Archive | March, 2016

பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி

31 Mar
BPPal

டாக்டர் பெஞ்சமின் பியாரி பால்

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது, தானிய உற்பத்தியைப் பெருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் ரகங்களை உருவாக்கவும்  ‘பசுமைப்புரட்சி’  என்ற பெயரில் வேளாண் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. இதற்கு வித்திட்டவர் வேளாண் விஞ்ஞானி டாக்டர் பெஞ்சமின் பியாரி பால்.

பஞ்சாப் மாகாணத்தின் முகுந்த்பூரில் 1906, மே 26-இல் பிறந்தவர் பால். அவரது இயற்பெயர் பிரம்மதாஸ் பால். தந்தை மருத்துவர். சிறு வயதிலேயே அவரது குடும்பம் பர்மாவுக்குக் குடிபெயர்ந்தது.

பர்மாவின் மேமியோ என்ற ஊரிலுள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைக் கற்றார். அங்குதான் அவரது பெயர் பி.பி.பாலாக மாறியது.

ரங்கூன் பல்கலைக்கழகத்தில் படித்த பால், 1929-இல் எம்.எஸ்சி. தாவரவியலில் பட்டம் பெற்றார். கல்வியில் சிறந்து விளங்கியதால் பர்மிய அரசின் கல்வி உதவித்தொகை அவருக்குக் கிடைத்தது. அதைக் கொண்டு பிரிட்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார் லால்.

அங்கு வேளாண் விஞ்ஞானி சர் ஃபிராங்க் எங்கில்டோவுடன் இணைந்து வீரியரக கோதுமை உற்பத்திக்கான ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். அதுவே பின்னாளில் அவரது வேளாண் ஆராய்ச்சிகளுக்கு களம் அமைத்துத் தந்தது.

பிஎச்.டி. பட்டம் பெற்று பர்மா திரும்பிய லால், பர்மிய விவசாய ஆராய்ச்சித் துறையில் உதவி நெல் ஆராய்ச்சியாளராக, 1933 மார்ச்சில் நியமிக்கப்பட்டார். ஆயினும், அதே ஆண்டு அக்டோபரில் பிகார் மாநிலம், புஸாவில் இருந்த இம்பீரியல் விவசாய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகச் சேர்ந்தார்.

இந்நிறுவனம் 1936-இல் தில்லிக்கு இடம் பெயர்ந்தது; 1947-இல் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் (Indian Agricultural Research Institute- IARI) என்று பெயர் மாற்றம் பெற்றது. அதன் முதல் இயக்குநராகவும் பால் பொறுப்பேற்றார். 1950 முதல் 1965 வரை அதை தனது திறமையான வழிகாட்டலால் வளர்த்தார். அந்தக் காலகட்டத்தில், வீரியரக கோதுமை ரகங்கள் பலவற்றை பால் உருவாக்கினார்.

வேளாண் துறையில் ஆராய்ச்சியாளர்களை அதிகரிக்க விரும்பிய பால், ஐஏஆர்ஐ வளாகத்தில் வேளாண் முதுநிலைக் கல்லூரியை 1958-இல் தொடங்கினார். அதன்மூலம் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட வெளிநாடு செல்ல வேண்டிய அவசியத்தை அவர் மாற்றினார். இன்று நாடு முழுவதும் உள்ள வேளாண் விஞ்ஞானிகளில் பலர் ஐஏஆர்ஐ ஆராய்ச்சியாளர்களே.

1965-இல் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (Indian Council of Agricultural Research- ICAR) பொது இயக்குநராகப் பொறுப்பேற்ற பால், 1972 வரை அப்பதவியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் விவசாயத்துடன் பண்ணை விலங்குகளின் தீவனப் பயிரையும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த திட்டங்களை வடிவமைத்தார்.

விவசாயப் பயிர்கள், பண்ணை விலங்குகள், மீன்வளம் ஆகியவற்றை இணைக்கும் ஆராய்ச்சித் திட்டங்கள் வாயிலாக, விவசாயிகளின் வருவாயைப் பல வகைகளில் பெருக்க அவர் வழிவகுத்தார்.

கோதுமை உற்பத்தியில் புரட்சி:

பால் வேளாண் விஞ்ஞானியான புதிதில் (1934), பூஞ்சை நோயால் கோதுமை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நோயிலிருந்து பயிரைக் காப்பதுடன் அதிக விளைச்சலை உருவாக்க வேண்டிய கட்டாயமும் அப்போது நிலவியது. அந்தச் சவாலை ஏற்று, தீவிரமாக பால் உழைத்தார்.
அதன் பலனாக, புதிய புஸா வரிசை (New Pusa Series) கோதுமை ரகங்கள் (1954) உருவாக்கப்பட்டன. என்பி 700, என்பி 800 வரிசையில் உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டுரக கோதுமை ரகங்கள் பூஞ்சை நோயிலிருந்து காத்ததுடன் அதிக விளைச்சலையும் தந்தன. அவற்றுள் என்பி 710, 718, 761, 770, 797, 798, 799, 809 ரகங்கள் முக்கியமானவை. இந்த ஆராய்ச்சிக்காக 18 ஆண்டுகள் கடினமாக உழைத்தார் பால்!

குறைந்த பாசன வசதியில் அதிக விளைச்சலைத் தரும் கோதுமை ரகத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியிலும் அவரது கவனம் சென்றது. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட என்பி 824 வீரிய கோதுமை ரகம், ஒரு ஹெக்டேருக்கு 3 டன் விளைச்சலைத் தந்தது. பின்னாளில் 1960-களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பசுமைப்புரட்சிக்கு முன்னோடியாக அமைந்த சாதனை அது.
உருளைக்கிழங்கு, புகையிலை, தக்காளி ஆகியவற்றிலும் விவசாயிகளுக்கு பலனளிக்கும் புதிய ரகங்களை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பால் ஆர்வம் கொண்டிருந்தார். ரோஜாக்கள், போகன்வில்லாக்கள் தொடர்பான ஆராய்ச்சி அவருக்கு மிகவும் பிடித்தமானது. சுமார் 40 வகையான புதிய ரோஜாக்களை பால் உருவாக்கி இருக்கிறார்.

இந்திய ரோஜா, போகன்வில்லா சங்கத்தை அவர் நிறுவினார். இந்திய மரபுப்பயிர் மற்றும் தாவர அபிவிருத்தி சங்கத்தையும் பால் நிறுவினார்; அதன் விஞ்ஞான சஞ்சிகையை 25 ஆண்டுகள் நடத்தினார்.

பால் சிறந்த எழுத்தாளரும் கூட.  The Roses in India, Beautiful Climbers of India, Flowering Shrubs of India, Bougainvilleas and Environmental Conservation and Development – ஆகியவை அவரது நூல்களில் முக்கியமானவை. தானியங்கள் தொடர்பான தனி வரைநூல்களை (Monograph) அவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் கோதுமை குறித்த நூல் பிரபலமானது.

பிலிப்பைன்ஸில் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகம் 1960-இல் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் ஆரம்பகால அறங்காவலராக பால் பணியாற்றினார். லால் உருவாக்கிய புதிய பயிர் ரகங்கள் உலகம் முழுவதும் குறுகிய காலத்தில் பரவி, உணவு உற்பத்தியைப் பெருக்கின.

பீர்பல் சாஹ்னி பதக்கம் (1962), இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் ஸ்ரீநிவாச ராமானுஜன் விருது (1964), ஆசியாட்டிக் சொûஸட்டியின் பார்க்லே பதக்கம் (1971), பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் (1972), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1959), பத்மபூஷண் (1968), பத்மவிபூஷண் (1987) உள்ளிட்ட பல கெüரவங்களை விஞ்ஞானி பால் பெற்றுள்ளார்.

விவசாய ஆய்வும் தனது சகோதரிகளின் வாழ்வுமே இரு கண்களாகக் கொண்டு, பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த பால், 1989, செப். 14-இல் மறைந்தார். அப்போது, தனது சொத்துகள் அனைத்தையும் ஐஏஆர்ஐ-க்கு தானமாக எழுதிவைத்தார் அவர்!

பால் நினைவாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.

 

தினமணி- இளைஞர்மணி ( 29.03.2016)

.

 

 

விண்மீன்களின் வாழ்நாளைக் கணித்தவர்!

22 Mar
சுப்பிரமணியன் சந்திரசேகர்

சுப்பிரமணியன் சந்திரசேகர்

விண்வெளியில் லட்சக்கணக்கான விண்மீன்கள் மின்னுகின்றன. அவை அனைத்துமே பல கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளவை. உண்மையில் ஒவ்வொரு விண்மீனும் சூரியன் போன்ற நெருப்புக்கோளமே. இந்த விண்மீன்கள் தன்னைத் தானே எரித்துக்கொண்டு ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்கின்றன.

எந்த ஒரு விண்மீனுக்கும்- சூரியன் உள்பட- குறிப்பிட்ட ஆயுள்காலம் உண்டு. ஆனால் மானுட வயதுடன் ஒப்பிடுகையில், நட்சத்திரங்களின் வாழ்நாள் மிக அதிகம் என்பதால் அதை நம்மால் கணக்கிட இயலாது. இருப்பினும், எதையும் சவாலாகக் கருதி ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு, விண்மீன்களின் தோற்றம், இருப்பு, மறைவு குறித்த விவரங்களை அறிவதில் அலாதி பிரியம்.

குறிப்பாக, விண்வெளி இயற்பியலில் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளோருக்கு, அண்டத்தின் பேரமைப்பு, அதிலுள்ள பால்வெளி, நட்சத்திரக் கூட்டங்கள், கருந்துளைகள், நட்சத்திரங்களின் மாற்றங்கள் தொடர்பான ரகசியங்களை வெளிப்படுத்தும் ஆர்வம் மிகுதி. அத்தகையோருக்கு வழிகாட்டும் அரிய விண்வெளிக் கோட்பாட்டை உருவாக்கி நோபல் பரிசு பெற்றவர், இந்தியாவில் பிறந்த விண்வெளி விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர்.

பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் (தற்போதைய பாகிஸ்தான்), லாகூரில், 1910, அக். 19-இல் பிறந்தவர் சந்திரசேகர். அவரது தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரிட்டீஷ் அரசில் தணிக்கைத் துறை அலுவலராக இருந்தார். தாய் சீதாலட்சுமி எழுத்தாளர். அவரது சித்தப்பா, இயற்பியலுக்கான நோபல் பரிசு (1928) பெற்ற சந்திரசேகர வெங்கட்ராமன்.

பிரபலமான குடும்பத்தில் பிறந்த சந்திரசேகருக்கு 12 வயது வரை வீட்டிலேயே தனிக்கல்வி அளிக்கப்பட்டது. 1922-இல், சென்னை, திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சந்கிரசேகர் சேர்க்கப்பட்டார். 1925-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்த அவர் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் (1930) பெற்றார்.

1928-இல் ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானியான அர்னால்டு சம்மர்ஃபெல்ட் மாநிலக் கல்லூரியில் உரையாற்றினார். அவரது உரை சந்திரசேகரின் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் அவரது சித்தப்பா வெங்கட்ராமன் நோபல் பரிசு பெற்றது, சந்திரசேகரின் இயற்பியல் ஆராய்ச்சிக்கு உத்வேகமூட்டியது.

கல்லூரியில் படிக்கும்போது, தனது 19 வயதிலேயே, அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புடன் கூடிய ஆராய்ச்சிக் கட்டுரையை சந்திரசேகர் வெளியிட்டார் (1929). ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு (Theory of Relativity), குவான்டம் கோட்பாடு (Principles of Quantum Physics) ஆகியவற்றைப் பயன்படுத்தி, வானியல் கோட்பாடு ஒன்றை அவர் உருவாக்கியிருந்தார். அந்தக் கோட்பாட்டை நிரூபிக்க சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் செய்த தொடர் ஆராய்ச்சியின் பலனாக, விண்மீன்களின் இயல்பை அறிவதற்கான அரிய கோட்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அரசின் கல்வி உதவித்தொகை பெற்று பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்ற சந்திரசேகர், அங்கு பி.எச்டி. பட்டம் (1933) பெற்றார்.

அதன்பின் அங்குள்ள டிரினிட்டி கல்லூரியில் நான்காண்டு ஒப்பந்தத்தில் ஆய்வாளராகச் சேர்ந்தார். ஆனால், திடீரென அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு 1936-இல் வந்தது. அதையேற்று அங்கு சென்ற சந்திரசேகர், 1995-இல் தான் இறக்கும் வரை அங்கேயே பணியிலும் ஆராய்ச்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.

1936-இல் தனது கல்லூரியில் படித்த இளைய மாணவியான லலிதா துரைசாமியை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். 1953-இல் சந்திரசேகருக்கு நிரந்தர அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

சந்திரசேகர் வரையறை:

விண்வெளி இயற்பியலில் முக்கியமான கண்டுபிடிப்பாக,  ‘சந்திரசேகர் வரையறை ’ (Chandrasekhar limit) கருதப்படுகிறது. விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் தோற்றம், மறைவு, கருந்துளைகளின் உருவாக்கம் ஆகியவை பற்றிய தொடர் ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டியாக விளங்குவது இக்கோட்பாடாகும்.

நமக்கு மிகவும் அருகிலுள்ள விண்மீனும், பூமியை இயக்குவதுமான சூரியனின் நிறையை (யூக அளவு) அடிப்படை அலகாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு விண்மீனின் (நட்சத்திரம்) வாழ்நாள், அது எவ்வளவு நிறையை (Mass) கொண்டுள்ளது என்பதைப் பொருத்ததாகும். அதிக நிறை கொண்ட நட்சத்திரம் அதன் உள்ளார்ந்த செயல்பாடுகளால் நொறுங்கி, முடங்கிய நியூட்ரான் நட்சத்திரமாகவோ (Neutron Star), கருந்துளையாகவோ (Black Hole) மாறும்.

சூரியனை விட 8 மடங்கு நிறை குறைந்த அல்லது நடுத்தர நிறை உடைய நட்சத்திரங்களும் இதேபோல, நிறைபொருளான வாயுக்களின் நிலை மாற்றத்தால் சிறுத்து, வெள்ளைக்குள்ளன் (white dwarf) என்ற நிலையை அடைகின்றன.

அதிலும், சூரியனின் நிறையைப் போல 1.44 மடங்கு நிறை கொண்ட நட்சத்திரம் வெண்குள்ளனாக மாற முடியாது. இந்த வரையறைக் கோட்பாட்டை கணித அவதானிப்புகள் மூலமாக சந்திரசேகர் உருவாக்கினார். இதுவே ‘சந்திரசேகர் வரையறை’  ஆகும்.

அமெரிக்க அணுவியல் விஞ்ஞானியான வில்லியம் ஃபௌலர் (1911-1995), விண்மீன்களின் இயக்கத்தில் நிலவும் அணுவியல் மாற்றங்கள் குறித்த கோட்பாட்டை உருவாக்கியவர். அவருக்கும், சுப்பிரமணியன் சந்திரசேகருக்கும் இணைந்து 1983-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

லண்டன் ராயல் சொஸைட்டியின் உறுப்பினராக சந்திரசேகர் 1944-இல் தேர்வு செய்யப்பட்டார். பசிபிக் விண்ணியல் கழகத்தின் புரூஸ் பதக்கம் (1952), அமெரிக்க அறிவியல் கழகத்தின் ரம்ஃபோர்டு பதக்கம் (1957), அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் பதக்கம் (1966), இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது (1968), ராயல் சொஸைட்டியின் காப்லே பதக்கம் (1984) உள்ளிட்ட உலக அளவிலான பல்வேறு விருதுகள் சந்திரசேகரை அலங்கரித்தன.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் திறமையான பேராசிரியராக அவர் விளங்கினார். தனது பணிக்காலத்தில் பல ஆராய்ச்சியாளர்களை அவர் உருவாக்கினார். 1952 முதல் 1971 வரை, விண்வெளி இயற்பியல் சஞ்சிகையின் (Astrophysics Journal) நிர்வாக ஆசிரியராகவும் சந்திரசேகர் பணியாற்றினார்.

பிரெüனியன் இயக்கக் கோட்பாடு (Theory of Brownian motion), சார்பியல் கோட்பாட்டுக்கும் விண்ணியலுக்கும் உள்ள தொடர்பு (The general theory of relativity and relativistic Astrophysics) உள்ளிட்ட ஆராய்ச்சிகளிலும் முக்கிய முடிவுகளை சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.

விண்மீன் அமைப்பில் அறிமுக ஆய்வு (An Introduction to the Study of Stellar Structure- 1939), விண்மீன் இயக்கக் கோட்பாடுகள் (Priciples of Stellar Dynamics- 1942), கருந்துளைகளின் கணித நியதி  (Mathematical Theory of Black Holes -1983), பொதுவான வாசகருக்கு நியூட்டன் கோட்பாடு (Newton Principia for the Common Reader- 1995) உள்ளிட்ட 10 நூல்களை சந்திரசேகர் எழுதியுள்ளார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவராக வாழ்ந்த சந்திரசேகர், அமெரிக்காவில் 1995, ஆக. 21-இல் மறைந்தார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் பெயரில் ஓர் ஆராய்ச்சி மையம் இயங்குகிறது.

-தினமணி- இளைஞர்மணி (22.03.2016)

.

 

 

அற்புதமான ஆய்வு ஆவணம்

21 Mar

hindutva ambedkar

தனது வாழ்நாளெல்லாம் தீண்டாமையால் அவதிப்பட்டு, அதை எதிர்த்துப் போராடி, அதற்குக் காரணமான இந்து மதத்தை விட்டு வெளியேறி பெüத்த மதத்தைத் தழுவியவர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் விடுதலைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த பெரியார் அவர்.

இன்று அம்பேத்கரை உரிமை கொண்டாடாதவர்கள் இல்லை. அம்பேத்கரை அவரது வாழ்நாளில் எதிர்த்த காங்கிரஸாரும், கம்யூனிஸ்டுகளும் இன்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் அம்பேத்கரின் வெற்றி. அதேசமயம், இந்து மதத்தை கடுமையாக நிராகரித்த அம்பேத்கரை இந்துத்துவர்கள் மிகவும் போற்றுவது எப்படி?

அம்பேத்கரியலில் தீவிர ஆராய்ச்சியாளரான ம.வெங்கடேசனின் இந்நூல் இக்கேள்விக்கு விளக்கமளிக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? என்ற நூலை எழுதி ஏற்கெனவே தமிழுலகில் புதிய சிந்தனை அலைகளை உருவாக்கியவர் இவர்.

இந்து மதம் என்பது மத, வழிபாட்டு சம்பிரதாயங்களை மட்டுமே உள்ளடக்கியது. இந்துத்துவம் என்பது மதம் மட்டுமல்லாமல், இந்த தேசத்துடன் தொடர்புடைய, தோன்றிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது- என்று தனது முன்னுரையிலேயே நூலாசிரியர் விளக்கிவிடுகிறார்.

அந்த அடிப்படையில், இந்துத்துவர்களும் அம்பேத்கரும் சிந்தனைரீதியாக ஒத்திருக்கும் இடங்களை நூலாசிரியர் இந்நூலில் தொகுத்திருக்கிறார். தலித் என்ற நிலையில் இந்து மதத்தை நிராகரித்தாலும், அவர் இந்து மதத்தை சீர்திருத்த பல ஆண்டுகள் முயன்றதை, அவரது நூல்களிலிருந்தே ஆதாரத்துடன் ம.வெங்கடேசன் சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதமும் இந்தியும் ஏற்கப்பட வேண்டும். ஆரிய- திராவிட வாதம் பொய்யானது; பொது சிவில் சட்டம் தேவை; தேசப்பிரிவினை கூடாது; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடாது- என இந்துத்துவர்கள் கூறுவதையே அம்பேத்கரும் கூறியிருப்பதை அவரது கருத்துகளின் அடிப்படையில் நிறுவுகிறார் நூலாசரியர்.

இந்து மகாசபை தலைவர்கள் மூஞ்சே, சாவர்க்கர், ஜெயகர், ஆர்எஸ்எஸ் தலைவர் குருஜி கோல்வல்கர், தந்தோபந்த் டெங்கடி ஆகியோருடன் நெருங்கிய தோழமை கொண்டிருந்தவர் அம்பேத்கர் என்பதும் இந்நூலின் மூலம் தெரியவருகிறது.

22 அத்தியாயங்களில் அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டே கட்டி எழுப்பப்பட்ட ஆராய்ச்சி நூலாக இந்நூல் விளங்குகிறது. எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனின் அறிமுக உரையும் சிறப்பாக உள்ளது. நூலாசிரியரின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. இந்துத்துவர்களின் சிந்தனைப் போருக்கு ஒரு கருவியாக இந்நூல் வெளியாகி இருக்கிறது.

***

இந்துத்துவ அம்பேத்கர்

ம.வெங்கடேசன்
208 பக்கங்கள், விலை: ரூ. 150

கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம்,
அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை,
ராயப்பேட்டை, சென்னை- 600 014,
தொலைபேசி: 044- 4200 9603.

.

ஆதார் நிறைவேற்றம், பாஜகவின் ராஜதந்திரம்!

18 Mar

eaadhar

ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தை உறுதிப்படுத்தும் சட்டத்தை பண மசோதா வடிவில் நிறைவேற்றியதில் பாஜகவின் ராஜதந்திரம் வெற்றி அடைந்துள்ளது. தவிர, இவ்விகாரத்தில் மத்திய அரசை நிலைகுலையச் செய்ய முயன்ற காங்கிரஸ்- இடதுசாரிகளின் கூட்டணியை சமத்காரமாக முறியடித்துள்ளது ஆளும் கட்சி. Continue reading

மலேரியாவின் காரணத்தைக் கண்டறிந்தவர்

15 Mar
ரொனால்டு ராஸ்

ரொனால்டு ராஸ்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகை அச்சுறுத்திய மலேரியா நோய்க்கு லட்சக் கணக்கானோர் பலியாகினர். அத்தகைய மலேரியா நோய் பரவுவதற்குக் காரணமான கொசுவைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர், இந்தியாவில் பிறந்த பிரிட்டீஷ் குடிமகனான ரொனால்டு ராஸ்.

பிரிட்டீஷ் இந்தியாவில், அல்மோராவில் (தற்போதைய உத்தரகண்ட் மாநிலம்), 1857, மே 13-இல், பிறந்தார் ரொனால்டு ராஸ். அவரது தந்தை, பிரிட்டீஷ் ராணுவத்தில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர்.

ரொனால்டு ராஸுக்கு எட்டு வயதானபோது, கல்வி கற்க பிரிட்டன் அனுப்பப்பட்டார். அங்கு உறவினரின் வீட்டில் தங்கி பள்ளிக்கல்வியை முடித்த ராஸ், 1874-இல் லண்டனிலுள்ள செயின்ட் பர்தோல்மியூ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1880-இல் மருத்துவப் படிப்பை முடித்த அவர், 1879-இல் இங்கிலாந்தின் ராயல் சர்ஜன்ஸ் கல்லூரியிலும் தேர்ச்சி பெற்றார். 1881-இல் ராணுவ மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற்ற ராஸ், அதே ஆண்டு, இந்திய மருத்துவ சேவைப் பணியில் (IMS) இணைந்தார்.

இந்தியாவில் அவரது முதல் பணி சென்னையில் துவங்கியது. அதன்பிறகு 1894 வரை, பர்மா, பலுசிஸ்தான், அந்தமான் தீவு, பெங்களூரு, செகந்தராபாத் ஆகிய இடங்களில் மருத்துவ சேவை புரிந்தார்.

இதனிடையே, 1888-89-இல் கல்வி விடுப்பில் லண்டன் சென்ற ராஸ், ராயல் மருத்துவக் கல்லூரியில் பொது சுகாதாரப் பிரிவில் பாக்டீரியாலஜியில் பட்டயம் பெற்றார்.

1883-இல் பெங்களூரில் பணியாற்றியபோது, தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடுவதைத் தடுப்பதன் மூலம் கொசுப்பரவலைத் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

1894-இல் விடுப்பில் லண்டன் சென்றபோது, பிரபல மருத்துவர் பாட்ரிக் மேன்சனைச் சந்தித்தார். அவர் தொற்றுயிரிகள், வெப்ப மண்டல நோய்கள் குறித்த பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். மலேரியா நோய் அப்போது உலகை அச்சுறுத்திவந்தது. அந்த நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ரொனால்டு ராஸை பாட்ரிக் வலியுறுத்தினார்.

பாட்ரிக் மேன்சனின் வழிகாட்டுதலை ஏற்ற ராஸ், இந்தியா திரும்பியவுடன் (1895) தனது மலேரியா ஆராய்ச்சியை மும்பையில் தொடங்கினார். அப்போது, கொசுவின் வயிற்றிலுள்ள ஏதோ ஒரு கிருமி தான் மலேரியாவுக்குக் காரணமாகிறது என்ற முடிவுக்கு ராஸ் வந்தார்.

இதனிடையே மலேரியா ஆராய்ச்சிக்குத் தடையாக, பெங்களூருக்கு ராஸ் இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பரவிவந்த காலராவைக் கட்டுப்படுத்தும் பணி அவருக்குத் தரப்பட்டது. இதனால் விரக்தியுற்ற ராஸ், விடுப்பு எடுத்துக்கொண்டு தமிழகத்தின் உதகைக்கு சென்றார்.

அங்கு மலேரியா ஆய்வில் ஈடுபட்ட ராஸ், வீட்டின் சுவரில் ஒட்டியிருந்த வித்தியாசமான கொசுவைக் கண்டார். அதன் இறக்கைகளில் சிறு புள்ளிகள் காணப்பட்டன. அதற்கு ‘புள்ளி இறக்கை கொசு’ (Dappled Winged Mosquito) என்று பெயரிட்டார். பின்னாளில் இக்கொசு ‘அனாஃபிலிஸ்’ கொசு (அய்ர்ல்ட்ங்ப்ங்ள்) என்று வகைப்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக் காலத்தில் மலேரியா நோய்த் தாக்குதலுக்கு உள்ளான ராஸ், செகந்தராபாத்துக்கு (1896) திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். தனது இரண்டாண்டு மலேரியா ஆராய்ச்சிக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போனதால் வேதனை அடைந்திருந்த ராஸ், அரசின் உத்தரவால் மேலும் ஏமாற்றம் அடைந்தார்.

ஆயினும் தனது ஆராய்ச்சியை ராஸ் கைவிடவில்லை. கொசுக்களின் முட்டைகளை சேகரித்து நீரில் அவற்றை வளர்த்து 20 அனாஃபிலிஸ் கொசுக்களை உற்பத்தி செய்த ராஸ் அவற்றை கவனமாக ஆராய்ந்தார். அந்தக் கொசுக்களின் வயிற்றை அறுத்து நுண்ணோக்கி உதவியால் ஆராய்ந்த ராஸ், அதிலிருந்த ஒரு தொற்றுயிரி (ஒட்டுண்ணி) கொசுவினுடையதல்ல என்பதைக் கண்டறிந்தார்.

அனாஃபிலிஸ் கொசு

அனாஃபிலிஸ் கொசு

இந்த ஆராய்ச்சி முடிவு, 1897, டிச. 18 தேதியிட்ட பிரிட்டீஷ் மருத்துவ சஞ்சிகையில் வெளியானது. அதற்கு முன்னதாக, 1897, ஆகஸ்டு 20-இல், மலேரியா நோய்க்குக் காரணமான கிருமி, கொசுவின் வயிற்றிலுள்ள தொற்றுயிரி (Malarial Parasite) தான் என்பதை ரொனால்டு ராஸ் கண்டுபிடித்தார்.

இந்தத் தொற்றுயிரி (Plasmodium) கொசுவின் உமிழ்நீரில் கலந்து, அது மனிதரைக் கடிக்கும்போது ரத்தத்தில் கலந்து நோயைப் பரப்புகிறது. அனாஃபிலிஸ் பெண் கொசுக்களே மலேரியாவைப் பரப்புகின்றன என்பதும் பின்னாளில் தெரியவந்தது.

இந்த ஆராய்ச்சியில் ராஸ் தீவிரமாக  ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,  1897 செப்டம்பரில் ராஜஸ்தானுக்கு பணியிட மாற்றல் உத்தரவு வந்தது. அதனால் கோபமடைந்த அவர் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்; இருப்பினும், பாட்ரிக் மேன்சனின் தலையீட்டால், சிறப்புப் பணி வழங்கப்பட்டு கொல்கத்தா அனுப்பப்பட்டார்.

கொல்கத்தாவிலுள்ள மாநில அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராஸ், அங்கு மலேரியா, காலா அஸார்  நோய்களுக்கு தீர்வு காணும் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1898-இல் பறவைகளைத் தாக்கும் ‘ஆவியன் மலேரியா’ நோய்க்குக் காரணம் கொசுக்களே என்று தக்க நிரூபணங்கள் மூலமாக நிரூபித்தார். இந்த ஆராய்ச்சி முடிவுகளின் பலனாக, மலேரியா நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது.

1899-இல் தனது இந்திய மருத்துவ சேவைப் பணியிலிருந்து விலகிய ராஸ், பிரிட்டன் சென்று, லிவர்பூல் வெப்ப மண்டல நோய் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அந்த சமயத்தில், மேற்கு ஆப்பிரிகா, கிரீஸ், மோரிசஸ், சைப்ரஸ், சூயல் கால்வாய் பகுதிகளில் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.

1902-இல் பேராசிரியரான ராஸ் 1917 வரை பணியில் தொடர்ந்தார். 1918 முதல் 1926 வரை, பிரிட்டீஷ் அரசின் உதவித்திட்ட அமைச்சகத்தின் ஆலோகராகச் செயல்பட்டார்.

1926-இல் ராஸை கௌரவிக்கும் வகையில், வெப்ப மண்டல நோய்களுக்கான மருத்துவக் கல்வி நிறுவனம் அரசால் நிறுவப்பட்டது. அதன் இயக்குநராகப் பொறுப்பேற்ற ராஸ், இறுதிக்காலம் வரை அங்கு பணியாற்றினார். 1932, செப்டம்பர் 16-இல் ரொனால்டு ராஸ் மறைந்தார்.

ரொனால்டு ராஸ் மருத்துவ விஞ்ஞானி மட்டுமல்ல, இசை, கணிதம், இலக்கியம் எனப் பல துறைகளில் வல்லுநர். பல ஆங்கிலக் கவிதை, புதினங்களை அவர் எழுதியிருக்கிறார். ‘மலேரியாவைத் தடுப்பது எப்படி?’என்ற அவரது நூல் (Prevention of Maleria- 1910) உலகப்புகழ் பெற்றது. தொற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதற்கான புள்ளிவிவர மாதிரிகளையும் ராஸ் உருவாக்கியுள்ளார்.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அரசு உதவி செய்வதில்லை என்று வெளிப்படையாக விமர்சித்தவர் ராஸ். ஆராய்ச்சிகளைத் தடுக்கும் அரசின் செயல்பாடுகளை நிர்வாகக் காட்டுமிராண்டித்தனம் என்று கண்டிக்கவும் அவர் தயங்கியதில்லை.

1901-இல் ராயல் சொஸைட்டி அவருக்கு எஃப்ஆர்எஸ் வழங்கியது. 1902-இல் அவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1911-இல் பிரிட்டன் அரசு சர் பட்டம்  வழங்கி ராஸை கௌரவித்தது.

மலேரியா பரவலுக்கு வழிவகுக்கும் தொற்றுயிரியை ராஸ் கண்டறிந்த தினமான 1897 ஆக. 20-ஐப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் அந்நாள் உலக கொசு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பிறப்பால் பிரிட்டீஷ்காரராக இருந்தபோதிலும், இந்தியாவில் பிறந்து, இங்கேயே மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளில் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்ட ரொனால்டு ராஸின் பெயர் இந்திய நகரங்கள் பலவற்றில் உள்ள தெருக்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை ராஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

 

-தினமணி- இளைஞர்மணி (15.03.2016)