இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கிய கணித மேதை

1 Mar

ஹரிஷ் சந்திரா

ஹரிஷ் சந்திரா

இருபதாம் நூற்றாண்டின் முன்னணி கணிதவியலாளர் என்று பாராட்டப்பட்டவர், இந்தியாவில் பிறந்து அமெரிக்கக் குடிமகனான ஹரிஷ் சந்திர மெஹ்ரோத்ரா. இந்தியா உலகுக்குளித்த கணித மேதைகளுள், ஸ்ரீநிவாச ராமானுஜனுக்குப் பிறகு சிறப்பான முத்திரை பதித்தவர் அவர்.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் 1923, அக். 11-இல் ஹரிஷ் சந்திரா பிறந்தார். அவரது தந்தை அரசுப் பொறியாளராக இருந்ததால், நாடு முழுவதும் செல்ல வேண்டியிருந்தது. எனவே இளமையில் பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

குவாலியரில் பள்ளிக்கல்வியை முடித்த ஹரிஷ் சந்திரா, அலகாபாத் பல்கலைக்கழகத்தில், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) இளநிலை அறிவியல் பட்டமும் (1941), முதுநிலை பட்டமும் (1943) பெற்றார். பிறகு, பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். அங்கு, விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் வழிகாட்டுதலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பாபாவுடன் இணைந்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவர் வெளியிட்டார்.

அப்போது, அலகாபாத் பல்கலைக்கழகப் பேராசிரியரான கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனும், ஹோமி பாபாவும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானியான பால் டிரக் வழிகாட்டுதலில் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ஹரிஷ் சந்திராவுக்கு அறிவுறுத்தினர்.

அதையேற்று லண்டன் சென்ற ஹரிஷ் சந்திரா, பால் டிரக் மேற்பார்வையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அங்கு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வுல்ஃப் கேங் பாலியுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அப்போது பாலியின் கோட்பாட்டில் உள்ள சிறு பிழையைக் கண்டறிந்து சொன்னார் சந்திரா. அன்றுமுதல் அவருடன் நீண்டகால நட்புறவை பாலி கொண்டிருந்தார்.

இதனிடையே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லிட்டில்வுட், ஹால் ஆகிய கணிதமேதைகளின் வகுப்புகளுக்கு ஹரிஷ் சந்திரா செல்லத் துவங்கினார். இயற்கணிதம் (Algebra) மீது அவரது ஆர்வம் பெருகத் துவங்கியது.

1947-இல் பிஎச்.டி. பட்டம் பெற்ற பிறகு, பால் டிரக் அமெரிக்கா சென்றபோது அவருக்கு உதவியாளராக உடன் சென்றார் ஹரிஷ் சந்திரா. பிரின்ஸ்டனில் பால் டிரக் உடன் இருந்தபோது, கணித மேதைகள் ஹெர்மன் வெய்ல், எமில் ஆர்ட்டின், கிளாட் சேவ்லோ ஆகியோருடன் ஹரிஷ் சந்திராவுக்கு தொடர்பு ஏற்பட்டது. அதன் விளைவாக, அவரது கவனம் கோட்பாட்டு இயற்பியலிலிருந்து கணிதம் மீது திரும்பியது.

அதுகுறித்து அவரே தனது கட்டுரை ஒன்றில் விளக்கி இருக்கிறார்.  ‘லோரன்ஸ் குழுமம் தொடர்பான பிரதிநிதித்துவக் கோட்பாட்டில் (Infinite irreducible representations of the Lorentz group) எனது நிரூபணங்கள் வலுவில்லாததாக எனக்குத் தோன்றின. அதுபற்றி எனது வழிகாட்டி பால் டிரக்கிடம் கூறியபோது, நிரூபணங்களைவிட இறுதி முடிவையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார். அதுவே எனது முடிவைத் தீர்மானிக்கத் தூண்டுகோலானது. இயற்பியலில் ஆராய்ச்சி புரியும் ஆறாவது அறிவு எனக்கு இல்லை என்பதையும், கணிதமே எனது பாதை என்பதையும் நான் புரிந்துகொண்டேன்’  என்று அதில் கூறியிருப்பார் ஹரிஷ் சந்திரா.

அதன்பிறகு பிரின்ஸ்டனிலிருந்து பால்டிரக் பிரிட்டன் திரும்பியபோது, அவருடன் ஹரிஷ் சந்திரா செல்லவில்லை. அங்கேயே தங்கி கணித ஆய்வுகளில் ஈடுபடத் துவங்கினார். பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்ற அவர் (1948- 49) அங்கும் கணித ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினார். அங்கு ருஷ்ய அல்ஜீப்ரா கணித வல்லுநர் ஜரிஸ்கியின் தொடர்பால், இயற்கணித வடிவியல் தொடர்பான ஆய்வுகளில் அவரது கவனம் சென்றது.

1950 முதல் 1963 வரையிலான காலகட்டத்தில், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் தங்கியிருந்தார். அந்தக் காலகட்டம், அவரது கணித ஆய்வுகளின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. அக் காலகட்டத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்துகொண்டே, பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

மும்பையிலுள்ள அடிப்படை அறிவியலுக்கான டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) 1952 முதல் 1953 வரை பணியாற்றிய ஹரிஷ் சந்திரா, அக்காலகட்டத்தில், லலிதாவை மணம் புரிந்தார்.
1955- 56-இல் பிரின்ஸ்டனில் உள்ள முன்னேறிய படிப்புகளுக்கான கல்விமையத்தில் பணியாற்றினார். 1957-58-இல் பாரிஸில் ‘ககன்ஹெய்ம் ஃபெல்லோஷிப்’பில் ஹெர்மன் வெய்ல் உடன் இணைந்து கணித ஆய்வுகள் மேற்கொண்டார். கணினித் தயாரிப்பு நிறுவனமான ஐபிஎம்மில் 1968-இல் பேராசிரியராக ஹரிஷ் சந்திரா நியமிக்கப்பட்டார்.

இயற்கணிதத்தில் பல புதிய தேற்றங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் வித்திட்டவராக ஹரிஷ் சந்திரா மதிக்கப்படுகிறார். மாறுபடு சமண்பாடுகள் தொடர்பான லை குழுமம் குறித்த அவரது ஆராய்ச்சிகள் (discrete series representations of semisimple Lie groups) குறிப்பிடத்தக்கவை.

ஹரிஷ் சந்திராவுக்கு உலக அளவில் பல கௌரவங்கள் சேர்ந்தன. 1954-இல் அமெரிக்க கணிதவியல் கழகம் அவருக்கு கோலே விருது வழங்கியது. 1973-இல் லண்டன் ராயல் சொஸைட்டியின் ஃபெல்லோஷிப் அளிக்கப்பட்டது. இந்திய தேசிய அறிவியல் அகாதெமி 1974-இல் ஹரிஷ் சந்திராவுக்கு ராமானுஜன் விருதை வழங்கியது. இந்திய அறிவியல் கழகம் 1975-இல் அவருக்கு ஃபெல்லோஷிப் அளித்தது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகம் 1981-இல் ஃபெல்லோஷிப் அளித்தது.

1983, அக். 16-இல் அமெரிக்காவில் ஹரிஷ் சந்திரா காலமானார். ஹரிஷ் சந்திரா சி-ஃபங்ஷன், ஹரிஷ் சந்திரா கேரக்டர் ஃபார்முலா, ஹரிஷ் சந்திரா ஹோமோமார்பிஸம், ஹரிஷ் சந்திரா மாடூல், ஹரிஷ் சந்திரா ரெகுலேட்டரி தியரம் உள்ளிட்ட பல அல்ஜீப்ரா கண்டுபிடிப்புகள், அவர் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

 

-தினமணி-இளைஞர்மணி (01.03.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: