Archive | January, 2016

அஸ்தியில் கனவுகள் கலப்போம்!

23 Jan
RohitVemula

ரோஹித் வெமூலா

.

உறையாத ரத்தத்தின்
வாசம் எங்கும்.
வெடிக்காத குண்டின்
நெடி இன்னமும்.
வெல்லாத போரின் நினைவுகள்
என்றும் எங்கும்.

தூக்குக் கயிறை
முத்தமிட்ட இளைஞர்களின்
இறுதி ஆசைகள்
நிறைவேறாத கனவுகள்.
விடுதலை வேள்வியில்
ஆகுதியான வீரர்களின்
சாம்பல் மீது எழுந்த
கட்டடம் சரிகிறது.

சாம்பலின் வீரியம் உணராமல்
கற்களைப் பிணைத்த
அரசியல் கலவையால்…
ரசமட்டம் தவிர்த்த
சுயநலமிகளின் மேதமையால்…
சரியும் கட்டடத்திற்கு
காரணமாயிரம்.

இப்போதும்
கட்டடத்தைக் காப்பாற்றலாம் –
அஸ்திவாரத்தில்
அவர்களது கனவுகளைக் கலந்தால்.

 

குறிப்பு:

பிரிவினை அரசியலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து பலியாகி, சுயநல அரசியல்வாதிகளின் கரங்களில் தற்போதும் சிக்கி சின்னாபின்னமாகிற சக மானுடன்- கனவுகள் நனவாகாமலே கரைந்துபோன இளைஞன் – ரோஹித் வெமூலாவுக்கு இக்கவிதை அர்ப்பணம்.
மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தின்போது எழுதப்பட்ட இக்கவிதை குழலும் யாழும் வலைப்பூவில் வெளியானதன் மீள்பதிவு.

.

இந்திய புள்ளியியலின் துவக்கப்புள்ளி

19 Jan
பிரசாந்த சந்திர மகலனோபிஸ்

பிரசாந்த சந்திர மகலனோபிஸ்

ரவுகள் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம், ஊகங்கள், கள ஆய்வு ஆகியவற்றின் தொகுப்பே புள்ளியியல் (Statisitics) எனப்படுகிறது. நிகழ்கால புள்ளிவிரங்களிலிருந்து எதிர்காலத்துக்கான திட்டமிடலைச் செய்ய முடியும்.

உதாரணமாக பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சம் மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்புகளை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, அப்போதைய புள்ளிவிவரங்கள் நம்மிடம் இருந்தால் ஒப்பிட்டு அறிய முடியும். இது அறிவியல் ரீதியான கணிதத் துறை ஆகும். இத்துறையை நம் நாட்டில் வளர்த்தெடுத்தவர், வங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரசாந்த சந்திர மகலனோபிஸ்.

வங்க மாகாணத்தில், கொல்கத்தாவில் 1893, ஜூன் 29-இல், செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர் பிரசாந்த சந்திர மகலனோபிஸ். சமூக சீர்திருத்தத்தில் அக்கறை கொண்ட பிரம்மசமாஜ இயக்கத்தின் தீவிர அபிமானிகளாக குடும்பத்தினர் இருந்ததால், குழந்தைப் பருவத்திலேயே  ஆராய்ச்சிச் சிந்தனைகள் மகலனோபிஸின் உள்ளத்தில் பதிந்தன.

கொல்கத்தாவின் பிரம்மோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மகலனோபிஸ், 1908-இல் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஜெகதீச சந்திரபோஸ், பிரஃபுல்ல சந்திர ராய் உள்ளிட்ட பேரறிஞர்களிடம் பாடம் கற்கும் வாய்ப்பு மகலனோபிஸுக்குக் கிடைத்தது. 1912-இல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்ற மகலனோபிஸ், மேற்படிப்புக்காக லண்டன் சென்றார்.

கேம்பிரிட்ஜ், கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து கணிதம், இயற்கை அறிவியல், இயற்பியலில் பாடம் பயின்றார். அங்கு அவருக்கு கணிதப்பாடம் நடத்த வந்தவர் தமிழக கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன். அங்கு டிரிப்போ பட்டம் பெற்ற மகலனோபிஸ், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற வானிலையியல் விஞ்ஞானி சி.டி.ஆர்.வில்சனின் கீழ் ஆய்வுகள் மேற்கொண்டார்.

லண்டனில் அவர் இருந்தபோது, ஆக்ஸ்போர்டு நிறுவனம் வெளியிட்ட ‘பயோமெட்ரிகா’ என்ற (Biometrika) புள்ளியியல் சஞ்சிகையைக் கண்டார். அதன் அனைத்துத் தொகுப்புகளையும் வாங்கிவந்த மகலனோபிஸ், அதில் ஆழ்ந்தார். மானுடவியல், வானிலையியல் உள்ளிட்ட துறைகளில் புள்ளியியலின் உதவியுடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என்பதை அவர் உணர்ந்தார்.

அடுத்து வந்த 30 ஆண்டுகள், கொல்கத்தா மாநிலக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றிய மகலனோபிஸ், அக்காலத்தில் புள்ளியியலில் தனது ஆர்வத்தை விரிவாக்கி, அத்துறை இந்தியாவில் வளரவும் அடிகோலினார்.

இதனிடையே பிரபல வங்கக் கல்வியாளர் ஹேரம்ப சந்திர மொய்த்ராவின் புதல்வி நிர்மல்குமாரியை மணம் புரிந்தார். மகலனோபிஸ் தம்பதிக்கு கவிஞர் ரவீந்திரநாத் தாகூருடன் மிகுந்த பிணைப்பு உண்டு. அவருடனேயே பல ஆண்டுகள் வசித்த பெருமைக்குரியவர்கள் மகலனோபிஸ் தம்பதியர். தாகூரின் உலகப் பயணங்களில் உடனிருந்து உதவிய அவர்கள், சீர்திருத்த இயக்கமான பிரம்மசமாஜம் அமைப்பிலும் தீவிரமாக இயங்கினர்.

1922-இல் வட வங்கத்திலும் 1926-இல் ஒடிசாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அதற்கு தீர்வு காணுமாறு மகலனோபிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்போது வங்கத்திலும் ஒடிசாவிலும் 60 ஆண்டுகால மழையளவுகளைச் சேகரித்து, புள்ளியியலின் உதவியுடன் அந்தத் தரவுகளை ஆராய்ந்தார் மகலனோபிஸ். அப்போது அவர் அளித்த பரிந்துரைகளை ஏற்று தாமோதர் பள்ளத்தாக்கு நீர்மின் நிலையத் திட்டம் பின்னாளில் உருவானது.

இந்திய புள்ளியியல் கழகம்: கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் மகலனோபிஸின் அறையில் புள்ளியியல் ஆய்வகம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு புள்ளியியல் ஆர்வலர்கள் பலர் ஒருங்கிணைந்தனர். அங்கு சக போராசிரியர்களுடன் நடந்த விவாதத்தின் இறுதியில், கல்லூரியின் இயற்பியல் துறையிலேயே புள்ளியியல் கழகத்தைத் துவங்க முடிவானது. அதன்படி, 1931, டிசம்பர் 17-இல் இந்திய புள்ளியியல் கழகம் (Indian Statistical Institute- ISI) துவங்கப்பட்டது. இந்த அமைப்புக்கென ‘சங்க்யா’  என்ற சஞ்சிகையையும் (1933) மகலனோபிஸ் துவக்கினார். இன்று இந்த நிறுவனம் அரசு நிறுவனமாக வளர்ந்து, தனித்த பல்கலைக்கழகமாக இயங்குகிறது.

புள்ளியியல் கழக உதவியுடன், 1937 முதல் 1944 வரை நுகர்வோரின் செலவு, தேநீர் அருந்தும் வழக்கம், தானிய இருப்பு, தாவரங்களின் நோய்த் தாக்குதல் உள்ளிட்ட தரவுகள் தொடர்பான மாதிரிக் கணக்கெடுப்பை (Sample Survey) நாட்டில் நடத்தினார் மகலனோபிஸ். அதுவே நாட்டில் எடுக்கப்பட்ட முதல் மாதிரி கணக்கெடுப்பாகும்.

1936-இல் உலகப் புகழ்பெற்ற ‘மகலநோபிஸ் தொலைவு’ என்ற (Mahalanobis Distance) தனது புள்ளியியல் கோட்பாட்டை பிரசாந்த சந்திர மகலனோபிஸ் அறிமுகம் செய்தார். இரு வேறுபட்ட தரவுகளுக்கு இடையிலான ஒப்பீட்டு மதிப்பை வரையறுக்க இக்கோட்பாடு உதவுகிறது.

திட்டக்குழு பணிகள்: 1938-இல் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் இந்த சமயத்தில் மகலனோபிஸுக்கு நட்புறவு ஏற்பட்டது. இந்த நட்புறவால் புள்ளியியலின் பயன்பாட்டை அரசியலுக்கும் விஸ்தரிக்க மகலனோபிஸால் முடிந்தது.

நாடு சுதந்திரம் பெற்றவுடன் முதல் பிரதமரான நேரு, நாட்டின் வளர்ச்சிக்காக சோவியத் யூனியன் பாணியில் திட்டக்குழு ஒன்றை அமைத்தார். ஐந்தாண்டுகளை ஆதாரமாகக் கொண்ட இத்திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டன. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் விவசாய அபிவிருத்தியாக இருந்தது.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961) தொழில்துறை மேம்பாடாக இருந்தது. அதில் பணிபுரியுமாறு நேருவால் மகலனோபிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்போது அவர் அளித்த பல திட்டங்களின் பயனாக, நாட்டில் தொழில்மயமாக்கல் வேகம் பெற்றது. இதில் ஃபெல்டுமேன்- மகலனோபிஸ் மாதிரி (Feldman–Mahalanobis model) என்ற, சோவியத் ருஷ்யத் திட்டங்களின் அடிப்படையில் மகலனோபிஸ் வடிவமைத்த பொருளாதார வளர்ச்சி மாதிரி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்வாறாக, பயன்பாட்டு புள்ளியியலுக்கு (Applied Statistics) அடித்தளமிட்ட மகலனோபிஸ், 1949-இல் மத்திய அமைச்சரவையின் கெüரவ புள்ளியியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். மத்திய திட்டக்குழு உறுப்பினராக 1955 முதல் 1967 வரை இருந்து வழிகாட்டினார்.

1950-இல், தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Statistical Survey- NSS) எடுக்கப்படவும், 1951-இல் மத்திய புள்ளியியல் மிறுவனம் அமைக்கப்படவும் (Central Statistical Organaisation- CSO) வித்திட்ட மகலனோபிஸ், ‘இந்திய திட்டமிடல்’ என்ற  வார்த்தைப் பிரயோகத்துக்கு காரணமானார்.

எஃப்ஆர்எஸ் (1945)  உள்ளிட்ட பல்வேறு உலக அளவிலான விருதுகளைப் பெற்ற பல துறை அறிஞரான மகலனோபிஸ், மானுட உடலியல் அளவீடுகள் (Anthropometry) பற்றிய ஆய்விலும் நிபுணத்துவம் பெற்றவர். பேரளவிலான மாதிரிக் கணக்கெடுப்புகளில் ஒழுங்குமுறையற்ற மாதிரி முறையை (Random Sampling) அறிமுகப்படுத்தியவரும் அவர்தான்.

இவ்வாறாக, நாட்டின் வளர்ச்சிக்கு புள்ளியியலை ஆயுதமாக்கிய மகலனோபிஸ் 1972, ஜூன் 28-இல் மறைந்தார். அவருக்கு பாரத அரசு 1968-இல் பத்மவிபூஷண் விருதளித்து கௌரவித்தது. அவரது பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

-தினமணி- இளைஞர்மணி (19.01.2016)

.

இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தை

12 Jan
விக்ரம் சாராபாய்

விக்ரம் சாராபாய்

ன்று உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது. பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை வர்த்தகரீதியாக விண்ணில் செலுத்தும் வல்லமையையும் நாம் பெற்றிருக்கிறோம். தவிர கண்டம் தாண்டிச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளையும் நாம் உருவாக்கியிருக்கிறோம். இதற்கெல்லாம் மூல காரணமானவர் விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் அம்பாலால் சாராபாய்.

குஜராத்தின் ஆமதாபாத்தில், 1919, ஆக. 12-இல்,  செல்வாக்கான சமணக் குடும்பத்தில் பிறந்தவர் விக்ரம் சாராபாய். அவரது தாத்தா குஜராத்தில் மருந்து உற்பத்தி உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை நிறுவியவர். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் குடும்பத் தொழில்களுடன் முடங்கிவிடாமல், கணிதம், இயற்பியல் பாடங்களில் ஏற்பட்ட ஆர்வத்தால், விஞ்ஞான ஆய்வுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார் விக்ரம்.

லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டிரிப்போ பட்டம் பயின்று (1940) நாடு திரும்பிய விக்ரம், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பிரபல விஞ்ஞானி சர்.சிவி.ராமனின் வழிகாட்டலில் அண்டக்கதிர்கள் (Cosmic Rays) தொடர்பாக ஆராய்ச்சி நடத்தினார். 1945-இல் மீண்டும் லண்டன் சென்ற விக்ரம், ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தார். வெப்ப பிரதேசங்களில் அண்டக் கதிர்களின் தாக்கம் குறித்த ஆய்வு (Cosmic Ray Investigations in Tropical Latitudes) என்ற ஆய்வுக்காக அவர் 1947-இல் டாக்டர் பட்டம் பெற்றார்.

பிறகு நாடு திரும்பிய விக்ரம், தனது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் 1947, நவ. 11-இல் ஆமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory-PRL) நிறுவினார். அங்கு அண்டக் கதிர்கள் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பின்னாளில் இந்தியா விண்வெளித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்த உந்துசக்தி அளித்த மையம் இதுவே.

விக்ரம் சாராபாய், சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, அவர் நிறுவனங்களைக் கட்டமைப்பதில் தேர்ந்தவர். நாட்டின் முக்கியமான பல ஆய்வு நிறுவனங்கள் அவரால்தான் தொடங்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டன.

குஜராத் மாநிலத்திலுள்ள ஜவுளி ஆலைகளின் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்க்க ஆமதாபாத் ஜவுளித் தொழிலக ஆராய்ச்சி சங்கத்தை (ATIRA) 1947-இல் நிறுவிய விக்ரம், 1966 வரை அதை வழிநடத்தினார். இன்று குஜராத் மாநிலம் ஜவுளித் துறையில் சிறந்து விளங்குவதற்கு இந்த அமைப்பின் பின்புலமே காரணம்.

விக்ரம் தொழில் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்ததால், மேலாண்மைத் துறையில் நாம் பின்தங்கி இருப்பதை உணர்ந்தார். அவரது கூட்டு முயற்சியால் ஆமதாபாத்தில் இந்திய மேலாண்மைப் பள்ளி (Indian Institute of Management Ahmedabad-IIMA) 1961-இல் நிறுவப்பட்டது. அதன் முதல் இயக்குநராகவும் விக்ரம் பணியாற்றினார்.

கணிதம், அறிவியலில் மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கவும், அறிவியல் கல்வியில் புதுமைகளைப் புகுத்தவும், விக்ரமால் சமுதாய அறிவியல் மையம் 1960-இல் ஆமதாபாத்தில் துவங்கப்பட்டது. அது தற்போது விக்ரம் சாராபாய் பெயரில் (VASCSC) அறிவியல் பணிகளை ஆற்றிவருகிறது.

1942-இல் கேரளத்தைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் மிருணாளினியை விக்ரம் திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து ஆமதாபாத்தில் நிறுவிய தர்பண் நிகழ்த்து கலை கல்வி நிறுவனம் இன்றும் கலைகளை வளர்த்து வருகிறது.

கல்பாக்கத்திலுள்ள அதிவேக ஈனுலை (Faster Breeder Test Reactor- FBTR), கொல்கத்தாவிலுள்ள மாறுபடும் ஆற்றல் முடுக்கி திட்டம் (Variable Energy Cyclotron Project), ஹைதராபாத்திலுள்ள இந்திய மின்னணுவியல் நிறுவனம் (Electronics Corporation of India Limited- ECIL), ஜார்கண்ட் மாநிலம், ஜாடுகுடாவிலுள்ள யுரேனியம் உற்பத்தி நிலையம் (Uranium Corporation of India Limited- UCIL) ஆகிய நிறுவனங்கள் விக்ரம் சாராபாயால் நிறுவப்பட்டவை.

ISRO

இஸ்ரோவின் உதயம்: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, விண்வெளித் துறையில் நாடு வளர வேண்டியதன் அவசியத்தை விக்ரம் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். அவருக்கு மூத்த விஞ்ஞானியான ஹோமி ஜஹாங்கீர் பாபாவும் உறுதுணை புரிந்தார்.

ருஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டதன் தொடர்ச்சியாக உலக நாடுகளில் விண்வெளித் துறை கவனம் பெற்றது. ஆனால் இந்தியா போன்ற ஏழை நாட்டுக்கு இது தேவையில்லை என்று பலர் விமர்சித்தனர். அவர்களுக்கு விக்ரம் சாராபாய் அளித்த பதில் அவரது தொலைநோக்கையும் தேசபக்தியையும் வெளிப்படுத்தியது:

“வளரும் நாடான இந்தியாவுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவையா என்று சிலர் கேட்கின்றனர். அதன் பயன்பாட்டில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் போல புதிய நிலவுகளையும் கோள்களையும் கண்டுபிடிக்கும் போட்டியில் இறங்கும் எண்ணம் நமக்கு இல்லை.

ஆனால், நாம் தேசம் என்ற அளவில் மதிப்புடன் திகழ வேண்டுமானால், உலக நாடுகளிடையே நிமிர்ந்து நிற்க வேண்டுமானால், மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் அதிநவீனத் தொழில்நுட்பங்களில் வேறெந்த நாட்டுக்கும் சளைக்காதவர்களாக நாம் இருந்தாக வேண்டும்”  என்றார் விக்ரம் சாராபாய்.

விக்ரமின் தளாரா முயற்சியின் பலனாக, இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (Indian National Committee for Space Research-INCoSR) 1962-இல் நிறுவப்பட்டது.

இந்தியாவுக்கென தனித்த ராக்கெட் ஏவுதளம் வேண்டும் என்றும் விக்ரம் சாராபாய் கனவு கண்டார். அவரும் ஹோமி பாபாவும் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் காரணமாக, அரசு அதற்கு சம்மதித்ததுடன் அதர்கான பொறுப்பை விக்ரமிடமே ஒப்படைத்தது.

அதையடுத்து, கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒருபகுதியான தும்பாவில் ராக்கெட் ஏவுதளத்தை (Thumba Equatorial Rocket Launching Station- TERLS) 1963-இல் விக்ரம் அமைத்தார். நிலநடுக்கோட்டுக்கு மிக அருகில் உள்ள இந்த மையம் ராக்கெட்களை ஏவுவதற்கு மிகவும் ஏற்றதாகும். இங்குதான் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விக்ரம் சாராபாயின் கீழ் பணிபுரிந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.

1963, நவ. 21-இல் தும்பாவில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.

1969-இல் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாக (Indian Space Research Organisation -ISRO) மாற்றம் பெற்றது. அதன் வளர்ச்சிக்கும், அதில் திறம் மிகுந்த இளம் விஞ்ஞானிகள் இணையவும், அடித்தளமாக விக்ரம் செயல்பட்டார்.

இதனிடையே இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த ஹோமி பாபா 1966-இல் அகால மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அரசின் வேண்டுகோளை ஏற்று அதன் தலைவராகப் பொறுப்பேற்ற விக்ரம், 1971 வரை அதை திறம்பட வழிநடத்தினார். அப்போது அணுசக்தியை பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் நடைமுறைகளை விக்ரம் உருவாக்கினார். பல அணு உலைகள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வேண்டும் என்பது விக்ரமின் பெருங்கனவு. அவரது வழிகாட்டலில் இயங்கிய விஞ்ஞானிகள் குழு, அவரது மறைவுக்குப் பிறகு 1975-இல் முதல் இந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர்.

இடைவிடாத ஆய்வுப் பணிகள், புதிய விஞ்ஞானக் கட்டமைப்புகளை நிறுவுதல், இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல் போன்ற பணிகளில் துடிப்புடன் இயங்கிய விக்ரம் சாராபாய், 1971, டிசம்பர் 30-இல் தனது 52-வது வயதில் காலமானார்.

அவருக்கு பாரத அரசு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1962), பத்மபூஷண் (1966), பத்மவிபூஷண் (1972) ஆகிய விருதுகளை அளித்து கௌரவித்தது. திருவனந்தபுரம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு விக்ரம் சாராபாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அண்டக்கதிர் ஆய்வில் விக்ரம் அளித்த பணிக்காக, நிலவின் அமைதிக்கடல் பகுதியிலுள்ள கருங்குழிக்கு 1973-இல் விக்ரமின் பெயர் சூட்டப்பட்டது.

-தினமணி- இளைஞர்மணி (12.01.2016)

.