விட்டில் பூச்சிகளோ நாம்?

19 Feb

elephant pair

அண்மையில் சென்னையில் இரு சக்கர வாகனத்தில் செல்கையில் ஒரு காட்சியைக் கண்டு துணுக்குற்றேன். எனது வாகனத்தை அதிவேகமாக முந்திச் சென்ற இரு சக்கர வாகனத்தில், ஓர் இளைஞனின் பின்புறம் இளம்பெண்- அநேகமாக 18 வயதுக்குள் தான் இருக்கும்- அவனை மிக இறுக்கமாகக் கட்டிப் பிடித்தபடி பின்புறம் அமர்ந்து சென்றாள். அவளது முகத்தில் நெற்றி மட்டுமே தெரிந்தது. முகத்தை துப்பட்டாவால் மூடியிருந்தாள்.

அவர்கள் இருவருமே அரிய சாகச மனநிலையில் இருந்ததையும், அதிலும் ஓர் அச்சம் இருப்பதையும் கண்டேன். பருவ வயதில் இத்தகைய சலனங்கள் இயல்பானவையே. இந்த உலகில் ஆண்- பெண் என்ற படைப்பு வேறுபாட்டுக்கு காரணம் இல்லாமல் இல்லை. இருபால் ஈர்ப்பு என்பதே உலகை இயக்குகிறது. அதனால் தான் மகாகவி பாரதி “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே, அதுவன்றோ உலகத்துத் தலைமையின்பம்” என்று பாடினார்.

ஆனால், அன்பின் அடித்தளமின்றி, பாலின உணர்ச்சியின் அடிப்படையில் அமையும் காதல், ரகசியமாகவோ, பிறருக்கு அஞ்சியோ நிகழும்போது அதன் உண்மைத் தன்மையை இழந்து விடுகிறது. நான் சாலையில் கண்ட அந்த இளைஞனும் கன்னியும் காதலர்களாக இருக்கலாம். ஆனால், அதை சமூகத்துக்கு முன் துணிவுடன் செய்யும் நிலையில் அவர்கள் இருவருமே இல்லை. உள்ளத்தில் கபடம் இல்லாதவர்களே துணிவுடன் எந்தச் செயலையும்- காதல் உள்பட- செய்ய முடியும். அந்த உண்மை இல்லாததால் தான், முகத்தை இறுக மூடிக்கொண்டு, ஓர் அயல் ஆடவனை முதுகுப்புறமாக இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அந்தப் பெண் சென்றாள்.

இளம் வயதில் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்கள், பருவத்தின் விளைவுகள். எந்த ஆணும் பெண்ணும் 18 வயதை அடைந்தவுடன் தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்கும் நிலையை எட்டி விடுகிறார்கள். ஆனால், தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்கால வாழ்வுக்கு நலம் விளைவிக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்கும் தெளிவான சிந்தை அந்த வயதில் அவர்களிடம் இருக்குமா என்பது சந்தேகமானதே. அதனால் தான் பருவம் அரும்பிய இளம் வயதினரை வீட்டிலுள்ள பெரியவர்கள் கட்டுப்படுத்தி வளர்க்கின்றனர். காலத்தின் வேககதியில், தற்போதைய சிறுகுடும்ப வாழ்வில் அத்தகைய கட்டுப்பாடுகளும், அன்பான அரவணைப்பும் குடும்பத்தில் கிடைக்காத நிலையில் இளம் தலைமுறையினர், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அநேகமாக, அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞனையும் இளம்பெண்ணையும் நம்பி அவர்களின் வீட்டில் பெற்றோர் பரிதவித்துக் கொண்டிருப்பார்கள். அது தெரியாமல், அவர்களை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு, இந்த காதல் இணை, தங்களை வாழ்வில் நிலைநிறுத்த வேண்டிய வயதில் இளமைவானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது; தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.

இதன் கொடிய விளைவு, வாழ்வில் நிலையான பிடிப்பு இல்லாமல் தள்ளாடும்போது உணரப்படும். அதற்குள் காலம் கடந்து விட்டிருக்கும். பிஞ்சில் பழுத்து வெம்பிய பழங்களை யாரும் விரும்புவதில்லை. எதற்கும் ஓர் பருவம் உண்டு என்பதை மறந்து தற்காலிக இன்பத்துக்காக காதல் என்ற பெயரில் மயங்கித் திரிபவர்களுள் பெரும்பாலோர் பின்னாளில் இழப்புகளுக்காக கண்ணீர் சிந்துவதை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம்.

நமது இலக்கியங்கள் பலவும் காதலை தெய்வீகமானதாகப் போற்றுகின்றன. காதலுக்கென்றே ஒரு தனித்த கடவுள் இணையை மன்மதன் – ரதிதேவியை உருவாக்கியவர்கள் நமது மூதாதையர்.  ‘அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள்’ என்று கம்பர் பாடும்போது அதில் விரசம் நமக்குத் தென்படுவதில்லை. ஆனால், இன்று பொது இடங்களில் பலரது முகத்தைச் சுளிக்கவைக்கும் காமக்களியாட்டங்கள், காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படுகையில் நாம் தலைகுனிந்து நடக்க வேண்டி இருக்கிறது.

பொதுப் பூங்காக்களில், கடற்கரைகளில்,  மாலை வேளையில், மனைவி, குழந்தைகளுடன் ஓய்வான உலா செல்ல முடியாத வகையில், பல இடங்களில் காதலர் என்ற போர்வையில் நடத்தப்படும் விளையாடல்கள், அருவருக்க வைக்கின்றன. உண்மையில் இதுதான் பாலியல் சுதந்திரமா?

கட்டுப்பாட்டில் இருந்து தான் சுதந்திரம் முகிழ்க்கிறது என்பார் மகாத்மா காந்தி. கட்டற்ற காட்டாறு அழிவையே விளைவிக்கும், அதுவே கரைகளுக்குள் கட்டுண்டால் பாசனமாகும். இளமைக்கு வேலியிட வேண்டியதன் அவசியத்தை முன்னோர் அதனால்தான் அதிகமாக வலியுறுத்தினர். ஆனால், தற்போதைய நுகர்வு கலாசாரம், எதையும் சோதித்துப் பார்க்கவும், எதையும் உடனே ருசிக்கவும் அறைகூவுகிறது. நுகர்வை பிரசாரம் செய்யும் பத்திரிகைகள், ஊடகங்கள், பாலியல் சிந்தனையை வக்கிரமாகச் சித்திரிக்கும் திரைப்படங்கள், நீதிநெறியைக் கற்பிக்காத கல்வி நிறுவனங்கள் எனப் பல காரணிகளால், வாழ்க்கையை நுகர்வுப் பண்டமாக கருதும் மனநிலை பரவி வருவதன் தீய அறிகுறியே இத்தகைய இழிவான காட்சிகள்.

பாலுறுப்புகளின் சங்கமம் மட்டுமல்ல வாழ்க்கை. அப்படியானால், எல்லா விலங்குகளும் இனவிருத்திக்காக கலவியில் ஈடுபடவே செய்கின்றன. அவற்றிடமிருந்து மனிதனை வேறுபடுத்துவது பகுத்தறிவல்லவா? நமது துரதிர்ஷ்டம், யாரெல்லாம் பகுத்தறிவு பற்றி முழங்குகிறார்களோ அவர்கள் தான் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

பொது இடத்தில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞன்- இளைஞிக்கும், தெருவோரம் இணைசேரும் நாய்களுக்கும் என்ன வித்தியாசம்? மரத்துப் போன வெட்க நரம்புகளின் களியாட்டமல்ல வாழ்க்கை. அது புனிதமானது. கம்பீரமானது.

விலங்குகள் இணை சேர்வதைப் பற்றிக் கூறியவுடன் திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

திருநாவுக்கரசர் திருவையாறுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும்போது தான் செல்லும் வழியில் பல இயற்கைக் காட்சிகளைக் காண்கிறார். ஓர் ஆண் யானை பெண் யானையுடன் கூடிக் குலாவுகிறது. அதைக் கண்டவுடன் திருநாவுக்கரசர் நெகிழ்கிறார். அவருக்கு அலகிலா விளையாட்டுடைய ஈசனும் அவனது உடலின் ஒருபாகத்தைப் பெற்ற அம்பிகையும் தான் அங்கு தென்படுகிறார்கள். ஏனெனில், அத்தகைய கம்பீரத்துடன் களிறும் (ஆண் யானை) பிடியும் (பெண் யானை) குலாவி வருகின்றன. காதலின் மகத்துவம் மறைப்பதிலோ, ரகசியமாக மற்றவர்களை ஏமாற்றி  தற்காலிக இன்பம் துய்ப்பதிலோ இல்லை. அதன் துணிவு உள்ளத்தின் அன்பால் எழுவது. அதன் மதிப்பு கபடற்ற கம்பீரத்தால் இயல்வது.

திருநாவுக்கரசரின் வழியில் தென்படும் மான்கள், கோழிகள், குயில்கள், மயில்கள், கிளிகள், மாடுகளின் இணைகளில் எல்லாம் அவர் ஈசனையும் சக்தியையுமே தரிசித்து நெக்குருகிறார். அவர் அப்போது படைத்த பத்து பாடல்களும் இனிய சுவையுடைய தமிழின் அணியாக இன்றும் விளங்குவன. அதில் ஒரு பாடல்:

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்.

-திருநாவுக்கரசர் தேவாரம்- திருவையாறு பதிகம்- 4:3:1

பொருள்:

பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய், அர்ச்சிக்கும் பூவும் அபிஷேக நீரும் தலையில் தாங்கி,  திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்கள் பின் அடியேன் சென்றேன் . கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட எந்தச் சிரமமும் இன்றி  திருவையாற்றை அடைந்தபோது, விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வந்ததைக் கண்டேன்.  சத்தியும் சிவமுமாக வந்த அந்தக் காட்சியைக் கண்டதனால் இறைவனின் திருப்பாதம் கண்டவன் ஆனேன். நான் கண்டறியாதனவற்றைக் கண்டுவிட்டேன்.

-இதுதான் இந்த மண்ணின் மகிமை. இறைவனையே காதலர்களாக பாவித்து வணங்குபவர்கள் நாம். ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமேயாவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்று’ என்று இறைவன் அரங்கனுக்கே ஆணையிட்ட காதலியான ஆண்டாள் தவழ்ந்த மண் தமிழகம்.

அத்தகைய கம்பீரம் தான் நமது இளைய தலைமுறைக்கு தேவை. பருவதே பயிர் செய்வது இன்றியமையாதது. எனினும்,  பருவம் வருமுன் விதைப்பது அறுவடையைத் தராது. அதேபோல, குறிப்பிட்ட காலம் வாழ்க்கைக் கழனியைப் பண்படுத்திய பிறகே இல்லறம் என்னும் நல்லறத்துக்கு வித்திடும் காதல் வானில் சஞ்சரிக்க வேண்டும்.

காதல் வாழட்டும்! அது நமது வலிமையான இளமை மீது இறுமாப்பாக உலா வரட்டும். ஆனால், அதற்குமுன் முகத்தைத் திரையிட்டு, ஓடி ஒளிந்து, சல்லாபங்களில் வாழ்வைத் தொலைக்கும் சரசங்கள் வேண்டாம்.

என் கண்முன், முகத்தை மறைத்து இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இளம் பெண்ணின் அவசரமே வந்து போகிறது. அவளது வாழ்க்கை விட்டில் பூச்சியாக வீணாகிவிடக் கூடாது. அதுவே என் சிந்தனை. அதற்காகவே இந்தக் கட்டுரை.

-விஜயபாரதம்

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: