்தி ஒப்புக்கொண்டார் என்பது வரலாறு. இது ஒருவகை மிரட்டல் அரசியல். நாட்டின் சட்டம் ஒழுங்கும் நிர்வாகமும் சீர்குலைவதில் தான் இந்த மிரட்டல் அரசியலின் வெற்றி அடங்கி இருக்கிறது.

இதைக் கண்டிக்க வேண்டிய கட்சிகள் அரசியல் சுயலாபம் கருதி, கண்டும் காணாமல் இருப்பது நாட்டு மக்களிடையே பெருத்த அவநம்பிக்கையையே ஏற்படுத்தும். வன்முறையாளர்களுக்கு மேலும் துணிவு பெருகி நாசம் அதிகரிக்கும். அது சமுதாயத்தை மேலும் பிளவுபடுத்தவே வழிகோலும்.

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பை அடுத்து நிகழ்ந்த மதக்கலவரங்கள் அனைத்துமே கும்பல் மனோபாவத்தால் விளைந்தவை தான். அவை கடுமையாக கண்டிக்கப்பட்டன; தண்டிக்கப்பட்டன. ஆனால், மால்டாவில் அதேபோன்ற கும்பல் மனோபாவம் வன்முறையாட்டம் போடுகையில் பலர் மௌனவிரதம் கடைப்பிடிக்கின்றனர். இது நாட்டுக்கு நல்லதல்ல.

வன்முறையை ஆயுதமாக்குபவர் பெரும்பான்மை சமூகத்தவரா, சிறுபான்மை சமூகத்தவரா என்பதல்ல பிரச்னை. நாட்டின் அமைதியும் ஒருமைப்பாடும் நிலைநாட்டப்பட வேண்டுமா, அல்லது வன்முறைக்கும்பல்களிடம் நாம் பணிந்துபோக வேண்டுமா என்பதே இப்போதைய கேள்வி. இதற்கு நேர்மையான பதில் கூறுபவர்களே உண்மையான தலைவர்களாக இருக்க முடியும்.

 

-தினமணி (11.01.2016)

.

Leave a comment