Archive | February, 2016

அணு ஆயுதம் செய்த வித்தகர்

23 Feb
ராஜா ராமண்ணா

ராஜா ராமண்ணா

இந்த உலகம் வலிமையானவர்களையே மதிக்கிறது. தனி மனிதன் மட்டுமல்ல, எந்த ஒரு நாடும் பலவீனமாக இருந்தால் பிறரது ஆதிக்கத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே தான்  ‘வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம்’ என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர்.

தற்போதைய உலகில் ஆயுதபலமே ஒருநாட்டின் கௌரவத்தை நிலைநாட்டுவதாகவும் காப்பதாகவும் உள்ளது. அதிலும் அணு ஆயுதம் உள்ள நாடுகளுக்கு தனி மரியாதை. இந்நிலையில், இந்தியாவும் அணு ஆயுத வல்லரசு நாடுகளில் இன்று இடம் பிடித்திருப்பது சாதாரணமானதல்ல. அதற்கு வித்திட்ட ரகசியப் படையின் தளகர்த்தர், விஞ்ஞானி ராஜா ராமண்ணா.

கர்நாடக மாநிலத்தின் (அப்போதைய மைசூரு சமஸ்தானம்) தும்கூரில் மாவட்ட நீதிபதியின் மகனாக 1925, ஜன. 28-இல் பிறந்தார் ராஜா ராமண்ணா. சிறுவயது முதற்கொண்டே அவருக்கு இசை மீது தணியாத ஆர்வம் இருந்தது.

பெங்களூரு பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் படித்த ராமண்ணா, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும், கர்நாடக இசையில் எம்.ஏ. பட்டமும் பெற்றார் (1945). பிறகு, மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் எம்.எஸ்சி. பட்டமும், இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெற்ற ராமண்ணா, மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கு கிங்ஸ் கல்லூரியில், அணுக்கரு இயற்பியலில் பிஎச்.டி. பட்டமும், மேற்கத்திய இசையில் எல்.ஆர்.எஸ்.எம். பட்டமும் (1949) பெற்றார்.

லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற இந்திய விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபாவை ராஜா ராமண்ணா சந்தித்தார். அது அவரது வாழ்விலும், இந்திய அறிவியல் வரலாற்றிலும் திருப்புமுனை ஏற்படுத்திய சந்திப்பாகியது.

ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, பிரிட்டனின் அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Atomic Energy Research Establishment- AERE) பணியாற்றும் வாய்ப்பு ராமண்ணாவுக்குக் கிடைத்தது. அங்கு அணுஉலை வடிவமைப்பு, அணுக்கரு எரிபொருள் வெப்பச்சுற்று (nuclear fuel cycles) ஆகியவை தொடர்பான அனுபவ அறிவைப் பெற்றார்.

படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்பிய ராமண்ணாவை, மும்பையில் தான் நிறுவிய டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலை தொழில்நுட்ப ஆய்வாளராக, அணுஉலை இயற்பியலாளராக, ஹோமி பாபா இணைத்துக் கொண்டார். அங்கு அணுக்கருப் பிளவு, அணுக்கருச் சிதறல் தொடர்பான ஆய்வுகளில் ராமண்ணா ஈடுபட்டார்.

அப்போது, டிராம்பேயில் அரசு உதவியுடன் பாபா நிறுவிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திலும் (பின்னாளில் பாபாவின் மறைவுக்குப் பிறகு பாபா அணு ஆராய்ச்சி மையமாக- BARC மாறியது) ஹோமி பாபாவின் வழிகாட்டுதலில் அணு ஆயுதத் தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சிகளில் ராமண்ணா கவனம் செலுத்தினார்.

துடிப்பு மிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீரிலும் பெரிலியம் ஆக்ûஸடிலும் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி நியூட்ரான் விரவுதலை (Neutron diffusion) ராமண்ணா தீர்மானித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை (Neutron thermalisation) பல்வேறு நவீன முறைகளில் மேற்கொண்டு, நியூட்ரான் நிறமாலை குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் அடிப்படை அணுக்கரு ஆராய்ச்சிகளுக்கு உதவின.

யுரேனியம்-235 ஐசோடோப்பைப் பயன்படுத்தி அணுக்கருப் பிளவால் உருவாகும் துணைக்கதிர்களின் கோணங்கள், ஆற்றல் தொடர்பாகவும் ராமண்ணா ஆராய்ந்தார். வெப்ப நியூட்ரான்களால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளியாகும் மின்னேற்றம் குறைந்த துகள்கள் குறித்த அறிய ராஜா ராமண்ணா தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.

ஹோமி பாபாவின் தலைமையில் இயங்கிய பல்துறை வல்லுநர் குழுவில் அவரும் இடம்பெற்றார். கே.எஸ்.சிங்வி,  வி.டி.கிருஷ்ணன்,  ஏ.எஸ்.ராவ்,  ஹோமி சேத்னா, என்.பானுபிரசாத்,  ராஜா ராமண்ணா ஆகியோர் அடங்கிய அக்குழு, இந்தியாவின் அணு உலைகளை உருவாக்க தீவிர ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டது. அதன் பலனாக நாட்டின் முதலாவது அணுக்கரு உலை (Reactor) ‘அப்ஸரா’  1956, ஆக. 4-இல் நிறுவப்பட்டது.

அணுசக்தித் துறையில் திறன் மிகுந்த விஞ்ஞானிகளின் தேவை உணரப்பட்டபோது, அதற்கென அணு ஆராய்ச்சி மையத்தினுள் தனிப்பிரிவாக பயிற்சிப் பள்ளி ராமண்ணா தலைமையில் 1957-இல் துவங்கப்பட்டது.

அங்கு பயிற்சி பெற்ற ஆறாயிரத்துக்கு மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் நாடு முழுவதிலும் உள்ள அணுசக்தித் துறை ஆய்வகங்களில் பணிபுரிந்தார்கள். அவ்வகையில் இந்தியாவின் மிக முக்கியமான மனித ஆற்றலை உருவாக்கியவராக ராஜா ராமண்ணா கருதப்படுகிறார்.

பிறகு, 1958-இல் அவர் தலைமை இயக்க அலுவலராக (CDO) நியமிக்கப்பட்டார். அப்போது சிக்கலான அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான அணுக்கரு எரிபொருள் தொடர்பான ஆய்வுப்பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவிர, அணுசக்தி பரிசோதனைக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பும் ராமண்ணாவிடம் வந்து சேர்ந்தது.

இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைத்தார் ராமண்ணா. அவரால்தான் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பொக்ரான் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அணுசக்தி சோதனைக்கான கட்டமைப்புகள் மிகவும் ரகசியமாக நிறுவப்பட்டன.

இந்நிலையில், இந்திய அணுசக்தித் துறையின் தந்தையாக மதிக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் அகால மரணம் (1966), விஞ்ஞானிகளை திகைப்புக்குள்ளாக்கியது. விஞ்ஞானி ஹோமி சேத்னா பாபாவின் பணிகளை இயக்குநராகப் பொறுப்பேற்றுத் தொடர்ந்தார் (1966- 1972).

அவருக்குப் பின் அதன் (BARC) இயக்குநராகப் பொறுப்பேற்ற ராஜா ராமண்ணா, 1972 முதல் 1978 வரையிலும், 1981 முதல் 1984 வரையிலும் இரு காலகட்டங்களில் இந்திய அணு ஆயுத வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

1970-இல் இந்தியாவின் அணு ஆயுத தயாரிப்புத் திட்டம் ராமண்ணாவின் தலைமையில் வெற்றியடைந்தது. ஆனால், அதைப் பரிசோதிக்க அரசின் அனுமதிக்காக விஞ்ஞானிகள் காத்திருக்க நேர்ந்தது.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதுகுறித்து விளக்கமாக எடுத்துரைத்து, அரசின் அனுமதியை ராஜா ராமண்ணா பெற்றார். 1974, மே 18-இல் பொக்ரானில் ‘சிரிக்கும் புத்தர்’  என்ற சங்கேத வார்த்தையில் அணு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ராஜா ராமண்ணா- ஹோமி சேத்னா விஞ்ஞானிகள் இணை அதை சாதித்துக் காட்டியது. அதன்மூலம், அணு ஆயுத நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம் பிடித்தது.

1978-இல் இராக் சென்ற ராமண்ணாவிடம், அந்நாட்டின் அப்போதைய அதிபர் சதாம் உசேன், இராக்கின் அணு ஆயுதத் தயாரிப்புக்கு உதவினால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக ஆசை காட்டினார். ஆனால் ராமண்ணா மறுத்துவிட்டார். தகுதியற்றவர்களிடம் ஆயுதபலம் சேர்வது உலக நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர் பின்னாளில் சொன்னார்.

அணு ஆயுதத் தயாரிப்புக்கு வித்திட்டவராக இருப்பினும், ஆசிய பிராந்தியத்தில் அணு ஆயுதப் பரவலுக்கும் அணு ஆயுதப் போட்டிக்கும் எதிரான கருத்துருவாக்கத்துக்காக ராஜா ராமண்ணா தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.

ராஜா ராமண்ணாவை பல உயர்பதவிகள் நாடி வந்தன. எந்தப் பொறுப்பை ஏற்றாலும் அதில் தனது தனித்துவத்தைப் பதித்து, அதில் சாதனை படைப்பது ராமண்ணாவின் இயல்பு. 1978 முதல் 1981 வரை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் செயலாளராக பதவி வகித்தார். 1984-இல் சர்வதேச அணுசக்தி முகமையின் ((IAEA)) தலைவராகப் பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (DRDO) இயக்குநராக 1980 முதல் 1990 வரை இருந்தபோது, இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களை ஊக்குவித்தார்.

1984 முதல் 1987 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் (AEC) தலைவராக பதவி வகித்தார். 1990-இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத் துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றார். 1997- 2003-இல் நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகப் பணியாற்றினார். 2000-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகப் பொறுப்பேற்றார்.

கல்வி நிறுவனங்களிலும் ராமண்ணா உயர்பதவிகளை வகித்து அவற்றத் திறம்பட வழிநடத்தினார். தில்லி- தேசிய அறிவியல் அகாதெமியின் தலைவராகவும், பெங்களூரு அறிவியல் கழகத்தின் (IISc) தலைவராகவும், மும்பை ஐஐடியின் தலைவராகவும் பெங்களூரு- மேம்படுத்தப்பட்ட படிப்புகளுக்கான கல்வி மையத்தின் இயக்குநராகவும் ராஜா ராமண்ணா பொறுப்பு வகித்திருக்கிறார்.

தனது சுயசரிதையை ‘யாத்திரை ஆண்டுகள்’ என்ற நூலாகவும் (1991), தனது இசையறிவை ‘ராகம், மேலைநாட்டு முறையில் இசையமைப்பு’  என்ற நூலாகவும் (1993) ராமண்ணா எழுதியிருக்கிறார்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1963), பத்மஸ்ரீ (1968), பத்மபூஷண் (1973), பத்மவிபூஷண் (1975) விருதுகளை ராஜா ராமண்ணாவுக்கு இந்திய அரசு அளித்துள்ளது. ம.பி. மாநிலம், இந்தூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துக்கு ராஜா ராமண்ணாவின் பெயர் (Raja Ramanna Centre for Advanced Technology) சூட்டப்பட்டுள்ளது.

2004, செப். 24-இல் ராஜா ராமண்ணா மறைந்தார். அறிவியல் மூலமாக மட்டுமே நாட்டின் வளர்ச்சி திசையைத் தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக நம்பி அதற்காகப் பணிபுரிந்த கர்மயோகியின் சரித்திரம் அத்துடன் நிறைவடைந்தது.

இன்று நாடு முழுவதும் உள்ள அணு உலைகளும், செயல்படுத்தப்படும் அணுமின் திட்டங்களும் ராஜா ராமண்ணாவை என்றும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும். தன்னை முன்னிறுத்தாமல், நாடி வந்த கடமைகளைத் திறம்பட நிறைவேற்றிய அவரை ‘இந்திய அணு ஆயுதத் திட்டங்களின் தந்தை’ என்று சொல்வதில் தவறேது?

 

-தினமணி- இளஞர்மணி (23.02.2016)

.

Advertisements

அனுபவக் கதைகளின் கோவை

22 Feb

nool5c

முதுபெரும் எழுத்தாளரான வாதூலன், தினமணிக்கதிர், அமுதசுரபி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய 18 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் அடக்கமான முன்னுரை நூலுக்கு கணம் சேர்க்கிறது.

உறவுகளிடையே நிலவும் பொய்மைகள், பொறாமைகள், மனப்போராட்டங்களை விளக்கும்  ‘கலிபோர்னியா திராட்சை’  கதைதான் நூலின் தலைப்பாக உள்ளது. உறவினரின் உயர்வால் மனம் புழுங்கி தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் சுந்தர மாமாவின் படைப்பில், மனித உணர்வுகளை எடைபோடும் கதாசிரியரின் திறம் வெலிப்படுகிறது.

தந்தைக்கு சிரார்த்தம் செய்யப்போன இடத்தில் வசதிக்குறைவுகளால் சங்கடப்பட்டு, பின்னர் அதனால் மனக்கிலேசமடையும் மகாதேவனிடம் சராசரி மனிதனைக் காண்கிறோம் (அப்பாவுக்காக).

எதையும் காலம் கடந்து செய்தால் பயனில்லை என்பதை நெரிசல் மிகுந்த பேருந்திலிருந்து இறங்கப்போகும் தருணத்தில் கிடைத்த இருக்கையால் பெற்ற ஞானோதயம் மூலம் உணரும் கிருஷ்ணமூர்த்தி, தனது மகனுக்கு இருசக்கர வாகனம் வாங்கத் தீர்மானிப்பதை இயல்பாக உணர முடிகிறது (கூட்டத்தின் நடுவே).

வசதியின்மையால் குறைபாடுள்ள மணமகனை ஏற்கத் தயாராகும் செஞ்சுலட்சுமியின் தோல் அரிப்புக் குறைபாட்டைக் காணுகையில் வாழ்வின் யதார்த்தம் சுடுகிறது (சோப்புத்தூளும் மெக்கானிக் ஷாப்பும்).

பெரும்பாலான கதைகளின் களம் கோவையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நூலை அனுபவக் கதைகளின் கோவை எனலாமா?

.

***

கலிபோர்னியா திராட்சை…

வாதூலன்

208 பக்கங்கள், விலை: ரூ. 90.

அல்லயன்ஸ் பதிப்பகம்,
ப.எண்: 244, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை- 600 004,
தொலைபேசி: 044- 2264 1314.

.

விட்டில் பூச்சிகளோ நாம்?

19 Feb

elephant pair

அண்மையில் சென்னையில் இரு சக்கர வாகனத்தில் செல்கையில் ஒரு காட்சியைக் கண்டு துணுக்குற்றேன். எனது வாகனத்தை அதிவேகமாக முந்திச் சென்ற இரு சக்கர வாகனத்தில், ஓர் இளைஞனின் பின்புறம் இளம்பெண்- அநேகமாக 18 வயதுக்குள் தான் இருக்கும்- அவனை மிக இறுக்கமாகக் கட்டிப் பிடித்தபடி பின்புறம் அமர்ந்து சென்றாள். அவளது முகத்தில் நெற்றி மட்டுமே தெரிந்தது. முகத்தை துப்பட்டாவால் மூடியிருந்தாள்.

அவர்கள் இருவருமே அரிய சாகச மனநிலையில் இருந்ததையும், அதிலும் ஓர் அச்சம் இருப்பதையும் கண்டேன். பருவ வயதில் இத்தகைய சலனங்கள் இயல்பானவையே. இந்த உலகில் ஆண்- பெண் என்ற படைப்பு வேறுபாட்டுக்கு காரணம் இல்லாமல் இல்லை. இருபால் ஈர்ப்பு என்பதே உலகை இயக்குகிறது. அதனால் தான் மகாகவி பாரதி “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே, அதுவன்றோ உலகத்துத் தலைமையின்பம்” என்று பாடினார்.

ஆனால், அன்பின் அடித்தளமின்றி, பாலின உணர்ச்சியின் அடிப்படையில் அமையும் காதல், ரகசியமாகவோ, பிறருக்கு அஞ்சியோ நிகழும்போது அதன் உண்மைத் தன்மையை இழந்து விடுகிறது. நான் சாலையில் கண்ட அந்த இளைஞனும் கன்னியும் காதலர்களாக இருக்கலாம். ஆனால், அதை சமூகத்துக்கு முன் துணிவுடன் செய்யும் நிலையில் அவர்கள் இருவருமே இல்லை. உள்ளத்தில் கபடம் இல்லாதவர்களே துணிவுடன் எந்தச் செயலையும்- காதல் உள்பட- செய்ய முடியும். அந்த உண்மை இல்லாததால் தான், முகத்தை இறுக மூடிக்கொண்டு, ஓர் அயல் ஆடவனை முதுகுப்புறமாக இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அந்தப் பெண் சென்றாள்.

இளம் வயதில் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்கள், பருவத்தின் விளைவுகள். எந்த ஆணும் பெண்ணும் 18 வயதை அடைந்தவுடன் தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்கும் நிலையை எட்டி விடுகிறார்கள். ஆனால், தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்கால வாழ்வுக்கு நலம் விளைவிக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்கும் தெளிவான சிந்தை அந்த வயதில் அவர்களிடம் இருக்குமா என்பது சந்தேகமானதே. அதனால் தான் பருவம் அரும்பிய இளம் வயதினரை வீட்டிலுள்ள பெரியவர்கள் கட்டுப்படுத்தி வளர்க்கின்றனர். காலத்தின் வேககதியில், தற்போதைய சிறுகுடும்ப வாழ்வில் அத்தகைய கட்டுப்பாடுகளும், அன்பான அரவணைப்பும் குடும்பத்தில் கிடைக்காத நிலையில் இளம் தலைமுறையினர், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அநேகமாக, அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞனையும் இளம்பெண்ணையும் நம்பி அவர்களின் வீட்டில் பெற்றோர் பரிதவித்துக் கொண்டிருப்பார்கள். அது தெரியாமல், அவர்களை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு, இந்த காதல் இணை, தங்களை வாழ்வில் நிலைநிறுத்த வேண்டிய வயதில் இளமைவானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது; தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.

இதன் கொடிய விளைவு, வாழ்வில் நிலையான பிடிப்பு இல்லாமல் தள்ளாடும்போது உணரப்படும். அதற்குள் காலம் கடந்து விட்டிருக்கும். பிஞ்சில் பழுத்து வெம்பிய பழங்களை யாரும் விரும்புவதில்லை. எதற்கும் ஓர் பருவம் உண்டு என்பதை மறந்து தற்காலிக இன்பத்துக்காக காதல் என்ற பெயரில் மயங்கித் திரிபவர்களுள் பெரும்பாலோர் பின்னாளில் இழப்புகளுக்காக கண்ணீர் சிந்துவதை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம்.

நமது இலக்கியங்கள் பலவும் காதலை தெய்வீகமானதாகப் போற்றுகின்றன. காதலுக்கென்றே ஒரு தனித்த கடவுள் இணையை மன்மதன் – ரதிதேவியை உருவாக்கியவர்கள் நமது மூதாதையர்.  ‘அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள்’ என்று கம்பர் பாடும்போது அதில் விரசம் நமக்குத் தென்படுவதில்லை. ஆனால், இன்று பொது இடங்களில் பலரது முகத்தைச் சுளிக்கவைக்கும் காமக்களியாட்டங்கள், காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படுகையில் நாம் தலைகுனிந்து நடக்க வேண்டி இருக்கிறது.

பொதுப் பூங்காக்களில், கடற்கரைகளில்,  மாலை வேளையில், மனைவி, குழந்தைகளுடன் ஓய்வான உலா செல்ல முடியாத வகையில், பல இடங்களில் காதலர் என்ற போர்வையில் நடத்தப்படும் விளையாடல்கள், அருவருக்க வைக்கின்றன. உண்மையில் இதுதான் பாலியல் சுதந்திரமா?

கட்டுப்பாட்டில் இருந்து தான் சுதந்திரம் முகிழ்க்கிறது என்பார் மகாத்மா காந்தி. கட்டற்ற காட்டாறு அழிவையே விளைவிக்கும், அதுவே கரைகளுக்குள் கட்டுண்டால் பாசனமாகும். இளமைக்கு வேலியிட வேண்டியதன் அவசியத்தை முன்னோர் அதனால்தான் அதிகமாக வலியுறுத்தினர். ஆனால், தற்போதைய நுகர்வு கலாசாரம், எதையும் சோதித்துப் பார்க்கவும், எதையும் உடனே ருசிக்கவும் அறைகூவுகிறது. நுகர்வை பிரசாரம் செய்யும் பத்திரிகைகள், ஊடகங்கள், பாலியல் சிந்தனையை வக்கிரமாகச் சித்திரிக்கும் திரைப்படங்கள், நீதிநெறியைக் கற்பிக்காத கல்வி நிறுவனங்கள் எனப் பல காரணிகளால், வாழ்க்கையை நுகர்வுப் பண்டமாக கருதும் மனநிலை பரவி வருவதன் தீய அறிகுறியே இத்தகைய இழிவான காட்சிகள்.

பாலுறுப்புகளின் சங்கமம் மட்டுமல்ல வாழ்க்கை. அப்படியானால், எல்லா விலங்குகளும் இனவிருத்திக்காக கலவியில் ஈடுபடவே செய்கின்றன. அவற்றிடமிருந்து மனிதனை வேறுபடுத்துவது பகுத்தறிவல்லவா? நமது துரதிர்ஷ்டம், யாரெல்லாம் பகுத்தறிவு பற்றி முழங்குகிறார்களோ அவர்கள் தான் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

பொது இடத்தில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞன்- இளைஞிக்கும், தெருவோரம் இணைசேரும் நாய்களுக்கும் என்ன வித்தியாசம்? மரத்துப் போன வெட்க நரம்புகளின் களியாட்டமல்ல வாழ்க்கை. அது புனிதமானது. கம்பீரமானது.

விலங்குகள் இணை சேர்வதைப் பற்றிக் கூறியவுடன் திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

திருநாவுக்கரசர் திருவையாறுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும்போது தான் செல்லும் வழியில் பல இயற்கைக் காட்சிகளைக் காண்கிறார். ஓர் ஆண் யானை பெண் யானையுடன் கூடிக் குலாவுகிறது. அதைக் கண்டவுடன் திருநாவுக்கரசர் நெகிழ்கிறார். அவருக்கு அலகிலா விளையாட்டுடைய ஈசனும் அவனது உடலின் ஒருபாகத்தைப் பெற்ற அம்பிகையும் தான் அங்கு தென்படுகிறார்கள். ஏனெனில், அத்தகைய கம்பீரத்துடன் களிறும் (ஆண் யானை) பிடியும் (பெண் யானை) குலாவி வருகின்றன. காதலின் மகத்துவம் மறைப்பதிலோ, ரகசியமாக மற்றவர்களை ஏமாற்றி  தற்காலிக இன்பம் துய்ப்பதிலோ இல்லை. அதன் துணிவு உள்ளத்தின் அன்பால் எழுவது. அதன் மதிப்பு கபடற்ற கம்பீரத்தால் இயல்வது.

திருநாவுக்கரசரின் வழியில் தென்படும் மான்கள், கோழிகள், குயில்கள், மயில்கள், கிளிகள், மாடுகளின் இணைகளில் எல்லாம் அவர் ஈசனையும் சக்தியையுமே தரிசித்து நெக்குருகிறார். அவர் அப்போது படைத்த பத்து பாடல்களும் இனிய சுவையுடைய தமிழின் அணியாக இன்றும் விளங்குவன. அதில் ஒரு பாடல்:

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்.

-திருநாவுக்கரசர் தேவாரம்- திருவையாறு பதிகம்- 4:3:1

பொருள்:

பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய், அர்ச்சிக்கும் பூவும் அபிஷேக நீரும் தலையில் தாங்கி,  திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்கள் பின் அடியேன் சென்றேன் . கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட எந்தச் சிரமமும் இன்றி  திருவையாற்றை அடைந்தபோது, விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வந்ததைக் கண்டேன்.  சத்தியும் சிவமுமாக வந்த அந்தக் காட்சியைக் கண்டதனால் இறைவனின் திருப்பாதம் கண்டவன் ஆனேன். நான் கண்டறியாதனவற்றைக் கண்டுவிட்டேன்.

-இதுதான் இந்த மண்ணின் மகிமை. இறைவனையே காதலர்களாக பாவித்து வணங்குபவர்கள் நாம். ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமேயாவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்று’ என்று இறைவன் அரங்கனுக்கே ஆணையிட்ட காதலியான ஆண்டாள் தவழ்ந்த மண் தமிழகம்.

அத்தகைய கம்பீரம் தான் நமது இளைய தலைமுறைக்கு தேவை. பருவதே பயிர் செய்வது இன்றியமையாதது. எனினும்,  பருவம் வருமுன் விதைப்பது அறுவடையைத் தராது. அதேபோல, குறிப்பிட்ட காலம் வாழ்க்கைக் கழனியைப் பண்படுத்திய பிறகே இல்லறம் என்னும் நல்லறத்துக்கு வித்திடும் காதல் வானில் சஞ்சரிக்க வேண்டும்.

காதல் வாழட்டும்! அது நமது வலிமையான இளமை மீது இறுமாப்பாக உலா வரட்டும். ஆனால், அதற்குமுன் முகத்தைத் திரையிட்டு, ஓடி ஒளிந்து, சல்லாபங்களில் வாழ்வைத் தொலைக்கும் சரசங்கள் வேண்டாம்.

என் கண்முன், முகத்தை மறைத்து இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இளம் பெண்ணின் அவசரமே வந்து போகிறது. அவளது வாழ்க்கை விட்டில் பூச்சியாக வீணாகிவிடக் கூடாது. அதுவே என் சிந்தனை. அதற்காகவே இந்தக் கட்டுரை.

-விஜயபாரதம்

 

‘இஸ்ரோ’வை வளர்த்தெடுத்த இனிய தலைவர்

17 Feb
சதீஷ் தவான்

சதீஷ் தவான்

விண்வெளி ஆராய்ச்சியிலும் ராக்கெட் ஏவுவதிலும் திறம் பெற்ற நாடாக இன்று இந்தியா சிறந்து விளங்குகிறது. இதற்கு வித்திட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) நேர்த்தியான அமைப்பாக வளர்த்தெடுத்தவர் பேராசிரியர் சதீஷ் சந்திர தவான். தனது நிகரற்ற தலைமைப் பண்பாலும், பன்முக ஆளுமையாலும், அற்புதமான விஞ்ஞானிகள் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர் தவான்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1920, செப். 25-இல் பிறந்தவர் சதீஷ் தவான். அவரது தந்தை ஆங்கிலேய அரசின் உயரதிகாரியாக விளங்கியவர். தேசப் பிரிவினையின்போது பிரிவினைக் குடியமர்வு ஆணையராகப் பணியாற்றியவர் அவர்.

லாகூரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. கணிதம், பி.எஸ்சி. இயற்பியல் பட்டங்களையும், எம்.ஏ. ஆங்கிலம், பி.இ. இயந்திரவியல் பட்டங்களையும் பெற்ற தவான், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு மினசோட்டா பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் எம்.எஸ். பட்டமும் (1947), கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளிப் பொறியியலில் பி.இ. பட்டமும் (1949) பெற்றார்.

பிறகு, அங்கேயே, விண்வெளி விஞ்ஞானி ஹான்ஸ் டபிள்யூ. லீப்மென் வழிகாட்டலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். விண்வெளிப் பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் இருவேறு முனைவர் பட்டங்களை ஒரே நேரத்தில் (1951) பெற்றார் தவான். இவ்வாறு பல துறைகளில் அவர் பெற்ற தேர்ச்சி அவரது வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக இருந்தது.

பாய்ம இயக்கவியலில் (Fluid Dynamics) மிகுந்த ஆர்வம் கொண்ட தவான், பாய்ம இடைப்படலங்கள் (Boundary layers), பாய்மக் கொந்தளிப்பு (Turbulence) குறித்த விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அவற்றில் அவர் பல புதிய முடிவுகளைக் கண்டறிந்துள்ளார்.

1951-இல் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (IISc- Indian Institue of Science) முதுநிலை அறிவியல் அலுவலராகப் பணியில் சேர்ந்தார் தவான். அங்கு பேராசிரியராகவும் விண்வெளித் துறையின் தலைவராகவும் 1955-இல் உயர்ந்த தவான், விண்வெளி அறிவியலை மாணவர்களுக்கு போதிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

1962-இல் அந்நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்தார் தவான். அப்போது அவருக்கு வயது 38 மட்டுமே. அன்றுமுதல் சுமார் 18 ஆண்டுகள்- 1981 வரை, அதன் இயக்குநராகப் பணியாற்றிய தவான், பல மாணவர்கள் விண்வெளித் துறையில் ஈடுபட ஊக்கமளித்தார்.

இதனிடையே விக்ரம் சாராபாயால் உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO- Indian Space Research Organisation- இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பு தவானிடம் வந்துசேர்ந்தது. அதையேற்று, 1972-இல் இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற தவான், 1984 வரை அதை திறம்பட நிர்வகித்ததுடன், நாட்டின் மிகச் சிறந்த நிறுவனமாக அதை வலுப்படுத்தினார்.

பெங்களூரிலுள்ள தேசிய விண்வெளி ஆய்வகத்தின் தலைவராகவும் (1984- 1993), இந்திய விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் (1972- 2002) தவான் பொறுப்பு வகித்திருக்கிறார்.

இஸ்ரோவின் தலைவராக தவான் பொறுப்பேற்றபோது, பிரதமரின் நேரடிப் பார்வையின் இயங்கும் விண்வெளித் துறையின் கீழ் அதைக் கொண்டுவந்தார். அதற்கு அப்போது பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால், அரசு நிறுவனமாக மாறினாலும், நிதி ஆளுகை, திட்டமிடலில் சுதந்திரத்தைப் பெற்ற தவான், அதை மிகுந்த உயரத்துக்குக் கொண்டு சென்றார். இல்ரோவின் தற்போதைய அசுர வளர்ச்சி தவானின் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாக மிளிர்கிறது.

இஸ்ரோவை உருவாக்கிய விக்ரம் சாராபாயின் கனவுகளை நனவாக்கிய செயல்முறை வித்தகர் என்று சதீஷ் தவானைக் கூறலாம். இந்திய விஞ்ஞானிகளின் திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த தவான், உள்நாட்டிலேயே ராக்கெட், செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் திட்டங்களை பல கட்டங்களாக வடிவமைத்து அவற்றை சாதித்தும் காட்டினார்.

இந்திய தேசிய செயற்கைக்கோள் திட்டம் (INSAT- INdian National Satelite System), இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் திட்டம் (IRS- Indian Remote Sensing) ஆகியவற்றை வடிவமைத்த தவான், ராக்கெட்கள், செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் உள்நாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்விளைவாக, இன்று ராக்கெட் தயாரிப்புக்குத் தேவையான அனைத்து பாகங்கள், கருவிகளையும் உற்பத்தி செய்யும் நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்கள் தனியார் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளன.

இஸ்ரோவின் தலைவராக தவான் பொறுப்பேற்றபோது, திருவனந்தபுரத்தில் அப்போதுதான் உருவாக்கப்பட்டிருந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (Vikram Sarabhai Space Centre -VSSC) பல குழப்பங்கள் நிலவிவந்தன. சரியான தலைமையின்றி அந்த மையத்தில் ஆராய்ச்சிப் பணிகள் முடங்கியிருந்தன. அப்போது அணுசக்தித் துறையில் பணியாற்றிவந்த விஞ்ஞானி பிரம்மபிரகாஷை அழைத்துவந்து, அதன் தலைவராக தவான் நியமித்தார்.

சதீஷ் தவான், பிரம்மபிரகாஷ் ஆகிய இரு விஞ்ஞானிகளின் தலைமையில், திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையம் எழுச்சி பெற்றது. அங்குதான் இளம் விஞ்ஞானி அப்துல் கலாம் (பின்னாளில் குடியரசுத் தலைவர்) தலைமையில் செயற்கைக்கோள் ஏவுகலன்- ராக்கெட் (SLV-3) உருவாக்கும் திட்டமும், மற்றொரு இளம் விஞ்ஞானி யு.ஆர்.ராவ் (பின்னாளில் இஸ்ரோ தலைவர்) தலைமையில் ‘ஆரியபட்டா’  என்ற செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டமும் செயற்படுத்தப்பட்டன.

நாட்டின் முதல் செயற்கைக்கோளான ‘ஆரியபட்டா’  1975-இல் ருஷ்ய உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அதேபோல, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட்டான எஸ்எல்வி-3, ‘ரோகிணி’ செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது.

இந்த வெற்றிகளை இஸ்ரோ சுலபமாக அடைந்துவிடவில்லை. அதற்கு முன் பலமுறை தோல்விகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்தித்தபோதும், அவற்றைத் தானே தாங்கிக்கொண்டு, அவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவித்தார். அதேசமயம், விண்வெளித் திட்டங்கள் வெற்றி அடைந்தபோது அதற்கான புகழை தனது விஞ்ஞானிகள் குழுவுக்கே தவான் அளித்தார். அதுவே அவரது மிக உயர்ந்த தலைமைப் பண்பின் அடையாளம். அதனால்தான் காலம் கருதாமல், சிரத்தையுடனும் உண்மையுடனும் உழைக்கும் மாபெரும் விஞ்ஞானிகள் படையைக் கட்டமைக்க தவானால் முடிந்தது.

இஸ்ரோவின் வளர்ச்சி எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவான பார்வை தவானுக்கு இருந்தது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டமான துருவப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் பிஎஸ்எல்வி(PSLV), புவிநிலை இடைப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் ஜிஎஸ்எல்வி (GSLV) ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டவர் அவர். இன்று நம் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் உலகின் பல நாடுகளின் செயற்கைக்கோள்களை வர்த்தகரீதியாக விண்ணில் செலுத்துகின்றன.

விண்வெளிப் பொறியாளர், ராக்கெட் விஞ்ஞானி ஆகிய நிலைகளை விட, தான் ஓர் ஆசிரியர் என்பதையே அவர்  பெருமையாகக் கருதி வந்தார். சிறந்த நிறுவனத் தலைவராகவும், தேசிய சிந்தனையாளராகவும் விளங்கிய அவருக்கு பத்மபூஷண் விருதும் (1971) பத்மவிபூஷன் விருதும் (1971) வழங்கி இந்திய அரசு  கௌரவித்தது.

2002, ஜனவரி 3-இல் சதீஷ் தவான் மறைந்தார். அவரது மகள் ஜ்யோத்ஷ்னா தவான், தந்தையின் வழியில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். அவர் மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியாவார்.

நாட்டின் வளர்ச்சியில் தவானின் சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளம் ‘சதீஷ் தவான் விண்வெளி மையம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

-தினமணி- இளைஞர்மணி (16.02.2016)

.