அரசியலின் உண்மைப் பொருள்

8 Apr

 

அலுவலகத்திலோ, நண்பர்கள் குழுவிலோ ஏதாவது பிரச்னை ஏற்படும் தருணங்களில்  ‘அரசியல் செய்யாதே’ என்று யாராவது ஒருவர் சொல்வதை நாம் அனைவருமே கேட்டிருப்போம். சுமுகமான உறவைக் கெடுப்பதுதான் அரசியல் என்ற புரிந்துணர்வே இந்தக் கருத்துக்குக் காரணம்.

இருவரிடையே பிளவை ஏற்படுத்துவது, ஒட்டுமொத்தச் சூழலில் குழப்பத்தை ஏற்படுத்துவது, நண்பர்களையும் எதிரிகளாக்குவது, நம்பவைத்துக் கழுத்தறுப்பது போன்ற குணாதிசயங்களை அரசியல் தன்மை என்று நாம் கற்பிதம் செய்து வைத்திருக்கிறோம்.

நாட்டின் அரசியல் களத்தில் நிகழும் சம்பவங்களே இத்தகைய குணாதிசயங்கள் குறித்த கருத்தை உருவாக்கியுள்ளன என்று சொன்னால் மிகையில்லை. சுயநலமே பிரதானமாகும்போது, பிறரை ஏமாற்றுவது ‘அரசியல் பிழைப்பு’ ஆகிவிடுகிறது.

ஆனால், நாம் பயன்படுத்தும் அரசியல் என்ற சொல்லுக்கு உண்மையிலேயே இந்தப் பொருள்தான் உள்ளதா? நாம் சரியான பொருளில்தான் இந்தச் சொல்லைக் கையாள்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழின் முதன்மையான அறநூலான திருக்குறளில் பொருட்பாலில் எடுத்தவுடன் வரும் அதிகாரவைப்பு அரசியலாகும். இதில் மட்டும் இறைமாட்சி முதல் இடுக்கண் அழியாமை வரை 25 அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அதிகார வைப்பினை ஆழ்ந்து நோக்கும்போது, நாட்டை வழிநடத்தும் கலையாகவே அரசியலை திருவள்ளுவர் கருதியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

நாட்டின் அங்கங்கள், அரசின் குணநலன்கள், ஆள்வோர் பெற வேண்டிய கல்வி உள்ளிட்ட தகுதிகள், காலம் அறிதல், இடம் அறிதல், எதிரியைத் தெளிதல், ஒற்றாடல், செங்கோன்மை, நடுநிலைமை என ஒரு நவீன அரசு திறம்படச் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் திருவள்ளுவர் பொருட்பாலில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஆனால், நாம் ஒரே சொல்லில், அரசியலை வசைபாடலுக்கான வார்த்தையாக மாற்றி இருக்கிறோம். ‘பாலிடிக்ஸ்’ செய்வது என்றால், நம்மைப் பொருத்த வரை அது ஒரு கெட்ட வார்த்தை.

அரசியலுக்கென்றே தனித்த சாஸ்திரமாக அர்த்த சாஸ்திரத்தைப் படைத்த சாணக்கியர் வாழ்ந்த நாடு நமது நாடு. அவர்தான் சந்திரகுப்தரை மன்னராக்கிய வழிகாட்டி.

சாணக்கியர் வீட்டில் ஏழைகளுக்கு வழங்க ஆயிரக் கணக்கான போர்வைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவரைக் காண நண்பர் ஒருவர் சென்றபோது அவர் வெறும் தரையில் படுத்திருந்தார்.

இத்தனை போர்வைகள் வீட்டில் குவிந்திருக்க, வெற்றுத்தரையில் படுக்கலாமா என்று நண்பர் கேட்டதற்கு, ‘அவை மக்களுக்கு வழங்கப்பட அரசால் சேகரிக்கப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்த எனக்கு அதிகாரம் கிடையாது’ என்றாராம் சாணக்கியர். அவர்தான் அந்நாட்டின் முதலமைச்சர். அவர் நினைத்திருந்தால் தனக்கு தங்கத்திலேயே நெய்யப்பட்ட போர்வையைத் தருவித்திருக்க முடியும். ஆனால், அவர் கட்டாந்தரையில் படுத்திருந்தார்.

இன்றும் சாணக்கியர் சரித்திரத்தில் நினைவுகூரப்படுவதன் காரணம் இதுவே. அவரது நூல் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்படவும் இந்த தார்மிக உந்துசக்திதான் காரணம்.

திருவள்ளுவரும் சாணக்கியரும் அரிய கலையாகப் போற்றிய அரசியல் இன்று தரம் தாழ்ந்ததன் விளைவுதான், அதை நாம் காணும் பார்வையும் அணுகும் விதமும்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கல்லூரி மாணவர்களிடையே உரையாடும்போது, நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்பது வழக்கம். பெரும்பாலான மாணவர்கள், மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக, விஞ்ஞானியாக, அரசு ஊழியராக விரும்புவதாகக் கூறுவர். அப்போது, ‘ஏன் ஒரு மாணவர் கூட அரசியல் தலைவராக மாறுவேன் என்று கூறவில்லை?’  என்று கேள்வி எழுப்புவார் கலாம்.

பிறகு அவரே மாணவர்களிடம் பேசுகையில், தரமான அரசியல் தலைவர்களால் தான் நாடு சிறந்து விளங்க முடியும். அதற்கும் மாணவர்கள் தயாராக வேண்டும் என்பார்.

சிந்தித்துப் பாருங்கள். பல துறைகளிலும் சிறந்தவர்கள் விளங்கினாலும், நாடு நல்ல தலைமையின்றிப் போனால், அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே மாறிவிடும். நல்ல அரசன் இல்லாத நாட்டில் எத்தனை வளங்கள் இருந்தாலும் பயனில்லை என்பார் திருவள்ளுவர்.

நாட்டை, அரசை நடத்துவது அரசியல் கலை. மன்னராட்சிக் காலத்தில் மன்னராகவும் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் பயின்ற கலை அரசியல். தற்காலத்தில் மக்களே மக்களுக்காக மக்களை ஆளும் மக்கள் ஆட்சி நிடைபெறுகிறது. மக்கள் ஆட்சியில் மக்களே தலைவர்களாகிறார்கள். எனவே அவர்களுக்கு அரசியல் கலை குறித்த கல்வி தேவை.

குறைந்தபட்சம் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப் படுவோருக்கேனும் இத்தகைய கல்வி அளிப்பது அவசியம். அரசு நிர்வாகத்தில் உள்ள அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவது போல, மக்கள் பிரதிநிதிகளுக்கும் முறையான அரசியல் கல்வி அளிக்கப்பட்டால் அவர்களின் தரம் உயரும்.

பாரதிய ஜனதா கட்சியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இதற்கென தனித்த ஏற்பாடு உள்ளது. பாஜகவில் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அரசியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் சித்தாந்தக் கல்வி, பிரசாரப் பயிற்சி உள்ளிட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இதேபோல அனைத்து அரசியல் கட்சிகளிலும் தொண்டர்களைத் தரம் உயர்த்தும் முயற்சிகள் தேவை. மக்களுக்கான சேவையின் அங்கமே அரசியல் என்ற புரிதல் ஏற்படும்போது சுயநலத்தால் நிகழும் முறைகேடுகள் குறையும்; அப்போதுதான் அரசியல் என்ற சொல்லின் உண்மையான பொருள் உருவாகும்.

சில தேநீர்க் கடைகளில் ‘இங்கு அரசியல் பேசாதீர்கள்’ என்று எழுதி வைத்திருப்பார்கள். அரசியல் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடு அது. நம்மை நாமே நமக்காய் ஆள்வதுதான் அரசியல் என்ற உணர்வு இல்லாததால்தான் அதை சாக்கடை என்கிறோம்.

ரயில்நிலையத்தில் தேநீர் விற்ற சாமானியரை பிரதமராக்கிய நாடு நமது நாடு. மக்களாட்சியின் மகத்தான விளைவு அது. எனவே அரசியலை கேவலமாக நினைப்பதை முதலில் நாம் கைவிடுவோம். சாக்கடை இல்லாத தெரு நாறிவிடும் என்பதிலிருந்தே அரசியலின் முதன்மை புரியும்.

எனவே, அரசியலில் நாம் தான் பிரதான அங்கம் என்பதை உணர்ந்து அதை சீர்ப்படுத்த முயல்வோம். அதற்காக அரசியல் பேசுவோம்.

-தினமணி (08.04.2016)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: