அணு ஆயுதம் செய்த வித்தகர்

23 Feb

ராஜா ராமண்ணா

ராஜா ராமண்ணா

இந்த உலகம் வலிமையானவர்களையே மதிக்கிறது. தனி மனிதன் மட்டுமல்ல, எந்த ஒரு நாடும் பலவீனமாக இருந்தால் பிறரது ஆதிக்கத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே தான்  ‘வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம்’ என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர்.

தற்போதைய உலகில் ஆயுதபலமே ஒருநாட்டின் கௌரவத்தை நிலைநாட்டுவதாகவும் காப்பதாகவும் உள்ளது. அதிலும் அணு ஆயுதம் உள்ள நாடுகளுக்கு தனி மரியாதை. இந்நிலையில், இந்தியாவும் அணு ஆயுத வல்லரசு நாடுகளில் இன்று இடம் பிடித்திருப்பது சாதாரணமானதல்ல. அதற்கு வித்திட்ட ரகசியப் படையின் தளகர்த்தர், விஞ்ஞானி ராஜா ராமண்ணா.

கர்நாடக மாநிலத்தின் (அப்போதைய மைசூரு சமஸ்தானம்) தும்கூரில் மாவட்ட நீதிபதியின் மகனாக 1925, ஜன. 28-இல் பிறந்தார் ராஜா ராமண்ணா. சிறுவயது முதற்கொண்டே அவருக்கு இசை மீது தணியாத ஆர்வம் இருந்தது.

பெங்களூரு பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் படித்த ராமண்ணா, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும், கர்நாடக இசையில் எம்.ஏ. பட்டமும் பெற்றார் (1945). பிறகு, மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் எம்.எஸ்சி. பட்டமும், இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெற்ற ராமண்ணா, மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கு கிங்ஸ் கல்லூரியில், அணுக்கரு இயற்பியலில் பிஎச்.டி. பட்டமும், மேற்கத்திய இசையில் எல்.ஆர்.எஸ்.எம். பட்டமும் (1949) பெற்றார்.

லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற இந்திய விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபாவை ராஜா ராமண்ணா சந்தித்தார். அது அவரது வாழ்விலும், இந்திய அறிவியல் வரலாற்றிலும் திருப்புமுனை ஏற்படுத்திய சந்திப்பாகியது.

ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, பிரிட்டனின் அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Atomic Energy Research Establishment- AERE) பணியாற்றும் வாய்ப்பு ராமண்ணாவுக்குக் கிடைத்தது. அங்கு அணுஉலை வடிவமைப்பு, அணுக்கரு எரிபொருள் வெப்பச்சுற்று (nuclear fuel cycles) ஆகியவை தொடர்பான அனுபவ அறிவைப் பெற்றார்.

படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்பிய ராமண்ணாவை, மும்பையில் தான் நிறுவிய டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலை தொழில்நுட்ப ஆய்வாளராக, அணுஉலை இயற்பியலாளராக, ஹோமி பாபா இணைத்துக் கொண்டார். அங்கு அணுக்கருப் பிளவு, அணுக்கருச் சிதறல் தொடர்பான ஆய்வுகளில் ராமண்ணா ஈடுபட்டார்.

அப்போது, டிராம்பேயில் அரசு உதவியுடன் பாபா நிறுவிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திலும் (பின்னாளில் பாபாவின் மறைவுக்குப் பிறகு பாபா அணு ஆராய்ச்சி மையமாக- BARC மாறியது) ஹோமி பாபாவின் வழிகாட்டுதலில் அணு ஆயுதத் தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சிகளில் ராமண்ணா கவனம் செலுத்தினார்.

துடிப்பு மிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீரிலும் பெரிலியம் ஆக்ûஸடிலும் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி நியூட்ரான் விரவுதலை (Neutron diffusion) ராமண்ணா தீர்மானித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை (Neutron thermalisation) பல்வேறு நவீன முறைகளில் மேற்கொண்டு, நியூட்ரான் நிறமாலை குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் அடிப்படை அணுக்கரு ஆராய்ச்சிகளுக்கு உதவின.

யுரேனியம்-235 ஐசோடோப்பைப் பயன்படுத்தி அணுக்கருப் பிளவால் உருவாகும் துணைக்கதிர்களின் கோணங்கள், ஆற்றல் தொடர்பாகவும் ராமண்ணா ஆராய்ந்தார். வெப்ப நியூட்ரான்களால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளியாகும் மின்னேற்றம் குறைந்த துகள்கள் குறித்த அறிய ராஜா ராமண்ணா தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.

ஹோமி பாபாவின் தலைமையில் இயங்கிய பல்துறை வல்லுநர் குழுவில் அவரும் இடம்பெற்றார். கே.எஸ்.சிங்வி,  வி.டி.கிருஷ்ணன்,  ஏ.எஸ்.ராவ்,  ஹோமி சேத்னா, என்.பானுபிரசாத்,  ராஜா ராமண்ணா ஆகியோர் அடங்கிய அக்குழு, இந்தியாவின் அணு உலைகளை உருவாக்க தீவிர ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டது. அதன் பலனாக நாட்டின் முதலாவது அணுக்கரு உலை (Reactor) ‘அப்ஸரா’  1956, ஆக. 4-இல் நிறுவப்பட்டது.

அணுசக்தித் துறையில் திறன் மிகுந்த விஞ்ஞானிகளின் தேவை உணரப்பட்டபோது, அதற்கென அணு ஆராய்ச்சி மையத்தினுள் தனிப்பிரிவாக பயிற்சிப் பள்ளி ராமண்ணா தலைமையில் 1957-இல் துவங்கப்பட்டது.

அங்கு பயிற்சி பெற்ற ஆறாயிரத்துக்கு மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் நாடு முழுவதிலும் உள்ள அணுசக்தித் துறை ஆய்வகங்களில் பணிபுரிந்தார்கள். அவ்வகையில் இந்தியாவின் மிக முக்கியமான மனித ஆற்றலை உருவாக்கியவராக ராஜா ராமண்ணா கருதப்படுகிறார்.

பிறகு, 1958-இல் அவர் தலைமை இயக்க அலுவலராக (CDO) நியமிக்கப்பட்டார். அப்போது சிக்கலான அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான அணுக்கரு எரிபொருள் தொடர்பான ஆய்வுப்பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவிர, அணுசக்தி பரிசோதனைக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பும் ராமண்ணாவிடம் வந்து சேர்ந்தது.

இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைத்தார் ராமண்ணா. அவரால்தான் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பொக்ரான் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அணுசக்தி சோதனைக்கான கட்டமைப்புகள் மிகவும் ரகசியமாக நிறுவப்பட்டன.

இந்நிலையில், இந்திய அணுசக்தித் துறையின் தந்தையாக மதிக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் அகால மரணம் (1966), விஞ்ஞானிகளை திகைப்புக்குள்ளாக்கியது. விஞ்ஞானி ஹோமி சேத்னா பாபாவின் பணிகளை இயக்குநராகப் பொறுப்பேற்றுத் தொடர்ந்தார் (1966- 1972).

அவருக்குப் பின் அதன் (BARC) இயக்குநராகப் பொறுப்பேற்ற ராஜா ராமண்ணா, 1972 முதல் 1978 வரையிலும், 1981 முதல் 1984 வரையிலும் இரு காலகட்டங்களில் இந்திய அணு ஆயுத வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

1970-இல் இந்தியாவின் அணு ஆயுத தயாரிப்புத் திட்டம் ராமண்ணாவின் தலைமையில் வெற்றியடைந்தது. ஆனால், அதைப் பரிசோதிக்க அரசின் அனுமதிக்காக விஞ்ஞானிகள் காத்திருக்க நேர்ந்தது.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதுகுறித்து விளக்கமாக எடுத்துரைத்து, அரசின் அனுமதியை ராஜா ராமண்ணா பெற்றார். 1974, மே 18-இல் பொக்ரானில் ‘சிரிக்கும் புத்தர்’  என்ற சங்கேத வார்த்தையில் அணு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ராஜா ராமண்ணா- ஹோமி சேத்னா விஞ்ஞானிகள் இணை அதை சாதித்துக் காட்டியது. அதன்மூலம், அணு ஆயுத நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம் பிடித்தது.

1978-இல் இராக் சென்ற ராமண்ணாவிடம், அந்நாட்டின் அப்போதைய அதிபர் சதாம் உசேன், இராக்கின் அணு ஆயுதத் தயாரிப்புக்கு உதவினால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக ஆசை காட்டினார். ஆனால் ராமண்ணா மறுத்துவிட்டார். தகுதியற்றவர்களிடம் ஆயுதபலம் சேர்வது உலக நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர் பின்னாளில் சொன்னார்.

அணு ஆயுதத் தயாரிப்புக்கு வித்திட்டவராக இருப்பினும், ஆசிய பிராந்தியத்தில் அணு ஆயுதப் பரவலுக்கும் அணு ஆயுதப் போட்டிக்கும் எதிரான கருத்துருவாக்கத்துக்காக ராஜா ராமண்ணா தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.

ராஜா ராமண்ணாவை பல உயர்பதவிகள் நாடி வந்தன. எந்தப் பொறுப்பை ஏற்றாலும் அதில் தனது தனித்துவத்தைப் பதித்து, அதில் சாதனை படைப்பது ராமண்ணாவின் இயல்பு. 1978 முதல் 1981 வரை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் செயலாளராக பதவி வகித்தார். 1984-இல் சர்வதேச அணுசக்தி முகமையின் ((IAEA)) தலைவராகப் பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (DRDO) இயக்குநராக 1980 முதல் 1990 வரை இருந்தபோது, இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களை ஊக்குவித்தார்.

1984 முதல் 1987 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் (AEC) தலைவராக பதவி வகித்தார். 1990-இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத் துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றார். 1997- 2003-இல் நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகப் பணியாற்றினார். 2000-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகப் பொறுப்பேற்றார்.

கல்வி நிறுவனங்களிலும் ராமண்ணா உயர்பதவிகளை வகித்து அவற்றத் திறம்பட வழிநடத்தினார். தில்லி- தேசிய அறிவியல் அகாதெமியின் தலைவராகவும், பெங்களூரு அறிவியல் கழகத்தின் (IISc) தலைவராகவும், மும்பை ஐஐடியின் தலைவராகவும் பெங்களூரு- மேம்படுத்தப்பட்ட படிப்புகளுக்கான கல்வி மையத்தின் இயக்குநராகவும் ராஜா ராமண்ணா பொறுப்பு வகித்திருக்கிறார்.

தனது சுயசரிதையை ‘யாத்திரை ஆண்டுகள்’ என்ற நூலாகவும் (1991), தனது இசையறிவை ‘ராகம், மேலைநாட்டு முறையில் இசையமைப்பு’  என்ற நூலாகவும் (1993) ராமண்ணா எழுதியிருக்கிறார்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1963), பத்மஸ்ரீ (1968), பத்மபூஷண் (1973), பத்மவிபூஷண் (1975) விருதுகளை ராஜா ராமண்ணாவுக்கு இந்திய அரசு அளித்துள்ளது. ம.பி. மாநிலம், இந்தூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துக்கு ராஜா ராமண்ணாவின் பெயர் (Raja Ramanna Centre for Advanced Technology) சூட்டப்பட்டுள்ளது.

2004, செப். 24-இல் ராஜா ராமண்ணா மறைந்தார். அறிவியல் மூலமாக மட்டுமே நாட்டின் வளர்ச்சி திசையைத் தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக நம்பி அதற்காகப் பணிபுரிந்த கர்மயோகியின் சரித்திரம் அத்துடன் நிறைவடைந்தது.

இன்று நாடு முழுவதும் உள்ள அணு உலைகளும், செயல்படுத்தப்படும் அணுமின் திட்டங்களும் ராஜா ராமண்ணாவை என்றும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும். தன்னை முன்னிறுத்தாமல், நாடி வந்த கடமைகளைத் திறம்பட நிறைவேற்றிய அவரை ‘இந்திய அணு ஆயுதத் திட்டங்களின் தந்தை’ என்று சொல்வதில் தவறேது?

 

-தினமணி- இளஞர்மணி (23.02.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: