வானாய்வில் சாதனை படைத்த விஞ்ஞானி

5 Apr

வைணு பாப்பு

வைணு பாப்பு

“மேகநாத் சாஹா, சுப்பிரமணியன் சந்திரசேகர் போன்ற அற்புதமான விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகளை உலகுக்கு இந்தியா அளித்துள்ளது. ஆனால், விண்வெளியைக் கண்காணிக்கும் வானாய்வில் இந்தியா இன்னமும் போதிய திறனின்றி உள்ளது”…

-இவ்வாறு 1947-இல் கூறினார், அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுநர் ஹார்லோ ஷாப்லே (1885- 1972). விண்வெளியை நவீனத் தொலைநோக்கிகளால் ஆராயும் வசதிகளும், அதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இந்தியாவில் இல்லை என்பதையே அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது மனக்குறை வெகு விரைவில் நிவர்த்தியாயிற்று; அதுமட்டுமல்ல, ஆசியாவிலேயே மிகப் பெரிய வானாய்வுத் தொலைநோக்கியை தமிழகத்தில் நிறுவினார் ஒரு விஞ்ஞானி. அவர்தான் வைணு பாப்பு.

கேரளத்தின் தலச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட, தீயா சமூகத்தைச் சேர்ந்த சுனன்னா பாப்பு, ஆந்திர மாநிலத்தின் நிஜாமையா வானாய்வகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார். அவரது மகனாக, சென்னையில் 1927, ஆக. 10-இல் பிறந்தார் மனாலி கல்லட் வைணு பாப்பு.

சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்ற பாப்பு, கல்வி உதவித்தொகை பெற்று இங்கிலாந்து சென்று, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார்.

அப்போது தனது சக ஆராய்ச்சியாளர்களான பார்ட் போக், கார்டன் நியூகிர்க் ஆகியோருடன் இணைந்து, ஒரு புதிய வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு  ‘பாப்பு- போக்- நியூகிர்க்’ வால்நட்சத்திரம் என்று பெயரிடப்பட்டது (Bappu-Bok-Newkirk comet- 1949). அதற்காக, பசிபிக் வானியல் சங்கத்தின் டோனோ வால்நட்சத்திரப் பதக்கம் பெற்றார்.

1952-இல் பிஎச்.டி. பட்டம் பெற்றவுடன், கார்னெகி மதிப்பூதியம் பெற்று, அமெரிக்காவின் பாலோமர் வானாய்வகத்தில் விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அங்கு பணியாற்றியபோது, அமெரிக்க விஞ்ஞானி ஓலின் சாடோக் வில்சனுடன் இணைந்து, விண்மீன்களிடையிலான தொலைவைக் கண்டறியும் தேற்றத்தை உருவாக்கினர்.

விண்மீன்களுக்கு இடையிலான விண்ணிடைத் தொலைவுகளை அளவிட அவற்றின் ஒளிக்கதிர் மாறுபாடு உதவும் என்பதை அவர்கள் நிரூபித்தனர். அது ‘வில்சன்- பாப்பு விளைவு’ (Wilson- Bappu effect) என்று அழைக்கப்படுகிறது.

1953-இல் வைணு பாப்பு நாடு திரும்பினார். உத்தரப்பிரதேச அரசின் நைனிடால் வானாய்வகத்தை மேம்படுத்தும் பணி பாப்புவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வானாய்வகத்தின் (Observatory) இயக்குநராக விளங்கிய பாப்பு அதை அபிவிருத்தி செய்தார் (1954- 1960).

1960-இல் தமிழகத்தின் கொடைக்கானலில் இருந்த வானாய்வகத்தின் இயக்குநராக பாப்பு நியமிக்கப்பட்டார். அங்கு சூரிய ஒளியில் இயங்கும் சாதாரண தொலைநோக்கி மட்டுமே இருந்தது. அதை நவீனப்படுத்தினார் பாப்பு.

அப்போது, இரவிலும் வானைத் துலக்கமாக ஆராய புவியியல் ரீதியாக மிகப் பொருத்தமான இடத்தை அவர் பல்லாண்டுகளாகத் தேடினார். அது உயரமான இடமாக இருப்பதுடன், மேகமூட்டமில்லாத இடமாகவும், சூழல் பாதிக்கப்படாத- ஒளி மாசு அற்ற பகுதியாகவும் இருந்தால் மட்டுமே, வானிலுள்ள பொருள்களை மிகத் துல்லியமாக உற்றுநோக்கிக் கண்காணிக்க முடியும். தனது தீவிரத் தேடுதலின் விளைவாக, ஜவ்வாது மலையிலுள்ள காவலூர் என்ற இடத்தைக் கண்டறிந்தார் பாப்பு.

கடல் மட்டத்திலிருந்து 725 மீட்டர் உயரத்திலும், தீர்க்க ரேகைக்கு 78°49.6  கிழக்கிலும், அட்சரேகைக்கு 12°34.6 வடக்கிலும் காவலூரின் புவி அமைவிடம் உள்ளது. நிலநடுக்கோட்டுக்கு அருகிலும், பூமியின் வட, தென் அரைக் கோளங்களை சமமாகக் கவனிக்க இயலும் வகையிலும் இந்த இடம் உள்ளது.

அங்கு அரசின் உதவியுடன் ஒரு வானாய்வகத்தை பாப்பு நிறுவினார் (1968). ஆரம்பத்தில் 38 செ.மீ. விட்டமுடைய தொலைநோக்கியுடன் காவலூர் வானாய்வகம் தனது பணியைத் துவக்கியது.

வியாழன் கிரகத்தில் ஏற்படும் மாறுபாடுகளை ஆராய, 1971-இல் 61 செ.மீ. விட்டமுள்ள எதிரொளிக்கும் தொலைநோக்கி இங்கு நிறுவப்பட்டது. இவை இரண்டுமே பாப்புவின் மேற்பார்வையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.

மூன்றாவதாக, நிறங்களைப் பிரிக்கும் மேகநிற மானியுடன் கூடிய, நுட்பமான மின்னணுவியல் தொலைநோக்கி 100 செ.மீ. விட்டத்தில் 1972-இல் நிறுவப்பட்டது. இந்தத் தொலைநோக்கிகள் பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கி உலகின் கவனத்தை ஈர்த்தன.

வியாழன் கிரகத்தின் நிலவான கானிமீடுக்கு வளிமண்டலம் இருப்பதை 1971-இல் காவலூர் வானாய்வகம் கண்டுபிடித்தது. யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி வளையம் இருப்பதையும் 1977-இல் பாப்பு தலைமையிலான விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர்.

ஆயினும், வைணு பாப்பு திருப்தியுறவில்லை. வானை அளக்கும் மிகத் துல்லியமான மிகப் பெரிய அதிநவீன தொலைநோக்கியுடன் கூடிய வானாய்வகம் அமைப்பது அவரது கனவாக இருந்தது.

இந்திய வானியற்பியல் கழகம்:

பிரிட்டீஷார் காலத்திலேயே (1786) வானியல் ஆய்வுகள் இந்தியாவில் தொடங்கிவிட்டாலும், வானாய்வு நிறுவனங்களும் அதற்குத் தகுதி படைத்த வல்லுநர்களும் வளர்ச்சி பெறவில்லை. இந்நிலையை மாற்ற விரும்பிய வைணு பாப்பு, அரசிடம் நிதியுதவி பெற்று, சுய அதிகாரம் கொண்ட இந்திய வானியற்பியல் கழகத்தை (Indian Institute of Astrophysics- IIA) ஓர் ஆராய்ச்சி நிறுவனமாக 1971-இல் பெங்களூரில் நிறுவினார்.

வானியலில் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகள் இங்கு துவக்கப்பட்டன. தவிர, இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், கொடைக்கானல், காவலூர், ஹன்லே (லடாக்), கௌரிபிதனூர் (பெங்களூரு) ஆகிய இடங்களிலுள்ள வானாய்வகங்கள் செயல்படுகின்றன. நாட்டின் பிரதான ஆராய்ச்சி மையங்களுள் ஒன்றாக இது விளங்குகிறது.

காவலூர் வானாய்வகம்

காவலூர் வானாய்வகம்

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய வானியற்பியல் கழகம் இயங்கியபோதும், காவலூரையே தனது பணிக்களமாகக் கொண்டு, தீவிர ஆய்வுகளில் பாப்பு ஈடுபட்டார். தனது பெருங்கனவான மாபெரும் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் அவர் தீவிரமாக உழைத்தார்.

அவரது முயற்சியின் பலனாக, 2.34 மீட்டர் விட்டமுடைய அதி நவீன தொலைநோக்கி காவலூரில் 1985-இல் நிறுவப்பட்டது. 1986-இல் அது செயல்பாட்டுக்கு வந்தது.

ஆனால், தனது கனவு நிறைவேறும் முன், 1982, ஆக. 19-இல் வைணு பாப்பு மறைந்தார். அவரது சிறப்பை உணர்ந்த அரசு, காவலூர் வானாய்வகத்துக்கும், புதிய தொலைநோக்கிக்கும் வைணு பாப்புவின் பெரையே சூட்டியது (Vainu Bappu Observatory). இது, ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரியதாகும்.

சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள 25 பைசா நாணயத்தையும் மிகத் துல்லியமாகக் காணக்கூடிய அளவுக்கு திறன் படைத்தது இந்த தொலைநோக்கியாகும். இதன்மூலம், உலக அளவில் பிரமாண்டமான வானியல் தொலைநோக்கிகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. பல புதிய வானியல் நிகழ்வுகள் இதன்மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

பெல்ஜியம் அறிவியல் கழகம், அமெரிக்க வானியல் சங்கம் ஆகியவற்றின்  கௌரவ உறுப்பினராக பாப்பு இருந்தார். சர்வதேச வானியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும் (1967- 1973), தலைவராகவும் (1979- 1982) வைணு பாப்பு செயல்பட்டுள்ளார்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1970), பத்மபூஷண் விருது (1981) ஆகியவற்றை இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது. இந்தியாவின் வானியல் ஆய்வில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய வைணு பாப்புவால், வானை அளக்கும் திறமை நமக்கு வாய்த்தது.

 

-தினமணி இளைஞர்மணி (05.04.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: