மலேரியாவின் காரணத்தைக் கண்டறிந்தவர்

15 Mar

ரொனால்டு ராஸ்

ரொனால்டு ராஸ்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகை அச்சுறுத்திய மலேரியா நோய்க்கு லட்சக் கணக்கானோர் பலியாகினர். அத்தகைய மலேரியா நோய் பரவுவதற்குக் காரணமான கொசுவைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர், இந்தியாவில் பிறந்த பிரிட்டீஷ் குடிமகனான ரொனால்டு ராஸ்.

பிரிட்டீஷ் இந்தியாவில், அல்மோராவில் (தற்போதைய உத்தரகண்ட் மாநிலம்), 1857, மே 13-இல், பிறந்தார் ரொனால்டு ராஸ். அவரது தந்தை, பிரிட்டீஷ் ராணுவத்தில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர்.

ரொனால்டு ராஸுக்கு எட்டு வயதானபோது, கல்வி கற்க பிரிட்டன் அனுப்பப்பட்டார். அங்கு உறவினரின் வீட்டில் தங்கி பள்ளிக்கல்வியை முடித்த ராஸ், 1874-இல் லண்டனிலுள்ள செயின்ட் பர்தோல்மியூ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1880-இல் மருத்துவப் படிப்பை முடித்த அவர், 1879-இல் இங்கிலாந்தின் ராயல் சர்ஜன்ஸ் கல்லூரியிலும் தேர்ச்சி பெற்றார். 1881-இல் ராணுவ மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற்ற ராஸ், அதே ஆண்டு, இந்திய மருத்துவ சேவைப் பணியில் (IMS) இணைந்தார்.

இந்தியாவில் அவரது முதல் பணி சென்னையில் துவங்கியது. அதன்பிறகு 1894 வரை, பர்மா, பலுசிஸ்தான், அந்தமான் தீவு, பெங்களூரு, செகந்தராபாத் ஆகிய இடங்களில் மருத்துவ சேவை புரிந்தார்.

இதனிடையே, 1888-89-இல் கல்வி விடுப்பில் லண்டன் சென்ற ராஸ், ராயல் மருத்துவக் கல்லூரியில் பொது சுகாதாரப் பிரிவில் பாக்டீரியாலஜியில் பட்டயம் பெற்றார்.

1883-இல் பெங்களூரில் பணியாற்றியபோது, தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடுவதைத் தடுப்பதன் மூலம் கொசுப்பரவலைத் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

1894-இல் விடுப்பில் லண்டன் சென்றபோது, பிரபல மருத்துவர் பாட்ரிக் மேன்சனைச் சந்தித்தார். அவர் தொற்றுயிரிகள், வெப்ப மண்டல நோய்கள் குறித்த பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். மலேரியா நோய் அப்போது உலகை அச்சுறுத்திவந்தது. அந்த நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ரொனால்டு ராஸை பாட்ரிக் வலியுறுத்தினார்.

பாட்ரிக் மேன்சனின் வழிகாட்டுதலை ஏற்ற ராஸ், இந்தியா திரும்பியவுடன் (1895) தனது மலேரியா ஆராய்ச்சியை மும்பையில் தொடங்கினார். அப்போது, கொசுவின் வயிற்றிலுள்ள ஏதோ ஒரு கிருமி தான் மலேரியாவுக்குக் காரணமாகிறது என்ற முடிவுக்கு ராஸ் வந்தார்.

இதனிடையே மலேரியா ஆராய்ச்சிக்குத் தடையாக, பெங்களூருக்கு ராஸ் இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பரவிவந்த காலராவைக் கட்டுப்படுத்தும் பணி அவருக்குத் தரப்பட்டது. இதனால் விரக்தியுற்ற ராஸ், விடுப்பு எடுத்துக்கொண்டு தமிழகத்தின் உதகைக்கு சென்றார்.

அங்கு மலேரியா ஆய்வில் ஈடுபட்ட ராஸ், வீட்டின் சுவரில் ஒட்டியிருந்த வித்தியாசமான கொசுவைக் கண்டார். அதன் இறக்கைகளில் சிறு புள்ளிகள் காணப்பட்டன. அதற்கு ‘புள்ளி இறக்கை கொசு’ (Dappled Winged Mosquito) என்று பெயரிட்டார். பின்னாளில் இக்கொசு ‘அனாஃபிலிஸ்’ கொசு (அய்ர்ல்ட்ங்ப்ங்ள்) என்று வகைப்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக் காலத்தில் மலேரியா நோய்த் தாக்குதலுக்கு உள்ளான ராஸ், செகந்தராபாத்துக்கு (1896) திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். தனது இரண்டாண்டு மலேரியா ஆராய்ச்சிக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போனதால் வேதனை அடைந்திருந்த ராஸ், அரசின் உத்தரவால் மேலும் ஏமாற்றம் அடைந்தார்.

ஆயினும் தனது ஆராய்ச்சியை ராஸ் கைவிடவில்லை. கொசுக்களின் முட்டைகளை சேகரித்து நீரில் அவற்றை வளர்த்து 20 அனாஃபிலிஸ் கொசுக்களை உற்பத்தி செய்த ராஸ் அவற்றை கவனமாக ஆராய்ந்தார். அந்தக் கொசுக்களின் வயிற்றை அறுத்து நுண்ணோக்கி உதவியால் ஆராய்ந்த ராஸ், அதிலிருந்த ஒரு தொற்றுயிரி (ஒட்டுண்ணி) கொசுவினுடையதல்ல என்பதைக் கண்டறிந்தார்.

அனாஃபிலிஸ் கொசு

அனாஃபிலிஸ் கொசு

இந்த ஆராய்ச்சி முடிவு, 1897, டிச. 18 தேதியிட்ட பிரிட்டீஷ் மருத்துவ சஞ்சிகையில் வெளியானது. அதற்கு முன்னதாக, 1897, ஆகஸ்டு 20-இல், மலேரியா நோய்க்குக் காரணமான கிருமி, கொசுவின் வயிற்றிலுள்ள தொற்றுயிரி (Malarial Parasite) தான் என்பதை ரொனால்டு ராஸ் கண்டுபிடித்தார்.

இந்தத் தொற்றுயிரி (Plasmodium) கொசுவின் உமிழ்நீரில் கலந்து, அது மனிதரைக் கடிக்கும்போது ரத்தத்தில் கலந்து நோயைப் பரப்புகிறது. அனாஃபிலிஸ் பெண் கொசுக்களே மலேரியாவைப் பரப்புகின்றன என்பதும் பின்னாளில் தெரியவந்தது.

இந்த ஆராய்ச்சியில் ராஸ் தீவிரமாக  ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,  1897 செப்டம்பரில் ராஜஸ்தானுக்கு பணியிட மாற்றல் உத்தரவு வந்தது. அதனால் கோபமடைந்த அவர் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்; இருப்பினும், பாட்ரிக் மேன்சனின் தலையீட்டால், சிறப்புப் பணி வழங்கப்பட்டு கொல்கத்தா அனுப்பப்பட்டார்.

கொல்கத்தாவிலுள்ள மாநில அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராஸ், அங்கு மலேரியா, காலா அஸார்  நோய்களுக்கு தீர்வு காணும் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1898-இல் பறவைகளைத் தாக்கும் ‘ஆவியன் மலேரியா’ நோய்க்குக் காரணம் கொசுக்களே என்று தக்க நிரூபணங்கள் மூலமாக நிரூபித்தார். இந்த ஆராய்ச்சி முடிவுகளின் பலனாக, மலேரியா நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது.

1899-இல் தனது இந்திய மருத்துவ சேவைப் பணியிலிருந்து விலகிய ராஸ், பிரிட்டன் சென்று, லிவர்பூல் வெப்ப மண்டல நோய் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அந்த சமயத்தில், மேற்கு ஆப்பிரிகா, கிரீஸ், மோரிசஸ், சைப்ரஸ், சூயல் கால்வாய் பகுதிகளில் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.

1902-இல் பேராசிரியரான ராஸ் 1917 வரை பணியில் தொடர்ந்தார். 1918 முதல் 1926 வரை, பிரிட்டீஷ் அரசின் உதவித்திட்ட அமைச்சகத்தின் ஆலோகராகச் செயல்பட்டார்.

1926-இல் ராஸை கௌரவிக்கும் வகையில், வெப்ப மண்டல நோய்களுக்கான மருத்துவக் கல்வி நிறுவனம் அரசால் நிறுவப்பட்டது. அதன் இயக்குநராகப் பொறுப்பேற்ற ராஸ், இறுதிக்காலம் வரை அங்கு பணியாற்றினார். 1932, செப்டம்பர் 16-இல் ரொனால்டு ராஸ் மறைந்தார்.

ரொனால்டு ராஸ் மருத்துவ விஞ்ஞானி மட்டுமல்ல, இசை, கணிதம், இலக்கியம் எனப் பல துறைகளில் வல்லுநர். பல ஆங்கிலக் கவிதை, புதினங்களை அவர் எழுதியிருக்கிறார். ‘மலேரியாவைத் தடுப்பது எப்படி?’என்ற அவரது நூல் (Prevention of Maleria- 1910) உலகப்புகழ் பெற்றது. தொற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதற்கான புள்ளிவிவர மாதிரிகளையும் ராஸ் உருவாக்கியுள்ளார்.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அரசு உதவி செய்வதில்லை என்று வெளிப்படையாக விமர்சித்தவர் ராஸ். ஆராய்ச்சிகளைத் தடுக்கும் அரசின் செயல்பாடுகளை நிர்வாகக் காட்டுமிராண்டித்தனம் என்று கண்டிக்கவும் அவர் தயங்கியதில்லை.

1901-இல் ராயல் சொஸைட்டி அவருக்கு எஃப்ஆர்எஸ் வழங்கியது. 1902-இல் அவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1911-இல் பிரிட்டன் அரசு சர் பட்டம்  வழங்கி ராஸை கௌரவித்தது.

மலேரியா பரவலுக்கு வழிவகுக்கும் தொற்றுயிரியை ராஸ் கண்டறிந்த தினமான 1897 ஆக. 20-ஐப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் அந்நாள் உலக கொசு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பிறப்பால் பிரிட்டீஷ்காரராக இருந்தபோதிலும், இந்தியாவில் பிறந்து, இங்கேயே மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளில் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்ட ரொனால்டு ராஸின் பெயர் இந்திய நகரங்கள் பலவற்றில் உள்ள தெருக்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை ராஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

 

-தினமணி- இளைஞர்மணி (15.03.2016)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: