Archive | April, 2016

புள்ளியியல் மேதைகளின் இந்திய குரு

26 Apr
CRRao1

சி.ஆர்.ராவ்

கணிதத்தின் ஒரு கூறான புள்ளியியலில் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் பலருக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்பவர், அமெரிக்காவில் வாழும் ஓர் இந்தியர். நவீன புள்ளியியலில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள அவர்தான், சி.ஆர்.ராவ்.

முந்தைய மைசூர் மாகாணத்தில், பெல்லாரி மாவட்டத்தின் ஹாடகல்லியில், சி.டி.நாயுடு- லட்சுமிகாந்தம்மா தம்பதியரின் பத்து குழந்தைகளில் எட்டாவதாக, 1920, செப். 10-இல் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் என்பது சுருங்கி, பின்னாளில் சி.ஆர்.ராவ் ஆனது. இன்று புள்ளியியலில் ராவ் பெயரைச் சொன்னாலே நினைவுக்கு வரும் பிரதானமான தேற்றங்கள் பல. Continue reading

Advertisements

தமிழ் மலர்க் கதம்பம்…

25 Apr

subbu book
 தொன்மையானது தமிழ் என்ற வீண்பெருமை மட்டுமே மொழி வாழப் போதுமானதல்ல. பயன்பாட்டில் ஒரு மொழியின் தேவை குன்றும்போது, அந்த மொழி அழிவை நோக்கிச் செல்கிறது. அந்த வகையில் தமிழ் கடந்த 50 ஆண்டுகளில் பலத்த சவால்களைச் சந்தித்துள்ளது.

இருப்பினும், தொன்மையின் தொடர்ச்சியாக, தேசியத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் திண்மையின் அடையாளமாக, தமிழில் படைப்புகள் வெளியாகிய வண்ணம் இருப்பதே இதன் இளமைக்கு சான்றாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, வாழும் தமிழின் போக்குகளையும், வாசிக்கும் அன்பர்களின் விரிவான தேடலையும் இணைக்கும் விதமாக, இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான சுப்பு.

சுகி.சிவம் முதல் வ.வே.சு. வரை தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலர் இதில் தங்கள் கட்டுரைகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு வகையில் இதை தமிழ்ப்பற்று என்ற நாரால் தொடுக்கப்பட்ட பல மலர்களின் கதம்பம் எனலாம்.

அ.ச.ஞானசம்பந்தம், ம.வே.பசுபதி, ஆர்.பி.வி.எஸ்.மணியன், பிரேமா நந்தகுமார், சுவாமி விமூர்த்தானந்தர், தஞ்சை வெ.கோபாலன், பத்மன், பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன், வெங்கட் சாமிநாதன், சுகா, திருப்பூர் கிருஷ்ணன், இந்திரா சௌந்தர்ராஜன் உள்ளிட்ட நூறு பேரின் 108 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

எழுத்தாளர் குறித்த சிறு அறிமுகத்தை ஒவ்வொரு கட்டுரையின் பின்பகுதியிலும் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், தமிழ்ச் சான்றோர்கள், நூல் அறிமுகம் போன்ற பலதரப்பட்ட பகுப்புகளில் கட்டுரைகள் இருந்தாலும் அவை முறையாகத் தொகுக்கப்படவில்லை.  பொருளடக்கத்தில் எழுத்தாளர்களின் பெயர் இல்லை. இந்தக் குறைகளை அடுத்த பதிப்பில் சரி செய்வது அவசியம்.

வாசிப்புதான் மனிதன் மிருகமல்ல என்பதற்கான அத்தாட்சி என்று தனது கட்டுரையில் கூறுகிறார் ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம். அந்த வாசிப்புக்கு உறுதுணையான ஆர்வத்தை ஊட்டும் நூல் இது.

***

தமிழர் புத்தகங்கள்- ஓர் அறிமுகம்

தொகுப்பாசிரியர்: சுப்பு

504 பக்கங்கள், விலை: ரூ. 200

விஜயபாரதம் பிரசுரம்,
12, எம்.வி.நாயுடு தெரு,
சேத்துப்பட்டு, சென்னை- 600 031,
தொலைபேசி: 044- 2836 0874.

.

 

இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை

19 Apr
டாக்டர் விஜய் பட்கர்

டாக்டர் விஜய் பட்கர்

கணினி இல்லாத உலகை இனிமேல் கற்பனை செய்ய இயலாது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சிதான் மீத்திறன் கணினி எனப்படும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் (Super Computers). அதிவேக கணக்கீடுகள், செயற்கை அறிவாண்மை, விரைவுத்தேடல் ஆகியவற்றை குணங்களாகக் கொண்ட சூப்பர் கம்யூட்டர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. விவசாயிகளுக்கான வானிலை அறிவிப்பு முதல் ராணுவப் பயன்பாடு வரை இதன் எல்லைகள் விரிந்துள்ளன.

உலக அளவில் சூப்பர் கம்ப்யூட்டர் 1962-இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்தியாவில் மிகத் தாமதமாகவே அறிமுகமானது. எனினும், இதைப் பயன்படுத்த அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. 1980-களில் இந்தியாவுக்கென தனித்த சூப்பர் கம்ப்யூட்டர்களின் தேவை உணரப்பட்டது.

1985-இல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனிடம், இதற்கு உதவுமாறு வேண்டினார். ஆனால், இந்தியா இத்துறையில் வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை. தவிர, சூப்பர் கம்ப்யூட்டர்கள் ராணுவ சேவையில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், இந்தத் தொழில்நுட்பத்தை வழங்க மறுத்த அமெரிக்கா, நிறைவேற்ற இயலாத பல நிபந்தனைகளை விதித்தது.

அதையடுத்து, நமக்கென சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க வேண்டும் என்ற தன்மான உணர்வு இந்திய அரசிடம் ஏற்பட்டது. அந்தப் பணி, மிகப் பொருத்தமான விஞ்ஞானியிடம் பிரதமரால் ஒப்படைக்கப்பட்டது. அவர்தான்,  ‘இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை’ என்று வர்ணிக்கப்படும் டாக்டர் விஜய் பட்கர். Continue reading

சரித்திர வடிவிலான கதை…

18 Apr

 

mokalayaarbook

இந்திய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய அந்நிய ஆட்சியாளர்களில் மொகலாயர்களுக்கு பேரிடம் உண்டு. இந்தியாவின் பெரும் செல்வத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த மொகலாயர்கள் தங்களுடன் கொண்டுவந்த இஸ்லாம் இந்நாட்டில் உருவாக்கியுள்ள மாற்றங்கள் ஏராளம். இன்று உலக அளவில் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.

இந்தியாவின் சமூகம், கலை, மொழி, இலக்கியம், அரசியல் நிர்வாகம், பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட மொகலாயப் பேரரசு, கி.பி. 1526 முதல், 1857 வரை சுமார் 330 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. வடஇந்தியாவிலும், தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் பகுதிகளிலும் அவர்களது ஆதிக்கம் நிலை பெற்றிருந்தது.

பாரசீக, துருக்கிய கலாச்சாரங்களின் தாக்கம் மிகுந்த மொகலாயர் காலக் கட்டடக் கலையின் சிறப்பை, தில்லி செங்கோட்டை, தாஜ்மகால், ஜும்மா மசூதி போன்ற இடங்களில் இன்றும் காணலாம்.  வாரிசுரிமைப் போர்கள், துரோகங்கள், ராஜதந்திர நடவடிக்கைகளின் கலவையாக மொகலாயப் பேரரசு இருந்ததை இந்நூலில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.

ஆயினும் சரித்திரம் என்பது போற்றி எழுதப்படும் மன்னர்களின் வரலாறு மட்டுமல்ல. நடுநிலைமையுடன் கூடிய அவதானிப்புகளும், சரித்திர ஆதாரங்களை கூர்மையுடன் அலசி ஆராயும் திறனும்தான் சரித்திர எழுத்தாளர்களின் அடிப்படை ஆதாரம். அத்தகைய அணுகுமுறையை இந்நூலில் காண முடியவில்லை என்பது பெரும் குறை.

உதாரணமாக, காசி விஸ்வநாதர் ஆலயம் ஔரங்கசீப் ஆணைப்படி இடிக்கப்பட்டது மறைக்க முடியாத சரித்திரக் களங்கம். இதை மழுப்பும் விதமாக, அதற்கு ஒரு காரணத்தை இட்டுக் கட்டி, அதற்கு உதவியாக  அடிப்படையற்ற ஓர் ஆதாரத்தையும் சான்று காட்டியிருப்பது நூலாசிரியரின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

இத்தகைய சில இடறல்கள் இருப்பினும், மொகலாயர்களின் வரலாற்றை கதைபோல எழுதிச் செல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். தேவையான இடங்களில் பொருத்தமான படங்கள் இடம் பெற்றிருப்பதும் சிறப்பு.

***

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

டி.கே.இரவீந்திரன்

382 பக்கங்கள், விலை: ரூ. 220,

விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை- 600 002.
தொலைபேசி: 044- 4263 4283.

.